"

2

“மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…..” எனும் முதல் பகுதியில் ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறேன் என எழுதி இருந்தேன்.  நீங்களும் ஓய்வு எடுத்துக்கிட்டீங்களா?

குவாலியர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இன்னோவா கார்கள், நேராக ”தான்சேன் ரெசிடென்சி” சென்று தான் நின்றது.  மத்தியப் பிரதேச சுற்றுலா நிறுவனம் நடத்தும் ஒரு தங்கும் விடுதி அது.  நகரின் மத்தியில் நல்ல வசதிகளுடன் நன்றாக இருக்கிறது இந்த விடுதி.

எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்து, எல்லோரும் கிளம்பினோம்.  நாங்கள் சென்ற இடம் ராமகிருஷ்ணா ஆஷ்ரமத்தின் ஒரு பகுதியில் நடக்கும் ”ரோஷ்ணி” என்கிற ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு. ஆங்கிலத்தில் “REHABILITATION OPPORTUNITIES SERVICE & HEALTH FOR THE NEUROLOGICAL IMPAIRED” என்பதைச் சுருக்கி ROSHNI என்று அழைக்கிறார்கள்.  ஹிந்தியில் ரோஷ்ணி என்றால் வெளிச்சம் என்று அர்த்தம்.

இவர்கள் மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palsy ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நடைமுறையில் அவர்களுக்கு உதவும் பயிற்சிகள் தவிர இக் குழந்தைகளுக்கு பேப்பர் பைகள் செய்யவும், துணிகளில் எம்பிராய்டரி செய்வது, அழகிய கலர் டிசைன்கள் செய்வது, ராக்கி செய்வது, சிறிய மணி மாலைகள் செய்வது என்று நிறைய கைவேலைகள் செய்ய கற்றுக் கொடுக்கிறார்கள்.

அந்த நிறுவனத்தின் இயக்குனர் திருமதி மஞ்சுளா பட்டன்கர் எங்களை ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்து அவர்கள் செய்து வரும் பயிற்சிகளைப் பற்றிய விளக்கங்களை  அளித்தார்.  ஒவ்வொரு வகுப்பறையாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம்.  அப்படிப் பார்த்த ஒரு அறையில் அதுல் என்ற சிறுவன் பேப்பர் கவர்கள் செய்து கொண்டு இருந்தான்.   அவனுடனும், மற்ற சிறுவர்களுடனும் பேசிவிட்டு வெளியே வந்தவுடன், சேதன் என்கிற சிறுவன் “நீங்க எல்லாம் அதுல் வகுப்புக்கு மட்டும் போயிட்டு வந்தீங்க, என்னோட வகுப்புக்கும் வாங்க என்று பாசமாக அவன் மொழியில் அழைக்க, அவனை வருத்தப்பட வைக்க வேண்டாமென அச்சிறுவனுடன் நாங்கள் செல்ல, அவனது கூட பயிலும் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான்.

ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும்தான் எத்தனைத் எத்தனை திறமைகள்? சில குழந்தைகள் தையல் கற்றுக் கொள்கிறார்கள், சிலர் பேப்பர் கவர்கள் செய்கிறார்கள்.  வேறு சிலர் ஒரு பெரிய புடவையில் கைவேலைகள் செய்து வருகிறார்கள்.  இவர்கள் செய்யும் எல்லாப் பொருட்களும் அரசின் அங்காடியான “Mrignaini” யில் விற்கப்படுகின்றன.

இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மனதிலே ஒரு அழுத்தம்.   வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே துவண்டு போகும் நமக்கு, இவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது.

மேலும் பொறுமை இல்லாத என்னைப் போன்ற சிலருக்கு இந்த இடத்தில் பணிபுரியும் நண்பர்களைப் பார்த்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.  ஏற்பட்டது.

அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச்  செய்து விட்டு மனதில் திருப்தியுடன் வெளியே வந்தோம். அவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் அவர்களது இணையதளத்தினைச் சென்று பார்க்கலாம்.

அடுத்த பகுதியில் ஒரு நவரத்தினம் பார்க்கப் போகிறோம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

மத்தியப் பிரதேசம் அழைக்கிறது Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.