54



எட்டி மரம்.

1) மூலிகையின் பெயர் -: எட்டி மரம்.

2) தாவரப்பெயர் -: STRYCHNOS NUX VOMICA.

3) தாவரக்குடும்பம் -: LOGANIACEAE.

4) வேறு பெயர்கள் -: நக்ஸ்வாமிகா.

5) வளரியல்பு -: எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 – 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

6) மருத்துவப் பயன்கள் -: இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக்
குணப் படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான விடம் தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இநன் பொடி இரு கிராம் அளவு உப்படனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காயச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காயச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

எட்டிப் பழத்தைப் பிழிந்து சிவனார் வேம்பு குழிது தைலம் இறக்கி கந்தகப் பற்பத்துடன் கொடுத்து வர குட்ட நோய் குணமாகும். நோய்உடலில் எவ்வளவு நாள் இருந்த தோ அவ்வளவு நாள் கொடுக்கவும்.

எட்டிமரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.

எட்டி இலையை தவறுதலாக உண்டவர்களுக்கு முறிப்பு மருந்தும் அறிதல் நன்றாம். கடுக்காய் கசாயம், வெற்றில்ச் சாறு, மிளகு+ வெந்தயக் கசாயம் ஆகியன எட்டிக்கு விட மிறிப்பாகும். எட்டி பிற மருந்துகளை முறிக்கும் குணத்தைப் பெற்றதாகும். எல்லாவிடங்களையும் முறிக்க எட்டியின் ‘நக்ஸ்வாமிகா’ கொடுக்கப்படுகிறது.

எட்டிக் கொட்டை -:

‘கைக்கறுப்பு சந்நி கடிவிஷங்குஷ் டூதைவலி
யெப்க்கவரு தாதுநஷ்டமெபவைபோ-மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்குப் பித்தமுமி
லெட்டிமரக் கொட்டையினால்’

எட்டிக் கொட்டையால் கருமேகம், சந்நி, குஷ்டம், வதவலி, வீரிநஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை, பயித்தியம் இவை போம்.

சுத்தம் செய்த எட்டி விதையைச் சந்தனக் கல்லின் மீது சலம் விட்டு உரைத்து வழித்துச் சிறுது வெதுப்பித்தலைவலிக்குத் தடவிச் சிறுது அனல் காட்டக் குணமாகும்.இன்னும் இதைக் கோழி மலத்துடன் சேர்த்தரைத்து வெறிநாயக் கடிக்கு மேற்றடவக் குணமாகும்.

எட்டி வித்து விராகனெடை 1, மிளகு விராகனெடை2, சுக்கு விராகனெடை 2.5, மான் கொம்பு விராகனெடை 1.5 இவற்றையெல்லாம் சூரணித்து அம்மியில் வைத்துச் சிறிது சலம் விட்டரைத்து வழித்து ஒரு கரண்டியில் விட்டு நெருப்பனலில் வைத்துச் சிறிது வெதும்பி களிபோல் செய்து அடிவயிறு வீக்கம், கீல்களில் காணும் வீக்கம் இவை மேல் பூசக் குணமாகும்.

எட்டிப் பழம் -:

ஒரு சுத்தமான மண்தரையில் 1 வீசைப் புளியம் புறணியைப் போட்டுக் கொழுத்திச் சாம்பலான சமயம் அச்சாம்பலை நீக்கி விட்டு அந்த சூடேரிய தரையில் 30-40 எட்டிப் பழத்தைச் சிதைத்துப் போட்டு அதன் பேரில் பாதத்தை அழுத்த வைத்து எடுக்கவும். இப்படி இரு பாதங்களையும் மாற்றி மாற்றிச் சூடு தாளும் வரையில் வைத்தெடுக்க குதிங்கால் வாதம் குணமாகும். இது விசேசமாக பெண்களுக்கு பிரசவித்த பின் அழுக்குத் தங்கி இரு பாதங்களில் உணைடாகும் எரிச்சல், திமிர், வலி முதலியவற்றிக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இதைப் பற்றி சித்தர்களான அகத்தியர், தேரையர் மற்றும் புலிப்பாணி ஆகியோர் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book