"

1961-’64 ம் ஆண்டுகளில்

P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. எனக்கு அப்போது மிகவும் பிடித்த பாடம். ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. ஆசிரியராக இருந்தும் B.A.-யை விட B.Sc. பெரிது என்ற எண்ணம் அவர்களுக்கு. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘காதலிக்க நேரமில்லை பட்த்தில் சொல்றது மாதிரி – சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிருக்கான்.)

பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன். நான் சேரும் போது கல்லூரி ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகியிருந்தது. வகுப்பில் சேர்ப்பதற்கான கடைசி நாளன்று தான் நான் சேர்ந்தேன். இதற்குள் கல்லூரி வகுப்பில் எல்லோரும் நண்பர்களாக இருந்தார்கள் – என்னையும் எனக்கு முன் ஓரிரு நாட்களுக்கு முன் சேர்ந்த யோகேந்திரனையும் தவிர. யோகேந்திரன் இலங்கையிலிருந்து வந்தவர். பெரிய ஆள். நல்ல திடகாத்திரமான உடம்பு. எங்களை விட எல்லாம் வயது அவருக்கு அதிகமாக இருக்கும். எனக்கு வகுப்பில் கடைசி எண். எனக்கு முந்திய எண் அவருடையது. செய்முறை வகுப்புகளில் நானும் அவரும் ஒன்றாக இருப்போம், அதனால் எங்களுக்குள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நட்பு உண்டு. இன்னொரு காரணமும் பின்னால் வந்து சேர்ந்தது. கல்லூரியில் இருக்கும் போதே வைகை ஆற்றுக்குள்ளிருந்து சினிமா பாட்டு சத்தம் அடிக்கடி கேட்கும். நம்ம நண்பருக்கு சரோஜாதேவின்னா அப்படி ஒரு உசுரு. அதுவும் அவர் நடக்கிறதை பின்னால இருந்து காண்பிப்பாங்களே … அதுன்னா தலைவருக்கு அம்புட்டு ‘இது’ ! அவர் நடித்த பாட்டுன்னா போதும் … என்னைக் கூப்பிடுவார் … எப்டி என்பார் .. இசை மயக்கத்தில் கொஞ்ச நேரம் இருப்பார்.

மேஜர் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளில் எங்களோடு Physics, Chemistry பசங்களுக்கும் ஒன்றாக தமிழ் ஆங்கில வகுப்புகள் இருக்கும். நாங்கள் அந்த வகுப்புகளில் உட்காருவதை வைத்தே யார் நல்லா படிக்கிற பசங்கன்னு சொல்லிடலாம்! ஏன்னா … இரு வரிசை பெஞ்சுகளில் Physics மொதல்ல உக்காந்திருப்பாங்க; அடுத்து Chemistry; நாங்க எல்லோரும் கடைசி பெஞ்சுகளில். எங்களைப் பார்த்தால் அந்தப் பசங்களுக்கே கொஞ்சம் தெனாவெட்டாக இருக்கும்.

நான் சேர்ந்து சில நாட்களிலேயே எங்களுக்குக் காலாண்டுத் தேர்வு வந்து விட்டது. வகுப்பில் இதுவரை நான் ஒரு தனிக்காட்டுப் பறவை மாதிரிதான். அதிகம் நண்பர்கள் கிடையாது. இரண்டே இரண்டு  நண்பர்கள். ஒருவர் பக்கத்துத் தெரு. பெயர் மாணிக்க வாசகம். நாங்கள் இருவரும் சைக்கிளில் கல்லூரிக்கு ஒன்றாக வர ஆரம்பித்தோம். அதன் மூலம் நண்பரானார். (ரொம்ப வருஷத்துக்கு முன்பே அவர் இறந்த செய்தி வந்தது.) இன்னொருவன் ராமசாமி. எங்கள் வகுப்பில் அப்போது மொத்தம் 3 ராமசாமிகள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்தோம். நம்ம தோஸ்த் ராமசாமி நல்ல கருப்பு. அதனால் அவனுக்குப் பெயர் கருப்பு ராமசாமி. இன்னொருத்தர் சிகப்பா இருப்பார். கொஞ்சம் வயது எங்களை விட கூட இருக்கலாம். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். ஆனால் எப்போதும் சிரித்த முகம். அவருக்குப் பெயர் சிகப்பு ராமசாமி. இன்னொருத்தன். அவனுக்கு வைத்த பெயர் scientist ராமசாமி; ஏன்னா எல்லா வாத்தியாரிடமும் நிறைய கேள்வி கேட்பான். நல்லா படிக்கணும் … முதுகலை போகணும் … கல்லூரி வாத்தியாராக வேண்டும் … இதெல்லாம் அவனது ஆசைகள். எல்லோரிடமும் இதைச் சொல்வான். சரி … அவன் என்ன ஆனான் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் நான் பயந்தது zoology practical-க்கு மட்டும் தான். ஏனெனில் தேர்வுக்குள் எனக்கு இரண்டே இரு வகுப்புகள் மட்டுமே இருந்தன. அதில் ஒரே ஒரு practical – தவளையில் arterial system & venous system இரண்டு மட்டுமே செய்திருந்தார்கள். ஆனால் இதில் நான் venous system மட்டும் செய்திருந்தேன். அதிலும் எனக்கு ஒரு தகராறு. நான் செய்தது அதுவா .. இதுவான்னு ஒரு தகராறு. அதாவது எது arteries எது veins என்று குழப்பம். தவக்காளையில் எது மேல் பக்கம் (dorsal) எது கீழ் பக்கம் (ventral) என்றும் ஒரு தகராறு. எது எதுன்னு தெரியாம எது எதை நான் செய்றது அப்டின்னு ஒரே குழப்பம்.

தேர்வு அன்னைக்கி யோகேந்திரனிடம் சொல்லியிருந்தேன். சந்தேகம் கேட்பேன் என்று சொல்லியிருந்தேன். arterial system செய்யச் சொல்லிக் கேள்வி வந்ததும் யோகேந்திரனிடம் எதைச் செய்யணும்; மேலேயா கீழேயா என்று கேட்டேன். அவர் மேலே என்றார். அதாவது அவர் dorsal என்ற பொருளில் சொல்ல, நான் தவக்காளையை ஓப்பன் செய்ததும் மேலே உள்ள (ventral) உள்ள venous system செய்து வைத்து விட்டு வந்திட்டேன்.

மதிப்பெண்கள் வந்தன. மேஜரில் ஆசிரியர் சொல்லும் போது fifty and fifteen  என்றார். அதாவது தியரியில் 50; செய்முறையில் வெறும் 15. ஊத்திக்கிரிச்சி. ஆனாலும் நம்ம புகழ் அதற்குள் ‘திசையெங்கும்’ பறந்து விட்டது. ஏன்னா .. தமிழில் எல்லோரும் ஓரளவு  மதிப்பெண்கள் வாங்கியிருந்தோம் . ஆனால் ஆங்கிலத்தில் பலருக்கும் ‘ஊத்திக்கிச்சி’! எங்கள் வகுப்பில் நிறைய பேருக்கு ஆங்கிலத்தில் ரொம்ப மோசமான மார்க். ஆனா … நான் மட்டும் இரண்டாவது மார்க் – அதாவது Physics, Chemistry, zoology மூன்று வகுப்பிலும் இரண்டாவது மார்க். முதல் மார்க் ஒரு Physics பயல். மேஜரில் 50 மார்க் நல்ல மார்க்காகவே இருந்தது. (ஐம்பது மார்க் என்பதெல்லாம் நல்ல மதிப்பெண்கள் என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு எங்கே தெரியப் போகுது!)

என்னடா .. நேத்து வந்த பயல் இப்படி மார்க் வாங்கிட்டானேன்னு எங்க வகுப்பில் எல்லோருக்கும் ரொம்ப ‘இது’! அதுவும் ஆங்கிலத்தில் நல்ல மார்க் வாங்கினது நம்மள எங்கேயோ தூக்கிட்டுப் போயிரிச்சி. நம்ம கருப்பு ராமசாமிக்கு இப்போ இன்னும் கூட நெருங்கிட்டான். பால சுப்ரமணியன் என்ற பாலு என்பவனுக்கும் ஆசிரியர் ஆக வேண்டுமென்ற ஆவல் நிறைய. அதற்காகவே அவன் அடிக்கடி ஆங்கிலத்தில் பேச முயல்வான். (அவன் படித்து முடித்து ஆசிரியராக ஆனான் என்பதும் தெரியும்.) அவனுக்கும் என்னிடம் புதியதாக நட்பு பிறந்தது.

நானும் சும்மா சொல்லக் கூடாது. மொழிப்பற்று எக்கச் சக்கம் தான். நான் ஆங்கிலம், தமிழ் இரண்டிற்கும் எடுத்த முயற்சிகளை என் மேஜர் பாடத்திற்குக் கொடுத்திருந்தால் ஒரு வேளை கொஞ்சம் பெரிய ஆளாக ஆயிருந்திருப்பேன். ஆனால் எனக்கோ ஆங்கிலத்தில் எல்லோருக்கும் வழக்கமாக இறுதித் தேர்வில C Grade தான் போடுவார்கள். B grade கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு ஆங்கிலத்தில் B grade; தமிழில்  A grade வாங்கி விட வேண்டுமென்று ஆவல் அதிகம். அதற்காகவே இரு பாடங்களில் மிகுந்த சிரத்தை எடுத்தேன்.

தமிழ், ஆங்கில வகுப்புகள் அனேகமாக எல்லோரும் சேர்ந்து பெரிய வகுப்பாக இருப்பதால் கொஞ்சம் கலாட்டாக்கள் இருக்கும். அதுவும் தமிழ் வகுப்புகளில் இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் எனக்கு வந்ததில் செய்யுள் எடுத்த ஆசிரியரிடம் பாச்சா பலிக்காது. ரொம்ப அழகாகப் பாடி பாடம் எடுப்பார். ஒரு செய்யுளை ராகத்தோடு பாடிவிட்டு, அதே ராகத்தில் உள்ள ஒரு சினிமாப் பாட்டையும் பாடுவார். இன்னொரு ஆசிரியர். அவர் பின்னாளில் கல்லூரியின் முதல்வரானார். அவர் வகுப்பில் கொஞ்சம் கலகலப்பு இருக்கும் – மாணவர்களிடையே. ஒரு நாள் எல்லோரும் ஏதேதோ கத்திக் கலாட்டா செய்து கொண்டிருந்தோம். ஆசிரியர் நான் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் வந்து என் அருகில் நின்று, என்னைப் பார்க்காமலேயே, ‘நீங்கள் எல்லாம் முதல் வகுப்பு வாங்கக் கூடிய மாணவன் என்று நினைத்திருந்தேன் … நீங்களுமா இப்படி’, என்றார். அதிலிருந்து அவர் வகுப்பில் ரொம்ப நல்ல மாணவன். இன்னும் இரு பேராசிரியரர்கள். அவர்கள் இருவரும் அப்பா, பிள்ளைகள். பிள்ளை ஆசிரியர் கல்லூரி விட்டு விலகி சென்னை சென்று இறுதியில் துணை வேந்தர் அது இதுன்னு பெரிய ஆளாக ஆனார். அப்பா-ஆசிரியர் நிறைய நூல்கள் எல்லாம் எழுதியவர் தான். ஆனாலும் அவர் வகுப்பென்றால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

ஆங்கில ஆசிரியர்களில் நான் மாடலாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் பேரா. சக்தி வேல். வகுப்பில் பாடம் மட்டும் இருக்காது. அவர் வகுப்பில் அமர்ந்திருப்பதே நன்கிருக்கும். இவரை நான் பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்த போது என் பெயரைச் சொல்லி எப்படி இருக்கீங்க என்று கேட்டார். ஜன்மம் சாபல்யமடைந்தது! அவ்வளவு மகிழ்ச்சி. அத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை நினைவில் வைத்திருக்கிறாரே என்று மிக சந்தோஷப்பட்டேன்.

இவரையும் இன்னொருஆசிரியரையும் நான் ரொம்ப கொடுமைப் படுத்துவேன் ! வேறொன்றுமில்லை. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமென்பதற்காக இரு bazar notes  வாங்கி, அதை வைத்து நானாக essays எழுதி திருத்தி வாங்குவேன். ஒரு நோட்ஸ் – EASY GUIDE – சுப்ரமணியன் B.A., L.T. – இவர் பள்ளிக்கூடங்களில் நோட்ஸ் போடுவதில் வல்லவர். கல்லூரிக்கு போடும் நோட்ஸ் ரொம்ப ரொம்ப சிம்பிளாக இருக்கும். இன்னொரு நோட்ஸ் – MINERVA GUIDE – பரசுராமன் M.A. – இவரது நோட்ஸ் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒவ்வொரு வாக்கியத்திலும் நாலைந்து வர்த்தைகள் புரியாத வார்த்தைகளாக இருக்கும் படி ‘பயங்கரமா‘ எழுதியிருப்பார். Shakespeare-க்கு Banerji அப்டின்னு பெரிய ஆளு .. அதோடு இன்னொரு நோட்ஸ். ஆசிரியர் BARNES என்றோ என்னவோ ஒரு பெயர். திருவள்ளுவருக்கு பரிமேலழகர் மாதிரி Shakespeare-க்கு இவர் என்பார்கள். இவைகளையெல்லாம் வாங்கி எல்லாவற்றையும் வாசித்து, நானாக ஒரு கட்டுரை எழுதி ஆசிரியர்களிடம் எழுதிக் கொடுத்து, அவர்களை அனத்து என்று அனத்தி திருத்தி வாங்குவேன்.

ஆங்கிலத்திற்கு இத்தனை நோட்ஸ் வாங்குவேன். அப்போது தமிழுக்கு கோனார் நோட்ஸ் மிகப் பிரபல்யம். நான் தமிழுக்கு மட்டும் எந்த நோட்ஸும் வாங்க மாட்டேன். தமிழுக்குத் தனி நோட்டு போட்டு நானே பொழிப்புரையும் மற்றவைகளையும் எழுதிய சிரத்தையுள்ள ஒரே தமிழ் மாணவனாக இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். தேர்வுகளிலும் முதல் பக்கத்தில் ஐந்து இலக்கணக் குறிப்புகள் கேட்பார்கள். அதில் மார்க் குறைக்க முடியாது. ஐந்தும் முதல் பக்கதில் எழுதி சுளையாக 10 மார்க் வாங்குவது ஒரு வழக்கம்.

இப்படியெல்லாம் இரு மொழிகளுக்கும் சிரத்தை எடுத்துப் படித்தேன்….

ஆனாலும் இவ்வளவு சிரத்தை எடுத்தும் இறுதியில் பாதிக் கிணறு தான் தாண்டினேன். ஆங்கிலத்தில் C Grade தான். ஆனால் தமிழில் கல்லூரியிலேயே இருவர் மட்டும் முதல் வகுப்பு – A grade – வாங்கினோம். இன்னொருவர் ஆங்கிலத் துறை மாணவன். அவர் இன்னும் நன்கு படித்து I.A.S. ஆனதாக அறிந்தேன். நான் வழக்கம் போல தரிசு ஆய்ட்டேன்.

நம்முடைய மொழிப்புலமையால் (!) என்னிடம் கருப்பு ராமசாமிக்கு ஏக ஈர்ப்பு. ரிகார்ட் நோட்ல படமும் அவனை விட நல்லா நான் வரைவேன். படிப்பில் உதவி கேட்பான். டிகிரி முடித்ததும் B.Ed. முடித்து ஆசிரியரானான். நான் கல்லூரி செல்லும் சந்தைப் பேட்டையில் தான் குடியிருந்தான். அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் படிப்போடு இருவருக்கும் தொடர்பின்றிப் போனது. படிக்கும் போது அடிக்கடி வீட்டிற்கும் வருவான். என் வீட்டிற்குப் பக்கத்தில் எனக்கு இருந்த distraction அவனுக்கும் தெரிந்ததா … அப்போ கேட்டான்: ‘ஏண்டா … இதையெல்லாம் வச்சிக்கிட்டே இப்படி படிக்கிறியே .. இதுவும் இல்லாட்டி ரொம்ப நல்லா படிப்பியோ?’

தெரியலையே ’ப்பா … !

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book