11
ராஜா மான்சிங் தனது காலத்தில் தான் ”மன் மந்திர்” கட்டினார் என்பதை முன்பே எழுதியிருந்தேன். இவர் பெரிய ஆளாக இருப்பார் போல. எல்லா ராஜாக்களையும் போல இவருக்கும் ஒரு மனைவி மட்டுமே இல்லை.
ஒரு முறை வேட்டையாடச் செல்லும் போது வழியில் கிராமத்தில் பார்த்த ஒரு பெண் அவ்வளவு அழகு. பார்த்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு இருந்ததாம் அவளது அழகு. ராஜா அந்தப் பெண்ணிடம் ”உன் பெயர் என்ன?” என்று கேட்க, மிகவும் தைரியமாய் ”நன்னி [Nanhi]” என்று தனது பெயரைச் சொன்னாளாம்.
அழகில் மயங்கிய ராஜா அந்தப் பெண்ணிடம் தன்னைக் ”கல்யாணம் செய்து கொள்கிறாயா?” எனக் கேட்கிறார். இதில் எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ராஜா மான்சிங் அவர்களுக்கு ஏற்கனவே எட்டு மனைவிகள். பின்னே ராஜாவாச்சே, சும்மாவா?
அந்தப் கிராமத்துப் பெண் அதற்கு போட்ட கட்டளைகள் என்ன தெரியுமா? குவாலியர் கோட்டையின் அருகே தனக்கென தனியாக ஒரு மாளிகை கட்ட வேண்டும். அப்படி கட்டப்படும் மாளிகைக்கு தன்னுடைய ஊரில் ஓடும் ராய் நதியிலிருந்து தனியாக ஒரு கால்வாய் வெட்டப்பட்டு அதிலிருந்து எப்போதும் தண்ணீர் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற இரண்டு கட்டளைகள் போட, ராஜாவாச்சே, இது கூடவா அவருக்கு முடியாது. உடனே “யாரங்கே!” தான்.
உடனே அந்த பெண்ணிற்கு பெயர் மாற்றமும் செய்தார் ராஜா. ஏனோ நன்னி பிடிக்கவில்லை அவருக்கு. “மிருக்நயினி” என்ற பெயர் வைத்து தன்னுடைய ஒன்பதாவது ராணியாக்கிக் கொண்டார். மிருக்நயனி என்றால் மான் போன்ற கண்களை உடையவள் என்று அர்த்தம். கலாரசிகனாய் இருந்திருப்பார் போல ராஜா மான்சிங்.
இந்த ராணிக்கு வாக்குக் கொடுத்தபடி அவருக்காக கட்டிய மாளிகை தான் குஜரி மஹால். இப்போது அங்கே ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. பல நூற்றாண்டுகள் பழமையான பொருட்கள் இங்கே காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறதாம். காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தான் திறந்திருக்கும். நாங்கள் சென்றது அதன் பிறகு என்பதால் பார்க்க முடியவில்லை.
மீண்டும் கோட்டைக்கே வருவோம். இந்தக் கோட்டை ஔரங்கசீப் காலத்தில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. இங்கே சிறைபட்ட எவரும் உயிருடன் வெளியே போனதில்லையாம். அதற்கு விதிவிலக்காய் வெளியே வந்தவர் சீக்கிய குருவில் ஒருவரான குரு ஹர்கோவிந் சிங். இந்தக் காட்சிகளும் ஒலி-ஒளி காட்சியின் போது சொல்லிக் கொண்டு வந்தார் கோபாசல்.
பல நூற்றாண்டு கால கதையை 45 நிமிடங்களில் அடக்கிச் சொல்வது என்பது கடினம்தான். இருப்பினும் அவ்வளவு அழகாய் அதைச் சொல்லிக் கொண்டு அந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவற்றை நம் முன் ஒரு காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
குவாலிபா முனிவரில் ஆரம்பித்த கதை, அதன் போக்கில் பயணித்து சிந்தியா ராஜாக்கள் வரை வந்து முடிகிறது. நடுநடுவே தான்சேன் பாடிய பாடல்களாய் சில பாடல்கள் பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சென் ஜோஷி, குமார் கந்தர்வா போன்றோர் குரல்களில் செவிக்கினிமையாய் கேட்டோம். குதிரைகள் ஓடும் சத்தம், போர் நடக்கும் போது கேட்கும் வீரர்களின் வீர முழக்கம், வாள்களால் தாக்கிக் கொண்டு போடும் சத்தம் எல்லாம் நமக்கு தெளிவாய் கேட்கிறது.
விளக்குகள் மீண்டும் எரிய, நல்ல கதை கேட்ட திருப்தியோடு வெளியே வந்து அன்றைய இரவினை நல்ல நினைவுகளோடு கழிக்க ”தான்சேன் ரெசிடென்சி” வந்து சேர்ந்தோம். மனசு அதிலே மூழ்கிக் கிடக்க, கடமைக்கென சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் காலை சீக்கிரம் எழுந்து சூரியனார் கோவில் செல்ல வேண்டும் என்ற நினைவுடன் பஞ்சணையில் சாய்ந்தோம்.
மீண்டும் சந்திப்போம் சூரியனார் கோவில் அருகே.