22

புந்தேலா ராஜாக்களில் ஒருவரான ராஜா இந்திரமணி அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் பாதிகளில் ஓர்ச்சா நகரத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம்.  அவர் இயல் இசை நடனத்தில் மிகுந்த நாட்டம் உடையவராக இருந்தாராம்.  எப்போதும் நிறைய இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி, நடனம் ஆடும் ஒரு அழகிய பெண்மணி தான் ராய் ப்ரவீன்.  அந்த ராஜாங்கத்திலேயே பாட்டு மட்டுமல்லாது நடனத்திலும் தலை சிறந்தவள்.  பாட்டு பாடி நடனம் ஆடும் ராய் ப்ரவீன் அழகிலும் குறைந்தவளல்ல.  அவள் மீது ராஜா இந்திரமணிக்கு ஆசை.  ராய் ப்ரவீனுக்கும் ராஜா மீது தீராத காதல்.

என்ன தான் காதலும் ஆசையும் இருந்தாலும் எல்லா ராஜாக்களைப் போல இவரும் தனது காதலியும் நடனம் ஆடுபவருமான ராய் ப்ரவீனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  ஆசை நாயகியாகத்தான் வைத்திருந்தார்.  நடனம், பாடல், காதல் என்று சென்று கொண்டிருந்த அந்த வாழ்வில் ஒரு திருப்பம்.

ராய் ப்ரவீன் அவர்களின் பாடல்-நடனம் ஆகியவற்றின் சிறப்பினால் வந்த புகழ் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது தில்லியை ஆண்ட முகலாய மன்னரின் காதுகளையும் எட்டியது.  ராய் ப்ரவீனின் அழகு, அவளது குரலின் மேன்மை, நாட்டியமாடும் அழகு ஆகியவற்றைக் கேள்விப்பட்ட முகலாய் மன்னர் உடனே அவளை தில்லிக்கு அனுப்பி வைக்குமாறு ஓலை அனுப்பி விட்டார்.

முகலாய மன்னர்களின் ஆதரவு பெற்று ஆட்சி செய்த ராஜா இந்திரமணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  முகலாய மன்னர் ஒரு பக்கம், ஆசை நாயகி மறுபக்கம் என இரண்டு பக்கங்களிலும் இழுக்கப்பட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருந்தபோது, ராய் ப்ரவீன் ராஜாவிற்கு தைரியம் சொல்லி, ”என்னை அனுப்பி வையுங்கள், நான் சீக்கிரமே திரும்பி வருவேன்” என்று சொல்லி தில்லி கிளம்பி சென்றாள்.

முகலாய மன்னர் அரண்மணையில் ராய் ப்ரவீன் பாடல்-நடனத்திற்கு ஏற்பாடு செய்தார்.  முதல் பாடலிலேயே  மன்னரை மறைமுகமாக ”நாய்” என்று திட்டியபடி அவள் தைரியமாக பாடி நடனம் ஆட, மன்னரைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சி.  மன்னர் நிச்சயம் மரண தண்டனை வழங்குவார் என அவர்கள் எதிர்பார்க்க, ஆனால் அவரோ எதற்காக இப்படி சொல்கிறாள் இந்தப் பெண் என்பதை  விசாரித்து, ராஜா இந்திரமணியின் மேல் கொண்ட காதலைத் தெரிந்து அவளை திரும்பவும் ஓர்ச்சா நகரத்திற்கே மரியாதை செய்து அனுப்பி வைக்கிறார்.

திரும்பவும் ராஜா இந்திரமணியின் சபையில் ராய் ப்ரவீனின் பாடலும் நடனமும் தொடர்கிறது.  கூடவே அவர்களின் காதலும்.  தனது காதல் தலைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் “ஆனந்த் மஹால்” இருக்கும் பெரிய புல்வெளியில் ஒரு இரண்டு அடுக்கு மாளிகையைக் கட்டி அதில் அவரை தங்க வைத்திருக்கிறார்.  அப்படிக் கட்டப்பட்ட மாளிகை தான் ராய் ப்ரவீன் மஹால்.

கீழே நாட்டியம் – பாடல் ஆகியவை நடத்த ஒரு பெரிய கூடமும், மேலே அழகிய கூடங்களும், பூமிக்குக் கீழே குளிர்ந்த தங்குமிடமும் அமைந்த கட்டிடமாகக் கட்டி தனது காதல் நாயகிக்காக கொடுத்து விட்டார் ராஜா இந்திரமணி.

ஆனால் தற்போது இந்த மஹால் இருக்கும் நிலை பார்த்தால் மனதுக்குக் கஷ்டம் தான் மிச்சம்.  மாடுகள் அங்கே வளர்ந்திருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறது.  எங்கும் வௌவால் எச்சங்களின் நாற்றம்.  படிக்கட்டுகள் மூலம் தட்டுத் தடுமாறி ஏறி மேலே சென்று பார்த்தால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கிறது கட்டிடம்.

இந்த இடமா நடனமும் பாடலுமாக சந்தோஷமாக இருந்தது என்று எண்ணும்படி இருக்கிறது.  ஓர்ச்சா நகரம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டிடங்களின் நிலையும் இதுதான்.  ஒரு சில கட்டிடங்களை பராமரித்து வருகிறார்கள்.

எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே!  நாங்கள் சென்றபோது இந்த இடத்திலும் சில விளம்பரப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.  அப்படத்தில் நடிக்க வந்தவர்களின் பின்னே தான் பெரும் கும்பல் ஓடியது  – வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க அல்ல என்பதை நினைக்கும் போது வருத்தம்தான் மேலோங்கியது.

அடுத்ததாக உங்களுக்குச் சொல்லப் போவது ராம் ராஜா மந்திர் பற்றி.  ஆனால் இந்தப் பகுதியில் அல்ல – அடுத்த பகுதியில்.  அதுவரை காத்திருங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book