21
ஓர்ச்சா நகரம் முழுவதுமே பழமை குடிகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அரண்மணைகள், மஹால்கள், சத்ரி என்றழைக்கப்படும் குடைகள். அவற்றின் பின்னே பெரும் கதைகள் இருக்க வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாய் அங்கே மாலையில் மத்தியப்பிரதேச சுற்றுலாத்துறை ஒலி-ஒளி மூலம் தினமும் இந்த ஊரின் பின்னே இருக்கும் கதைகளை நமக்குத் தருகிறார்கள்.
ஓர்ச்சா என்றால் ”மறைந்திருக்கும் இடம்” என்ற பொருள். ராஜா ருத்ர பிரதாப் ஒரு முறை வனத்தில் வேட்டையாட வந்திருக்கும்போது வழி தவறி, தட்டுத் தடுமாறி வருகிறார். தண்ணீர் வேட்கையுடனும் சோர்வுடனும் வந்த போது அவருக்கு வழியிலே ஒரு முனிவரின் இருப்பிடம் தெரிய, அங்கே வந்து அடைக்கலம் ஆகிறார். அந்த இடத்தினைப் பார்த்ததில் அத்தனை ஆனந்தம் அவருக்கு.
பக்கத்தில் கரை புரண்டு ஓடும் ”பேத்வா” [BETWA] நதி. சுற்றிலும் நல்ல மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இடம். இந்த இடத்திலேயே ஒரு நகரத்தினை நிர்மாணிக்க வேண்டும் என நினைத்து, அந்த நகரத்திற்கு ஒரு பெயரைச் சூட்டும்படி முனிவரிடம் வேண்ட, “நாளை பார்த்துக் கொள்ளலாம், இன்று படுத்து உறங்குங்கள்” எனச் சொல்லி விட்டாராம்.
அடுத்த நாள் காலையில், திரும்பவும் பெயர் சூட்டல் பற்றி நினைவு படுத்த, ” நான் பெயர் வைக்க மாட்டேன், ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன், இன்று நீங்கள் வேட்டைக்குச் செல்லுங்கள், செல்லும் வழியில் உங்கள் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையை மூலமாக வைத்து நீங்கள் நிர்மாணிக்கும் நகரத்தின் பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ” என்றாராம்.
அப்படிச் செல்லும் போது வழியில் ஒரு மான் தென்பட, அதைப் பிடிக்க தன்னுடைய வேட்டை நாயை “ஊர்ச்” என்று ஏவினார். அதுவே அவர் சொன்ன முதல் வார்த்தை. அந்த வார்த்தையைக் கொண்டு உருவானது தான் ஊர்ச்சா… அது மருவி இப்போது “ஓர்ச்சா” என்றாகிவிட்டது.
ராஜா ருத்ர பிரதாப் சிங் காலத்தில் உருவாக ஆரம்பித்த நகரம், அது முடியும் முன்னரே அவரின் எதிர்பாராத இறப்பினால் சற்று தடைப்பட்டாலும் தொடர்ந்தது. ஒரு பசுவினை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ராஜா ருத்ர பிரதாப் தனது உயிரை இழக்க அடுத்தடுத்த ராஜாக்கள் காலத்தில் நகரம் உருவானது. பல ராஜாக்கள் நிறைய கட்டிடங்களை நிர்மாணித்தனர்.
ராஜா பீர் சிங் தியோ காலத்தில் நிறைய மாளிகைகள் உருவாக்கப்பட்டன. ஷீஷ் மஹால் [முந்தைய பகுதியில் பார்த்தது], ஜான்சி கோட்டை என பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஜஹாங்கீர் மஹால் என்பது முகலாய மன்னர் ஜஹாங்கீர் இந்த இடத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்று தங்க வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒன்று. இரண்டு வாயில்கள். ஒரு வாயிலில் பிரம்மாண்டமான மரக் கதவுகளின் மேல் இருக்கும் இடத்தில் இரண்டு யானைகளின் சிலைகள் அழகாய் இருக்கின்றன.
புந்தேல்கண்ட் ராஜா-ராணிகளின் சத்ரிகள் [குடைகள்] என சொல்லப்படும் சமாதிகள் நகரம் முழுவதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் கதைகள் நிறைய. அவற்றை எல்லாம் சொல்ல இன்னும் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன்.
சொல்லிக் கொண்டு வந்த கதைகளில் ஒரு முக்கிய விஷயமாக ராய் ப்ரவீன் மஹால் உருவான கதையை எல்லோரும் ரசித்தார்கள். இந்த மஹால் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் “எப்படி இருந்த நீ் இப்படி ஆயிட்டேயே” என்று தோன்றியது உண்மை. அப்படி என்ன அதற்குப் பெருமை என்று கேட்பவர்களுக்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள். நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும்.
ராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம்.
நன்றாக இருந்த அந்த காட்சிகளை ரசித்து முடித்து அங்கிருந்து கிளம்பினோம். ஒலி-ஒளி மூலம் சொல்லப்பட்ட கதையில், ராய் ப்ரவீன் மஹால் உருவான கதை, ராம் ராஜா மந்திர் உருவான கதை ஆகியவற்றை மட்டும் அடுத்த இரு பகுதிகளில் பார்க்கலாம்.