13


நன்னாரி

1. வேறுபெயர்கள் – கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி.

2. தாவரப்பெயர் – HEMIDESMUS INDICUS.

3. குடும்பம் – ASCLEPIADACEAE.

4. வகை – நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.

5. வளரும் தன்மை – இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

6. முக்கிய வேதியப் பொருள்கள் – இலைகளிலிருந்து ரூட்டின், வேர்களிலிருந்து ஹெக்ஸாட்ரை அக்கோன்டேன், லூபியால், ஆல்பா அமரின், பீட்டா அமரின், இட்டோஸ்டிரால் ஆகிய வற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

7. பயன்தரும் பாகங்கள் – வேர், பட்டை, மற்றும் இலைகள்.

8. பயன்கள் – சித்த மருத்து வத்தில் இதன் வேர்கள் பயன் படுத்தப் படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,

செரியாமை, பித்த குன்மம் தீரும்.

ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிருநீரக நொய்கள் அனைத்தும் விலகும்.

நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

வேர் சூரணம் அரைகிராம் காலை மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும். அதிகமாகச் சாப்பிட்டால் பசி இருக்காது.

சித்தமருத்துவத்தில் நன்னாரி பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

மேலே உள்ள முதல் படம் பெருநன்னாரி அல்லது மாவழிக்கிழங்கு என்று பெயர் இதன் இலைகள் பெரிதாக இருக்கும். இவை இரண்டும் என் தோட்டத்தில் உள்ளது.
______________________

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book