"

”சித்தாள் வேலை”யைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அந்தக் காலத்தில் கல்லூரியில் lecturer post-க்கு முன்னால் tutor அல்லது demonstrator என்ற பணியிடங்கள் உண்டு. இந்த பணியிடங்களுக்கு இளங்கலை முடித்திருந்தால் கூட வேலை கிடைக்கும். ஆனால் முதுகலை முடித்து lecturer ஆக முடியாமல் / கிடைக்காமல் tutor அல்லது demonstrator பணியிடங்களுக்கும் போவது உண்டு. இதில் உள்ள சோகம் என்னவென்றால் இந்த இரு பணியிடங்களில் இருப்பவர்கள் மீது lecturerகளுக்கு மரியாதை பொதுவாக இருப்பதில்லை. துறையில் உள்ள “சின்ன வேலை”களுக்கு இந்தப் பணியாளர்களைப் பயன்படுத்துவதுண்டு. ஆகவே அதில் இருந்த நாங்கள் எங்களை ‘சித்தாள்கள்’ என்று அழைத்துக் கொள்வதுண்டு. கொத்தனார் சொல்றதையெல்லாம் கேட்கணுமே …

இந்த சித்தாட்களில் பலர் lecturer பதவிகளில் இருப்பவர்களை விட அதிக மதிப்பெண்களோ, அதிகத் திறமையோ கொண்டவர்களாக இருக்கலாம். இருந்தாலும் மரியாதை என்னவோ குறைவு தான். இப்படி சித்தாள்களாக இருப்பவர்களுக்கு அந்தக் காலத்தில் இன்னொரு இடைஞ்சல் இருக்கும். இவர்களை எல்லா கல்லூரிகளிலும் தற்காலிக பணிகளில் மட்டுமே வைத்திருப்பார்கள். 10 A என்று அந்தப் பணியிடங்களுக்குப் பெயர். ஆகவே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவர்களை கல்லூரியிலிருந்து ‘கழட்டி’ விட்டுவிடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் அவர்கள் வேலையில் எடுத்துக் கொள்ளப்படலாம். ஒரு வேளை வேலை தொடராமலும் போகலாம். இதெல்லாம் முந்திய ஆண்டில் அவர்கள் ‘சேவை’ எந்த அளவு இருந்தது என்பதைப் பொறுத்தது. இந்த ‘சேவை’ என்பது அவர்களின் வேலைத் திறமையாக இருக்கலாம்.அல்லது துறையில் தலைமைக்குச் செய்யும் ‘சேவையாகவும்’ இருக்கலாம். அது துறைத் தலைவர் வீட்டில் நடக்கும் விழாக்களுக்கு வாழை மரம் தூக்கிவருவது .. காய்கறி வாங்கி வருவது … போன்ற பணிகளாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி ஆரம்பிக்கும் காலங்களில் ‘சித்தாள்கள்’ பரிதாபமாக கல்லூரியையும், அவர்களின் துறைத்தலைவரின் அறையையும் ‘மந்திரித்து விட்ட கோழிகள்’ மாதிரி சுற்றிச் சுற்றி வருவார்கள். அனேகமாக துறைத்தலைவரின் கையில் தான் இவர்களுக்கு ஒரு கத்தியோ, கைப்பிடி அரிசியோ இருக்கும். துறைத்தலைவருக்குப் பிடிக்கவில்லையெனில் கத்தியை வீசி விடுவார். பாவப்பட்டால் அந்த ஆண்டுக்கு மட்டும் மறுபடி பதவி – கைப்பிடி அரிசி – போடுவார்.

எனக்கு வேலை கிடைக்கும்போது lecturer பதவிக்குத்தான் போனேன். ஆனால் அப்போது அந்த பணிக்கு இடம் இல்லை; இன்னும் சில மாதங்களுக்கு மட்டும் demonstrator வேலையில் சேர்ந்தால் அடுத்த ஆண்டே lecturer பதவி என்றார்கள். சரியென்று சேர்ந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் சென்ற ஆண்டு lecturer இல்லாமலே வேலை செய்தீர்களே அதேபோல் தொடர்ந்து இருங்கள் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் துறையிலும், துறைத்தலைவரிடமும் முதலிலே இருந்தே நல்ல பெயர் வாங்கி விட்டேன். படிக்கும் போது கல்லூரியில் துறைத்தலைவருக்கு செல்லப்பிள்ளை என்றிருந்தேன். அதே போல் இங்கே துறைத் தலைவருக்கும் செல்லப் பிள்ளையாக ஆகியிருந்தேன். அருமையான துறைத்தலைவர். அவரைப்போல் யாரையும் அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியாத அளவுக்கு மிக நல்ல பேராசிரியர். பேராசிரியர் நாராயணன். இருந்தும் எனக்கு வாய்ப்பில்லை. ஆகவே demonstrator ஆக நான்கு ஆண்டுகள் அந்தக் கல்லூரியில் இருந்தேன்.

சித்தாள் என்ற வேலை; ஆனால் மரியாதையும், அன்பும் நிறையவே எனக்கு துறையில் நிறையவே கிடைத்து வந்தது. என்ன நேரமோ .. என்னவோ .. நம்ம ஆங்கிலத்திற்கும் அங்கு ஒரு மரியாதை கிடைத்தது. அதுவும் ஆங்கிலத்துறையில் தனி மரியாதை. ஏனெனில் அங்கிருந்த ஆங்கிலத் துறைத்தலைவர் இலங்கையிலிருந்து வந்தவர். நல்ல பண்பாளர். பேராசிரியர் ஆரோக்கிய சாமி. அவர் ஒரு விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். என்னன்னா … கல்லூரி வளாகத்தில் அவரிடம் ஆசிரியர்கள் பேச வேண்டுமானால் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். இல்லாவிட்டால் விரட்டி விடுவார். ஆனால் நான் அவரோடு கல்லூரியில் மட்டுமல்லாது ரயிலிலும் ஒன்றாக, சமமாக உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பேன். அதைப் பார்க்கும் மற்ற ஆசிரியர்களுக்கே ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை எனக்கு அனுசரணையாக்கிக் கொண்டேன்!

ஆங்கிலத்துறையில் நிறைய tutors இருப்பார்கள். இதில் சிலர் மட்டும் B.A. ஆங்கிலம் படித்திருப்பார்கள். இவர்களில் பலரும் ‘இங்கிலீஸ்கார குட்டிகள்’ என்ற நினைப்பில் அலைவார்கள். இவர்களோடு M.A. Economics படித்தவர்களும் இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்குமே ஆங்கிலத் துறையில் step-motherly treatment மட்டும் தான் கிடைக்கும். அதாவது இவர்கள் சித்தாள்கள் மட்டுமல்ல .. orphaned  சித்தாள்கள்! என் சப்போர்ட் எப்பவுமே இந்த இரண்டாம் குழுவின் பக்கம் தான். அதனால் முந்திய க்ரூப் நம்மிடம் கொஞ்சம் வாலாட்டும். ஆனால் நமக்கு அவங்க துறைத் தலைவரே தோஸ்த் ஆச்சே .. அதனால் என்னிடம் ரொம்பவும் வாலாட்ட மாட்டார்கள். ஆட்டிய வாலை ஒட்ட நறுக்கிய சில நிகழ்ச்சிகளும் – எல்லாம் academic விஷயங்கள் தான் – நடந்து, நம்ம கொடியை வானளாவ பரவ விட்டிருந்தேன்!
உதாரணமாக, ஒரு நாள் ஆங்கிலத்துறைக்குள் காலடி வைத்தேன். நம்ம orphaned சித்தாள் ஒருவர் catch என்பதற்கு -past tense என்ன என்று கேட்டார். Catched-ன்னு யார் சொன்னா என்று சட்டென்று கேட்டேன். ஒரு ‘இங்கிலீஸ்கார குட்டி’ ரொம்ப பதட்டமாக, ‘ஏன்.. அது தப்பா?’ என்றார். இல்ல எங்க வாத்தியார் catch-க்கு caught தான்னு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றேன். அதெல்லாம் உங்களுக்கெல்லாம் தெரியாது … அது old English’ என்றார். அவருக்கு தெரியாது என்று நினைத்தே, ‘Oh! Archaic English?’ என்றேன். மனுஷனுக்கு நிஜமாவே அது தெரியலை. அப்போது சரியாக ஆங்கிலத் துறைத் தலைவரும் வந்தார். நம்ம தோஸ்தாச்சே… அவரிடம் catch-க்கு past tense catched தானா என்று கேட்டேன். Which fool said so?’ என்றார். ஆளைக்காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் சித்தாள்கள் எல்லோருக்கும் அப்படி ஒரு சந்தோஷம்.

நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த ஆண்டில் முருகேசன் என்ற ஒருவன் ஆங்கிலத்துறைக்கு வேலைக்கு வந்தான். இவன் M.A. Economics. ஆங்கிலத்துறையில் tutor ஆகச் சேர்ந்தான். P.U.C.யில் நாங்கள் ஒரே கல்லூரி – St.Xavier’s. இவன் வேலைக்குச் சேர்ந்த பின் தான் எங்களுக்கு இது தெரிந்தது. ஆள் படு உயரமாகவும் பருமனாகவும் இருப்பான். நான் அவனுக்குப் பக்கத்தில் இருந்தால் அவன் தோள் வரைதான் குச்சியாய் ஒட்டிக்கொண்டு இருப்பேன். இவன் சின்ன வயசுக்காரன் என்றாலும் உருவத்தால் பெரிய ஆள் போல் இருப்பான். சுத்த நயம் கருப்பு. நெல்லைக்காரன். அவனை உடல், நிறம், ஊர் எல்லாம் வைத்து கல்லூரியில் அவனை ஏறத்தாழ பலரும் ‘அண்ணாச்சி’ என்று அழைத்து வந்தார்கள். இப்போ தொலைக்காட்சியில் அண்ணாச்சின்னு ஒருத்தர் காமடி நிகழ்ச்சி நடத்தி வர்ராரே அவர் மாதிரியே இருப்பான். நம்ம ஒரு வித்தியாசமான ஆளு இல்லையா … அதனால் நான் மட்டும் அவனை ‘தம்பி’ என்று அழைப்பேன்.

முதலாண்டு வேலை பார்த்தான். இரண்டாம் ஆண்டு நான் சொன்னது மாதிரி மந்திரிச்சி விட்ட கோழியாக அலைந்தான். வேலை நிச்சயமாக ஆகும் வரை அவன் இருந்தது என் அறையில் தான். காலையில் எழுந்து குளித்து விட்டு நெற்றியில் முகப்பவுடரை வைத்து ஒரு கீற்று போட்டுக் கொள்வான்.

’இது எதுக்குடா ..?’ என்பேன். அவன் அப்போவே சாமியெல்லாம் கும்பிட மாட்டான்னு தெரியும்.

‘உனக்கு ஒண்ணும் தெரியாதுடா … நம்ம மூஞ்சிக்கு இந்த மாதிரி திருநீர் வச்சா கெத்தா தெரியும். உன் ரூம்ல திருநீர் இல்ல. அதான் பவுடர்’ என்பான்.

சொன்னது மாதிரியே அந்தக் கீற்று அவனுக்குப் பொருத்தமா இருக்கும். கல்லூரி போகும் முன்னே அவனைப் பார்க்க நிறைய பேர் வருவார்கள். அப்படி வருபவர்கள் எல்லோருமே அந்த ஆண்டு தன் பையனுக்கு எங்கள் கல்லூரியில் இடம் தேடி வருபவர்களாக இருப்பார்கள். அவர்கள் இவன் மேல் அம்புட்டு நம்பிக்கையோடு பேசிவிட்டு, தங்கள் பையனின் விண்ணப்ப விவரங்களைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள். அவர்கள் முன்னாலேயே அந்தப் பையனின் பெயர் போன்ற குறிப்புகளை இவனும் ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வான். கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன் என்பான். ஆனால் உண்மையில் அவனுக்கு அப்போது கல்லூரியிலேயே வேலை கிடைத்திருக்காது.

’இதெல்லாம் எதுக்குடா..?’ என்றால், ‘என்ன பண்ணச் சொல்ற… எனக்கு வேலையே இல்லைன்னு அவங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணுமா … என்பான்.

அதே போல் அப்பப்போ அந்த லிஸ்டை எடுத்து சில பெயர்களுக்கு முன்னால் டிக் போட்டுக் கொள்வான். அதாவது அவன் அந்தப் பையனைப் பற்றி துறைத்தலைவருக்கு சொல்லி விட்டானாம். அதே போல் யாராவது ‘சார் .. பையனுக்கு இடம் கிடச்சிருச்சி சார்’ என்றால் உடனே அந்தப் பெயரை அடித்துக் கொள்வான்.

அவனுக்கு உடல் பருமனால் கிடைத்த பெருமை அது. ஆனால் ஆளுக அந்தப் பக்கம் நகர்ந்தால் தனக்கு வேலை கிடைக்குமா இல்லையா என்ற சோகத்தில் இருப்பான். இப்படியாக இரு ஆண்டுகள் அங்கு வேலை பார்த்து தெற்கே வள்ளியூர் என்ற ஊரில் இருந்த புதுக்கல்லூரிக்கு lecturer வேலை கிடைத்து சென்றான். போகும் முன் சேர்ந்து ஒருபோட்டோவெல்லாம் எடுத்துக் கொண்டோம். அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவேயில்லை …..

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book