1961-’64 ம் ஆண்டுகளில் …
எதையோ படிக்க ஆசைப்பட்டு, எதோ ஒரு துறையில் சேர்ந்து இளங்கலைப் பட்டப் படிப்பையும், முதுகலைப் பட்டப் படைப்பையும் இந்த ஐந்து ஆண்டுகளில் முடித்தேன். இளங்கலையில் முன்பே சொன்னது போல் சயன்டிஸ்ட் ராமசாமி ஒரு நல்ல நண்பனாகவும், படிப்பில் ஒரு போட்டியாளனாகவும் இருந்தான். மேஜர் பாடங்களில் என்னைத் தோற்கடிப்பது என்றால் அவனுக்கு அம்புட்டு ஆசை. கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான். வகுப்பில் நிறைய கேள்வி கேட்பது இவனும், இன்னொரு நண்பன் -பால சுப்ரமணியன், ஏற்கெனவே ஆசிரியராக வேண்டுமென்ற ஆவலில் ஆங்கிலத்தில் அடிக்கடி பேச முயலும் நண்பன் என்று கூறியிருந்தேனே அவன் தான் – இந்த இருவரும் தான். இந்த இருவரில் பாலு அதிகம் என்னோடு பழகியதில்லை. ஆனால் நம்ம சயன்டிஸ்ட் ராமசாமி என்னோடு நல்ல நட்போடு இருந்தான்.
இளங்கலை முடித்ததும் நானும் இன்னும் இரு வகுப்புத் தோழர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர ஒரு முட்டு முட்டினோம். அதைப் பற்றி பிறகு பேசுவோம். அந்த சோகக் கதை முடிந்ததும் மீண்டும் தியாகராஜர் கல்லூரியிலேயே முதுகலைக்குச் சேர்ந்தேன். அந்த ஆண்டு நான் மட்டுமே முதுகலை வகுப்பில் அங்கேயே படித்த ஒரே பழைய மாணவன்.
இதுவரை தொடர்பில் இல்லாதிருந்த P.G. Professor, Dr. கண்ணன் என்னை ஓரிரு ‘வால் தனமான நேரங்களில்’ பார்த்து விட்டார். என்னைப் பற்றி பிற ஆசிரியர்களிடமும், என் சீனியர் மாணவர்களிடமும் நிறைய புகார் பட்டியல் கொடுத்திருக்கிறார். முதலாண்டில் அவரைக் கண்டாலே எனக்கு அரட்டியாகி விட்டது. பலரும் என்னை மிகவும் பயமுறுத்தி வந்தார்கள். ஆனால் முதலாண்டில் அவரிடம் மிகவும் பயந்து போயிருந்தேன். அந்த ஆண்டின் மதிப்பெண்கள் எங்களுக்குக் கிடைக்காது. இரண்டாம் ஆண்டின் இறுதியில் தான் மதிப்பெண்கள் எங்களுக்குத் தெரியும். ஆனாலும் என் முதலாண்டு மதிப்பெண்கள் நன்றாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். தலைவர் காதிற்கும் அது போயிருக்கிறது, இதனால் இரண்டாமாண்டிலிருந்து நான் தலைவரின் செல்லப் பிள்ளையாகி விட்டேன். எதற்கும் தலைவர் என்னைத்தான் கூப்பிடுவார். நிறைய செல்லம் … நிறைய உரிமை … அதனாலேயே அந்தக் கல்லூரியிலேயே நான் ஆசிரியனாகச் சேர வேண்டுமென்று அவரே எனக்காக முயற்சித்தார். ஜாதியோ .. காலமோ … கடவுளோ (???) .. வேறு விதமாக முயற்சிக்க எனக்கு அங்கு வேலை கிடைக்காமல் போயிற்று.
இளங்கலை முடித்து விட்டு சயன்டிஸ்ட் ராமசாமி ஓராண்டு ஆசிரியர் வேலைக்குப் போய் விட்டு, அதன்பின் என் ஜூனியராக முதுகலைக்கு வந்தான். Ph.D. என்ற குறிக்கோளோடு படிக்க ஆரம்பித்தான். முதுகலை முடிந்ததும் நான் கல்லூரி ஆசிரியனாக தஞ்சைக்கருகில் உள்ள பூண்டி வாண்டையார் கல்லூரியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன்.
முதுகலை முடிந்த பிறகு எனக்கும் சயன்டிஸ்ட் ராமசாமிக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் அவன் என்னைத் தேடி நான் அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்ப்பது தெரிந்து ஒரு தடவை என்னைப் பார்க்க வந்தான். சயன்டிஸ்ட் ராமசாமி இப்போது போலீஸ்கார ராமசாமியாக ஆகியிருந்தான். கல்யாணம் ஆகியிருந்தது. தமிழ்நாட்டுக் காவல் துறையில் ஒரு D.S.P. ஆகியிருந்தான். போலீஸ்காரனாகவே என்னைப் பார்க்க கல்லூரிக்கு தனது ஜீப்பில் வந்திருந்தான். எங்கள் துறைக்குப் பக்கத்தில் இருவரும் ஜீப்புக்கு அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவனுக்கு என்னைப் பார்த்துப் பொறாமை! இப்படி ஒருஆசிரியனாக ஆகாமல் போய் விட்டேனே என்று கவலைப் பட்டான். எனக்கு அவனைப் பார்த்து- இப்படியெல்லாம் பெரிய ’ஆப்பிசராக’ இல்லாமல் போய்விட்டோமே என்று – பொறாமை !!
அவன் பார்த்துப் பேசிவிட்டுச் சென்ற பின் நண்பர் ஒருவர் ‘யாரது’ என்றார். சொன்னேன். அவர், ‘நீங்க ரெண்டு பேரும் பேசாம வேலையை மாத்திக்கலாம்’ என்றார்.
’ஏன்?’
‘இல்லை .. ரெண்டு பேரும் நிற்கும் போது அவர் நல்ல மனுஷன் மாதிரி கையைக் கட்டிக்கிட்டு softஆன ஆள் மாதிரி நின்று பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நீ … பெருசா அந்த ஜீப்பே உன்னுடையது மாதிரி சாஞ்சு நின்னுக்கிட்டு பந்தா பண்ணிக்கிட்டு இருந்தது மாதிரி தெரிந்தது. அவரு வாத்தியாரா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’ அப்டின்னார்.
அவரிடம் அவனது ஆசை, கவலை பற்றிச் சொன்னேன்.
அதற்குப் பிறகு சயன்டிஸ்ட் ராமசாமியை … இல்லை .. இல்லை … போலீஸ் ராமசாமியைப் பார்க்கவேயில்லை. பெரிய அதிகாரியாக ஆகி இப்போது ஓய்வு பெற்றிருப்பான்.
யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் …!!!