72

1. மூலிகையின் பெயர் -: நெருஞ்சில்.

2. தாவரப் பெயர் -: TRIBULUS TERRESTRIS.

3. தாவரக்குடும்பம் -: ZYGOPHYLLACEAE.

4. வேறு பெயர் -: திருதண்டம்,கோகண்டம், காமரசி என்பன.

5. வகைகள் -: சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.

7. வளரியல்பு -: நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும் முட் செடி.. இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் வளர்கிறது. மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.
காய்கள் கடலை அளவாகவும், எட்டு-பத்து கூறிய நட்சத்திர வடிவ முட்களிடனும் இருக்கும்.

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். காய்கள் பெரிதாக அருநெல்லிக்காய் அளவில் இருக்கும்.

செப்பு நெருஞ்சில் இலைகள் மிகவும் சிறியது. காயும் மிளகை விட சிறியதாக இருக்கும். இதன் பூக்கள் மூன்று இதழ்களைக் கொண்டதாய் சிகப்பு நிறமாக இருக்கும். முட்கள் காணப்படாது.

இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: இதன் குணம் – கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது.

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்களுக்கு நன்கு கசக்கிய நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம் எடுத்து அதனுடன் கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் உள்ளே அருந்தி வர நோய்தீரும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரைஎருச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊரல் தீரும்.

நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்கும்ப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பனிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.

தேள் கடிக்கு நெருஞ்சில் சிறந்த மராந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

நெருஞ்சல் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும். இளநீரில் சாப்பிட்டு வரச் சிறுநீர்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.

சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.

பித்த வெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் குட்ட நோய் போல் கடுமையானது அன்று. தோலின் நிறத்தை மட்டுமே வெண்மையாக்கும். பித்த நீர் தோலில் படியும் போது வெப்பத்தை ஈர்த்து தோலின் நிறம் மாற்றுகிறது. இதற்கு நல்ல மருந்து இதுவாகும்.

பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாசுலுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து கல்கமாக்கவும். ஒரு கிலோ பசு நெய் வாணலியில் ஊற்றி எரிக்கவும். கல்கத்தை வடையாகத்தட்டி அதில் போட்டு எடுக்கவும், நெய்யை வடித்து வைக்கவும். காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணம் செய்க. காலை, மாலை 5 மி.லி.நெய்யில் 5 கிராம் சூரணம் சேர்த்து சாப்பிடவும். வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பயன்படுத்தலாம். பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும். வெண் குட்டம் குணமாகும். நாடபட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.

நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும், இத்தூளை கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு நிறந்து ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.

யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மூலிகை வளம் Copyright © 2015 by குப்புசாமி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book