"

23

சாதாரணமான கணவன் – மனைவிக்குள் மட்டும்தான் கருத்து வேறுபாடு இருக்குமா?  சிவபெருமானுக்கும் பார்வதிக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தது பற்றி நாமெல்லாம் திருவிளையாடல் படத்தில் பார்த்திருக்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது ராஜா – ராணி மட்டும் விதிவிலக்கா என்ன?  அப்படி ஒரு ராஜா-ராணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாய் தோன்றியது தான் இந்த ராம் ராஜா மந்திர்.

சென்ற பகுதியில் புந்தேலா ராஜாங்கம் பற்றி சொல்லியிருந்தேன்.  அந்த ராஜாங்கத்தில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த ஒரு ராஜா மதுகர் ஷா.  தீவிரமான கிருஷ்ண பக்தர்.  வருடா வருடம் மதுரா சென்று கிருஷ்ணபகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தவர்.  எது தவறினாலும் தவறும் ராஜா மதுகர் ஷா மதுரா செல்வது மட்டும் தவறாது. ராணி கணேஷ் குவா[ன்]ரி ராம பக்தை.  வருடம் ஒருமுறையாவது அயோத்யா செல்ல வேண்டும் என நினைத்து அதைக் கடைப்பிடித்தும் வருபவர்.   மதுரா செல்வதை விட அயோத்யா செல்வதையே விரும்புபவரும் கூட.

இப்படி ராஜா-ராணி இருவரும் இரு துருவங்களாக இருக்க, ஒரு முறை ராஜா மதுரா கிளம்ப யத்தனிக்கும்போது ராணியையும் தன்னுடன் வரும்படி அழைக்கிறார்.  எப்போதும் போலவே ராணி மறுத்து தான் ராஜாவுடன் மதுரா வர விரும்பவில்லையென்றும் அயோத்யா செல்ல விரும்புவதாகவும் சொல்கிறார்.

ராஜாவுக்கு பயங்கர கோபம். அவருடைய வார்த்தையை வேறு யாராவது கேட்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார்.  ஆனால் சொன்னது பட்டத்து ராணியாயிற்றே.  இருந்தாலும் எதாவது தண்டனை தரவேண்டும் என்று நினைத்தவர் ”நான் மதுரா செல்கிறேன்.  நீ அயோத்யா செல்! திரும்ப வரவேண்டும் என நினைத்தால் உன்னுடைய ஆத்ம தெய்வம் ராமனுடன் திரும்பி வா!” என்று கோபமாக சொல்லிவிட்டு மதுரா சென்று விட்டார்.

ராணிக்கு தனது ராமனின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. நிச்சயம் தன்னுடன் அவர் ஓர்ச்சா வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தோழிகள் புடை சூழ தன்னுடைய மாளிகையிலிருந்து ரதத்தில் கிளம்பி அயோத்யா வந்து சேருகிறார்.  அங்கே ராமனை தரிசித்து தன்னுடன் ஓர்ச்சா வந்துவிடும்படி சொல்ல, அதற்கு பதிலேதுமில்லை.  ஆனாலும் துவண்டு போய்விடாமல் அயோத்யா நகரின் சரயு நதிக்கரையில் ராமனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்து விட்டார்.

நாட்கள் ஓடின .  ராமனின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நீண்ட காலம் தவமிருந்தும் ராமன் பிரத்யட்சமாய் தரிசனம் தராததால் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் ராணி கணேஷ் குவா[ன்]ரி.  ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதியில் பாய்ந்து விட எத்தனிக்கும்போது ராமன் ஒரு சிறுவன் வேடம்பூண்டு ராணியின் முன் தரிசனம் தருகிறார்.

தரிசனம் தந்ததுடன் நில்லாமல் சிறுவன் உருவத்திலேயே ஓர்ச்சாவில் கோவில் கொள்ளவும் சம்மதிக்கிறார் – ஒரு சிறிய நிபந்தனையோடு.  அது – ‘ஓர்ச்சா சென்றபின் எங்கு முதலில் அமர்கிறேனோ  அங்கேயே கோவில் கொள்வேன்’ என்பது தான்.  ராமன் தன்னுடன் வரச் சம்மதம் சொன்னவுடன் ராஜா மதுகர் ஷாவிற்கு முன்தகவல் அனுப்பி ராம்ராஜாவிற்கான கோவிலை தயார் செய்யச் சொல்கிறார்.  ராஜாவும் “சதுர்புஜ் மந்திர்” என்ற கோவிலை நிர்மாணிக்கிறார்.

ராணி கணேஷ் குவா[ன்]ரி ஓர்ச்சா நகரத்தினை வந்தடையும் போது சதுர்புஜ் மந்திரில் இன்னும் ஒரு நாள் வேலை பாக்கி இருந்திருக்கிறது.  ஆகவே ராணி தன்னுடைய அரண்மனையிலேயே சிறுவன் ராமனை உட்கார வைக்கிறார் – அவரின் நிபந்தனையை மறந்து. அடுத்த நாள் சதுர்புஜ் மந்திர் தயாராகிவிடவே அவரை அங்கே பிரதிஷ்டை செய்ய நினைக்க, சிறுவன் ராமனை அசைக்கவே முடியவில்லை.

அதனால் தன்னுடைய அரண்மனையையே ராமனுக்கு ”ராம்ராஜா மந்திர்” என்ற கோவிலாக்கி விட்டு வேறு மாளிகைக்குக் குடியேறுகிறார் ராணி.  இன்றைக்கு இந்த ராம் ராஜா மந்திர் மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான கோவில்.  சுற்றுப்புறத்தில் இருக்கும் அத்தனை கிராமங்களிலும் இருந்து சாரிசாரியாக வண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  ஓர்ச்சாவின் பேத்வா நதியில் நீராடி ராம்ராஜாவினை தரிசித்து அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள். நீங்களும் இந்தப் பதிவின் மூலம் ராம்ராஜா அருள் பெறுவீர்களாக!

மீண்டும் ஒரு ஓவியப் பகிர்வில் சந்திப்போம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.