“உன் கையை நம்பி உயர்ந்திட பாரு! உனக்கென எழுது ஒரு வரலாறு! உனக்குள்ள சக்தி இருக்கு! அதை உசுப்பிட வழிபாரு! ” எனும் படையப்பா பாடல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் நாம் ஏதாவது சாதிக்க வேண்டும்; எனக்கென ஒரு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று உற்சாகமாகச் செயல்படுவேன்.
கணவனின் முன்னேற்றத்துக்கு துணை புரிவதுடன், தனக்கென்று ஒரு தனிப்பாதையை உருவாக்கி அதில் முன்னேறும் பெண்களையே என் role model-ஆகக் கொண்டேன். கணவனின் முன்னேற்றத்தில் பெருமை அடைவதுடன், தானும் ஏதேனும் சாதித்து முன்னேறும் பெண்களையே நான் பிரம்மிப்பாகப் பார்ப்பேன்.
ஆனால் இப்போது என்னுடைய பார்வை மாறியுள்ளது. ஆம்! நான் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கும்போது, என் குழந்தை அழுதால், எதிர் வீட்டில் வசிக்கும் பானுமதி aunty என் குழந்தையை தூக்கிச் சென்று சமாதானப்படுத்தி பார்த்துக்கொள்வார். “உன் வேலையை முடிச்சிட்டு வந்து குழந்தையை வாங்கிக்கோ” என்று என்னிடம் சொல்வர்.
அவ்வாறே தற்போது நான் தங்கியிருக்கும் வீட்டில் நானும், ஹான்னா அக்காவும் சேர்ந்தே உணவு சமைப்பது வழக்கம். ஆனால் நான் புத்தகம் எழுதத் தொடங்கி விட்டால், உணவு சமைக்கும் வேலையே எனக்கு மறந்துவிடும். எப்போது எனக்கு பசி வருகிறதோ, அப்போதுதான் எழுந்து உணவு சமைக்க ஓடுவேன். அங்கு சென்று பார்த்தால், அந்த அக்கா ஒருவராகவே சமைத்து முடித்துவிட்டிருப்பார்கள். “நீ எதோ வேலையா இருந்த; அதான் உன்னை கூப்பிடலை. நீ சாப்டிட்டு போய் உன் வேலையை பாரு” என்று சொல்வார்கள். இதுபோன்ற பெண்களையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் என்று என் பெயர் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற பெண்களெல்லாம் இல்லை என்றால் எனது எந்தப் புத்தகமும் புத்தகம் இல்லை.
எனவே இப்போதெல்லாம் தன்னுடைய பெயர் வெளியே தெரியாவிட்டாலும், மற்றவர்களுக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களே என் கண்களுக்கு சாதனைப் பெண்களாகத் தெரிகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள சாதனைப் பெண்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி மட்டும்தான் தமிழில் இருக்கும் என்ற நிலை மாறி, பல்வேறு துறைசார்ந்த நுட்ப விஷயங்களும் தமிழில் இருக்கும் என்ற நிலை உருவாக உழைத்து வரும் கணியம் குழுவினருக்கு நன்றி.
தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.
து. நித்யா
நியூ காசில்,
இங்கிலாந்து.,
4 மே 2015
மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com
வலை பதிவு: http://nithyashrinivasan.wordpress.com