*
*
1952-ல் ………..
தாராசிங் இறந்த போது தினசரிகளில் வந்த செய்தி இந்தியாவின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ ராஜேஷ் கன்னாவிற்கு வந்ததை விட அதிகமாக இருந்தது எனக்கு ஒரு ஆச்சரியம்தான் — எப்படி தாராசிங்கிற்கு இவ்வளவு கவரேஜ் என்று.
இந்த இரு செய்திகளும் வாழ்க்கையில் பழைய பக்கங்களைச் சிறிது புரட்டிப் பார்க்க வைத்தன. ராஜேஷ் கன்னா ’ஆராதனா’ என்ற படத்தில் போட்டு பிரபலமான கலர் குர்தாக்களை (தைரியமாக) அணிந்து அந்தக் காலத்தில் ஊர் சுற்றியது, அதனால் நடந்த ஒரு சண்டையும் நினைவிற்கு வருகிறது. தாராசிங் நினைவுகள் அதற்கு ரொம்ப முந்தியது. முதல் நிகழ்வு கல்லூரியில் வேலை பார்த்த போது, எழுபதுகளின் ஆரம்பத்தில் நடந்தது. தாராசிங் காலம் நான் மூன்றாவது, நான்காவது வகுப்பு படித்த போது நடந்தது.
மூன்றாம், நான்காம் வகுப்பு படித்த போது தாராசிங் பெயர் எங்கள் மத்தியில் பிரபலம். அப்போது மதுரையில் பல இந்திய, வெளிநாட்டு பயில்வான்களின் போட்டிப் பந்தயங்கள் நடைபெற்று வந்தன. கிங்காங், ‘செந்தேள்’ … இப்படிப் பல பெயர்கள். இப்போது WWF மாதிரி அப்போ இது!
எங்கள் பள்ளியில் ஒரு நாள் திடீரென்று மதியத்தில் பயங்கர சலசலப்பு. எல்லோரும் பக்கத்திலிருக்கும் பெரிய மாதா கோவிலுக்குப் படையெடுத்தார்கள். மாணவர்கள் மட்டுமல்ல … ஆசிரியர்களும் தான். எங்கள் வகுப்பு ஆசிரியர் எங்களையும் கூட்டிக் கொண்டு ஓடினார். கோவில் பூட்டியிருந்தது. ஆனால் ஜன்னல் வழியே நாங்கள் பார்த்த போது ‘செந்தேள்’ – இவர் ஒரு அயல்நாட்டு பயில்வான்; ஆஸ்த்ரேலியா என்று நினைவு – மட்டும் கோவிலுக்குள் ஜெபம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் தொடர் கதையாக அந்தப் பயில்வான்களின் சண்டைகள் பற்றி பெரியவர்கள் வீட்டில் சொன்னதையெல்லாம் வைத்து மாணவர்கள் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நண்பன் ‘கிடுக்கிப் பிடி’ அல்லது ‘நண்டுப் பிடி’ என்று ஒன்று சொல்லிக் கொடுத்தான். என் பின்னால் நின்றுகொண்டு, என் கைகளுக்குக் கீழே அவன் கைகளைக் கொண்டு போய் … அப்படியே அவன் தன் கைகளை என் கழுத்துக்குப் பின்னால் சேர்த்து பிடித்துக் கொண்டான். என்னைத் தப்பிக்கச் சொன்னான். முயன்றேன். முடியவில்லை. பாடம் நடத்தினான். அப்படியே குனிந்து பின்னால் இருப்பவனை முதுகுக்கு மேல் தூக்கி அந்தப் பக்கம் டமார்னு போடணும் என்றான். இப்போது அவன் அந்தப் பிடியை என்னிடம் போட மாட்டேன் என்று சொல்லி விட்டான். ட்ரெய்லருக்குக் கூட ஒரு சான்ஸ் கிடைக்காமல் போனது.
வகுப்பில் என் நண்பன் சிவகுமார். எங்கள் வீடும் அவன் வீடும் நீண்ட ஒரே தெருவில் இருந்தது. இருவரும் சேர்ந்து பள்ளியில் இருந்து ஒன்றாகத் திரும்பிப் போவோம். நல்ல நண்பன். அவன் அம்மா ஒரு பள்ளியின் ஆசிரியரோ .. தலைமை ஆசிரியரோ தெரியவில்லை. ஆனால் குடை பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டைத் தாண்டி போவார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு எப்பவுமே கொஞ்சம் பயம் தான். டீச்சராச்சே …!
சிவகுமார் மட்டுமல்ல அவனது அம்மாவும் கொஞ்சம் குட்டைதான். சிவகுமாரிடம் நான் படித்த ‘புதுப் பாடத்தை’ நடத்திக் காண்பிக்க ஆசை வந்தது. நான் அவனைக் கிடுக்கிப் பிடியில் இறுக்கிப் பிடித்தேன். தப்பிக்கச் சொன்னேன். அவனால் முடியவில்லை. அடுத்து அவன் என்னைப் பிடித்தான். என்னை விட அவன் குட்டை என்பதால் என்னால் அவனை என் முதுகுக்குப் பின்னால் தூக்கி முன்னால் டொம் என்று போட முடிந்தது. ஆனாலும் பயல் ரொம்பவே டொமால் ஆகிவிட்டான். பாவி … இப்படியா விழுவான். தூக்கிப் போட்டதும் அப்படியே ’பொத்தடீர்னு’ விழுந்து தொலைத்தான். நல்ல அடி .. அவனுக்குக் கொஞ்சம் அழுகை; எனக்கு நிறைய சிரிப்பு. சிரிச்சிக்கிட்டே வெற்றிக் களிப்பில் இருந்துட்டேன்.
அதுக்குப் பிறகு பள்ளி அன்று முடியும் வரை பேசினான். ஆனால் .. கள்ளப்பயல் … வீட்டிற்குப் போனதும் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டான். அடுத்த நாள் அவர்கள் அம்மா பள்ளிக் கூடத்திற்கே வந்து விட்டார்கள் சிவகுமார் அவன் அம்மா என்னைக் கூப்பிட்டதாகச் சொன்னான். போனேன். . நன்கு திட்டினார்கள். ஏன் அவனை அப்படி கீழே தள்ளினாய் என்று கடிந்து கொண்டார்கள். அதைவிட உலகத்திலேயே அதிகம் பயப்படும் தண்டனை ஒன்றைச் சொன்னார்கள்; அதாவது இப்படியெல்லாம் செய்தால் உன் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து விடுவேன் என்றார்கள். அது வயிற்றில் புளியைக் கரைத்தது.
அன்றிலிருந்து சிவகுமாரிடம் நான் பேசவில்லை. அவனும் பேசவில்லை. வாழ்க்கையில் உடைந்த முதல் நட்பு இதுதான் … ஆனால் இன்னும் நானும் அவனும் நட்பாயிருந்தது; நாங்கள் ’குஸ்தி’ போட்ட அந்த வேப்ப மரத்தடி; ஓடிப்போய் கோவிலுக்குள் சேர்ந்து எட்டிப் பார்த்தது … எல்லாமே பசுமையாக நினைவில் இருக்கிறது.
இப்போதும் தூய மரியன்னை கோவிலுக்குப் போனால் (கோவிலுக்குப் போற அந்த நல்ல காரியம்லாம் அடிக்கடி செய்வோம்ல .. தங்க்ஸூக்கு ட்ரைவர் வேலை பார்க்கும் போது ….) அந்தக் கோவிலைச் சுற்றி வருவது வழக்கம். அந்த மரம், காம்பவுன்ட் சுவர் இப்போது இல்லை. ஆனால் நினைவுகளில் அவைகள் இன்னும் இருக்கின்றன!
சிவகுமார்… எங்கேடா இருக்கே?