26
காலையிலேயே எழுந்து விட்டதால் எங்கள் தங்குமிடத்தின் மிக அருகிலேயே பேத்வா நதிக்கரையில் அமைந்திருக்கும் புந்தேலா ராஜ குடும்பத்தினருக்கான சத்ரிகளைப் பார்க்க நானும், இன்னும் மூன்று நண்பர்களும் சேர்ந்து கிளம்பினோம்.
வெளியே வந்தால் யார் மேல் என்ன கோபமோ தெரியவில்லை பேத்வா நேற்றை விட இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறாள். அன்றைய தினம் ராம்ராஜா மந்திரில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் இருக்கிறதாம். அதனால் சுற்றுப்புறக் கிராமத்தில் இருந்தெல்லாம் நிறைய மக்கள் தத்தமது குடும்பத்தினருடன் வந்து ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள்.
சரி நதிக்கரைக்குச் செல்லலாம் என மக்கள் கூட்டத்தில் நாங்களும் முட்டி மோதிச் சென்றால், செல்லும் போதே ஒரு வித நாற்றம் நாசியை எட்டியது. முந்தைய நாள் இரவில் நடனம் பார்த்தபோது தூரத்தே வீசிய நாற்றம் இப்போது அருகினில். பூச்சி தான் நாற்றம் பரப்பும் எனச் சொன்ன தங்குமிட நிர்வாகி சொன்னது பொய் என சிறிது நேரத்தில் புரிந்து கொண்டோம்.
பேத்வா நதிக்கரை ஓரம் முழுவதும் மனித எச்சங்கள்…. பூச்சித் தொல்லைக்கு எதுவுமே செய்யாத நிர்வாகம் இந்த மனிதர்களுக்கும் எந்தவித ஏற்பாடுகளும் செய்யவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாயிற்று. நதிவரை சென்று கை-கால்களையாவது நனைக்க வேண்டும் என்ற எண்ணமே அகன்றது. எனவே அங்கிருந்து விரைந்து வெளியே வந்து விட்டோம்.
வெளியே வரவும் கூட மக்கள் வெள்ள அலையைக் கடந்துதான் வர வேண்டியிருந்தது. தெருவெங்கும் ஆங்காங்கே மக்கள் கிடைத்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். காலைக் கடன்கள் முடித்து பேத்வா நதியில் குளித்து, உடை மாற்றி, அலங்காரங்கள் செய்து கொண்டு இருந்தனர்.
நாங்கள் நால்வரும் ஒரு வழியாக சத்ரிகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். பெரிய பெரிய கட்டிடங்களாக இருந்தன இந்த சத்ரிகள். மொத்தம் 14 கட்டிடங்கள் இருக்கின்றன இங்கே. அவற்றில் பெரும்பாலானவை பல்வேறு நிலையில் சேதங்களுடன் கண்டது மனதிற்கு வருத்தமாய் இருந்தது. ஷிவ்புரியில் நாங்கள் கண்ட ராஜா-ராணி குடைகள் பகுதியில் சொல்லி இருந்த சத்ரிகள் போலில்லாது இங்கே சுத்தமாய் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.
இந்தியாவிற்கு அதுவும் குறிப்பாய் மத்தியப்பிரதேசத்திற்கு வரும் வெளி நாட்டு பிரயாணிகள் ஏராளம். காரணம் அங்கிருக்கும் கஜுராஹோ. இந்த கஜுராஹோ செல்லும் வழியில் ஓர்ச்சா இருப்பதால் அந்த வெளிநாட்டு பிரயாணிகளில் பெரும்பாலானவர்களும் இந்திய பிரயாணிகளில் சிலரும் அங்கு வருகிறார்கள். அவர்களின் வருகை மூலம் கிடைக்கும் வருமானத்தினைக் கொண்டோ அல்லது வேறு வகையிலோ இந்த கட்டிடங்களை பராமரித்தால் இன்னமும் நிறைய பிரயாணிகளை ஈர்க்க முடியும்.
அதுவும் வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் இருந்து இவர்கள் டாலர்களில் வசூலிக்கும் தொகைக்கு நிச்சயமாய் ஏதாவது நல்லது செய்ய முடியும். சாதாரணமாய் இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் 10-20ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பவர்கள் வெளிநாட்டவர்களிடம் 300 ரூபாய் வாங்கும்போது நிச்சயம் இந்த இடங்களை நல்லவிதமாய் பராமரிப்பது சாத்தியம் என நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கறீங்க!
இந்த நினைவுகளோடு தங்குமிடம் திரும்பினோம். மற்றவர்களும் எழுந்து தயாராகி வரவே காலை உணவு முடித்து ஓர்ச்சாவிலிருந்து எங்களின் கடைசி இலக்கான ஜான்சி நோக்கிய பயணத்தினை ஆரம்பித்தோம். ஜான்சி நகரத்தில் நாங்கள் பார்த்த இடம் பற்றிய பகிர்வு அடுத்த பகுதியில்.