"

1961 – 64-ல் ………..

B.Sc. முடித்து விட்டு முதுகலை போக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் B.Sc. முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சில இடங்கள் என்று அறிவிப்பு ஒன்று வந்தது. அட .. இப்படி ஒரு சான்ஸா என்று நினைத்து நானும் எனது B.Sc. வகுப்பு நண்பர்கள் இருவரும் நேர்முகத் தேர்வுக்கெல்லாம் போனோம். சென்னைக்கு மூவரும் ஒன்றாகப் போனோம். அந்த இரு நண்பர்கள் – மாணிக்க வாசகம். மதுரையில் இவரது வீடு என் வீட்டுக்குப் பக்கத்தில். ஆகவே சைக்கிளில் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் போவோம். இவர் இளம் வயதிலேயே காலமாகி விட்ட செய்தி கிடைத்தது. இன்னொருவன் I. கேசவன். ஜாலியான பயல். வகுப்பில் இவனுக்கு dissection சரியாக வராது. இருவரும் செய்முறை வகுப்புகளில் அடுத்தடுத்த வரிசையில் இருப்போம். அந்தக் காலத்தில் அடிக்கடி தவளையை அறுத்து என்னென்னமோ பண்ணுவோம். அநேகமாக தலையில் உள்ள நரம்புகளை – cranial nerves – எடுத்து தொடர்புகளை அழகு படுத்தணும். கேசவன் திடீரென்று என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அப்படி அழைத்து விட்டால் அவன் எடுக்க வேண்டிய நரம்பை அறுத்து விட்டான் என்று அர்த்தம்.

மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவனும் ஒட்டிக் கொண்டோம். முக்கிய காரணம் ‘தம்’. இருவரும் வகுப்புகளுக்கு நடுவில், மாலையில் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஒன்றாகச் செல்வோம். நான் அதுவரை திருட்டுத் தம் மட்டும் அடித்தவன் மூன்றாமாண்டில் ‘ஓப்பன்’ டைப்பாகி விட்டேன். இருவரும் அங்கே போவோமா .. அங்கே எனக்கு ஒரு புதுப் பழக்கம் சொல்லிக் கொடுத்தான். டீ வாங்கணும் … மெல்ல உறிஞ்சிக் குடிக்கணும் .. பாதி டீ குடித்ததும் ஒரு சிகரெட் பற்ற வைக்கணும் .. அடுத்த இரண்டு மூன்று உறிஞ்சில் டீ முடிஞ்சிடணும் .. பின் இன்னும் ரசித்து சிகரெட் இழுக்கணும். ஆஹா … நல்லா இருந்தது. ஆனால் பிரச்சனை என்னடான்னா … இதுவரை அப்பப்போ திருட்டு தம் அடிச்ச நான் இப்போ டீ + சிகரெட் இரண்டுக்கும் – ஒரு காம்போ எஃபெக்ட் – சேர்ந்து அடிமையாக ஆய்ட்டேன். பின்னாளில், அட மாபாவி கேசவா இப்படி பண்ணிட்டியேடா … அப்டின்னு அடிக்கடி நினச்சிக்குவேன்.

மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குப் போனோம். அங்கு எங்கள் ஆசிரியர் ஒருவரும் எங்களோடு நேர்முகத் தேர்வுக்கு வந்தார். அவர் B.Sc. முடித்து எங்களுக்கு தாவரயியலில் ஓராண்டு ஆசிரியராக – demonstrator – இருந்தார். மொத்த மதிப்பெண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது – B Grade. ஆனால் தமிழ் ஆங்கில மதிப்பெண்களும் சேர்த்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் எங்கள் நால்வரில் எனக்கு மதிப்பெண்கள் கொஞ்சம் பெட்டர்.

அதிக நம்பிக்கையில்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனோம். கேசவனுக்கு நேர்முகத் தேர்வை விட நாங்கள் அதிகம் அப்போது கேள்விப்பட்டிருந்த புகாரி ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று குறியாக இருந்தான். நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு அதற்கு முந்திய நாள் போய்விட்டு அதன் பின் புகாரி போக முடிவு செய்திருந்தோம். புகாரி ஹோட்டலைத் தேடி போனோம். சர்வர் மெனு கார்டை வந்து கொடுத்தார். இரு குருவிகள் BH என்ற எழுத்துகளைத் தூக்கி செல்வது போல் அட்டையில் ஒரு படம். நீளமான அந்த அட்டையைக் கொடுத்தார்.குருவிப்படம் அது இதெல்லாம் பார்த்தவுடன் கேசவனுக்குக் குழப்பம். இவர் எதற்கு எனக்கு ஏதோ அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கிறார் என்று முழித்தான். அவன் குழப்பம் எனக்குப் புரிந்தது. சர்வரை அனுப்பி விட்டு கேசவனிடம் ‘டேய் .. இது மெனு’டா’ என்றேன். அதுவும் அவனுக்குப் புரிபடவில்லை. திறந்து காண்பித்தேன். பட்டியல் என்று புரிந்தது. ‘ஓ .. இதுவா?’ என்று சொல்லி உள்ளே பார்த்தோம். ஒன்றும் புரியற மொழியில் இல்லை! ஏதோ சொல்லி எதையோ சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.

வெளியே வந்ததும் கேசவன், ‘டேய் .. ஏதாவது ஒரு புரோட்டா கடைக்குப் போய் சாப்பிடுவோமா … நல்லா பசிக்குது’ என்றான்.

நான் நேர்முகத் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே போய்விட்டேன். என் அப்பா நேர்முகத் தேர்வு அன்று சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடிந்த அன்று மாலை ஒரு உறவினர் சுகாதார அமைச்சரின் (அப்போது ஜோதி வெங்கடாசலம் அமைச்சர் என்று நினைக்கிறேன்.) செயலர் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ ரொம்ப லேட் என்றார். சரி .. ரிசல்ட் பாத்து சொல்லுங்க என்றோம். அடுத்த நாள் கல்லூரிகளில் பட்டியல் போட்டிருவாங்க. ஆனால் அதற்கு முந்திய நாள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அவர் சொன்னார். ஆஹா .. மகனுக்கு மருத்துவ சீட் கிடச்சிருச்சி அப்டின்னு என்ற சந்தோஷத்தோடு அப்பா அன்றே மதுரைக்குப் பயணமானார். நான் போய் எல்லாம் தயார் பண்றேன்’டா அப்டின்னு சந்தோஷமா சொல்லிட்டு அப்பா மதுரைக்குப் புறப்பட்டாச்சு.

நான் அடுத்த நாள் நண்பர்களோடு ரிசல்ட் பார்க்கப் போனேன். நான் நமக்குத்தான் சீட் கிடைச்சாச்சேன்னு போய் பார்த்தேன். லிஸ்ட் இருந்துச்சி… ஆனா அதில் என் பெயரைத்தான் காணோம். தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து சீட் கிடச்சுதுன்னு சொன்னவருக்குப் பேசினோம். அவர் தம்பி பெயரை நான் முந்திய நாள் மாலை பார்த்தேன். ஆனால் ராத்திரி அமைச்சர் கடைசி நிமிட மாற்றல் சில செய்தாராம். அதில் எப்படியோ இப்படி ஆகிப் போச்சு என்றார். அதற்கு ஒரு கதையும் சொன்னார். சோகமாக மதுரை வந்தோம்.

கேசவன் மிகவும் எளிதாக இந்த நேர்முகத் தேர்வை எடுத்துக் கொண்டது போல் தெரிந்தது. ஆனால் அடுத்த வருஷம் முதலிலேயே சில ஏற்பாடுகளைச் செய்தான். அந்த வருஷம் அவனுக்கு மருத்துவ சீட் கிடச்சிது. மதுரையில் சேர்ந்தான். அதற்குள் நான் முதுகலை முதலாண்டு முடித்திருந்தேன். சில தடவை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கேசவனைப் பார்த்து விட்டு வந்தேன். ‘நீ மெடிக்கல் முடிப்பதற்குள் நான் முதுகலை முடித்து Ph.D. முடிச்சிர்ரேண்டா. ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் பட்டம் வாங்கிருவோம்’ என்றேன். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே போச்சு. எங்களுக்குள் தொடர்பும் அதன் பிறகு விட்டுப் போச்சு ..

அவனுக்கென்னப்பா

அது என்னமோ .. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே .. என் விஷயத்தில் ரொம்ப சரி. இளங்கலை முடிந்தது. அடுத்து என்னன்னு ஏதாவது யோசிக்கணுமே. ஒண்ணும் கிடையாது. புதுசா வந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சின்ன முட்டு முட்டி கிடைக்காம போச்சா… அதற்கு முந்தியே நினைத்தது மாதிரி பிடிக்காமல் படித்து முடித்த விலங்கியலை முதுகலையில் தொடர்ந்தாச்சு. அடுத்து வேற ஏதாவது செய்யலாமா என்பது மாதிரியான சிந்தனைகள் சுத்தமாக இல்லை. ஏதோ யாரோ கோடு போட்டுக் கொடுத்து அந்தக் கோட்டிலேயே நடந்து போனது மாதிரி போயாச்சு. மாற்று முனைப்பு என்பதே இல்லாத வாழ்க்கை!

முதுகலை சேர்ந்தாச்சு. முதுகலைப் பேராசிரியர் எங்களுக்கு இளங்கலையில் வகுப்பெடுக்கவில்லை. அதனால் அவர் மட்டும் தெரியாது. இளங்கலையிலிருந்து நான் மட்டுமே முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தேன். ஆக நான் மட்டும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவன். எல்லோரும் இளங்கலையில் என்னிடம் அன்போடு இருந்த ஆசிரியர்களே. முதுகலைப் பேராசிரியரிடம் இரண்டு மூன்று முறை மாட்டிக் கொண்டேன். படிக்கட்டுக்கு கீழே முதுகலை மாணவர்கள் தம்மடிக்கிற இடம். அதில் ஒரு முறை வசதியாக மாட்டிக் கொண்டேன். வகுப்பு மாணவிகளிடம் சண்டை போட்டு, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் உட்கார்கிற பெஞ்சு மேசைகளில் என் அம்பாசிடர் ஷூவை நன்றாக அழுக்காக்கி அவர்கள் உட்காரும் மேசை மேல் தடம் பதிய நடந்து கொண்டிருக்கும் போது தானா அவர் எங்கள் வகுப்பைக் கடக்க வேண்டும். இப்படியாகஅவரிடம் மாட்டிக் கெட்ட பெயர் வாங்கி, அவரும் எல்லோரிடமும் என்னைப் பற்றி புகார் கூறியிருந்தார். இரண்டாம் ஆண்டுதான் அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க வருவார். அதற்குள் முதலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்து என்னிடம் பயங்கர பிரியமாகி விட்டார். அதன் பின் அவரது ஏகோபித்த செல்ல மாணவன் ஆனேன்.

We, the seniors with our Juniors – 1965-66

இது ஆசிரியர்கள் பாகம். எங்கள் மாணவர் பாகம் சொல்லணும்னு தான் ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள். எட்டு பசங்க .. ஏழு பொண்ணுங்க. எட்டு பசங்கன்னு சொல்லக்கூடாது. ஏன்னா எங்க வகுப்பில் ஒரு அண்ணன், அவருக்கு கல்யாணம் ஆகி பையனும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்தான். அவரும் சில ஆண்டுகள் வேலை பார்த்து இங்கே மீண்டும் படிக்க வந்திருந்தார். எட்டு பசங்களில் நாலு நாலு பேரா கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சிட்டோம். எல்லாரும் பேசிக்கொள்வோம். ஆனா அந்நியோன்யம் எங்க நாலு பேரு .. அவங்க நாலு பேரு என்றானது. எங்க குரூப்ல ஒருத்தன் நாகர்கோவில்; இன்னொருவன் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த மலையாளி. ஆனாலும் தமிழ் பேசுவான். இந்த ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பொண்ணுக எங்களைப் பாவமா பார்ப்பாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் இந்த மக்களுக்குக் கொஞ்சம் கூட புரியாது. நாளான பிறகு கொஞ்சம் மாறியது.’சினிமாய்க்கி போயி சாடி, சவட்டி டிக்கெட் எடுத்தோம்’னு நாகர்கோவில்கார கண்ணன் பேசினது அவங்களுக்குப் புரிய ரொம்ப நாளாச்சு.இவனும், நானும் முதலிலிருந்தே ஒட்டிக்கிட்டோம். இந்த நண்பன் காணாமல் போகவில்லை. படித்து முடித்த பிறகு அவ்வப்போது என்று சில முறை இவனைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த நண்பனின் நட்பு முதுகலையோடு நின்று போனது. படித்த பின் இவனைப் பார்க்கவே இல்லை. அவன் நம்ம மலையாளிப் பயல் – மணிகொண்டான் தம்பி. Manikondan Thampi என்றுதான் எழுதுவான்.

பொண்ணுகளோடு படிக்கிறது நிறைய பேருக்கு இதான் முதல் தடவை. அதுனால கொஞ்ச நாள் பலருக்கும் ஒரே ஜிவ்வு! அதன் பின் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பிரச்சனைகள். அப்போ தம்பிக்கு – முதலிலிருந்தே co-ed படிச்சவனாம் – எங்களைப் பார்த்தால் ஒரே வேடிக்கையாக இருக்கும். அவன் தான் பெண்களோடு சாதாரணமாகப் பழகணும்னு ட்யூஷன் எடுத்தான். பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தான். அவன் முதலில் பெண்களோடு சாதாரணமாகப் பேசுவதே எங்களில் பலருக்கு பயமா, ஆச்சரியமா இருக்கும். தல எப்பவுமே ஒய்ட் & ஒய்ட் தான்.

தம்பி ஒழுங்காக மலையாள மனோரமா வாராந்தரி வாங்கிடுவான். ஒரு நாள் ஒரு மனோரமாவையும், குமுதத்தையும் எடுத்து வைத்தான். அட்டை டூ அட்டை விமர்சனம் செய்தான். வாராந்தரியில் உள்ளூர், வெளியூர் அரசியல், அறிவியல் அது இதுன்னு இருந்தது. நம்ம ஊர் நூலில் கொஞ்சூண்டு லோக்கல் அரசியல், அடுத்து அனைத்தும் சினிமா என்றிருந்தது. ’ஏண்டா உங்க ஊர் பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா இருக்கு? எங்க ஊர் இதழில் எம்புட்டு விஷயம் இருக்கு?’ அப்டின்னான். அன்றும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை; இன்றும் இல்லை.

வகுப்பில் நான், இவன், கண்ணன், வரதன் நால்வரும் ஒரு செட். ஆனாலும் வரதன் எங்களுக்கு அண்ணனாகி கொஞ்சம் விலகியிருந்தார்.மீதி நாங்க மூணு பேரும் ஒண்ணா சுத்துவோம்.

படிப்பிலும் நல்ல பெயர் வாங்கினோம்.

ஒரு நாள் நானும் தம்பியும் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அரசமரத்து பிள்ளையார் கோவில் இருக்குமே அதுக்குப் பக்கத்தில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் கார். வெள்ளை வெளேர்னு பளிச்சின்னு ரோட்ல நின்னது.

‘புது கார்’டா’ என்றேன்.

‘நல்லா இருக்கு’ அப்டின்னான்.

’இது மாதிரி ஒரு கார் நம்ம லைப்ல வாங்க முடியுமா’டா?” என்று கேட்டேன். கேட்ட என் குரலிலேயே என்னால அது முடியாது அப்டின்ற அர்த்தம் நிறைய இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா அந்த நம்பிக்கையே இல்லை. ஆனால் தம்பியிடமிருந்து ரொம்ப நம்பிக்கையான, அதைவிட ஒரு matter of fact தொனியில்,

‘ஏண்டா .. இம்புட்டு படிச்சிட்டு இதுகூட வாங்காமலா போவோம்’ அப்டின்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போனான்.

இது என் மனசுக்குள்ள ரொம்ப வருஷம் ஒரு நிறைவேறா ஆசையாக அப்ப்டியே நின்னுது. நாம எல்லாம் கார் வாங்கிறதாவது என்ற நப்பாசைதான் மனதில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக அந்த ஆசை கனவாக மாறுவதற்குள் ஏறக்குறைய ஓய்வு பெரும் வயது நெருங்கியிருந்தது. ஆனால் இந்தப் பயல் நிச்சயமாக ரொம்ப சீக்கிரமே கட்டாயம் ஒரு கார் வாங்கியிருந்திருப்பான். அவன் குரலில் ஒலித்த நிச்சயமும் தன்னம்பிக்கையும் இன்றும் என் நினைவில் நன்கிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவன் பெயரில் ஒரு பாடப்புத்தகம் வெளியாயிருந்தது. திருவனந்தபுரம் பல்கலையில் வேலை பார்த்திருந்திருப்பான் போலும் அவன் பெயரில் Marine Ecology என்று ஒரு நல்ல புத்தகம் வெளியாகி இருந்தது.

அவனுக்கென்னப்பா … புத்தகம் எல்லாம் போட்டவன். எப்பவோ கார் வாங்கமலா இருந்திருப்பான்?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book