4

என்னுடைய வாழ்க்கையில் நான் படித்த புத்தகங்கள் எத்தனை ஆச்சரியங்கள் தந்ததோ அந்த அளவிற்கு நான் பார்க்கும் சக மனிதர்கள் அதிக அளவு ஆச்சரியத்தைத் தந்துள்ளனர். காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் பட்டம் பெற்று திருப்பூர் வந்து சேர்ந்து, தினந்தோறும் சந்தித்துக் கொண்டுருககும் மனிதர்கள் அனுபவ பாடங்களைத் தந்தபடியே உள்ளனர்.

நான் தற்போது இருக்கும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித் துறையில் புழங்கிக் கொண்டுருக்கும் யூரோ, அமெரிக்கன் டாலர், பிரிட்டன் பவுண்ட் இது போக மற்ற நாட்டுப் பணப் பரிவர்த்தனைகளைக் கையாண்டு கொண்டிருக்கும் எவரும் மெத்தப்படித்த மேதாவிகள் அல்ல. பெரும்பாலும் ஒவ்வொருவரும் அவர்களின் சிறு வயதில் திருவிழாக்களில் விரும்பிய டாலர் செயின் கூட வாங்க முடியாமல் தவித்தவர்கள் தான். உள்ளூர்த் தொடர்புகளும் தினந்தோறும் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுருக்கும் சர்வதேச தொடர்புகளும் எனப் பலதரப்பட்ட மக்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

மொத்தத்தில் இந்த வாழ்க்கை என்பது மிக அழகானது. டென்ஷன், கோபம், எரிச்சல், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, குரோதம் என்று எத்தனை சங்கடங்கள் இருந்தாலும் இவை அனைத்தும் ஏதோ ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது.

இப்போது கூட என் சொந்த ஊருக்குச் செல்லும் போது அங்கே உள்ளே வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையோடு என் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வதுண்டு. இருப்பிடம், உறக்கம், உணவுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.

ஆனால் எனது ஊரிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள திருப்பூரில் தான் தினந்தோறும் எத்தனை எத்தனை மாற்றங்கள்?.

இதுவே தான் ஏராளமான அனுபவங்களைத் தந்து கொண்டேயிருக்கின்றது. தன்னம்பிக்கை, உழைப்பு, தொடங்கி அதிர்ஷ்டம்,ஜோதிடம், எண்கணிதம்,கைரேகை போன்ற பல கண்களுக்குத் தெரியாத சக்திகளை நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அனுபவம் மூலமாக உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நம் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட “ஏதோ ஒன்று”. ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் இன்று பலருக்கும் முதலீடு போடத் தேவையில்லாத லாபம் கொழிக்கும் தொழில். இன்று நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில் வந்து கொண்டிருக்கும் விளம்பரங்களை கவனித்து வந்தாலே இது புரியக்கூடும்.

அரசியல் தலைவர்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரைக்கும் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதிர்ஷ்டத்தை ஒவ்வொரு வழியிலும் மறைமுகமாக நமக்கு உணர்த்துகின்றார்கள். நம்மைச்சுற்றிலும் நமக்குத் தெரியாமல் பல விசயங்கள் உள்ளது. ஆனால் எல்லோருமே இறுதியில் சொல்லும் ஒரே வார்த்தை “உழையுங்கள் முன்னேறலாம்.”,

ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கும் உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இன்று வரையிலும் இந்தியாவில் 40 கோடி மக்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தகுதியில்லாதவர்கள் அத்தனை பேர்களும் நமக்குத் தலைவர்களாக இருக்கும் சூழ்நிலையில் மக்களுக்கு இறுதியில் இந்த நம்பிக்கைகள் தான் வாழ்க்கையின் வழித்துணையாக மாறிவிடுகின்றது.

இதைத்தான் “விதிப்பயன்” என்ற ஒரு வார்த்தைக்குள் நம் இந்தியர்கள் முடித்துக் கொண்டு சகிப்புத்தன்மையோடு வாழ பழகி விடுகின்றனர். அதிர்ஷடக் கலைகளை நம்பி வாழ்ந்தவர்களும் உண்டு. இதை மட்டுமே நம்பி கெட்டு அழிந்தவர்களும் உண்டு.

திருப்பூருக்குள் நான் வந்து சேர்ந்திருந்த போது எதையும் கவனிக்கத் தேவையில்லாமல் காலங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. காரணம் வறுமையில்லாத இளமைப் பருவம்., அதுவே சமூக அனுபவங்களைக் கவனிக்கத் தெரியாமல் கடந்து வந்தாகி விட்டது. ஆனால் இங்கே வாழ்க்கையின் தன்மை மாறத் தொடங்கியது. என்னைச் சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

ஒவ்வொன்றையும் அவசரமாய்க் கடக்க வேண்டியதாய் இருந்தது. கிடைத்த வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அதன் மூலம் உருவாக்க வேண்டிய குடும்ப வாழ்க்கையும் அவசரமாக என்னை ஓட வைத்துக் கொண்டிருந்தது.

விரும்பிய தொழில் வாழ்க்கை வரை ஒவ்வொன்றும் வந்து சேர்ந்தது. தோல்விகளும் துயரங்களும் நம்மைத் தாக்கும் போது தான் நம் ஆழ்மனம் விழித்துக் கொள்கின்றது. அப்போது தான் நம்முடைய கவனிப்பு திறனுக்குப் புதிய சக்தி கிடைக்கின்றது. முதல் இருபது வருடங்களில் குடும்பத்தினர் என் மேல் வைத்திருந்த பல கவலைகளில் என்னுடைய இறை மறுப்புக் கொள்கை.

அது வெறும் கொள்கையாக இருந்தாலும் கூடப் பரவாயில்லை. இறை கொலையாக இருந்த காரணத்தால் நான் செய்து கொண்டுருந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் குடும்பத்தினரின் சமூக அந்தஸ்து மிகவும் பாதிக்கப்பட்டது. வந்து சொல்லக்கூடியவர்கள் அத்தனை பேர்களும் கொண்டு வரக்கூடிய முக்கியக் குற்றச்சாட்டுக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவிலில் உடைக்கும் சிதறு தேங்காயை எடுத்து தின்று கொண்டு இருக்கின்றான் என்பதே.

அவர்களைப் பொறுத்தவரையிலும் அது தோஷம் கழித்த ஒரு நிகழ்வு. அதுவே என்னுடைய பார்வையில் தின்று தீர்க்க வேண்டிய ஒன்று. என்னுடன் இருந்த அத்தனை பேர்களும் அப்படித்தான் திக்குத் தெரியாமல் திரிந்தோம்.

ஊருக்குள் இருக்கும் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தோம். கொள்கை கொண்ட அத்தனை பேர்களும் இன்று மாறிவிட்டார்கள். தாமதமாக என்றாலும் நானும் கூட மாறித்தான் போயுள்ளேன். காரணம் அனுபவங்கள்.

சதையும் இரத்தமும் நரம்புமாய் வாழும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களையும் அவர்களின் அனுபவம் தான் முதலில் தீர்மானிக்கிறது. கற்றுத் தந்த ஆசிரியர்களை விட, கற்றுக் கொள்ள உதவிய புத்தகங்களை விட இந்த அனுபவங்கள் தான் ஒருவரை தலைவராக மற்றொருவரை தறுதலையாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.. நான் என் வாழ்க்கையில் சந்தித்த நபர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் முத்து முருகேசன்.

திரு. முத்து முருகேசன்.(MUTHU MURUGESON),

எப்போதுமே தன்னுடைய பெயரை தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதக்கூடியவர். இந்தப் பெயர் தான் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் திசை திருப்பிய பெயர், திருமணத்திற்கு முன்பு நான் தங்கியிருந்த அறைக்கு வந்த நண்பர் ஒருவர் இவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது இவர் மதுரையில் திருநகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். நம்பிக்கைகளுக்கும் உழைப்புக்கும் இடையே போராடிக் கொண்டிருந்த என்னுடைய அன்றைய திருப்பூர் வாழ்வில் திடீர் திருப்பமாக இவருடைய அறிமுகம் கிடைத்தது.

“உங்கள் மனக்குழப்பங்கள் தீர வேண்டும் என்றால் இவரைப் போய்ப் பாருங்கள் ” என்று நண்பர் இவரின் முகவரியைக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.

முகவரி கண்டு பிடித்து வீட்டுக்குள் நுழைந்த போது கதர் ஜிப்பா மற்றும் நாலு முழ வேட்டி அணிந்திருந்த அந்த ஒல்லியான உருவம் என்னை வரவேற்றது. வீடு முழுக்க புத்தகக் குவியல் தான் அதிகம் தெரிந்தது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று விரட்டிக் கொண்டிருந்தவர்களை மீற முடியாமலும் என்னுடைய லட்சியங்கள் பாதி அளவில் இருந்த காரணத்தாலும் ஒரு வழிகாட்டல் தேவையாய் இருந்தது. ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களும், இந்த “ உலகில் உழைப்புக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒன்று இருக்கிறது ” என்பதை உணர்ந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன்.

மூன்று முறை தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணங்கள் நின்று போய்விட, முதலீடு போட்டு என்னை உட்கார வைத்து அழகு பார்க்க காத்திருந்தவர்கள் ஒதுங்கிப் போய்விட நினைத்த ஒவ்வொன்றும் தலைகீழாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் இவரைச் சந்தித்தேன். அடுத்தடுத்துச் சூறைக் காற்றும் சூறாவளியும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே இருக்க என் வாழ்க்கை குறித்து அதிகமாக யோசித்த காலமது. அவரின் வழிகாட்டல் என்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கத் தொடங்கியது.

அவருடன் பேசி முடித்து விட்டு, அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் கொடுத்த நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு வந்த என்னை எப்போதும் போலத் திருப்பூர் வாழ்க்கை மறக்கடித்து விட்டது. திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்து பெயர் வைக்கும் சூழ்நிலையில் தான் மறுபடியும் அழைத்தேன்.

மூன்று குந்தைகளுக்கும் அவர் தான் பெயர் வைத்தார். தேவியர் இல்லம் வாழ்க வளமும் என்றும் அவர் தான் முதன் முதலாக எழுதிக் கொடுத்தார். என் அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு வந்தவர் என்னுடைய மறுமலர்ச்சி அத்தியாயத்தின் தொடக்கப் பககங்களை எழுதத் தொடங்கினார்.

என்னுடைய அறிவியல் கருத்துக்கள் சற்று மூச்ச வாங்க ஆரம்பிக்க வாழ்க்கை ஆணிவேரின் பிடிமான்ம் அன்று முதல் தான் ஆழமாய் ஊன்றத் தொடங்கியது. 1990 வரைக்கும் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளராக இருந்தவர், பல தரப்பபட்ட அரசியல் தலைவர்களின் நெருக்கமாகப் பழகியவர், அரசியல் களத்தில் கட்சிகளின் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்தவருடன் உரையாடிய உரையாடல்கள் எனக்கு வழிகாட்டியாக இருந்தது.

அக்மார்க் காந்தியவாதி. இன்று வரையிலும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காட்டாறு போல ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையைத் தனது கனிவான வார்த்தைகளால் ஒழுங்குக்குக் கொண்டு வந்தார். இவர் மூலம் புரிந்து கொண்ட இறை நம்பிக்கை என் வழிநடத்தியது. திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் செல்லும் பழக்கம் உருவானது. நமக்கு அப்பாற்பட்ட சக்தியென்பது இங்கே பலருக்கும் மனித ரூபங்களின் மூலம் கிடைக்கின்றது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book