"

12

சூரியனார் கோவில் என்றதும் நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது நம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோவில் தான்.  அடுத்ததாய் ஒடிசா மாநிலத்தில் பூரி அருகே இருக்கும் கோனார்க்.

இது போன்று இந்தியாவில் பல இடங்களில் இருக்கலாம்.  மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு அழகிய பூங்காவின் நடுவே கோனார்க் சூரியனார் கோவில் அமைப்பிலேயே அமைந்துள்ளது தான் விவஸ்வான் மந்திர் என்று அழைக்கப்படும் சூரிய பகவானுக்கான கோவில்.

முற்றிலும் கோனார்க் சூரியனார் கோவில் போலவே இது  அமைக்கப்பட்டுள்ளது.  சமீப காலத்தில், அதாவது 1986-ஆம் வருடம் தான் [G]கன்ஷ்யாம் தாஸ் [B]பிர்லா அவர்களால் ஆதித்ய பிர்லா ட்ரஸ்ட் மூலம் கட்டப்பட்டது இந்த கோவில்.  அழகாய் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோவிலில் நிறைய சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் பார்க்க முடிகிறது.

சுற்றிலும் பல சிற்பங்களைக் காண முடிந்தது.  ஒவ்வொரு சிற்பத்தின் கீழும் அச் சிற்பம் யாருடையது என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு.  ஆதி சங்கரர், கபீர் தாஸ், சந்த் ஞானேஷ்வர், துளசி தாஸ், வால்மீகி, சூர்தாஸ் போன்ற மகான்கள், வாயுதேவன், குபேரன், ஈஷானதேவன், சூர்ய தேவன், மித்ரா, வருணதேவன் போன்ற பலரது முழு உருவச் சிலைகளை   கோவில் கோபுரத்தில் செதுக்கி வைத்துள்ளார்கள்.

சிற்பங்கள் அனைத்துமே மிகவும் நுணுக்கமாகவும், நேர்த்தியுடனும் செதுக்கப்பட்டு இருக்கிறது.  Sandstone என்றழைக்கப்படும் மணற்கற்களால் வெளிப்புறமும் கோவில் உள்ளே வெள்ளை சலவைக் கற்களாலும் கட்டப்பட்ட இக்கோவில் உள்ளே சூரிய பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்.

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் வெளியே விற்றுக் கொண்டு இருந்த அவரது புகைப்படத்தினை படம் பிடித்து கீழே போட்டு இருக்கிறேன்.

10-15 படிகள் மீதேறி மேலே சென்றால் கோவிலுக்குள் செல்லலாம்.  படிகளுக்கு மேலே ஏறி கோவிலைச் சுற்றி வந்தால் மேலே சொல்லியுள்ள அனைத்து சிற்பங்களையும் நீங்கள் பொறுமையாய் ரசித்துப் பார்க்கலாம்.  ஒரு தேரின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது இது.  தேரை இழுத்துச் செல்ல ஒரு பக்கத்தில் நான்கு குதிரைகளும், மற்ற பக்கத்தில் மூன்று குதிரைகளும் இருக்கின்றன.  சூரிய பகவான் தேரில் 7 குதிரைகள் என்பதை இது குறிக்கிறது.  பெரிய பெரிய தேர் சக்கரங்கள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது நன்றாக இருந்தது.

  

கோவில் இருக்கும் பூங்கா பலவித  பூச்செடிகள், மரங்கள் என அழகாக காட்சியளிக்கிறது.   மயில்களின் அகவல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. நாங்கள் சென்ற போது இரு மயில்கள் அழகாய் தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.  படம் எடுக்க எல்லோரும் செய்த அமளி துமளியில் விரைவாக ஓட்டம் எடுத்து, பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டது. அப்படி ஓடிக் கொண்டு இருந்த ஒரு மயிலின் படம் கீழே.  நாங்கள் அங்கிருந்து திரும்பும் வரை அதன் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது.  மனிதர்களைக் கண்டு தான் எவ்வளவு பயம் இந்த மயிலுக்கு.

காலையிலேயே சூரிய பகவானின் தரிசனம் பெற்று மீண்டும் தான்சேன் ரெசிடென்சி வந்து அறையைக் காலி செய்து மூன்று இன்னோவா கார்களில் தொடர்ந்தது எங்கள் பயணம், அடுத்த இலக்கான டிக்ரா அணைக்கட்டை நோக்கி.

அடுத்ததாய் உங்களை டிக்ரா அணைக்கட்டின் படகுத் துறையில் சந்திக்கிறேன். ஒரு உல்லாசப் படகுச் சவாரி செல்லக்  காத்திருங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.