"

13

சென்ற பகுதியில் உங்களை அணைக்கட்டிற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா, வாருங்கள் நண்பர்களே… ஒரு படகு சவாரி செய்யலாம்.

படகு சவாரி செய்வதற்கு முதலில் டிக்ரா அணை இருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும் அல்லவா?  குவாலியரிலிருந்து கிளம்பிய நாங்கள் நகர எல்லை தாண்டி வெளியே வரவே 30 நிமிடத்திற்கு மேல் ஆனது.  தேசிய நெடுஞ்சாலை செல்லும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. நடுநடுவே பலகைகளில் ”டிக்ரா” எத்தனை தூரம் என்கிற விவரங்கள் இருந்தன.  ஒரு கிளை சாலையில் திரும்பிய பிறகு தான் ஆரம்பித்தது தொல்லை.

நெடுந் தொலைவு வரை ஒரு அறிவிப்புப் பலகை கூட இல்லை. ஆங்காங்கே சாலைகள் பிரிந்து செல்கிறது ஒரு வித அறிவிப்பும் இல்லாமல்.  ஒரு வழியாய் பதினைந்து இருபது நபர்களிடமாவது  வழி கேட்டு, சில சமயங்களில் தவறான வழி சொன்னாலும், தட்டுத் தடுமாறி குவாலியர்-டிக்ரா இடையிலான 23 கிலோ மீட்டர் தொலைவினை ஒன்றரை மணி நேரத்தில் கடந்தோம்.

பயணக் களைப்பினைப் போக்கிக்கொள்ள, மத்திய பிரதேச சுற்றுலாத் துறையின் “Wind and Waves Restaurant”-இல் குளிர்பானங்கள் அருந்திய பிறகு படகுத்துறை நோக்கி சென்றோம்.

டிக்ரா அணைக்கட்டு [Cha]சம்பல் ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ளது.  மலைகளுக்கு நடுவில் இருக்கும் அழகிய ஆற்றில் இதைப் பார்க்கும்போது நன்றாக இருந்தது. ஆற்றங்கரையில் ஒரு பெரிய படகினையே அலுவலகமாக செய்து வைத்திருந்தனர்.

நான்கு பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும், 20 பேர் அமர்ந்து கொள்ளக் கூடிய படகுகளும் இருந்தன.  எல்லோரும் சேர்ந்து பயணம் செய்யவே விரும்பியதால், ஒரு பெரிய படகில் பயணம் செய்ய முடிவு செய்து, அதற்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டோம்.   பயணம் செய்யும் எல்லோருக்கும் பாதுகாப்பு உடைகள் போட்டுக் கொள்ளக் கட்டாயப் படுத்தியது நல்லது எனத் தோன்றியது.  பல இடங்களில் இது இல்லாமல் பலியான உயிர்களின் நினைவு வந்து போனது.

விசைப்படகில் எல்லோரும் அமர்ந்து கொண்டபின் படகின் ஓட்டுனர்கள் [இரண்டு பேர்கள்] படகினை செலுத்தினர்.  அவர்கள் இருவருமே பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளவில்லை. ஒரு வேளை பெரிய நீச்சல்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது அதற்கு அவசியம் ஏற்படாது என்று நினைத்துக்கொண்டிருப்பார்களோ   என்னவோ?

10 நிமிடங்கள் விசைப்படகில் பயணம்.  அணைக்கட்டின் அருகே சென்று பிறகு ஆற்றின் மறு கரை அருகே சென்று ஒரு வட்டம் அடித்து சுற்றிலும் இருக்கும் மலைகளை தரிசித்துத்  திரும்பி வந்தோம்.  ஆற்றில் படகுகள் நிற்கும் இடத்திற்குச் செல்ல ஒரு சிறிய பாலம் இருக்கிறது.  பாலத்தின் இரு புறங்களிலும் ஆற்றுக்கு சென்று வந்ததன்  அடையாளமாக பல பிளாஸ்டிக் குப்பிகள், வறுவல் பாக்கெட் கவர்கள் என்று சகல  குப்பைகளையும்  விட்டுச் சென்றிருக்கின்றனர் வந்து சென்றவர்கள்.

படகு சவாரியை நன்கு ரசித்து, முன் சொன்ன “Wind and Waves Restaurant”-இல் மதிய உணவு முடித்து எங்களது அடுத்த இலக்கான ஷிவ்புரி செல்ல தயாரானோம். குவாலியர் நகரத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஷிவ்புரி. சிந்தியா ராஜாக்களின் கோடைக்கால வாசம் இந்த ஷிவ்புரியில் தானாம்.

ஷிவ்புரியில் மாதவ் தேசிய பூங்கா [வனவிலங்கு சரணாலயம்], சத்ரி என்று பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் இருக்கின்றன.  அடுத்தடுத்த  பகுதிகளில் அவை பற்றி எழுதுகிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.