5

  1.  உடம்பின் இயல்பு

 

 

உடம்பை  பல்வேறு  முறைகளில்  குணப்படுத்துவதற்கு , ஆரோக்கியத்தை   மேம்படுத்துவதற்கு  இன்று  எண்ணில்  அடங்கா  உடல்நிலை  நல்வாழ்வு  நிலையங்கள்  மற்றும்  மருத்துவமுறைகள்  உள்ளன. இந்த  உண்மை  சுட்டிக்காட்டுவது  எது  என்று  நோக்கினால் இந்த  உடம்பானது  பல  வகையான  நோய்களுக்கும் , வலிகளுக்கும்  துன்பங்களுக்கும்  ஆளாகின்றது. அதே  போன்று  எண்ணிலடங்கா  சமயங்களும்  , போதனைகளும்  நீதி நெறிகளும்  உலகமெங்கும்  காணப்படுவதன்  காரணம், மனித  மனம்  படும்  துன்பங்களை , சோதனைகளை , கவலைகளைக்  கடப்பதற்கும்  துணை  நின்று  அவனை  வழி நடத்துவதற்கும்  ஆகும். ஒவ்வொரு  சமயமும்  போதனையும்  ஏதோ  ஒரு வகையில்  அவனுக்கு  ஆறுதல்  அளிக்கின்றன.  அவனுடைய  துன்பத்தை  முழுதாகத்  துடைத்து  எறிய  முடியவில்லை  என்றாலும்,ஓரளவு  குறைக்கின்ற படியால்  அந்த  மருத்துவ  முறைகளின் தேவை  உறுதி  செய்யப்படுகிறது . இவ்வளவு  மருத்துவ முறைகள்  இருந்தும்  நோய்களும்  வலிகளும்  நம்மை விட்டு  நீங்காமல்  இருப்பது போல் , இவ்வளவு  சமயங்களும் போதனைகளும்  இருந்தும்  பாவமும்  துக்கமும்  நம்மை  விட்டு நீங்கவில்லை.

 

பாவத்திற்கும்  துன்பத்திற்கும்  காரணம்  மன  ஆழத்தில்  வேரூன்றி இருப்பது  போலவே  நோய்களுக்கும்  வலிகளுக்கும்  ஆன  காரணம் கூட  மன  ஆழத்தில்  வேரூன்றியிருக்கின்றன.அவற்றை  மருந்து  மாத்திரைகளால் எளிதில்  குணப்படுத்தி  விட  முடியாது. நம்  உடலை  வருத்தும்  நோய்களுக்கும்  வலிகளுக்கும்  தகுந்த  மனம்  சார்ந்த  காரணம்  எங்கோ ஆழத்திலேயே  இருக்கும். இவ்வாறு  கூறுவதால்  உடல்  சார்ந்த  விஷயங்கள்  நோய்களுக்குக்  காரணமல்ல  என்று  விளங்கிக்  கொள்ளக்  கூடாது. அந்த  உடல்  சார்ந்த  விஷயங்கள்  வினை  விளைவு  என்னும் நீண்ட  சங்கிலித்  தொடரில்  ஒரு  கண்ணியாகச்  செயல்படுகின்றன.  ஒரு  முக்கிய கருவியாகச்  செயல்படுகின்றன.   ஒரு  உயிருக்கு  இறப்பைக் கொண்டு  வந்த  நுண்கிருமி  அசுத்தத்தின்  கருவியாகும். அந்த அசுத்தம்  என்பது மனத்தின்  ஒழுங்கின்மையைக்  காண்பிக்கின்றது. வெளியே  காணப்படும்  பொருட்களின்  சூழ்நிலைகளில்  ஒழுகும் ஒழுங்கும்  ஒழுங்கின்மையும் அந்தப்  பொருட்களை, சூழ் நிலையை  கையாளும்  மனங்களைச்  சார்ந்திருக்கின்றன. உடலைத்  தாக்கும்  நோய்களுக்கு  நுட்பமான  காரணம்  மனித  மனங்களில்  தங்கியிருக்கும்  அவ  நெறிகளாகும் . பல்வேறு விதமான  வன்மையான  ஆசைகளினால்  மனித மனம்  கலக்கமுற்று  , அலைக்கழிக்கப்பட்ட  வண்ணம்  உள்ளது. அவனுடைய  உடலும்  பல்வேறு  வகைகளில்  தாக்கப்படுகின்றது. அவன்  மனம்  நிம்மதியின்றி  உடல்  நலமின்றி  உபாதைகளுடன் காணப்படுகின்றது.

 

விலங்குகள்  அடர்ந்த காடுகளில் தங்கள்  இயற்கைச்  சூழ்நிலையில் மன குழப்பம் மனசஞ்சலம் ஏதுமின்றி மனமொன்றி மனமிசைந்து வாழ்வதே அவைகள்   நோய்கள்  ஏதுமின்றி  காணப்படுவதற்கு காரணமாகும். அவை தங்களின்  சூழ்நிலைக்கு  ஏற்றவாறு  வாழ்கின்றன. நீதி, நியாயங்கள், குற்றங்கள் , பாவங்கள் போன்றவற்றின் அர்த்தமும் இவைகளுக்குத்  தெரியாது. மனித  மனங்களை ஆட்கொள்ளும்  மனவுறுத்தல் , மன வருத்தம், துக்கம்,ஏமாற்றம்  போன்ற  ஏராளமான  மனம் சார்ந்த  எண்ணங்கள்  அவைகளுக்கு  நேராததால்  விலங்குகளின்  உடல்கள்  எவ்வகையிலும்  பாதிக்கப்படாமல்  இருக்கின்றன. முழு  பிரபஞ்சத்தையும்  தன்னுள்  உணரும்போது , மெய்ஞ்ஞானத்தை  எட்டும்போது  உள் மனம் போராட்டங்களில் இருந்து  முற்றிலும்  விடுபட்டு  இருப்பான். பாவங்களும்  பாவங்களைப்  பற்றிய  உணர்வும்  அவனை  அணுகாது.மனவுறுத்தலையும் , துக்கங்களையும்  துடைத்து  எறிந்திருப்பான். இவ்வாறு  அவன்  சலனமற்று  சாந்த நிலையில் பேரமைதியுடன்  மனமொன்றி மனமிசைந்து வாழும்போது  அவன்  உடல்  மெல்ல  ஆரோக்கிய  நிலையை  அடையும்.

 

உடல்  என்பது  மனதின் உருவமே. அதில்  மனத்தில்  மறைந்திருக்கும்  எண்ணங்களின்  சுவடுகளைக்  காண முடியும். புறமானது அகத்திற்குக்  கட்டுப்படும். உடலின்  இன்னல்களுக்கு  வித்திடும்  மனக்காரணங்களை  எதிர்காலங்களில்  மெய்யறிவு  படைத்த  விஞ்ஞானிகள்  கண்டறிவர்.

 

மனம்  நிம்மதியாக, அமைதியாக, நிறைவாக  இருப்பது  உடல்  ஆரோக்கியத்திற்கு  வழிவகை  செய்யும். வழிவகை  செய்யும்  என்றுதான்  பொருள் கொள்ள வேண்டும் . மந்திரத்தைப்  போல், ஆரோக்கியத்தை  ஏற்படுத்திக்  கொடுத்துவிடும்   என்று பொருள் கொள்ள கூடாது.நோய்களை  அறவே  போக்கிவிடும்  என்று பொருள் கொள்ள கூடாது. ஆனால் மனம்  அமைதியாக  இளைப்பாறுதலுடன்  சலனமின்றி  நெறிமுறைகளுடன்  வாழும்போது அது உடலையும்  உள்ளடக்கிய  நல்வாழ்விற்கான  அடித்தளமாகச்  செயல்படுகிறது. உடலின்  சக்திகள்  வீணடிக்கப்படாமல்  சேகரிக்கப்பட்டு  தேவையான  திசையில் சென்று  சரி  செய்யப்படுகின்றது. இம்மனோபாவம்  நோய்களை  அறவே  ஒழித்து  ஆரோக்கியத்தை  மீட்டு  எடுக்கவில்லை  என்றாலும்   அந்நோய்கள்  உடலைத்  துன்புறுத்துகையில்  இம்மனோபாவங்கள்  ஒரு  பாதுகாப்புக்  கவசத்தை  உடலளவிலும் மனதளவிலும் வழங்குகின்றன.

உடலளவில்  துன்பப்படும்  ஒருவன்  நீதிநெறிகளை, நியாயதர்மங்களை   பின்பற்ற தொடங்கினால்  உடனே  அவன்  குணமாகிவிடுவான்  என்று  கூறபடவில்லை. உண்மையில்  அவன்  பின்பற்றத்  தொடங்கும்போது  ஒரு  குறிப்பிட்ட  காலத்திற்கு  அந்த  நோயின்  தீவிரம், அதிகமாகி  அவனைத்  துன்புறுத்தும், . உடலானது  நீதி நெறிகள்,நியாயதர்மங்கள் பின்பற்றபடுவதன்   விளைவாக  ஒரு நெருக்கடி  நிலையைச்  சந்திக்கும். இச்சீரிய  வாழ்க்கை  முறை இத்தனை  காலம்  தங்கியிருந்த  நச்சுப்  பொருட்களை  வெளியேற்றத்  துடிக்கும். தீ  நெறியை  விடுத்து  அவன்  நன்னெறியைத் தேர்ந்தெடுக்கும்போது , கண்டிப்பாக   அவன்  ஒரு  சோதனையான  காலத்தைக்  கடக்க  வேண்டி  இருக்கும். விதி விலக்காக  சிலருக்கு  இச்சோதனைகள்  நேராது. விதி  விலக்காக  சிலர்  உடனே  குணம்  பெறுவர் . மற்றவர்கள்  உடனடியாக ஆரோக்கியத்தைப்  பெறவில்லை  என்றாலும்  ஒரு  சோதனையான  காலத்தை ஏற்றுக் கொண்டு பொறுத்து இருந்து அதைக் கடந்து  விட்டால்  நல்வாழ்விற்கான  பாதையை , வழியைக்  கண்டறிவர்.

 

மனதில்  உயர் நெறிகள்  தழைத்து  ஓங்கினால்  உடம்பானது  தன் தேவைக்கு  மீறிய  முக்கியத்துவத்தை  இழந்து  இரண்டாம்  நிலைக்குத்  தள்ளப்படும். அதிகாரம் செய்யும் நிலையிலிருந்து  இறங்கி அதிகாரத்திற்குக்  கட்டுப்பட்டு   துணை புரியும்  விதமாக  மாறும். ஒரு  நோயோ , வலியோ  முழு  குணம்  பெறவில்லை  என்றாலும்  மனமானது  அதன்  பிடிக்குள்  சிக்காமல்  மேல்  எழும்ப லாம்.  அந்த  நோய்  அவனைத்  தொடர்ந்து  தாக்கிய  வண்ணம்  இருந்தாலும்  மகிழ்ச்சியாக, உறுதியாக, பயனுள்ளவனாக  வாழலாம். மகிழ்ச்சியான  பயனுள்ள  வாழ்க்கை நோய் வாய்ப்பட்டவர்களால்  வாழ  முடியாது  என்ற  மருத்துவர்கள் , நல்வாழ்வு  சிகிச்சை  திறனாளிகள்  கூற்றை   பொய்யாக்கும்  விதமாக  எண்ணி லடங்கா  மக்கள்  பெரும் சாதனைகளைப்  படைத்து அரிய  செயல்களைப்  புரிந்து திறமைகளையும்  ஆற்றல்களையும்  பல்வேறு  துறைகளிலும்   வெளிப்படுத்தி  உடம்பில்  ஏற்பட்ட  குறையையும்  நோயையும்  மீறி வாழ்ந்து  காட்டியுள்ளனனர். தற்போது  வாழும்  சான்றாக  பலர்  உள்ளனர்.சில  நேரங்களில்  இவ்வாறு  உடலின்  குறையே  ஒரு  வைராக்கியத்தை  ஏற்படுத்தி , தடையாக  இருப்பதற்கு  பதில்  ஊக்கமாக  மாறித்  துணை புரிகின்றது. பயனுள்ள  மகிழ்ச்சியான  நோயற்ற  வாழ்வை  விரும்புபவன்  உள்ளத்தை  உடலுக்கு  முன்  போற்ற வேண்டும்.

 

உள்ள தெளிவுடையவர்கள் ,  உடலானது  எவ்வகையிலேனும்  பாதிப்புக்குள்ளாகி  இருந்தாலும்  மனதளவில்  கவலைக் கொள்ளாமல்   அந்த வலியும்  நோயும் இல்லாத  உணர்வோடு  வாழ முயல்கின்றனர். இவ்வாறு  உடம்பை  மறந்து  வாழ்வது, மனதைத்  தெளிவாக  உறுதியாக  வைத்து  இருப்பதற்கு உதவுவதோடு ,   உடம்பும்  குணம்  பெறுவதற்கு சிறந்த தூண்டுகோலாகும். குறைபாடற்ற  உடல்  நமக்கு  வாய்க்கவில்லை  என்றாலும்  குறைபாடற்ற  மனத்தை  உருவாக்கிக்  கொள்ளலாம். அந்த  நல்  மனமே  நல்  தேகத்தை  நமக்கு  வழங்கும்.

 

 

நோயுற்ற   மனம்  நோயுற்ற  உடலை  விட  வருத்த்த்குரியது. பரிதாபத்துக் குரியது. அது  எப்படியும்  உடலை  நோய்கள்  ஆக்கிரமிக்க  வழிவகை செய்து விடும்.  உள்ளத்தில்  சோர்ந்து  போனவர்களே  உடலில்  சோர்ந்து  போனவர்களைக்  காட்டிலும்  இரக்கத்துக்குரியவர்கள் . அனைத்து  மருத்துவர்களும்  எல்லா வகையான  சோர்வைப்  பற்றியும்  அறிவர். சோர்வு  கொண்டவர்கள்  செய்ய  வேண்டியது  தங்கள்  நிலை  விட்டு  மேலெழுந்து , தங்கள்  மனதை  வலிமையாய்  மாற்றி , தன்னலம்  துறந்து, மகிழ்ச்சியான  மனப்பாங்கை  கைக்கொண்டு  தங்கள்  தேகம்  எந்தக்  குறையோ  நோயோ  இல்லாமல்  இருப்பதை  உணர்ந்து  கொள்வது தான்.

 

தன்னைப்  பற்றி   தன்னிரக்க( சுய  பச்சாதாபம்)  எண்ணங்கள் , தன்   உணவு,  தன்  உடம்பு  என்று  எப்போதும்  தன்னைக்  குறித்தே  இடைவிடாது  சிந்திப்பவர்கள்   தாங்கள்  மனிதர்கள்  என்று  கூறப்பட  வேண்டுமானால்  அவற்றை  நிறுத்திக்  கொள்ள வேண்டும். எல்லாவித  சத்துக்களும்  நிறைந்த  உணவை  உண்ணும்  மனிதர்கள்  சிலர்,  அந்த  உணவு தங்களுக்கு  ஊறு   விளைவித்துவிடும்  என்று  அச்சப்படுவார்கள். அவர்கள்  முதலில்  தங்கள்  மனதை  வலிமையாக்கிக்  கொள்ளட்டும். பின்பு  உடல்  வலிமையைப்  பற்றி  சிந்திக்கட்டும்.  எல்லோருடைய  வீடுகளிலும்  பயன்பாட்டில் இல்லாத   சில  அரிய  உணவுப்  பொருட்களே  தன்னுடைய  உடல்நலத்தைப்  பாதுகாக்கும்  என்று  நினைப்பவன்  தன் உடலுக்கு  தானே சிறு  சிறு  கேடு  வரவழைத்துக்  கொடுக்கிறான்.

 

சைவ  உணவு  உண்ணும்  சிலர்  நான்  உருளைக்கிழங்கை  சாப்பிட   அச்சப்படுகிறேன் , இந்தப்  பழம்  எனக்கு  அஜீரணத்தை  ஏற்படுத்தும்;  ஆப்பிள்  பழம்  எனக்கு  பித்தத்தை   ஏற்படுத்தும்;  தானியங்கள், முளைப்பயிர்கள்  விஷத்தைப்  போன்றவை.; பச்சைக்  காய்கறிகள்  என்றாலே  எனக்குப்  பிடிக்காது  என்று  இவ்வாறு  அடுக்கிக் கொண்டே  போகிறவர்கள்  தாங்கள்  சைவ  உணவு  உண்ணும்  கொள்கையையே  இழிவுபடுத்துகிறார்கள். இவை போன்ற தேவையற்ற பயமோ  எண்ணங்களோ  ஏதுமின்றி  இறைச்சி  உணவு  உண்பவர்கள்  பார்வையில் ஏளனத்துக்கு  உள்ளாகிறார்கள்.

 

 

பசியுடன் இருக்கும்போது ,உணவு தேவைப்படும் போது   பூமி  விளைவித்து அளித்துள்ள உணவுகள்   அந்த  நோயை ஏற்படுத்தும் இந்த நோயை ஏற்படுத்தும்  என்று எண்ணி பயப்படுவது  இயற்கையையும்  அதன்  வாரி  வழங்கும்  தன்மையையும்  புரிந்து  கொள்ளாமல்  இருப்பதையே  காட்டுகிறது. உணவுப்  பொருட்களின்  தலையாய  பணி  அதை  உண்ணும்  உயிர்களின் தளர்வை நீக்கி சக்தியையும், ஊட்டத்தையும் வழங்கி உடம்பை   பாதுகாப்பதே. உடம்பிற்கு  ஊறு  விளைவிப்பதல்ல.  இந்த  உணவு , அந்த  நோயை  ஏற்படுத்தும்  அந்த  உணவு , இந்த  நோயை  ஏற்படுத்தும்  என்றெல்லாம்  இயற்கை  உவந்து  அளித்த  தூய  உணவுகளை  தவிர்த்து  இன்று  மிக  தீவிரமான  உணவுக்  கட்டுப்பாடு  முறையில்  உடல்நலத்தை  அடைய  முற்படுபவர்கள்  உள்ளம்  தெளிவில்லாத  ஒரு  மாயையில்  உழல்கிறார்கள். இவர்களைப்  போன்ற  உணவுக்  கட்டுப்பாட்டைப்   பின்பற்றும்  ஒருவர்    தன்னுடைய  பிணிகளுக்கெல்லாம்  தான்  உண்ணும்  பிரட்டே  காரணம்  என்று  கூறுகிறார். அளவுக்கதிகமாக  தான்  உண்ணும்  பிரட்  என்று  கூடக்  கூறவில்லை. ஆணி  அடித்தாற்போல்  அந்த  பிரட்டே  தன்னுடைய  (தன்னைப்  போன்ற  பலருடைய ) உடல்  பிணிகளுக்கெல்லாம்  காரணம்  என்று கூறுகிறார்.  இருந்தும்  அவர்  உட்கொண்ட  பிரட்டானது  பல  பருப்பு வகைகள்    கொண்டு  வீட்டிலேயே  தயார்படுத்தப்பட்ட  சத்து  நிறைந்த  பிரட்  ஆகும். விஷமற்ற  உணவுப்  பொருட்களின்  மீது  பழி       போடுவதற்கு   முன்  மனிதர்கள்  தங்கள்   தவறுகளை,  இழிவான  எண்ணங்களை , தங்கள்  மட்டற்ற  நுகர்வுத் தன்மையை,  அளவுக்கு  மீறிய  அனுபவித்தலைக்  கைவிடட்டும்.

 

 

ஒருவன் தன்னுடைய  சிறு  சிறு  பிரச்சினைகளில்  உழன்று  கொண்டே  இருப்பது  அவனது  பலவீனமான  மனதைக்  காண்பிக்கின்றது. அதில்  உழன்று  கொண்டே  இருப்பது  அது  குறித்துப்  பேசுவதற்கு  வழி  வகுக்கும். அவ்வாறு  பேசுவது  அவனை  அறியாமலே மனத்தில்  ஆழப்  பதிந்து  உற்சாகத்தை,  ஊக்கத்தை  இழந்து, சோர்வையும்  தன்னிரக்கத்தையும்  பெறச் செய்துவிடும் . துன்பத்தையும்  நோயையும்  அசைபோடுவதை  விட  மகிழ்ச்சியையும்  உற்சாகத்தையும்  அசைபோடுவது  சுலபமானது, அழகானது மட்டுமல்ல  லாபகரமானதும்கூட.

 

 

நம்மை  வெறுப்பவர்களை   நாம்  வெறுக்காமல்  அன்போடு   வாழ்வோம்.

 

வெறுப்பை உமிழ்பவர்கள்    இடையே  வெறுப்பை உமிழாமல்  வாழ்வோம்.

 

துன்பம்  தருபவர்களின்   துன்பத்தை  ஏற்றுக்  கொள்ளாமல்  மகிழ்ச்சியாக  வாழ்வோம்.

 

துன்பப்படுபவர்கள்  இடையே  துன்ப்பப்படாமல்   வாழ்வோம்.

 

பேராசை  ஊட்டுபவர்களால்  பாதிப்பு  அடையா வண்ணம்  பேராசை  இன்றி  மகிழ்ச்சியாக  வாழ்வோம் .

 

பேராசை  கொண்டவர்கள்  இடையே  பேராசை  இன்றி  வாழ்வோம்.

 

உடல்  நல்வாழ்விற்கும்  மன  மகிழ்ச்சிக்கும்  அறநெறிகளை  கடை பிடித்தலே  சிறந்த  அடித்தளமாகும். அவை    குண நலன்களை, நற்பண்புகளை,  நல்  பழக்கவழக்கங்களை , நல்  மனோபாவங்களை  சீர்படுத்திய  வண்ணம்  வாழ்வின்  அனைத்து  அம்சங்களையும்  எப்போதும் கவனித்தவாறு  அரண்  போல்  பாதுகாக்கும். கவனமின்றிச்  செய்யலாம்  என்று   எண்ணப்படுகிற  மிகச்  சாதாரண  செயலைக்  கூட  உளமார  அறிவாற்றலோடு  ஈடுபாட்டுடன்  செய்வதற்கு  அவனைஅது இட்டுச்  செல்கிறது. எந்தவித  அடிப்படையோ  அனுபவமோ  இன்றி  உணவுகளின்  மீது  கொண்ட  கருத்துகளை,  அச்சங்களை  நீக்கி,  உண்ணும்  முறைமையை  சீரமைத்து , உள்ளம்  வலிமை  பெறவ,    தன்னிரக்க  சுயபச்சாதாப  உணர்வை  இழக்க வழி செய்கின்றது. தன்  நாவின் ருசியை ஈடேற்ற   எப்போதும்  மூழ்கிக்  கொண்டிருப்பதைத்  தடுத்து  இயற்கை  அளித்த  அனைத்து   உணவுகளும்,  உடலுக்கு  நன்மை  அளிப்பவையே,  ஊறு  விளைவிப்பன   அல்ல  என்று  உணரச் செய்யும்.

 

இவ்வாறு  நாம்  உடல்  நலத்தை  விரும்பினால்,  உள்ளத்தில்  அறநெறிகளை   தழைத்தோங்கச்  செய்தால்  அவை   நம் உடலையும்  உள்ளத்தையும்  காக்கும்  அரணாகத்  திகழும். உள்ளத்தில்  செம்மையானவர்கள்  உடலிலும்  செம்மையானவர்களாக  இருப்பர் . நிலையான  அறநெறிகளுக்கு  உட்படாமல்  நாளும்  பொழுதும்    மாறும் கருத்துக்கள்  அபிப்பிராயங்களை  கொண்டு  வாழ்வது  குழப்பத்தில்  வாழ்வதாகும்.அறநெறிகளுக்கு  உட்பட்டு  நம்மை  ஒழுங்குபடுத்திக்  கொள்வது , இன்றியமையாத  ஒவ்வொன்றிற்கும்  அதனதன்  உரிய  இடத்தை  வழங்கி வாழ்வது தெளிந்த  பார்வையோடு வாழ்வதாகும்.

 

. அறநெறிகளை உள்ளத்தில் பின்பற்றும் போது மட்டுமே அறநெறிகளின் செயல்பாட்டை   உணர  முடியும். அவ்உள்ளங்களுக்கு மட்டுமே   உள்ளுணர்வும், காரணங்களை  ஆழ  ஊடுருவிப்  பார்க்கும்  தன்மையும் , நிலைமைக்கு  ஏற்றவாறு  வேண்டிய  கட்டளைகளைப்  பிறப்பிக்கும்  ஆற்றலும், காந்தமானது  இரும்புத்  துகள்களை  தன்  வசம்  இழுப்பது  போல்  கைகூடும்.

 

உடம்பை  குணப்படுத்துவதை  விட  அதை  மீறி  எழுவது  இன்னும்  சிறந்தது. உடம்பினால்  ஆட்டு விக்கப்படும்  பொம்மையாக  இராமல் அந்த உடம்பை கட்டளையிடும் தலைவனாக  இருக்க  வேண்டும்.    அந்த  உடம்பை  தவறாக  பயன்படுத்துவதும் , அதைக்  குறித்து  எப்போதும்  சிந்தித்துக் கொண்டு  இருப்பதும், அறநெறிகளையும்  மீறி  அந்த  உடம்பின்  ஆசைகளைப்  நிறைவேற்றுவதையும்   தவிர்க்க  வேண்டும். உடம்பின்  சுகபோகங்களைக்  கட்டுப்படுத்தி  அளவை  மீறாமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்.  உடம்பின் கூடவே  தொடரும்  வலிகளாலும் , வியாதிகளாலும் , பிரச்சினைகளாலும்  பாதிப்படையாமல் வாழவேண்டும். இது  உடம்பை  குணப் படுத்துவதை  விடச்  சிறந்தது. உடம்பை  குணப்படுத்துவதற்கு  மிகப்   பாதுகாப்பான   வழியும்  இதுவே. உள்ள  உறுதியையும்  மெய்யறிவின் பாதுகாப்பையும்  வழங்கும்  ஒரு  நிரந்தரத்  தீர்வாகும்.

 

Share This Book