3
ராம்தனு பாண்டே என்ற இயற்பெயரைக் கொண்ட தான்சேன் சிறு வயதிலேயே இசையில் வல்லமை பெற்றவராக இருந்தார் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அவர் தமது இசையினை மதுராவின் அருகே இருக்கும் பிருந்தாவனத்தில் இருந்த ஸ்வாமி ஹரிதாஸ் என்பவரிடம் கற்றதாகவும், அவரது இசையில் மயங்கிய அப்போதைய குவாலியர் மஹாராஜா மான்சிங் தோமர் அவருக்கு தான்சேன் என்ற பட்டத்தை வழங்கியதாகவும் சொன்னார் எங்களுடன் வந்த கைடு.
தான்சேன் தனது பாடலினாலேயே விளக்குகளை எரிய வைக்கும் திறமைப் பெற்றவராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அவரது மகள் தன்னுடைய இசையின் மூலம் மழையை வரவைத்ததாகவும் சொல்கிறார்கள்.
பின்னாளில் இவரது இசையைப் பற்றிக் கேள்விப்பட்ட முகலாயப் பேரரசர் அக்பர் தான்சேன் அவர்களைத் தனது அரசவையிலேயே இருக்கச் சொல்லி அவரது இசையிலே மயங்கியதாகவும் தான்சேன் அக்பரது மகள் மெஹருன்னிசாவை மணந்ததாகவும் சொல்லிக் கொண்டு வந்தார் எங்களது கைடு.
சூஃபி பாடல்களை மற்றுமொரு குருவிடம் கற்றுக் கொண்டு இருக்கிறார். அந்த குருவின் பெயர் முகம்மது கவுஸ். தற்போது தான்சேன் சமாதி கூட முகம்மது கவுஸ் அவர்களுடைய சமாதி இருக்கும் இடத்தின் பின் பக்கமே இருக்கிறது.
முகம்மது கவுஸின் சமாதி இருக்கும் கட்டிடம் மிகச் சிறப்பாக, சதுர வடிவத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் பக்கங்களில் அறுகோண வடிவில் ஒரு மூன்றடுக்கு கட்டிடமும் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறது.
பின் புறத்தில் இருக்கும் தான்சேன் சமாதி கவுஸ் சமாதி அளவுக்குப் பெரியதாக இல்லாமல் சற்றே சிறிய சதுரமாக, தூண்கள் அமைக்கப்பட்டு அழகாய் இருக்கும் ஒரு கட்டிடத்தின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இடம் முழுவதும் நிறைய பூச்செடிகள் இருக்கின்றன. ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது. மல்லிகைச் செடிகளில் இப்போது தான் மொட்டுகள் வந்திருக்கின்றன. இன்னும் பெயர் தெரியாத பூக்களும் நிறைய இருந்தன.
இப்போதும் ஒவ்வொரு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு சங்கீத சம்மேளனம் நடத்தப்படுகிறது. அதில் உலகிலிருந்து பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் எனச் சொன்னார் கூட வந்த ஒருவர்.
அவரது சமாதி தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு பெரிய புளிய மரம் இருந்ததாகவும் அதன் இலையை அவ்வப்போது சாப்பிட்டதால் தான் அவருக்கு இனிய குரல் வந்ததாகவும் சொல்கிறார்கள். இப்போது அந்த மரம் பட்டுப்போய் விழுந்து விட்டதால், மத்தியப் பிரதேச அரசாங்கம் அங்கே ஒரு புளியஞ்செடியை நட்டு வளர்த்து வருகிறார்கள். ஆனால் அது பெரிய மரமாக வளர்வது சந்தேகமே. காரணம் …
வருவோர் போவோரெல்லாம் தானும் தான்சேனாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் செடியைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கம்பி வலையினுள் கையை விட்டு இலைகளைப் பறித்துச் சாப்பிடுகின்றனர். தடுப்பதற்கோ, பாதுகாப்பதற்கோ யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கட்டிடத்தின் நிழலில் சிலர் தூங்கிக் கொண்டு இருந்தனர். ஒருவேளை அவர்கள்தான் பாதுகாவலர்களோ?
இதில் இன்னுமொரு கொடுமை என்னவெனில், கையை விட்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்றபடியே பாடி வேறு பார்க்கிறார்கள். தான்சேன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பாவம் அந்த இடத்தினை விட்டு ஓடியே போயிருப்பார். ”’நீங்க நல்லா பாடணுமா?’ன்னு கேட்டுட்டு இப்படி சொன்னா எப்படி?” என்று கேட்பவர்களுக்கு, நல்ல குருவாகப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்களேன்.
அடுத்த பகுதியில் உங்களை ஒரு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அரண்மனையில் இருக்கும் உணர்வு உங்களுக்கு வர ராஜா – ராணி உடையெல்லாம் போட்டுக்கிட்டு தயாரா இருங்க. சரியா!