4
தான்சேனின் சமாதியிலிருந்து திரும்பி நாங்கள் தங்கியிருந்த ”தான்சேன் ரெசிடென்சி”யில் மதிய உணவு உட்கொண்டோம்.
14 பேர்களுக்கும் ஒரு நீண்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டது. வட இந்திய உணவு வகைகளே பிரதான உணவாக இருந்தது. மிசோ மாநிலத்தவர்கள் அசைவ உணவும் மற்றவர்கள் சைவ உணவும் உட்கொண்டோம். சிறிது ஓய்வுக்குப் பின் எங்களது அடுத்த இலக்கான ஜெய்விலாஸ் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம் சென்றோம்.
இந்த அரண்மனைக்குள் செல்லக் கட்டணம் இந்தியர்களுக்கு ரூ.40-ம் வெளிநாட்டவர்களுக்கு ரூ.300-ம். புகைப்படக் கருவி எடுத்துச் செல்ல இந்தியர்களிடம் தனியாக 60 ரூபாய் வாங்குகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு அதிகமாம். வாரத்தின் எல்லா நாட்களும் [புதன் கிழமை தவிர] காலை 10.00 மணி முதல் மாலை 05.30 வரை திறந்திருக்கும்.
என்ன ஒரு பிரம்மாண்டம்…
சிந்தியா ராஜாக்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்க உபயோகப்படுத்தும் அரண்மனை ஜெய்விலாஸ் பேலஸ். அதில் இருக்கும் முன்னூற்றுக்கும் அதிகமான மொத்த அறைகளில் 35 அறைகளை அருகாட்சியகமாக உருவாக்கி அதில் பல்வேறு கலைப்பொருட்களை வைத்திருக்கிறார்கள்.
இந்த அறைகளைப் பார்க்கும்போது அந்த அரண்மனையின் பிரம்மாண்டம் விளங்குகிறது. ஜயாஜிராவ் சிந்தியா அவர்களால் 1874 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனை வேல்ஸ் நாட்டு இளவரசரை வரவேற்கவென மூன்று வருடங்களில் [1872-74] கட்டி முடிக்கப்பட்டதாம்.
ஜயாஜிராவ் சிந்தியாவிற்கு மொத்தம் நான்கு மனைவிகள். [அட பலருக்கு ஒரு மனைவி கிடைக்கிறதே கஷ்டமாக இருக்கும் இக்காலத்தில் இதை நினைத்தால் பொறாமையாகத் தான் இருக்கும்…]. நான்காவது மனைவியான சாக்யாபாய் மூலம் அவருக்கு நான்காவது மகன் பிறந்தார். அவர்தான் மாதோராவ் சிந்தியா. ஜயாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறகு குவாலியர் மஹாராஜா ஆனவர்.
மாதோராவ் சிந்தியாவிற்கும் இரண்டு மனைவிகள்! முதலாவது மனைவி குள்ளமானவர். இரண்டாவது மனைவி உயரம். முதலாவது மனைவிக்குக் குழந்தைகள் இல்லாததால் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த அரண்மனையை ஜிவாஜிராவ் காலத்தில் கட்டியிருந்தாலும், மாதோராவ் காலத்தில் உப்யோகப்படுத்திய பல பொருட்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. நாலு அடி ராணிக்குத் தகுந்த அளவு கட்டில், மேஜை-நாற்காலிகள், சாப்பாட்டு மேஜைகள் என எல்லாம். உடனே அப்ப ஆறு அடி ராணி என்ன பாவம் செய்தாள் என்று கேட்கக் கூடாது. அவருக்குத் தகுந்த மாதிரியும் எல்லாவிதமான பொருட்களும் இங்கே இருக்கின்றன.
ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற பலவித நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அறைகலன்களை [Furniture-க்கு தமிழாம்!] இங்கே வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு ராஜாக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள், அவர்கள் அணிந்து கொண்ட கவசங்கள் என்று எல்லாவற்றையும் வரிசையாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஜன்மாஷ்டமியிலும் குட்டி கிருஷ்ணரை வைத்துத் தாலாட்ட, இத்தாலி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட கண்ணாடியாலான ஒரு தொட்டில் ஒரு அறையில் நடுநாயகமாய் வீற்றிருக்கிறது.
பெர்சியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு பெரிய கார்பெட்டில் சுமார் 180 உருவங்கள் வரையப்பட்டு இருக்கிறது. ஒரு பெரிய பிளாஸ்டிக் பேப்பரில் இதைப் பொதிந்து ஒரு அறையில் மாட்டி வைத்திருக்கிறார்கள். வருவோர் போவோர் எல்லோரும் அதைத் தொட்டு அசுத்தப் படுத்துவதால் இப்படி ஒரு ஏற்பாடாம்.
இன்னும் பலப்பல அருமையான பொருட்கள் இந்த அரண்மனையில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.