16

ஷிவ்புரிக்கு வந்ததிலிருந்தே நாங்கள் தங்கியிருந்த சுற்றுலா கிராமத்தின் [டூரிஸ்ட் வில்லேஜ்] நிர்வாகி எங்களை ஒரு இடத்திற்குக் கண்டிப்பாக செல்லும்படி சொன்னார்.  அந்த இடத்தின் பெயர் ”பதையா குண்ட்” [Bhadaiya Kund].

தங்குமிடத்தில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் ஒரு சந்தில் 20 மீட்டர் உள்ளே சென்றால் பதையா குண்ட் செல்வதற்கான படிக்கட்டுகள் தென்படுகின்றன.  பாறைகளில் அமைந்துள்ள 50 படிக்கட்டுகள் மூலமாக இறங்கி உள்ளே சென்றால் கீழே ஒரு குகை போன்ற அமைப்பு தெரிகிறது.

அழகிய தூண்கள் கட்டப்பட்டு அதன் கீழே ஒரு சிறிய கோவில் இருக்கிறது.  கோவிலில் சிவன் லிங்க ரூபமாக காட்சி தருகிறார்.  கோவிலின் மேலே இருந்து தண்ணீர் அருவிபோல பொழிந்து கொண்டிருக்கிறது.  சிவலிங்கம் இருக்கும் இடத்திலும் தண்ணீர் ஊற்று எடுத்து வருகிறது.  இந்த தண்ணீர் நிறைய மருத்துவ குணம் உடையது என்றும், நிறைய கனிமங்கள் நிறைந்தது என்றும் கூறுகின்றனர்.

நாங்கள் சென்றிருந்தபோது நிறைய சுற்றுலா பயணிகள் அங்கே குளித்து விட்டு சிவபிரானை தங்கள் கைகளாலேயே பூஜித்து விட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

எல்லாம் துறந்த முனிவர் போல கொட்டும் தண்ணீருக்குக் கீழே அமர்ந்து இருந்த ஒரு இளைஞர் சிறிது நேரத்திற்குப் பின் தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல்.  பிறகு ஒரு துண்டினை அணிந்து நேராக சிவனை தரிசிக்கச் சென்று விட்டார்.

கனி… அட கனிமம் என்று சொல்ல வந்தேன்.  கனிமம் நிறைந்த அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு அங்கே சில புகைப்படங்களையும் கிளிக்கிவிட்டு அறைக்குத் திரும்பினோம். காலை உணவு முடித்து ஒரு முக்கியமான இடத்திற்குச் செல்ல வேண்டும்.

அந்த இடம் என்ன எனக் கேட்பவர்களுக்கு, அடுத்த பகுதி வரை காத்திருங்கள்….

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book