"

8

அது என்னங்க Saas-Bahu Mandir? அதாங்க மாமியார் [Saas] – மருமகள் [Bahu] கோவில்? அட கேட்க புதுசா இருக்கேன்னுதான் நாங்களும் ஆர்வத்துடன் அங்கு  சென்றோம்.

சற்றேறக்குறைய 10-11-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் இது. அப்போதைய குவாலியர் மாகாணத்தினை ஆண்ட ”கச்சபகாடாஸ்” அரசர்கள் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டியிருக்கின்றனர்.  அவற்றில் இரண்டு தான் குவாலியர் கோட்டையின் அருகே கட்டப்பட்டு இருக்கும் இந்த Saas-Bahu Mandir.

இக்கோவிலைப் பார்க்கும் மாமியார்கள் சற்றே பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் மருமகள் கோவிலை விட மாமியார் கோவில் தான் அளவில் பெரியது.  அப்ப நாங்க என்ன சும்மாவா, என என்னை சண்டைக்கு இழுக்கும் மருமகள் சங்க உறுப்பினர்களே நீங்களும் பெருமைப்பட விஷயம் இருக்கிறது.

இரு கோவில்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் மருமகள் கோவில் தான் இன்றும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது.  மாமியார் கோவில் பாவம் சற்றே இடிபாடுகளுடன் காணப்படுகின்றது.

சரி இந்த கோவில்களில் என்ன மூர்த்தி வைத்து பூஜித்தார்கள்? மாமியார்-மருமகள்களையா என்று கேட்டால் அதுதான் இல்லை.  இங்கே பூஜிக்கப்பட்டது பகவான் ஸ்ரீ விஷ்ணுவை.  விஷ்ணு பகவான் கோவிலை எதற்கு மாமியார்-மருமகள் கோவில்என்று சொல்கிறார்கள் என்ற சந்தேகம்  உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏற்பட்டது.

பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கு பல பெயர்கள் இருக்கிறதல்லவா.  அதில் ஒரு பெயர் ”ஷாஸ்த்ர பகு” என்பதாம்.  இந்த பெயரில் முதலில் அழைக்கப்பட்ட இந்த கோவில்கள், நாளடைவில் மருவி “சாஸ்-பகு” அதாவது மாமியார்-மருமகள் கோவில் ஆகிவிட்டதாம்.

மிகச் சிறப்பான கட்டமைப்பு கொண்டவை இந்த இரு கோவில்களும்.  பிரமீட் வடிவத்தில் கட்டப்பட்டிருக்கும் இவைகள்  நிறைய தூண்களின் பலத்தில் நிற்கின்றன.

இரண்டு கோவில்களிலுமே சிற்பங்கள் மிக அழகாய் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சிற்பங்களின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றியது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்கால கோட்டைகளையும் கோவில்களையும் பார்க்க வந்து கொண்டு இருக்கும் வெளி நாட்டவர்கள் இக்கோவில்களையும் பார்க்கத் தவறுவதில்லை. நாங்கள் அங்கு இருந்தபோது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்திருந்த மூன்று பேருக்கு ஒரு பனிரெண்டு வயது சிறுவன் இக்கோவிலின் சிறப்பு பற்றி ஸ்பேனிஷ் மொழியில் விளக்கிக் கொண்டிருந்தான்.

அந்த மூன்று பேருக்கு மட்டுமல்ல பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம்.  பள்ளிப் படிக்கட்டைக் கூட மிதிக்காத அச்சிறுவன் பழக்கத்திலேயே ஸ்பேனிஷ், ஃப்ரென்ச், ஆங்கிலம் என நிறைய பாஷைகளை நன்கு பேசுகிறான் என அந்த வெளிநாட்டவர்களே சொல்லி ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.  நம் குழந்தைகளுக்கு திறமை நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அவற்றை வழிப்படுத்தத்தான் ஆள் இல்லை.

என்ன மாமியார்-மருமகள் கோவில் பார்த்துட்டீங்களா? அடுத்ததாய் நாம் செல்லப்போவது ”தேலி கா மந்திர்”.  காத்திருங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.