"

19

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நான் தொடர்ந்து பார்க்கும் ஒன்று. அது சீனியராக இருந்தாலும் சரி, ஜூனியராக இருந்தாலும் சரி. இனிமையான, கம்பீரமான குரலை எனக்கு இறைவன் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் ஒரு கஜல் பாடகனாகப் போயிருப்பேன். என் நண்பர்கள் என் குரலைப் பற்றி கிண்டலாக எழுதுகிறார்கள். எனக்கு லதா மங்கேஷ்கர் குரல் என்று! முஹம்மது ரஃபிக்கு லதா மங்கேஷ்கரின் குரல்! எத்தனை முரணுண்மை! போகட்டும், Accept the inevitable. என் குருநாதர் சொன்னது. நான் ஏற்றுக்கொண்டது. நல்ல குரல் வளத்துடன் நன்றாகப் பாடுபவர்கள் என் ஆன்மாவின் பசிக்குத் தீனி போடுகிறார்களோ என்னவோ! எப்படி யோசித்தாலும் செவி வழியாக ஆன்மாவை நேரடியாக ஊடுறுகின்ற அனுபவத்தைத் தருவது இசையைத் தவிர வேறு எது? எல்லாப் புகழும் இசை மேதையான இறைவனுக்குத்தான்!

இப்போது ஜூனியரில் பாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் சிலர். குறி0ப்பாக  பெண்குழந்தைகள். ப்ரகதி, சுகன்யா, அனு, யாழினி, அஞ்சனா, செஃபி இப்படி. இதில் முதல் இரண்டு குழந்தைகளும் மற்றவர்களைவிட வயதில் கொஞ்சம்கூடியவர்கள். குறிப்பாக ப்ரகதியும் சுகன்யாவும். இருவரும் பிரம்மாதமாகப் பாடுகிறார்கள். ஆனால் முதலாமவர் ஒரு சில பாடல்களில் improvise செய்ய நினைத்து அளவுக்கு அதிகமாகச் செய்து சொதப்பிவிட்டார். சுகன்யாவிடம் அந்தப் பிரச்சனை இல்லை. மிகச்சரியாகப் பாடுகிறார். அவருடைய எளிமையின் காரணமாகவோ என்னவோ அவர்தான் ஃபைனல்ஸில் பாட முதல் ஆளாகத் தேர்வானார்.

எனினும், இரண்டு சின்னப் பையன்கள் இருக்கிறார்கள். ஒருவர் கௌதம். 13 வயதிருக்கும். இன்னொருவர் ஆஜித் 11 வயதுதான் இருக்கும். இந்த சீசனில் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு பாடல்களை இவர்கள் கொடுத்துள்ளனர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கர்ணன் படத்தில் வரும் ”உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடலை கௌதம் பாடி முடித்தவுடன் எல்லா நீதிபதிகளும், வீணை வித்வான், கடம் வாசித்தவர் இப்படி அனைவருமே எழுந்து நின்று, எழுந்து வந்து அவனைக் கட்டியணைத்து, உச்சி முகர்ந்து அழுதுவிட்டனர். என்ன செய்துவிட்டோம் என்றே புரியாத ஒரு தருணமாக கௌதமுக்கு அது இருந்திருக்க வேண்டும். அவனும் அழுதுவிட்டான். எல்லாருடைய ஆன்மாக்களையும் சந்தோஷப்படுத்தி விழிகளை மட்டும் நனைத்த அந்தப் பாடலை யாரும் மறக்கவே முடியாது. இதுவரை நீங்கள் அதைக் கேட்டிருக்காவிட்டால் இதோ இப்போது கேளுங்கள்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u9oWm7E9-8c

கௌதம் செய்தது வரலாறு படைத்த அழுகை என்றால் அவனை விடச் சின்னப்பையனான ஆஜித் செய்தது ஒரு அற்புதமான அசத்தல் என்று சொல்ல வேண்டும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ”ஆரோமலே” (அது என்ன தமிழா மலையாளமா?) என்ற பாடலை அவன் பாடிய விதம் இருக்கிறதே! அது ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு perfect pitching. அதுமட்டுமல்ல, இதே பாட்டை சீனியராக சீனிவாஸ் பாடும்போதுகூட உச்சஸ்தாயிக்குச் சென்றபோதெல்லாம் கழுத்து நரம்புகள் புடைக்கக் கஷ்டப்பட்டார். ஆனால் ஆஜித்? ம்ஹும். இதுசும்மா ஜுஜுபி என்பதுபோலப் பாடினான். அவ்வளவு அனாயாசம். அவ்வளவு இனிமை. குரலில் அப்படி ஒரு கந்தர்வம். என்ன பாவம்! இவ்வளவு சின்ன வயதில் இப்படிக்கூடப் பாட   முடியுமா? என்னால் இன்னும் நம்பமுடியவில்லை.

அவன் பாடி முடித்ததும் எல்லாரும் எழுந்து நின்று, ஓடி வந்து, அவனைத் தூக்கி, முத்தமிட்டு..ஆஹா கண்கொள்ளாக் காட்சி. இதில் விஷேஷம் என்னவென்றால் அவன் பாடலின் இறுதிக்கட்டத்திற்கு வந்தபோதே பொறுமை இழந்த ஒரு நீதிபதியான புஷ்பவனம் குப்புசாமி ஓடிவந்து அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். அதையும் வாங்கிக் கொண்டு அவன் கொஞ்சம்கூட அசராமல் தொடர்ந்து பாடி முடித்தான்!

நீதிபதி விஜய் ப்ரகாஷ் மற்றும் குரல் பயிற்சியாளர் அனந்த்வைத்யநாதன் சொன்னதுபோல ஒரு பெரிய இசை மேதையின் ஆத்மா அவனுக்குள் புகுந்துகொண்டு பாடியது போலத்தான் இருந்தது. Unbelievable and historic musical performance of a child prodigy.

இதோடு சூப்பர் சிங்கர் ஜூனியரை நிறுத்திவிட்டு ஆஜித்துக்கு அந்த 60 லட்ச ரூபாய் வீட்டை பரிசாகக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். ஆஜித் பாடியதைக் கேட்க நீங்கள் தவறி இருந்தால் இதோ கேட்டுவிட்டு எனக்கு சொல்லுங்கள்.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=u9oWm7E9-8c