7
ஜெய்விலாஸ் அரண்மணையில் இருந்த பல்வேறு பொருட்கள், அதன் பிரம்மாண்டம் போன்றவற்றின் தாக்கத்திலிருந்து வெளி வராமலேயே அடுத்து நாங்கள் சென்ற இடம் குவாலியர் கோட்டை.
சுமார் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இக்கோட்டை அமைந்துள்ளது. நான்காம் நூற்றாண்டிற்கு முன்னரே கட்டப்பட்டு ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சியிலும் பல மாற்றங்களைக் கண்ட இது பல வரலாற்று நிகழ்வுகளின் சின்னமாய் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. மன் மந்திர், கரன் பேலஸ், ஜஹாங்கீர் மஹால், ஷாஜஹான் மஹால், குஜ்ரி மஹால் என்ற பெயர்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்ட மாளிகைகள் இக்கோட்டையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இருக்கிறது.
வட இந்தியாவில் இருக்கும் பல கோட்டைகளில் முக்கியமான ஒரு கோட்டையாக குவாலியர் கோட்டை இருந்திருக்கிறது. கடந்த ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பல ஏற்ற இறக்கங்களை கண்ட இந்த கோட்டையில் இருந்து தோமர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், சிந்தியா மன்னர்கள் என்று பலர் ஆட்சி புரிந்து இருக்கிறார்கள். ராணிகளில் ஒருவரான ஜான்சி ராணி கூட இந்த குவாலியர் கோட்டையினைக் கைப்பற்றியிருக்கிறார்.
கோட்டையின் வெளிப்புற சுவர்களில் நீல நிற வண்ணத்தில் இருக்கும் யானை, கிளி, மற்றும் பல விலங்குகளின் சிற்பங்களை இன்றைக்கும் காண முடிகிறது. பல்வேறு படையெடுப்புகளில் அழிந்து விட்ட சிற்பக்கலையின் சிறப்பு பற்றி இங்கே மீதியிருக்கும் சில சிற்பங்கள் பறைசாற்றிக்கொண்டு இருக்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது.
பல்வேறு காலகட்டங்களில் இந்தக் கோட்டையினைச் சுற்றி பல மாளிகைகள் கட்டப்பட்டு இருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்றான ”மன் மந்திர்” 1486 முதல் 1517 வரை உள்ள வருடங்களில் ராஜா மான்சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது. இங்கே வெளிச்சுவற்றில் பதிக்கப்பட்ட ஓடுகள் காலத்தின் பலதரப்பட்ட தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எஞ்சியிருக்கும் சில, இவற்றின் அழகை வெளிப்படுத்தி, முழுவதும் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த மாளிகைக்குள்ளே இருக்கும் பெரிய அறைகளில் பெரிய பெரிய இசை மேதைகளிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்வார்களாம் பெண்கள். அப்படிக் கற்றுக்கொள்ளும்போது ஆசிரியர் ஒரு புறம் இருக்க, மறைவிற்குப் பின்புறம் இருப்பார்களாம் பெண்கள். அவர்களுக்கு திரைச்சீலைகளாக அமைக்கப்பட்டது எதனால் என்று தெரிந்ததும் அவ்வளவு ஆச்சரியம் எங்களுக்கு. அத்திரைச் சீலைகள் எல்லாமுமே கற்களால் ஆனவை. அவ்வளவு மெலிதாகச் செதுக்கப்பட்டு ஆங்காங்கே சிறிய துளைகள் இடப்பட்டு இருந்தன.
முகலாயர்கள் காலத்தில் இக் கோட்டை கடுமையான சிறைத் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்ட ஒரு சிறைச்சாலையாக இருந்திருக்கிறது. முகலாய மன்னர் ஔரங்கசீப் தனது தம்பி முரத் என்பவரை இங்கே தான் சிறை வைத்திருக்கிறார். கடைசியில் அவரது தம்பி கொல்லப்பட்டதும் இங்கேதான்.
இன்னும் பலப் பல வரலாற்று நிகழ்வுகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் இக் கோட்டையின் முழு வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு நேரமும் பிடிப்பும் இருக்க வேண்டும்.
இங்கே தினமும் மாலை வேளைகளில் “Light and Sound Show” நடக்கிறது. இரவு 07.30 மணி முதல் 08.15 வரை ஹிந்தி மொழியிலும் 08.30 மணி முதல் 09.15 வரை ஆங்கில மொழியிலும் இக்கோட்டையின் வரலாற்றினை நம் கண் முன்னே ஒலி, ஒளி கொண்டு நமக்குக் காண்பிக்கிறார்கள்.
அட இருங்க மணி இன்னும் 07.30 ஆகலையே அதுக்குள்ளே என்ன அவசரம்?. அதற்குள் நாம் இன்னும் சில இடங்களைப் பார்த்துட்டு வந்துடலாம்,சரியா. எங்கேன்னு கேட்கறீங்களா? மாமியார்-மருமகள் கோவிலுக்குத் தான்.