5

ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்லும் போதும், சென்ற வந்த பிறகும் அந்த ஊரைப்பற்றி, அங்கு வாழந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும் அதிகம் யோசித்துருக்கின்றேன். இந்தியாவில் புனிதம் என்று சுட்டிக்காட்டப்பட்ட இது போன்ற ஊர்கள் அங்குள்ள கோவில்களை வைத்தே வளர்கின்றது. வருமானம் அனைத்தும் கோவிலுக்குத்தான் என்றாலும் ஊரின் கட்டமைப்பில் எந்த மாறுதலும் உருவாகிவிடுவதில்லை. உருவானாலும் கூட ஆமை வேகம் தான். குறிப்பிட்ட திருவிழா நாட்களில் கூடச் செல்பவர்களுக்குப் பயமும் பல பாடங்களும் தான் கிடைக்கின்றது. இன்று இது போன்ற புனித தலங்களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரு சுற்றுலா மனோநிலையில் தான் செல்கின்றார்கள்.

தொடக்கத்தில் வாழ்ந்த மனிதர்கள் இது போன்ற தலங்களுக்குச் செல்ல நினைத்தாலே தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு உணவு முதல் உறவு வரை உள்ளும் புறமும் பரவச நிலையை உருவாக்கிக் கொண்டு சென்றார்கள். பாதயாத்திரை என்பது ஆரோக்கியத்தின் அங்கமாக இருந்தது. இன்று அனைத்தும் மாறிவிட்டது. மலையில் இருக்கும் சாமியை தரிசிப்பதை விடக் கேபிள் கார் பயணத்தை அனுபவிக்கச் செல்பவர்கள் தான் அநேகம் பேர்கள். மக்களின் வேண்டுதல்களும் மாறியுள்ளது.

உடம்புக்குத் தேவைப்படும் அமைதியை விட பொருளாதாரம் சார்ந்த வேண்டுதல்கள் தான் இன்று அதிகமாகியுள்ளது.

“நினைத்தவுடன் செல்வது. வேண்டியவுடன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது” என்று துரித உணவகத்தினைப் போலவே இன்று ஆன்மீகம் வளர்ந்துள்ளது. விருப்பங்களைச் சுமந்து கொண்டு செல்வதற்குப் பெயர் ஆன்மீகம் அல்ல. அது வியாபாரம். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் என் நோக்கம் ஆன்மீகத்தைத் தாண்டியும் சில புரிதல்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டையர் என்று தெரிந்ததும் அழைத்து உறவுகளிடம் சொன்னேன். “போடா கிறுக்குப் பயலே. உனக்கு எல்லாமே விளையாட்டு தான்” என்றார்கள்.

குழந்தைகள் திருவண்ணாமலையில் தான் பிறக்க வேண்டும் என்று நான் மனதில் வைத்திருந்தபடி ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன். திருவண்ணாமலைக்கு மாதம் ஒரு முறை செல்லும் பழக்கம் என்பது மாறி வாரம் ஒரு முறை என்பதாக மாறியது. அலைச்சலும் அவஸ்த்தைகளும் என்றாலும் நமக்குப் பிடித்த ஒரு விசயத்தைச் செய்யும் போது எந்தக் கஷ்டமும் நமக்கு இயல்பானதாகவே தெரியும்.

மூத்த சகோதரியும் அருகே உள்ள ஊரில் தான் பள்ளி ஆசிரியராக இருந்தார். ஆனால் இது போன்ற விசயங்களில் மற்றவர்களின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் நான் இல்லை. அறிமுகம் இல்லாத திருவண்ணாமலை என்ற ஊரில் அலைந்து திரிந்து நான் விரும்பியவாறு அமைந்த மருத்துவரின் பெயர் உஷா கல்யாணி.

மனித உருவில் வாழும் தெய்வம் என்று தான் போற்றப்பட வேண்டும். அவர் கணவர் இறந்து போன போதிலும் அவரின் இரண்டு பெண் குழந்தைகளையும் மிக உயரிய படிப்பில் இதே மருத்துவத் துறையில் தான் படித்துக் கொண்டிருந்தனர். இரண்டு மகள்களும் படிப்புக்காக ஒரு பக்கம்., இவர் இங்கேயென்று மாதம் முழுக்க ஓய்வில்லா பணியில் தான் இந்தச் சேவையைச் செய்து கொண்டிருந்தார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணி முடித்து, தனியார் மருத்துவமனையில் ஏற்றுக் கொண்ட கடமைகளை முடித்துத் தன்னுடைய வீட்டிலும் மருத்துவச் சேவை செய்த அவரின் நேர ஒழுங்கும், காசுக்கு ஆசைப்படாத குணாதிசியங்களையும் இன்று நினைத்தால் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது.

பலசமயம் என் அவசரத்தின் பொருட்டு அவரைப் பற்றி விசாரிக்க அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கே சென்றுள்ளேன். பலருடனும் உரையாடி இருக்கின்றேன். அவர் வீட்டில் நான் பார்த்தவரைக்கும் வந்த அத்தனை பேர்களும் மிக எளியவர்களாகத்தான் இருந்தார்கள். பத்து ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை என்பதான பல மனிதர்களை அங்கே தான் சந்தித்தேன். அவரைச் சந்தித்த போது என் விருப்பங்களையும் ஆசைகளையும் சொன்ன போது வினோதமாகப் பார்த்தார். ஆனால் கடைசியில் இப்படித்தான் சொல்லி எங்களைக் குழந்தைகளோடு பாராட்டி வழியனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன வாசகம் இப்போதும் நினைவில் இருக்கிறது.

“எத்தனையோ விதவிதமான மனிதர்களை என் தொழில் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். அத்தனையிலும் நீங்க வித்யாசம்” என்றார்.

காரணம் அவர் குழந்தை பிறப்புக்கு குறித்த நாட்கள், எதிர்பார்த்த நாட்கள் என்று அத்தனையும் கடந்து போயிருந்தது. நான் சொன்ன நாள் நெருங்கி வந்தது. அன்று தான் சரியாக இருக்கும் என்று அவருடன் இருந்த குழுவினர் சொன்ன போது தான் “உங்க விசயத்தில் மட்டும் நான் ஒவ்வொருமுறையும் பல வினோதங்களைப் பார்க்கிறேன்” என்றார்.

நான் குறிகளை வெறுப்பதும் இல்லை. அதிக அளவு விரும்புவதும் இல்லை. அதை ஆலோசனையாகத்தான் எடுத்துக் கொள்கின்றேன். உழைப்புக்கு அப்பாற்பட்ட ஏராளமான விசயங்கள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது. விஞ்ஞானத்திற்குப் புரியாத பல புதிர்கள் பல உள்ளன. நம்புவதும் நம்பாததும் அவரவர் அனுபவங்கள் தரும் பாடங்களே. இதை விவாதிக்க வேண்டிய அவசியமேயில்லை.

திருவண்ணாமலை கோவிலில் கர்ப்பகிரகத்திற்கு மிக அருகில் நடுசாம பூஜை வரைக்கும் பல நாட்கள் இருந்துள்ளேன். உணர்வும், உயிரும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தக் காலத்தையும் கடந்து வந்துள்ளேன். ஒரு கிறிஸ்துவ மருத்துமனையில் தான் இரட்டையர்கள் பிறந்தார்கள். ஊரிலிருந்து அம்மா முதல் அத்தனை பேர்களையும் வரவழைத்து இருந்தேன்.

அம்மா குழந்தைகளைப் பார்க்கும் வரையிலும் இரட்டையர் என்பதை நம்பவே மாட்டேன் என்றார். அந்தச் சிறிய இரண்டு உருவங்களைக் கையில் கொடுத்த போது “இதென்ன கொடுமையா இருக்கு?” என்று ஆச்சரியப்படார். “நம்ம வம்சத்திலே இப்படி இரட்டை வந்ததே இல்லையே” என்றார். எனக்கும் வியப்பு தான். விஞ்ஞானத்தைத் தாண்டியும் பல உண்மைகள் இருக்கிறது என்பதை உணர்த்திய பாடங்கள் இது. .

இருவரில் ஒருவர் எடைகுறைவு என்றதும் அப்போது தான் அவரைப் பாதுகாக்கப்பட் வேண்டிய கருவிகளின் பழுதை உணர்ந்தார்கள். அழைத்தவர்கள் வந்தபாடில்லை. நிமிடங்கள் மணிகளானது. நாட்களாக மாறியது. ஆனால் கடந்து கொண்டேயிருந்தே தவிர அடுத்த மூன்று நாட்களில் அவர்களால் எந்த உருப்படியான முன்னேற்பாடுகளையும் செய்து தரமுடியவில்லை. வருத்தங்களை மீறி அப்போதும் விதியின் கரத்தின் விளையாட்டுப் பொம்மை போலத் தான் நாங்கள் இருந்தோம். எல்லாமே முயற்சிக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் ஒரு முறை உணர்ந்து கொண்டேன்.

முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றோம். பல சமயம் ஜெயித்ததும் நம் முயற்சி என்கின்றோம். இல்லாவிட்டால்? அவசர உதவிகள் என்று அடுத்தடுத்து வந்த போதிலும் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்காமல் போக ஒருவர் மூச்சு விடவே சிரமப்படத் தொடங்கினார். ஆனால் அப்போது கூட உஷா கல்யாணி அசரவில்லை.

அவர் பழக்கத்தில் உள்ள மற்றப் பகுதிகளில் உள்ள மருத்துவர்களை, அவர்கள் வைத்திருக்கும் கருவிகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உதவி புரிந்த போலும் காலம் கடந்த ஞானத்தில் முடிவுகள் பயத்தோடு பார்க்கப்பட்டது. இயல்பாக இருந்த என்னிடம் சங்கடப்பட்டு இறுதியாக “இருவரில் ஒருவர் மட்டுமே பிழைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

அவர் குழுவினர் எடுத்த முடிவுகளைப் புறந்தள்ளி உங்கள் அறிவியலை விட என் உணர்வுகள் சொல்லும் முடிவே மேலானது என்று தான் திருப்பூருக்கு அழைத்து வந்தேன். அன்று அவர் திகைத்து என்னைப் பார்த்த பார்வை இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகின்றது.

பெண் குழந்தைகள், அதுவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு ஊனமானால் உறவுகள் பார்வையில் எப்படியிருக்கும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பக்கத்தில் இருந்தும் என்னை அம்பாகத்தாக்கியது.

இங்கே குடும்ப வாழ்க்கை முடிவுகள் என்பது ஒருவருடன் முடிந்து போவதில்லை. கணவன், மனைவி என்று தொடங்கி ஒரு பட்டாளமே சம்பந்தப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகள். அதுவே சரியென்று திணிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்படுவதேயில்லை. காதல் திருமணங்கள் தோல்விக்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று பணம் மற்றொன்று உறவுகளிடமிருந்து கிடைக்காத அங்கீகாரம். பணம் இல்லாத போது அடிப்படை வாழ்க்கையே சிதைகின்றது. அந்தச் சிதைவு மனபிறழ்வை உருவாக்கி பித்துப் பிடிக்க வைத்துத் திசை மாற வைக்கின்றது.

ஏமாற்றங்களைத் தாங்க முடியாமல் பரஸ்பரம் ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டிக் கொண்டு தாங்கள் கொண்ட காதலை நரக வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கின்றார்கள். ஆனால் இங்குப் பெண் குழந்தைகள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் நான் உறுதியாக இருந்தேன். குழந்தைகளை அழைத்து வந்த பிறகு திருப்பூருக்குள்ளும் தேடல் தொடங்கியது. எடை குறைந்த குழந்தைகள் சந்திக்கும் சவால்களின் முக்கியமானது வலிப்பு நோய். எப்போது வரும்?

எதனடிப்படையில் வரும் என்றே தெரியாது. தனியாக இருந்த மனைவி தடுமாறிய காலமது. அடுக்கு மாடி குடியிருப்பு என்பதால் அறிவுரைக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் அவரவர் கொண்ட பயத்தின் சாயலை நன்றாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியும். திடீரென்று அலுவலகத்திற்கு அழைப்பு வரும். பதறிக் கொண்டு ஓட வேண்டியிருக்கும். வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைந்த பயணங்களை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.

உயிர் போய் உயிர் வந்தது என்பார்களே. அத்தனையும் அனுபவித்து இருக்கின்றேன்.

திருப்பூருக்குள் நான் பார்த்த மருத்துவர்களும் ஊனம் உருவாகும் வாய்ப்புகளைத்தான் விவரித்தார்கள். என் மனம் ஏற்றுக் கொள்ளவேயில்லை. காரணம் எங்கள் குடும்பத்தின் தலைமுறையில் ஊனமானவர்களே இல்லை. அமைதியாகவே வாழ்ந்து ஆராவாரமற்று தான் இறந்துபோயிருக்கிறார்கள். விஞ்ஞானம் சொல்லும் கருத்துக்களை மனதில் உள்வாங்கிக் கொண்டே ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினேன். முதலில் குழந்தையின் உடம்பில் எதிர்ப்பு சக்தி வேண்டும். அதன் பிறகே மற்றவற்றை யோசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த மருத்துவரை மனம் தேடத் தொடங்கியது.

தேடலின் இறுதியில் இறுதியாகத் திருப்பூரில் ஷெரிப் காலணியில் உள்ள சிவகாமி என்ற மருத்துவர் கிடைத்தார். கொண்டு போயிருந்த ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு இருவரையும் பார்த்தார். தயங்காமல் கேட்டார்.

“இந்தக் குழந்தை இதுவரைக்கும் பிழைத்திருப்பதே அதிசயம்” என்றார்.

நான் அமைதியாக இருந்தேன்.

அடுத்தக் கேள்வி அதைவிடச் சுவராசியமானது.

“மேற்கொண்டு எப்படி இவரை வைத்துச் சமாளிக்கப் போறீங்க?” என்றார்.

மனைவி அழுததை வேடிக்கை பார்த்த என்னை மருத்துவர் வினோதமாகப் பார்த்தார்.

“உயிரை விடச் சம்மதிப்பேன். ஆனால் ஒருவரைக்கூட இழக்க சம்மதிக்க மாட்டேன்” என்ற போது தான் என்னைப் பற்றி முழுமையாக விசாரித்து என் விருப்பப்படி ஒத்துழைக்கத் தொடங்கினார்.

“இயற்கை முறையில் உங்கள் மருத்துவம் இருக்கட்டும். குழந்தைக்கு உடல் வலு வேண்டும். அதன் பிறகு மற்றதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்றேன்.

“எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் பொறுமையாய் கடைபிடிப்பதே இல்லை. உடனடி நிவாரணத்தில் தான் இன்றைய உலகமே ஓடிக் கொண்டிருக்கிறது” என்று புலம்பியபடி பால் மற்றும் கோதுமை நிலக்கடலையுடன் சேர்த்து அரைக்க வேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லி அதைக் கொதிக்க வைத்து பாலாக மாற்றிக் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய விதங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

“முப்பது நாட்கள் கழித்து வாருங்கள். எப்படிக் குழந்தை இருக்கிறது என்பதை வைத்து தான் மேற்கொண்டு முடிவைச் சொல்வேன்” என்று பயமுறுத்தியே அனுப்பினார். அவருக்கு இரண்டு இடங்களில் மருத்துவமனைகள் இருந்தது. ஒரு மாதம் கழித்து மற்றொரு மருத்துவமனையில் அவரைப் பார்க்க நாங்கள் சென்றடைந்த போது கூட்டம் இல்லாமல் தனியாக ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

இரண்டு பேரையும் அவர் டேபிள் மேல் படுக்க வைத்த போது அவர் கேட்ட கேள்வி “அந்தக்குழந்தை எங்கே?” என்றார்.

இவர் தான் அவர் என்றோம். விக்கித்துப் போய்விட்டார். காரணம் ஒரே மாதத்தில் 1.750 கிராம் கூடி மூன்று கிலோவிற்கு அருகே கொண்டு வந்திருந்தோம். இப்போது இருவரும் சமமாக இருந்தனர்.

“நம்ம முடியாத அதிசயத்தைச் சாதித்துக் காட்டியிருக்கீங்க” என்று என் கைகளை வாங்கிக் குலுக்க முற்பட்ட போது மனைவியின் கரத்தை எடுத்து அவர் கையில் வைத்தேன். அன்று தான் என் மனைவி என் வேகத்தின் முழுப்பலனை முழுமையாகவும் என் நேசிப்பின் அருமையையும் உணரும் நேரமாக இருந்தது.

மேலே நாம் பார்த்த அவர் இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா?

“அப்பா, அம்மாவுக்குச் சமைக்கவே தெரியல.எதிலும் காரமே இருப்பதில்லை. நாக்குக்கு விளங்கலை”என்கிறார். சாப்பாட்டில் உள்ள காரம் தந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே சிரிக்கின்றேன். வார்த்தையிலும் வாழ்க்கையிலும் காரஞ்சாரமாகத்தான் வளர்கின்றார். .

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book