"

18

சென்ற பகுதியில் குடைகள் பற்றி சொல்லும் போது, மஹாராணியின் குடை, 125 வயதான ”கதம்” மரம், சிவலிங்கத்தின் சிறப்புகள் பற்றி பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கப் போவது பளிங்கினால் ஒரு மாளிகை…  கொஞ்சம் பொறுங்க நான் சொல்லப்போவது ”வல்லவன் ஒருவன்” படத்தில் வரும் பாடலைப் பற்றியது அல்ல.

மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா அவர்களுக்கான குடை தான் இந்த ”பளிங்கினால் ஒரு மாளிகை….”  அப்பப்பா..  எத்தனை கலை நுணுக்கத்தோடு கூடிய வேலைப்பாடுகள்.  பளிங்குக் கற்களில் கட்டப்பட்ட தூண்கள், அத்தூண்களின் நடுநடுவே வேறு கற்களைக் கொண்டு செய்யப்பட்ட பறவை, வண்ணத்துப்பூச்சி, பூக்கள் என எல்லாமே அருமை.

பூக்களின் வடிவங்கள், வேலைப்பாடுகள் எல்லாமே விலை மதிப்புள்ள கற்கள், படிமங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  கைவிளக்கு கொண்டு அக்கற்கள் மேல் ஒளிபாய்ச்ச, ஒளி கற்களை ஊடுருவி செல்லும் விதமாய் இருக்கிறது. எத்தனை விதமான வேலைப்பாடுகள்… ஆச்சரியமளிக்கும் விதமாகக் கட்டப்பட்டு இருக்கிறது.  அங்கிருந்து வெளியே வரவே மனமில்லை.

இந்த மாளிகைக்குள் செல்ல நிறைய பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளிக் கதவுகள் இருக்கின்றன.  மேலும் பளிங்குக் கற்களால் ஆன கதவுகளும், ஜன்னல்களும் இருக்கின்றன.  பளிங்கு கதவுகள் எனும் போது நிச்சயம் அதன் எடை அதிகமாகத்தான் இருக்கும்.  “எப்படி திறந்து மூடுவது?” என்ற கேள்வி எங்கள் அனைவரின் மனதிலும். அதற்கும் பதில் இருந்தது திரு மோஹிதே அவர்களிடம்.

இந்த கதவுகள் பிணைக்கப்பட்டிருப்பது வெள்ளியால் ஆன பிணைப்புகளால் [HINGES].  இரண்டு  வயதே ஆன சிறுவனால் கூட இதனை சுலபமாகத் திறந்து விட முடியும் என்று கூறிய அவர் அதை இரண்டு விரல்களாலேயே திறந்தும் காட்டினார்.

குடைக்குள்ளே திரு மாதோ ராவ் சிந்தியா அவர்களின் முழு உருவச் சிலை இருக்கிறது.  அவரின் சிலைக்கு முன்னே ஒரு சிவலிங்கமும், அதற்கு முன் ஒரு கரு வண்ண நந்தியின் சிலையும் இருக்கிறது.  எதிரே இருக்கும் அரங்கத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த பளிங்குக் கல் தூண்கள் தவிர, இரண்டு அலங்கார விளக்குகளும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கூரைகளும் இருக்கின்றன.  இங்கும் மரத்தினால் ஆன இறக்கைகள் கொண்ட மின்விசிறிகள் இருக்கின்றன.

மஹாராணி குடைக்குள் இருந்த மின்விசிறிகளுக்கும் மஹாராஜா குடைக்குள் இருந்த மின்விசிறிகளுக்கும் இருந்த வித்தியாசம் – மஹாராஜாவின் குடையில் இருந்த மின்விசிறிகளில் தங்கத்தினால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது.  அந்தக் காலத்தில் ஆண்களுக்கும் தங்கத்தின் மேல் மோகம் இருந்திருக்கிறது போல!  உடனே இப்போதிருக்கும் ஆண்களுக்கு தங்கத்தின் மீது மோகம் இல்லையா என்று கேட்கும் சக பதிவர்களுக்கு, ”இது என்னுடைய கருத்து அல்ல, என்னுடன் வந்த மிசோ மாநில பெண்மணியின் கருத்து” என்பதை சொல்லிக் கொள்ள விழைகிறேன்… [அப்பாடா நான் தப்பித்தேன்….]

சுற்றிச் சுற்றி இருக்கும் பலவித அதிசயங்களையும் பார்த்து ”நமக்கும் யாராவது இப்படி குடை கட்டுவார்களா?” என்று யோசித்தபடிதான் நாங்கள் எல்லோரும் இருந்தோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த இரண்டு குடைகளும் அமைந்திருக்கும் இடத்தில் நிறைய மரங்களும், பூச்செடிகளும் அமைத்திருக்கிறார்கள்.  வெளியே வர மனமில்லையெனிலும் வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்பதால் வெளியே வந்தோம்.

வரும்போது கிருஷ்ணர் கோவிலுக்கு எதிரே ஒரு நீண்ட நான்கு பேர் அமரக்கூடிய கல்லால் ஆன இருக்கை ஒன்று இருந்தது.  நீண்ட நேரம் கால்கடுக்க சுற்றியதற்கு இதமாய் இருந்தது.  ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இந்த இருக்கையில் நிறைய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.  சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறிவிட்டு, நாங்கள் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தோம்.

மதிய உணவு எடுத்துக் கொண்டபின் நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.  நம் வனங்களில், நாட்டில் இருக்கும் பல விதமான மரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் சில பொருட்கள் எப்படி பயன்படுகின்றன என்பது பற்றி பார்க்கலாம் அடுத்த பகிர்வில்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.