6

முந்தைய மூன்று தலைமுறைகளில் எவருக்கும் இல்லாத இரட்டைக் குழந்தைகள் வந்து சேர மொத்த என் சிந்தனைகளும் மாறத் தொடங்கியது. ஏன் எதற்கு அழுகை? எப்போது இவர்களுக்குப் பசிக்கும்? ஒருவருக்குக் கழுவி முடிக்கும் போது அடுத்தவருக்குக் கழுவி விடத் தொடங்கிய போது தான் எனக்குள் இருந்த அத்தனை அழுக்குகளும் கலைந்து போகத் தொடங்கியது. இரண்டு கைகளிலும் நிறைந்து இருந்த அந்தச் சின்ன உருவங்கள் என்னுடைய மாயப் பிம்பங்களையும் கலைத்துப் போட்டது.

சட சடவென்று ஒவ்வொன்றாக மாறத் தொடங்கியது.

காட்டாறு போல் ஓடிக்கொண்டுருந்த என் வாழ்க்கையை நதியாய் மாற்றத் தொடங்கினர். முதல் மூன்று வருடங்களும் அலுவலக வேலைகளுடன் வேறு எந்த வெளியுலகமும் தெரியாத வாழ்க்கையாய் என்னை ஆக்ரமித்து இருந்தனர். மூன்றாவது வந்தவள் தொழில் மற்றும் வாகன யோகத்தையும் சேர்த்துக் கொண்டு வர அப்போது தான் பிறந்த ஊருக்குச் செல்லும் பழக்கம் உருவானது. அதுவரைக்கும் அத்தனை பேர்களும் திருப்பூருக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் ராக்கோழி கணக்காய் இரவு முழுக்கப் பேருந்தில் பயணித்துக் கண் எரிச்சலோடு அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைவேன். அரைக் குறை தூக்கத்துடன் அம்மா கேட்கும் முதல் கேள்வி…….

“வாடா…….. எப்ப மறுபடியும் திருப்பூருக்கு போகப்போறே?” காரணம் உள்ளே இருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து மறுபடியும் கால்கள் நகராமல் இருந்து விடுவேனோ என்ற பயம். அப்பா உடனே ஒத்து ஊதுவார். உடன்பிறப்புகள் நக்கலுடன் நகர்ந்துவிடுவார்கள். ஆனால் மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே எவரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள். காரணம் மறுபடியும் பூதத்தைப் பாட்டிலுக்குள் அடக்க முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் கெஞ்சும் போது மிஞ்சி ஓட்டம் பிடித்தேன். இன்று இருக்க எண்ணம் இருக்கிறது. இரண்டு நாளைக்கு மேல் இருந்து விடாதே என்று சொல்லக்கூடிய தொழிலும் இருக்கிறது.

காரைக்குடியில் இருந்து அரை மணி நேரம் பயணம். உள்துறை அமைச்சரின் ஊரைத்தாண்டி உள்ளே நுழைந்தால் உங்களை இனிதே வரவேற்கும். பாலத்தைத் தாண்டும் போதே பக்கவாட்டில் இருந்த புளிய மரத்தைப் பார்ப்பேன். பேய் பிசாச என்று கிளப்பி விட்டு எங்களை அந்தப் பக்கம் வர விடாமல் தடுத்த அக்கா அண்ணன்களின் லீலைகள் இப்போது புரிகிறது. அரிசி ஆலையைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஊர். சுற்றிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமத்திற்குக் கடைத்தெரு உள்ள ஊர்.

அந்த அளவிற்குத் தான் மக்களின் எண்ணமும் வளராமல் இருந்தது. உள்ளே நுழையும் போதே எதிரே வரும் நபர்களின் முகம் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்துக் கொணடே நடந்து செல்வேன்,.

ஒவ்வொருவர் வாயிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு. சட்டைக்குள் கைவிட்டு எடுக்கக் காத்திருக்கும் சிலரைத்தாண்டி உள்ளே நடந்து செல்ல வேண்டும்.

ஓடித்திரிந்த தெருக்கள், உட்கார்ந்து அரட்டை அடித்த பாலம், நாள் முழுக்க அமர்ந்து இருந்த பஞ்சாயத்து போர்டு குட்டிச்சுவர்கள் என்று அத்தனையும் அனாதையாய் இருக்க, பழகிய எவரையும் இன்று காணவில்லை.

கற்பக விநாயகர் திருக்கோயில். எதிரே குளம். சுற்றிலும் நூற்றுக்கும் குறைவான கடைகள். ஓரமாய் ஒதுங்கி வேறொருபுறம் சென்றால் ராவுத்தர் தெரு. மீன்கடை, இறைச்சிக்கடை. தொட்டு தொடங்கி மூச்சுப் பிடிக்க ஓடினால் பழைமை வாய்ந்த சாக்கோட்டை, பெயரில் தான் கோட்டை இருக்கிறதே தவிர மொத்த குடும்பமே நூறு இருக்குமா என்று ஆச்சரியம். ஆலமர வரிசையில் மறைந்து கொண்டு இருக்கும் மஞ்சுவிரட்டு பொட்டலும் நடக்கும் களேபரத்தை அடக்கும் காவல் நிலையும் இப்போது அமைதியாய் இருக்கிறது.

தாண்டிச் சென்றால் நூற்றாண்டுகளைத் தாண்டி இருக்கும் பெரிய மற்றும் சிறிய கோவில். குழந்தைகளுடன் பெரிய கோவிலுக்குள் நுழைகின்றேன். கோவில். பிரகாரத்தில் மூச்சு விட்டால் படபடக்கும் பறவைகளின் இரைச்சல். இருட்டுக்குள் நடந்து வந்தால் முடை நாற்றம்.

உடன் படித்தவன் ஐயராக இருக்க முகம் எங்கும் முதுமை பெற்ற தோற்றம். அருகில் பேசச் சென்றாலும் ஏதோ ஒரு தயக்கம். புரியாமல் குழந்தைகளுடன் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டு நகர்கின்றேன்.

குழந்தைகளுக்குக் கிடைத்த சுதந்திரத்தில் ஓ……வென்ற இரைச்சல் அந்தக் கோவில் முழுக்க நிரம்பி வழிகின்றது. கூட்டம் இல்லாமல், வருமானம் இல்லாத வரிசையில் வாழ்ந்து கொண்டுருக்கும் அக்கிரகாரத்தைச் சுற்றி வரும்போதே எங்கள் வயலுக்குச் செல்லும் பாதையில் கிராமத்துப் பள்ளிச் சிறுவர்கள் சந்தோஷமாய்ப் பைக்கட்டு தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டுருக்கிறார்கள்.

மழை வரும் போல் இருக்கிறது. மண் வாசனை நாசியை நெருடுகிறது. கோவிலுக்கு எதிரே மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சுத்தமான அந்தப் பெரிய குளத்தை உற்று பார்த்துக் கொண்டுருக்கின்றேன். பக்கத்தில் உள்ள கிராம மக்கள் குடிநீர் எடுக்கக் கூட்டமாய் வந்த தருணங்கள் மனதில் வந்து போகின்றது. படித்துறையில் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கி அழைத்து வரும் போது எதிரே வந்தவர் புவியியல் ஆசிரியர். பூமிக்கும் வானத்துக்கும் கோபப்படும் அவர் இன்று மருமகளை அண்டி அடங்கி வாழ்ந்து கொண்டுருப்பதை கண்ணீருடன் பேசினார்.

குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்குச் சமாளித்துக் கொட்டிக் கிடந்த மணலில் காலை சரட்டிக் கொண்டு அவர்களின் ஓட்ட வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் மூச்சு வாங்குகிறேன்.

தேர்முட்டியைக் கடந்து சென்ற போது கரையான் அரித்த ஓலைகளால் போர்த்தி வைக்கப்பட்ட சின்னத்தேர் பெரியதேர் இரண்டும் நிற்பதை பார்த்தேன். டவுசருடன் மட்டும் வந்த திருவிழாவும், போட்டுருந்த புதுச்சட்டையில் ஒளித்து வைத்த பலூனை மறந்து செய்த களேபரம் நினைவுக்கு வருகிறது. வாங்கிய அடியில் துடைக்காத மூக்குச்சளியை நினைத்து இப்போது உறுத்தலாய் இருக்கிறது.

நான் பார்த்த பல வருட திருவிழாக்கள் ஒவ்வொன்றாக என் நினைவில் வந்தது. வெட்டுப்பட்ட ஆட்டுத் தலையும், வெட்டியும் அடங்காமல் துடித்த உயிர் கோழிகளும் சிதறடித்த ரத்த மண் வாசனையைத் தடவிப் பார்க்கின்றேன். தொடர்ச்சியாகக் குழந்தைகளின் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. பதில் என்று ஏதோ ஒன்று வந்து கொண்டு இருக்கிறது. மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது.

ஊரின் மற்றொருபுறம் கார் வந்து நிற்க ரயில் நிலையத்தைக் கண்டவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஓடுகிறார்கள். மேட்டை கடக்க ரயில் தண்டாவளத்தை ஒட்டி கண்களுக்கு எட்டிய வரைக்கும் தெரிந்த கண்மாய்த் தண்ணீர் இப்போது உட்கார்ந்து கழுவினால் கூடப் போதாத அளவிற்கு வற்றிப் போய் உள்ளது. இதை நம்பி மற்றொரு புறத்தில் இருந்த பல ஏக்கர் வயல்கள் உருவாகப்போகும் குடியிருப்புக்காக அளந்து கொண்டிருப்பதை பார்த்தேன்.

அருகே ரயில் நிலையம். மயிலாடுதுறை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் வருகைக்காகச் சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெயரில் மட்டும் தான் எக்ஸ்பிரஸ். எக்ஸ் ஒய் இசட் என்று கத்திக் கொண்டே ரயில் ஓடும் வேகத்திற்கு நாமும் ஓடிவிடலாம்.

இந்த ரயில் பாதை நடைமேடையில் தான் பல மணி நேரம் தவம் போல் அமர்ந்து படித்துக் கல்லூரிப்பாடங்களும் குளிக்க வந்த பெண்களின் காமப் பாடங்களையும் பார்த்த ஞாபகம். மாதவன், கோவிந்தராஜன் சேர்ந்த கூட்டணிகள் இறுதி வரைக்கும் உடையாமல் இருந்தது. அவர்கள் தொழில் நுட்பக்கல்லூரிக்குள் நுழைய எங்கள் மூவரின் வாழ்க்கைத் தடமும் மாறியது.

ரயில் நடைமேடைகளைக் கடந்து நெஞ்சி முள் குத்தாமல் ஜாக்கிரதையாகக் கால்கள் வைத்து வேலி தாண்டி வந்து அருகே உள்ள பூங்காவிற்குள் நுழைந்தோம். பழைய தகரங்களைக் கோர்த்து மேடைகளும், எப்போதும் விழும் என்று காத்து இருக்கும் பட்டுப் போன மரங்களுக்கும் இடையே என்னுடைய முக்கியமான மரம் ஒன்று உண்டு. குழந்தைகளின் கைபிடித்து அந்த இடத்தைத் தேடி அலைந்து கடைசியில் கண்டு கொண்டேன். கால் நூற்றாண்டு காலம் ஆனாலும் முதல் காதல் உருவாக்கிய நினைவுச் சின்னம்.

ஆசையுடன் பார்த்தேன்.

தாவரத்தின் பட்டை மறைத்து ஆணியால் கீறப்பட்ட இரண்டு பெயர்களில் அவள் பெயர் மறைந்து விட்டது.

என் பெயர் மட்டும் மெலிதாகத் தெரிந்தது.

அதன் அருகில் குழந்தைகள் தங்களின் பெயரை ஆணியால் செதுக்கிக் கொண்டுருக்கின்றார்கள்..

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

கொஞ்சம் காசு கொஞ்சம் கல்வி Copyright © 2015 by ஜோதிஜி திருப்பூர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book