14
டிக்ரா அணைக்கட்டின் அருகில் நாங்கள் மதிய உணவை முடித்ததும் எங்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய வண்டிகள் இரண்டு மணி நேர பயணம் கழித்து ஷிவ்புரியில் சேர்த்தது. அன்று இரவு நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த Madhya Pradesh Tourist Village, Shivpuri தான் நாங்கள் சேர்ந்த இடம்.
இறங்கி அறை சாவிகள் வாங்குவதற்கு முன்னர் லாபியில் எல்லோரும் அமர்ந்திருந்தோம். வந்திருந்த அனைவருக்கும் ராஜ வரவேற்பு தான். ஒவ்வொருவருக்கும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றார் அந்த தங்குமிடத்தின் நிர்வாகி. பரவாயில்லையே இப்படி கூட வரவேற்கிறார்களே என்று எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.
வரவேற்பு, அறிமுகங்கள் எல்லாம் முடிந்தபிறகு சிப்பந்திகள் அவரவர் அறைகளில் எங்கள் பைகள் மற்றும் பெட்டிகளைக் கொண்டு சேர்க்க, அரை மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு தேநீர் அருந்தி விட்டு ஷிவ்புரியில் இருக்கும் ”சத்ரி” பார்க்கத் தயாரானோம்.
ஆனால் வருணபகவானின் நோக்கம் வேறாக இருந்தது. மழை பொழிய ஆரம்பிக்கவே லாபியில் காத்திருந்தோம். 10-15 நிமிடங்களுக்குள் மழை நின்றுவிட்டது போல தோன்றவே விரைவில் வண்டிகளில் சென்று அமர்ந்து கிளம்பினோம் வருணபகவானின் விளையாட்டை புரிந்து கொள்ளாமல்.
நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து 15 நிமிட தூரத்தில் இருக்கிறது சத்ரி. வண்டிகளில் எல்லோரும் அமர்ந்து கிளம்பிய ஐந்தாவது நிமிடத்திலேயே பெருமழை தொடங்கிவிட்டது. “விடாது கருப்பு” என்பது மாதிரி நாங்களும் விடாது பயணித்து ”சத்ரி” சென்றடைந்தோம். வண்டிகளை விட்டு எவரும் இறங்க முடியாத அளவு மழை. அதனால் 15-20 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு தங்குமிடம் திரும்ப முடிவு செய்தோம்.
மாலை முழுவதும் எங்களுக்காய் காத்திருந்தது. என்ன செய்ய என்று குழம்பியபோது, தங்குமிடத்தில் பொழுதுபோக்கிற்காக, டேபிள் டென்னிஸ், கேரம், மற்றும் செஸ் விளையாட ஒரு அறை இருக்கிறது என சொல்லவே, நாங்கள் அங்கு சென்று டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தோம்.
நன்கு விளையாடி வேர்க்க விறுக்க அறையின் சாவி வாங்க வந்தபோது, “நீச்சல் குளம்” பற்றி சொல்லி, ”நீங்கள் அதை உபயோகிக்கலாமே” எனச் சொல்ல, நான் மற்றும் சில நண்பர்கள் அங்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் நீச்சல் குளத்தில் கும்மாளம் தான்…. எனக்கு பிரச்சனையில்லை. குளத்தின் அதிகமான ஆழமே ஐந்து அடிதான். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீச்சல் குளத்தில் குளியலை ரசித்து அறைக்குச் சென்றோம்.
அறைக்குச் சென்று மீண்டும் குளித்து அறையின் வழியே வெளியே பார்த்தால் பின்புறம் ”சாக்யா சாகர்” [Sakhya Sagar] ஆற்றின் அழகிய தோற்றம். அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆறு. ஆற்றின் அந்தப் பக்கத்தில் அமைந்திருப்பது தான் ”மாதவ் தேசிய பூங்கா” என்ற பெயர் கொண்ட வனவிலங்குகள் சரணாலயம்.
இரவு உணவு முடித்து, ஆற்றினை நோக்கி இருக்கும் கண்ணாடிச் சுவற்றினை மறைத்திருக்கும் திரைச்சீலைகளை விலக்கி ஆறு மற்றும் அடர்ந்த காடுகளைப் பார்த்தபடியே இரவினைக் கழித்தோம். மறு நாள் காலை சீக்கிரமாகவே கிளம்பி நம் விலங்கு நண்பர்களைப் பார்க்கப் போக வேண்டும். ஒரு புலிகூட இருக்கிறதாம் அங்கே. நம் கண்ணுக்குத் தென்படுகிறதா இல்லை நாம் வருவோம் என பயந்து ஒளிந்து கொண்டு விடுகிறதான்னு பார்க்கணும்.
நிஜ மான்களை பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தோடு படுத்ததாலோ என்னவோ தெரியவில்லை, கனவில் “ஓ மானே மானே, உன்னைத்தானே!” பாட்டு.
வனவியல் பூங்காவில் சந்திப்போம்…