"

25

The Autobiography of a Yogi என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதிய பெரியவர் Paramahansa_Yogananda_Standard_Poseபரமஹம்ச யோகானந்தரின் How to Talk with God என்ற சின்ன நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். அதைத் தமிழில் தரலாம் என்று தோன்றியது. இதோ உங்களுக்காக:

கடவுளோடு பேசமுடியுமென்பது நிச்சயமான, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நிஜம். பல இறைநேசர்கள் கடவுளோடு பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களருகில் இருந்திருக்கிறேன். நீங்கள் அனைவருமே கடவுளோடு பேசமுடியும். அது ஒருவழிப்பேச்சல்ல. அவரும் உங்களோடு பேசுவார். எல்லோருமே இறைவனோடு பேசமுடியும். அவனை எப்படி நமக்கு பதில் சொல்ல வைப்பது என்பது பற்றி இன்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

 

கடவுளும் மனிதர்களும் பேசிக்கொண்டது பற்றி நிறைய வேதநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. புனித பைபிளில் இதுபற்றிய ஒரு அழகான சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. இறைவன் சாலமனின் கனவில் தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். “இறைவனுடைய ஊழியனாகிய எனக்கு எதையும் புரிந்துகொள்ளக்கூடிய இதயத்தைக் கொடு” என்று சாலமன் கேட்டார். அவர் நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் உயிரையோ கேட்காததால் மகிழ்ந்த கடவுள், ”நீ கேட்டதையும் கேட்காததையும் தருகிறேன்” என்று சொல்லி அவருக்கு செல்வத்தையும் கௌரவத்தையும் கொடுத்தார்.

நாம் இறைவனோடு பேசும்போது நெருக்கமாகவும், முழு நம்பிக்கையோடும் பேசவேண்டும். ஒரு அம்மாவோடு அல்லது அப்பாவோடு பேசுவதுபோல் பேசவேண்டும்.

உங்களுடைய மனதில் இறைவனைத்தவிர வேறு எதுவும் இருக்கிறதா என்று கடவுள் பல சோதனைகள் செய்வார்.  அதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் அவர் உங்களோடு பேசுவார். அவர் தரக்கூடிய பரிசுகளின்மீது உங்கள் மனமிருக்கும் பட்சம், அவர் எதற்கு உங்களோடு பேசவேண்டும்?

நாம் ஏன் இறைவனோடு பேசவிரும்புகிறோம்? நாமனைவரும் தெய்வத்திடமிருந்து வந்தவர்கள்தான். எனவே நம்மிடமும் தெய்வீகத்தன்மை உள்ளது. அதன் காரணமாகத்தான் அழியக்கூடிய எந்தப் பொருளின்மீதான நமது விருப்பமும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு பொருளின் மீதான சந்தோஷம் கொஞ்சநாள் கழித்து குறைவதற்கும் மறைவதற்கும் இதுதான் காரணம். பேசுவது என்றால் அதிர்வலைகளை எழுப்புவது என்றுதான் அர்த்தம். அந்த அதிர்வலைகளின் மூலம் கடவுள் எந்நேரமும் நம்மோடு பேசிக்கொண்டேதான் இருக்கிறான். ஆனால் நாம்தான் கேட்பதில்லை.

நீங்கள் மனமாற பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனைக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். ஏனெனில் பிரார்த்தனை என்பது அதிர்வலைகளை அனுப்புவதாகும். அதற்கான பதில் அதிர்வலைகள் நிச்சயம் கிடைக்கும்.

நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் இறைவனோடு பேசலாம். நீங்கள் ஜெர்மன் மொழியில் பேசினால் ஜெர்மன் மொழியில் பதில் கிடைக்கும். ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்திலேயே பதில் கிடைக்கும். ஏனெனில் மொழி என்பதே ஒருவகையான அதிர்வலைகளின் தொகுப்புதான். அதிர்வலை என்பதென்ன? அது ஒருவகையான ஆற்றல். ஆற்றல் என்பதென்ன? அது ஒருவகையான எண்ணம்.

கடவுள் நம் அனைவரின் பிரார்த்தனைகளையும் கேட்கிறார். ஆனால் அனைத்துக்கும் அவர் பதில் தருவதில்லை. ஏன்? அம்மா வேண்டும் என்று அழும் குழந்தையைப் போல நாம் இருக்கிறோம். அழும் குழந்தையை அமைதிப்படுத்த அம்மாவானவள் பல நேரங்களில் பொம்மைகளைக் கொடுப்பாள். ஆனால் அம்மா வந்தால்தான் போச்சு என்று அடம்பிடித்துக் குழந்தை அழுமானால் அவள் வந்து சமாதானப்படுத்துவாள். எனவே கடவுள் வேண்டுமென்றால் அந்தப் பிடிவாதமான குழந்தை மாதிரி நீங்கள் இருக்கவேண்டும்.

கடவுளும் உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டே இருக்கிறார். அவனிடம் நீங்கள் திரும்பிவரவேண்டும் என்றே அவர் விரும்புகிறார். இந்த பூமியை விட்டு நீங்கள் ஒருநாள் போயாகவேண்டும். இது உங்களுக்கான நிரந்தர இடமல்ல. இது ஒரு பள்ளிக்கூடம் மாதிரி. அங்கே எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இங்கே கற்றுக்கொள்ளவேண்டும்.

“இறைவா, உன்னை எனக்கு வெளிப்படுத்திக்காட்டு, இறைவா, உன்னை எனக்கு வெளிப்படுத்திக்காட்டு” என்று கேட்டுக்கொண்டே இருங்கள். அவன் அமைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் பிரார்த்தனைக்கு பதிலாக முதலில் நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களுக்குக் கடவுள் கொடுப்பான். அவனுடைய கவனத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக. ஆனால் அந்தப் பரிசுகளில் நீங்கள் மகிழ்ந்துவிடாதீர்கள். நீங்கள் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தால் உங்கள் கனவில் ஏதாவதொரு மகான் தோன்றலாம். அல்லது ஒரு தெய்வீகக் குரல் கேட்கலாம். கடவுளோடு பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அப்போது புரிந்துகொள்ளுங்கள்.

கடவுளோடு பேசவேண்டுமென்றால் நிற்காத, எதாலும் தடுக்க முடியாத ஆசை வேண்டும். அப்படிப்பட்ட ஆசை இதுதான் என்று உங்களுக்கு யாரும் சொல்லித்தர முடியாது. அதை நீங்கள்தான் உருவாக்கி, வளர்த்துக்கொள்ளவேண்டும். இறைவன் பதில் சொல்வானா என்ற சந்தேகத்தை முதலில் உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும். நிறைய பேருக்கு இறைவனிடமிருந்து பதில் கிடைக்காமல் போவது இதனால்தான்.

தொடர்ந்து கஷ்டங்கள் வந்தாலும் நீங்கள் அசைந்துகொடுக்காமல் இருந்தீர்களென்றால் கடவுள் உங்களோடு பேசுவது உங்களுக்குக் கேட்கும்.