5
இந்தப் பகுதியிலும் நாம் ஜெய்விலாஸ் அரண்மனையின் உள்ளேதான் பயணிக்கப் போகிறோம். அட ஆமா, எம்மாம் பெரிய அரண்மனை, 300க்கும் மேற்பட்ட அறைகள். நல்ல வேளை முழுவதும் நாம் சுற்றிப் பார்க்கப் போவதில்லை. வெறும் 35 அறைகள் தான். அதற்கே நிறைய நேரம் வேண்டும்.
சென்ற பகுதியில் பார்த்தது போல பிரம்மாண்டத்தின் மறுபெயர் தான் இந்த அரண்மனை. அரண்மனை என்று இருக்கும்போது சாப்பாட்டு அறை என்று ஒன்று இல்லாமலா இருக்கும். [அட எங்க ஏரியாவுக்கு இப்பதான் வந்தீங்க என்று சொல்லும் என்னைப் போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு, உணவு வகைகள் பற்றி இங்கே ஒன்றும் எழுதப் போவதில்லை. இங்கே வரப்போவது வெறும் இங்கே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே!]
ராஜா, மகாராஜாக்கள் எல்லோரும் கீழே வரிசையாகப் போடப்பட்டுள்ள மெத்தைகளில் அமர்ந்து இருக்க, எதிரே முழுவதும் வெள்ளியால் ஆன தட்டுகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. பார்க்கும்போதே ஆசையாகத் தான் இருந்தது அவற்றில் சாப்பிட.
இவர்களைத் தவிர வேறு நபர்கள் வந்தால் மேஜையிலும் பரிமாறுவார்களாம். அதற்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம் இந்த அறைகளில் இருக்கிறது. ஒரு நீண்ட மேஜையில் அழகாய் மேஜை விரிப்புகள் போடப்பட்டு மேஜையின் இருபக்கங்களிலும் நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன.
மேஜையின் நடுவே அதன் முழு நீளத்திற்கும் ஒரு தண்டவாளம் இருபக்கத்திலும் செல்கிறது. இந்த முனையில் ஆரம்பித்து, பயணித்து அடுத்த முனை சென்று திரும்ப இதே முனைக்கு வரும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயணிக்கப்போவது வெள்ளியால் ஆன ஒரு சிறிய ரயில்.
வெள்ளியால் ஆன இந்த ரயிலில் மொத்தம் 7 பெட்டிகள். அதன் முன்னே ரயில் எஞ்சின் மற்றும் இன்னுமொரு உபரிப் பெட்டி எஞ்சின் எரிபொருட்களைப் போட்டு வைக்க. இருக்கும் 7 பெட்டிகளிலும் பெட்டிக்கு ஒன்றாய் S C I N D I A என்று எழுதப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் இப்போதும் வேலை செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.
விருந்து நடக்கும்போது இந்த ரயில் மேஜையில் சுற்றிச் சுற்றி வரும். நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் அந்த ரயிலில் இருக்கும் பானங்களையோ, ஐஸ்கட்டிகளையோ, வறுத்த டிரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றை எடுக்க விரும்பினால் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு குப்பியை எடுக்க வேண்டியதுதான். எடுத்தால் வண்டி நின்று விடும். பிறகு அந்தக் குப்பியை வண்டியில் திரும்ப வைத்தால் தான் அது மீண்டும் ஓட ஆரம்பிக்கும். என்ன ஒரு வசதி! இப்போதும் விருந்து நடைபெற்றால் இந்த இடத்தில் நடத்துகிறார்கள்.
அதில் இன்னும் விசேஷம் அந்த ரயில் பெட்டி முழுவதும் வெள்ளியாம். இன்னிக்கு விற்கிற விலையில் வாங்கணும்னா எவ்வளவு ஆகும்னு யாராவது கணக்குப் புலிங்க கணக்குப் போட்டுச் சொன்னால் நல்லா இருக்கும். பயத்துல மொத்தம் எவ்வளவு கிலோ வெள்ளி இந்த ரயில் செய்யப் பயன்படுத்துனாங்கன்னு கேட்க மறந்துட்டேன். இருந்தாலும் இவ்வளவு பெரிய ரயில் செய்யணும்னா நிறைய வெள்ளி ஆகியிருக்கும்.
இந்தக் கணக்கப் போட்டுக்கிட்டு இருங்க. பிரம்மாண்டத்தின் உண்மை அடுத்த பகுதியில் காத்திருக்கு உங்களுக்காக.