1
மத்தியப் பிரதேசம்…. இம்மாநிலத்தினை இந்தியாவின் இதயம் என்று இதைச் சொல்கிறார்கள். இம்மாநிலத்தில் பல அருமையான சுற்றுலாத் தலங்கள் உண்டு. பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வடக்கே சுற்றுலாவாக வருபவர்கள் ஆக்ரா, ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், சிம்லா, மணாலி போன்ற இடங்களுக்கே செல்வார்கள். வழியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்திற்கு அவ்வளவாகச் செல்வதில்லை. அங்கேயும் வனங்கள், அரண்மனைகள், கோவில்கள் எனப் பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் உண்டு.
அலுவலகத்தில் இரண்டு மாத பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, பயிற்சியின் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேசத்திற்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்பயணத்தில், குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா, ஜான்சி ஆகிய நான்கு இடங்களுக்கு நாங்கள் செல்வதாகத் திட்டம். அந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற இடங்கள், அங்குள்ள சுற்றுலாத் தலங்கள், அலுவலகங்கள் பற்றிய சில குறிப்புகள் ஆகியவற்றை இப்பகுதியிலும் வரப்போகும் பகுதிகளிலும் பார்க்கலாம்!
காலை 06.15 மணிக்கு புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து போபால் செல்லும் ஷதாப்தி விரைவு வண்டியில் எங்களுக்கான பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து 05.30 மணிக்குக் கிளம்பி ரயில் நிலையம் சென்றடைந்தேன். பயிற்சியில் பயிலும் மாணவர்கள் தவிர [அட மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்னவொரு ஆனந்தம்….], பயிற்சியாளர், அவருடைய மனைவி மற்றும் மத்தியப்பிரதேச சுற்றுலாத் துறையில் பணிபுரியும் திரு ரோஹித் பட்நாகர் என மொத்தம் 14 பேர்கள் கொண்ட குழுவாய் பயணத்தினை இனிதே தொடங்கினோம்.
ஷதாப்தி கிளம்பியவுடன் ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்துக் கொண்டு வந்தார் ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. சிப்பந்தி. பின்னாலேயே இன்னுமொரு சிப்பந்தி செய்தித்தாள்கள் கொடுத்துக் கொண்டு வந்தார். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வகைக்கு இரண்டு, மூன்று என ஐந்தாறு பேப்பர்கள் கேட்க, சிப்பந்தி ஒரு பேப்பர்தான் தருவேன் எனச் சொல்ல, அவர் அடம் பிடிக்க, கடைசியில் ஜெயித்தது பெரியவர் தான்.
நான் இருந்த பெட்டியில் நான்கு நண்பர்கள். அதில் இருவருக்கு பக்கத்துப் பக்கத்து இருக்கைகள். மற்ற இருவருக்கு தனித் தனி இடத்தில் இருந்தது. சிறு வயது ராகேஷ் ரோஷன் போன்ற ஒருவரிடம் இடம் மாறி உட்காரச் சொல்ல, எங்களைப் பார்த்து முறைத்தார். எங்கே அவர் ஹிரித்திக் ரோஷனை வைத்து எடுத்தப் படத்தினைப் பார்க்க வைத்து விடுவாரோ என்று மனதில் பயம் தோன்ற விட்டு விட்டோம்.
நடுநடுவே காபி, தேனீர், பிஸ்கெட், பிறகு, உப்புமா, உப்பில்லாத சட்னி, சாம்பார், பிரவுன் பிரெட் என்றெல்லாம் சாப்பிடக் கொடுத்தார்கள். ”பச்சை நிறமே பச்சை நிறமே” என்று மனதினுள் பாடியபடி வெளியே வேடிக்கை பார்த்தபடியே 08.00 மணிக்கு மதுரா வந்தோம். ஜன்னல் வழியே கிருஷ்ணர் தெரிகிறாரா என்று பார்த்தேன். அவரைக் காணவில்லை. கோபியர்களுடன் “மார்னிங் வாக்” சென்று விட்டார் போல.
சிறிது நேர பயணத்திற்குப் பின்னரே ”ராஜா கி மண்டி” ரயில் நிலையத்தினைக் கடந்தது எங்கள் ரயில். அடுத்தது ஆக்ரா தான். ஏற்கனவே நமக்கு ஆக்ரா என்றால் கொஞ்சம் உதறல். பல முறை தாஜ்மஹால் சென்றதுண்டு – தில்லி வரும் நண்பர்களை அழைத்துச் செல்வது எனக்குப் பழக்கமாக இருந்தது. ஷாஜஹான் கூட இத்தனை முறை பார்க்க வந்ததில்லை என்று சொல்லிக் கொண்டு மும்தாஜ் கூடவே வந்து விட்டால் என்ற சிந்தனையை ”மும்தாஜ் வந்துவிட்டால்” எனும் பதிவாக சொல்லியிருக்கிறேன். நல்ல வேளை… இப்போது ஆக்ராவில் இறங்கப் போவதில்லை.
எல்லா வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சிமெண்ட் பூசப்படாத வெளிச்சுவர்களை கொண்ட வீடுகள். அவ்வீடுகளைப் பார்த்தபடி கிடக்கும் நீண்ட தண்டவாளங்கள். நேற்று பெய்த மழையோ? ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அது சரி…. கொசுக்களும் பிறக்க வேண்டுமே…
ஆக்ராவிற்குப் பிறகு 09.15 மணி அளவில் முரேனா நகரைச் சென்றடைந்தோம். ஆங்கிலத்தில் ஏனோ இதை Morena என எழுதி இருக்கிறார்கள். அன்று அவர்கள் எப்படி எழுதினார்களோ அதையே இன்னமும் தொடர்கிறோம்.
எங்களுக்கு உணவு வழங்கிய சிப்பந்தி ஒரு தட்டில் சோம்பு, கல்கண்டு போன்றவை வைத்து “டிப்ஸ்” வாங்கிக்கொள்ள ஒவ்வொரு இருக்கையாக வந்து கொண்டு இருந்தார். பேப்பர் அங்கிள் முகத்தினைத் திருப்பிக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்து விட்டார்.
ரயில் வழக்கம்போலவே தாமதமாகச் சென்று கொண்டு இருக்கிறது. 09.30க்கு சேர வேண்டிய வண்டி 09.50க்கு சென்றடைந்தது. எங்களது மொத்த பயணமும் மத்தியபிரதேச சுற்றுலா நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் பிரச்சனை இல்லை. குவாலியர் ரயில் நிலையத்தின் வெளியே மூன்று இனோவா கார்கள் எங்களுக்காகக் காத்திருந்தது.
இரயில் நிலையத்தில் இருந்து நாங்கள் சென்ற இடத்தினைப் பற்றி அடுத்த பகுதியில் தொடர்கிறேன். பயண அலுப்பினைப் போக்கக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த பகுதியில் சந்திப்போம்…..