"

நண்பர்கள் காணாமல் போவது வாழ்க்கையில் இயல்பு தான். ஆனால் காணாமல் போன நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்த பின் அவர்கள் நம்மிடமிருந்து மறுபடியும் வேண்டுமென்றே காணாமல் போவது பெரும் அதிர்ச்சியாகவும், சோகமாகவும் முடிகிறது.

பூண்டி கல்லூரியில் வேலை பார்த்த போது நல்ல நண்பர்களாக இருந்தவர்களில் சிலரின் முகவரி, தொலைபேசி, இணைய முகவரி என்று கொஞ்சம் தேடியலைந்தேன். சில சோகங்கள் தான் பின்னே வந்தன. என்னோடு வாடா .. போடா .. என்று பழகியவன் அக்கல்லூரியின் முதல்வராக இருந்திருக்கிறான். அவனைப் பற்றி ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் போய் அவனிடம் கேட்ட போது அவனுக்கு என் பெயரே மறந்து போயிருந்ததாகக் கேள்விப்பட்டேன். இன்னொரு நண்பன். என்னோடு தஞ்சையில் அறை நண்பனாக வேறு இருந்தான். நானும் அவனும் அந்தக் காலத்திலேயே – 1966-70 – blog எழுதி வந்திருந்திருக்கிறோம். எங்களுக்குள் அப்படி ஒரு பழக்கம். நான் அப்போது ஏதாவது துண்டுப் பேப்பர்களில் எழுதும் வழக்கம் இருந்தது. இந்த நண்பன் தன் பழக்கத்தை எனக்கும் சொல்லிக் கொடுத்தான். பேப்பரில் எழுதாமல் ஒரு நோட்டில் எழுதும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தான். பாதி உண்மை; பாதி கதை என்று பலவும் இருக்கும். பஸ்ஸில் பார்த்த பெண்கள் முதல் அக்கவுண்டில் சாப்பிடும் டிபன் வரை எல்லாம் எழுதுவதுண்டு. நல்ல பிடித்த சினிமா பார்த்துவிட்டு வந்தால் இரவு நிச்சயமாக ஒரு ’திரைப்படத் திறனாய்வு’ எழுதி விடுவோம்.

இரு மலர்கள் (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா) படமும், விவசாயி (எம்.ஜி.ஆர்.) படமும் ஒரே நாளில் எதிர் எதிர் தியேட்டர்களில் போட்டிருந்தார்கள். இரண்டையும் பார்த்தோம். இரு மலர்கள் கடைசி நாளன்று இரண்டாம் முறையாக படம் பார்க்கப் போனோம். கூட்டமேயில்லை. ஆனால் விசவாயு … சாரி .. விவசாயிக்கு பெரும் கூட்டம். படம் பார்த்து விட்டு வந்து எங்கள் ‘வயித்தெரிச்சலை’ எழுதித் தொலைத்தோம்.

நான் ஒரு நோட்டு எழுதினால் அவன் இரண்டு மூன்று எழுதி விடுவான். ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். காபி குடித்தால் தம்ளரின் விளிம்பு வரை ஊற்றிக் குடிக்க வேண்டும். சரியான விளிம்பு மனிதன்! அதே போல் தம்மடிக்கும் போது புகையை இழுத்தால் கன்னம் அப்படியே டொக்கு வாங்கி விடும். ஆழமான இழுப்பு!

இன்னொரு நண்பன். ரயிலில் கல்லூரி போகும் போது நானும் இவனும் சேர்ந்தால் மற்ற நண்பர்கள் எல்லோரும் கொஞ்சம் பயப்படுவார்கள். அவர்கள் காலை வாருவதில் எங்களுக்கு அப்படி ஒரு அளப்பறிய இன்பம்! நாங்கள் ஒரு கம்பார்ட்மென்டில் ஏறினால் பலர் அந்த கம்பார்ட்மென்டையே மாற்றும் அளவுக்கு எங்கள் புகழ் ரயிலளவு நீண்டிருந்தது. இதற்காகவே நானும் அவனும் ரயிலில் கடைசியாகத்தான் ஏறுவோம். மதியம் இவனுக்கு சாப்பாடு வந்து விடும். கேரியரில் மேல் தட்டில் ஒரு சின்னக் கிண்ணத்தில் நெய் வரும். நான் விடுதிக்குச் சாப்பிடப் போகும் நேரத்தில் அந்தக் கிண்ணத்தை ஸ்வாகா செய்வது அடிக்கடி நடக்கும்.

நான் கல்லூரி மாறிப் போனபின் இவர்களோடு தொடர்பு இல்லாமல் போயிற்று. பின் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அவர்களின் தொலைபேசி எண்களுக்கு முயற்சித்து அவைகளும் கிடைத்தன. இருவருக்கும் மகிழ்ச்சியோடு தொலை பேசினேன். அதே வைப்ஸ்’ – அலைவரிசை – அந்தப் பக்கம் இல்லாதது போல் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். என் தொலைபேசி அழைப்பிற்குப் பின் அவர்களிடமிருந்து ஏதும் அழைப்பு வரவில்லை. சில நாட்கள் கழித்து இருவருக்கும் மறுபடி தொலை பேசினேன். ஒரே வருத்தமாகப் போய்விட்டது. இருவருமே என் தொலைபேசி எண்ணை save கூட செய்து கொள்ளவில்லை.

இரண்டாம் முறையும் பேசிய பின்னும் அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. கட்டாயமாக இணையத்தில் இருப்பான் என்று நினைத்த நண்பனுக்கு இணைய முகவரி கேட்டு sms அனுப்பினேன். சேற்றில் எறிந்த கல் …

மூன்றாவதாக இன்னொரு நண்பன். அவன் வேலையில் ஓய்வு பெற்ற பின் மதுரையில் இருப்பதாக அறிந்து ஆவலோடு land line தொலைபேசி எண் கிடைக்க அழைத்தேன். அருகாமையில் தான் இருந்தான். சில நாட்கள் கழித்து மறுபடி அழைத்தேன். அந்த எண்ணில் யாருமில்லையென்ற தகவல் வந்தது.

மூன்று நண்பர்கள். அவர்கள் பக்கமிருந்து எந்தவித ஈடுபாடும் இல்லாதது மிகுந்த வருத்தமாக இருந்தது. வாழ்க்கையின் சுமைகளில் அவர்களுக்கு பழைய நண்பர்களின் உறவு இப்போது தேவையில்லாமல் போயிற்று என்று எடுத்துக் கொண்டேன். என் பழைய தொலைபேசியோடு அவர்கள் எண்களும் காணாமல் போய் விட்டன. இப்போது நான் ஆசைப்பட்டாலும் உடனே தொலைபேச முடியாது என்றானது.

காணாமல் போய் மீண்டும் கிடைத்த நண்பர்கள் இப்போது மறுபடியும் நிஜமாகவே காணாமலேயே போய்விட்டார்கள் …

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book