30

ஏதோவொரு சமயத்தில் குழந்தைகளின் தோழியர்கள் என் கண்ணில் படுவார்கள். வீட்டுக்கு அருகே இருப்பவர்கள் தங்களின் பிறந்த நாளுக்கு கேக் கொண்டு வருவார்கள். சிலர் சேர்ந்து விளையாடுவதற்கென வருவார்கள். இது போன்ற சமயங்கள் என் சோதனைகள் தொடங்கி விடும். தொடக்கத்தில் அவர்களுடன் ஜாலியாக அரட்டையைத் தொடங்கி மெதுவாக அவர்களின் கல்வி குறித்து மேலோட்டமாகக் கேட்டுவிட்டு கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்பேன்.

“பரவாயில்லையே? பள்ளியில் நன்றாகப் படிப்பாய் போல…..”. என்று சொல்லிக் கொண்டே அருகே இருக்கும் தமிழ் ஆங்கிலச் செய்தித்தாளைக் கொடுத்து “இதைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுப் பார்க்கலாம்” என்று சொல்லுவதுண்டு.

இனி தப்ப முடியாது என்பதைப் புரிந்து கொண்டு “இங்கிலீஷ் பேப்பர முதலில் வாசிக்கட்டுமா அங்கிள்?” என்பார்கள்.

“சரிம்மா” என்றால் அவர்களின் வாசிக்கும் விதத்தை வைத்து ஓரளவிற்கு அவர்களின் “நிலையை” நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்தில் எட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ் மொழி வாசிப்பு என்பது 50 வருடத்திற்கு முன்னால் உள்ள கட்டைவண்டி பயணம் தான்.

கடித்துத் துப்பி வார்த்தைகளை அரைத்துப் பாதியில் நிறுத்தி விடுகின்றார்கள். சிலர் தங்களால் முடியாத நிலையில் பதட்டமாகிவிடுகின்றார்கள். ஆங்கிலச் செய்தித்தாளை தமிழ் அளவுக்குச் சிரமப்படாமல் வாசிக்க முயற்சித்தாலும் வார்த்தைகள் வசப்படாமல் ஒரு சக்கரம் இல்லா வண்டி போல இழுத்துக் கொண்டே செல்லும்.

பார்த்து வாசிக்கவே சிரமப்படும் குழந்தைகளுக்கு எப்படி மொழி வசப்படும்? வாயில் வசம்பு வைத்துத் தேய்த்தாலும் மொழியே உன் விலை என்ன? என்கிற கதை தான்.

ஆச்சரியம் என்னவென்றால் பெரும்பாலும் 80 சதவிகித மதிப்பெண்களை எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். பயிற்றுவிக்கப்பட்ட பந்தயக்குதிரைகளாக மாறியுள்ளனர். இது தான் நான் இங்கே பார்க்கும் தனியார் பள்ளிக்குழந்தைகளின் நிலைமை.

மொத்தத்தில் தற்போது தமிழ்மொழி தீவிர சிகிச்சை பிரிவிலும், ஆங்கிலமும் அதை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. தனியார் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி வேறு தனியாக உள்ளது.

ஒரு வகுப்பில் படிக்கும் பாதிக்கும் மேற்பட்ட சராசரி குழந்தைகளுக்கு அது வீபரித மொழியாகவே தெரிகின்றது. இன்றைய கல்வி குறித்த குற்றச்சாட்டை விட இரண்டு சூழ்நிலைகளைப் பற்றிப் பேச வேண்டும். முதலில் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகள் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதும் நடுத்தரவர்க்க பெரும்பாலான பெற்றோர்களுக்கு மொழிப்புலமை ஒன்றும் பெரிய அளவில் இல்லை.

ஆனால் நாம் உயரத் தடையாக இருந்த விசயங்கள் நம் குழந்தைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் பலருக்கும் ஆங்கிலம் என்பது அருமருந்தாக இருக்கின்றது.

இன்று நடுத்தரவர்க்கத்திற்கென ஒரு கனவு. அந்தக் கனவில் குழந்தைகளின் கல்வி முக்கியப் பங்கு வகிக்கின்றது. கல்வி என்பது பின்னால் லாபம் தரக்கூடிய முக்கிய மூதலீடு போலவே பார்க்கப்படுகின்றது.

அதிக லாபம் வர வேண்டுமென்றால் ஆங்கிலமே முதன்மையானது என்ற சூழ்நிலையில் இருப்பதால் தரமில்லாத தனியார் பள்ளிக்கூடங்களில் தகுதியில்லாத ஆசிரியர்களால் மாணவர்களின் கனவுகள் வளர்க்கப் படுகின்றது.

பெற்றோர்களின் ஆசைகளில் அள்ளித் தெளிக்கப்படும் வாக்குறுதிகளால் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஏதோவொரு வெளிநாட்டில் இருக்கக்கூடும். குறைந்தபட்சம் நல்ல சம்பளத்தில் ஏதோவொரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் அழுத்தமாகப் பதிய வைக்கப்படுகின்றது.

பாத்திகளில் வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள் போல அழகாகத் தெரிகின்றார்கள். ஆனால் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதாக உள்ளது. கடந்த இரண்டு வருடமாகப் பல குழந்தைகளைப் பார்த்து விட்டேன்.

பள்ளியிலும் நடக்கும் பல கூத்துக்களையும் பார்த்துக் கொண்டே வருகின்றேன். இன்றைய கல்வி மொழியை வளர்க்கவில்லை என்பதோடு தனிப்பட்ட முறையில் எந்த மாணவர்களின் ஆளுமைத்திறனையும் வளர்க்கவில்லை. இதில் என்ன ஆச்சரியம்? தெரிந்தது தானே என்று கேட்பீர்கள்?

ஆனால் நமக்கு எது தேவை? என்கிற ரீதியில் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விசயங்கள் தான் ஆச்சரியமாக இருக்கின்றது.

“ஆசிரியரே கேட்க விரும்பாத விசயங்களையெல்லாம் நீங்க கேட்குறீங்க? இதனால எங்களுக்கு என்ன லாபம் அங்கிள்?” என்று கேட்ட மாணவியைப் பார்த்து வியந்து போய்ப் பார்த்தேன். சுர்.. என்று கோபம் வரவழைக்ககூடிய கேள்வி. ஆனால் அதில் இருந்த உண்மைகள் தான் எனக்குப் பிடித்திருந்தது.

படி………. நினைவில் வைத்துக்கொள்….. எழுது….. ஜெயித்துவிடு….

நான்கு திசைகளைப் போல நான்கே கட்டங்கள் தான் இன்றைய கல்வி.

ஜெயித்து வந்தால் வாய்ப்புகள் உருவாகின்றது அல்லது உருவாக்க முடியும்.

அந்த வாய்ப்புகளே வசதிகளைத் தந்துவிடும் என்ற நம்பிக்கைக்குச் சமூகத்தில் பல உதாரணங்கள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

மொழியறிவு என்பதே வெறுமனே உரையாடலுடன் முடிந்துவிடக்கூடியதாக மாறியுள்ளது. உரையாடல் என்பது முக்கால்வாசி ஆங்கிலம் கால்வாசி தமிழ் என்கிற ரீதியில் உள்ள வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

பேசத் தெரிந்தால் போதும் என்கிற நிலைமைக்கும் தமிழ் பார்க்கப்படுகின்றது என்பதை விட அந்த அளவுக்குத் தெரிந்தாலே போதும் என்கிற புள்ளியோடு நிறுத்தப்படுகின்றது. இப்போது எதிர்காலத்தில் தமிழ் மொழியே இருக்காது. அது தேவையில்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கையும் நமக்கு விதைக்கப் படுகின்றது.

ஆங்கிலமோ, தமிழோ மேம்போக்கான வார்த்தைகளை எழுதச் சொன்னால் முழிபிதுங்கி போய்விடுகின்றார்கள். இது குழந்தைகளின் மேல் வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டல்ல. இப்போதுள்ள கல்வி சார்ந்த சூழ்நிலைகளைப் பற்றியே யோசிக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பத்து மற்றும் பனிரெண்டு பொதுத்தேர்வு முடிந்தவுடன் செய்தித்தாளில் வரும் முழுப்பக்க விளம்பரங்களைக் கவனித்துப் பாருங்கள்.

எங்கள் பள்ளியின் சாதனை என்று நீட்டி முழங்கியிருப்பார்கள். இன்று ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் கதாநாயகர்களுக்கு வைக்கப்படும் கட் அவுட் போல நிரந்தரமாகப் பெரிய ப்ளக்ஸ போர்ட்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் சாதனை விபரங்களைப் பார்க்க முடியும்.

மாணவர்கள் இதைப் பார்க்கின்றார்களோ இல்லையோ பள்ளிக்கு வரும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இதுவே உத்வேகம் அளிக்கக்கூடிய டானிக். என் பிள்ளையும் இது போல வரவேண்டும் என்பது மறைமுகமாக மனதில் விதைக்கப்படுகின்றது.

வீட்டில் குழந்தைகளை ஐந்தாம் வகுப்புக்கு மேலே சரியான பாதைக்கு நகர்த்த வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே தெளிவாக இருந்தேன். அதுவரைக்கும் அவர்களின் ஊக்கமென்பது எதன் மூலம் இயல்பாகப் பெறுகின்றார்களோ அதையே கவனித்துக் கொண்டிருந்தால் போதுமானது என்றே நினைத்திருந்தேன். சென்ற வருடம் வாசிப்புத் திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியும் பொருட்டு வைத்த சோதனையில் ஒவ்வொருவரின் தரமும் ஒவ்வொருவிதமாக இருந்தது.

இவர்கள் கற்கும் கல்வி வாசிப்பை வளர்க்க உதவாது என்பதைப் புரிந்து கொண்டு வாங்கிப் போட்ட தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள் அனைத்தும் சீந்துவாரற்றுக் கிடந்தது. காலையில் வீட்டுக்குள் வந்து விழும் செய்தித்தாளை கவனமாக உள்ளே எடுத்து வந்து வைத்து விட்டு நகர்ந்து விடுவார்கள்.

தொலைக்காட்சி ஆர்வத்தை மாற்ற முடியவில்லை. இயல்பான நாட்களில் அரைமணிநேரமே பயன்படுத்திய போதிலும் அதன் தாக்கம் விடுமுறை தினங்களில் அதிகமானதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

கல்வியென்பது அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே என்ற கொள்கை மனதிற்குள் ஆழமாய் ஊடுருவியிருந்தது. ஆசிரியர்களும் அப்படியே சொல்லிக் கொண்டிருந்ததே முக்கியக் காரணமாக இருந்தது. களம் தெரிகின்றது. பிரச்சனைகளும் புரிகின்றது. எங்கிருந்து தொடங்குவது என்பதை யோசித்து அன்றொரு நாள் எதிர்பாராதவிதமாக வகுப்பாசிரியர் ஒருவரை சந்திக்கப் பள்ளிக்குச் சென்றிருந்த போது அங்கே வேறொரு அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்தது.

அன்று ஒரு பெண்மணி ஒரு வகுப்பாசிரியரை சற்று அதிகமாகவே சப்தம் போட்டுக் கொண்டிருந்தார். முழுமையாக விசாரித்தபோது ஆசிரியர் அவர் மகனின் பரிட்சைத்தாளில் வரிசையாகப் பல பதில்களுக்கு அரை மதிப்பெண்கள் குறைத்து போட்ட காரணத்தினால் காரணத்தினால் அவனால் ஏ1 கிரேடு வரமுடியாமல் போய் விடுகின்றதாம்.

பல முறை ஆசிரியர்கள் என்னிடம் புலம்பியுள்ளனர்.

“ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஏ1 எடுத்தால் என்ன? பி1 எடுத்தால் என்ன? ஒரு மாணவனின் மற்ற நடவடிக்கைகள் குறித்துப் பக்கவாட்டில் பல கட்டங்களில் தனியாகக் கிரேடு கொடுக்கின்றோம். எவரும் அதைப் பார்ப்பதே இல்லை. எல்லோருமே மதிப்பெண்களில் மட்டும் கவனம் வைத்து எங்களைப் படுத்தி எடுக்கின்றார்கள்” என்றார்.

மாற்றங்களை உருவாக்க நினைக்கும் சில ஆசிரியர்களுக்கு முன்னால் இருக்கும் சவால்கள் புரிந்தது. ஒவ்வொன்றையும் யோசித்துக் கொண்டே வீட்டில் சில காரியங்களைச் செய்யத் துவங்கினேன். “லஞ்சமே மிகச் சிறந்த ஆயுதம்” என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இதைப்படித்தால் இந்தப் பரிசு என்று அவர்கள் அறியாமலேயே மூக்கில் மூக்காணங்கயிறு கட்ட வண்டியின் பாதை ஒரு வரையறறைக்கு வர ஆரம்பித்தது.

இரவில் சொல்லப்படும் கதைகள் வார்த்தைகளை யோசிக்க வைக்க வண்டியின் பயணம் இன்னும் கொஞ்சம் இலகுவாக நகர்ந்தது.

படிப்படியான நகர்தல் இன்று நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. வண்டியில் எத்தனை சொகுசு இருந்தாலும் பாதையில் பள்ள மேடுகள் இருந்தால் எப்படியிருக்கும்? பள்ளிக்கூடம் கொடுக்கும் தாக்கம் தான் இங்கே குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பள்ளியில் “என் பையனுக்கு இன்னமும் இங்கிலீஷ் பேசத்தெரியல? என்ன இங்கிலீஷ் மீடியமோ?” என்று கத்திய அம்மாவின் குரலைப் பார்த்து அரண்டு போயிருக்கேன். இது போன்ற சமயங்களில் தான் எதார்த்தம் உரைக்கின்றது. கூடவே ஒரு கேள்வியும் மனதில் உருவாகின்றது. இன்றைய உலகளாவிய போட்டியில் ஜெயித்து வர மொழி முக்கியமெனில் ஜெயித்து வந்தபிறகு வாழ வேண்டிய வாழ்க்கைக்கு எந்த மொழி தேவை?

அடர்ந்த காடு. தூரத்தில் தெரிகின்றது வெளிச்சம்.

அது வெளிச்சமா? மின் மினி பூச்சியா?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book