"

5

தமிழகத்து தர்காக்களைப் பார்த்து வருவோம்
தூய வழி காட்டச் சொல்லிக் கேட்டு வருவோம்
இறைவணக்கம் புரிபவர்க்கு எளிதில் நடக்கும்
இரசூல்நபி நாயகத்தின் ஆசி கிடைக்கும்

காயல் ஏ ஆர் ஷேக் முஹம்மது பாடிய இந்தப் பாடலைக் கேட்காத தமிழ் செவிகள் கிடையாது என்றே சொல்லி விடலாம். (தர்கா ஜியாரத் செய்பவர்களைக் ”கப்ர் வணங்கிகள்” என்று குறை கூறும் மூளைச்சலவை செய்யப்பட்ட சகோதரர்கள் பாடலின் மூன்றாவது வரியைக் கவனிக்கவும்).

இந்தப் பாடலை எழுதியவர் ஆயிரக்கணக்கான கவிதைகளையும், இசைப்பாடல்களையும் எழுதிய நாடறிந்த ஒரு கவிஞர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். நாகூர் ஹனிபா-விலிருந்து நூற்றுக் கணக்கான முஸ்லிம் பாடகர்களுக்கு இசைபட வாழ வழி வகுத்துக் கொடுத்த கவிஞர் இவர். அவர்தான் நாகூர் சலீம்.

அவரோடு நாகூரில் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கவிஞராகிய உருவாகிய காலத்தில் எழுதிய சில கவிதைகளை தன் ஞாபகத்திலிருந்து அப்போது அவர் சொல்லிச் சென்றார். அவை இதுவரை வெளியிடப்படாதவை. அவைகள் மட்டுமென்ன, ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய இந்தக் கவிஞரின் கவிதைகள் ஒட்டு மொத்தமாக இதுவரை புத்தகமாக வெளியிடப்படவில்லை என்பது அவருக்கு சமுதாயத்துக்கும் இழப்புதான். (ஒரே ஒரு புத்தகம் வந்தது. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே இது தெரியும்!).

கவிஞர் என்னிடம் தன் நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துக் கொடுத்த கவிதைகள் யாவும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட வரிகள். இன்னும் பசுமையாக அவர் மனதில் இருக்கின்றன! இது ஒரு முக்கியமான விஷயம். நமக்கு ஒரு விஷயம் மறந்து போவதற்கு உளவியல்வாதிகள் சொல்லும் காரணம், நாம் மறந்து போக விரும்புகிறோம் என்பதுதான்! அதேபோல, ஒரு விஷயம் நமக்கு நினைவில் இருப்பதற்குக் காரணம் அதன் மீது நாம் கொண்ட பிரியம், காதல்தான். ஒரு காதலியின் பெயரை மறந்துபோன ஒரு காதலனை மனிதகுல வரலாறு கண்டிருக்கிறதா?

கவிஞர் சலீம் அவர்களும் கவிதையக் காதலித்தவர். காதலிக்கிறவர். மணந்து கொண்டவர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் எல்லாத் திருமண வாழ்க்கையும் இனிப்பாகவே இறுதிவரை அமைந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது கசப்பாக மாறுவதைப் பற்றிய பல ஹாஸ்யங்களை நாம் அறிவோம். A man is incomplete before marriage. After marriage, he is finished என்று ஒன்று உண்டு! (எவ்வளவு உண்மை! ஆனால் இதையேதான் மனைவிகளும் கூறுகின்றனர்!) எனவே, கவிஞர் கவிதையைக் காதலிப்பவர் என்று சொல்வதே சாலப்பொருத்தம். ஏனெனில் காதல் நினைவுகள் எப்போதுமே இனிப்பானவை (அப்படித்தானே?)!

சலீம் அவர்களின் பரம்பரை பல கவிஞர்களையும், பெரு வணிகர்களையும், ஆன்மீக வாதிகளையும் கொண்டது. நான்கு இஸ்லாமிய காப்பியங்களை இயற்றிய வண்ணக்களஞ்சியப் புலவரும், டெல்லியில் அடக்கமாகியிருக்கும் மகான்கள் சலீம் சிஷ்தி, ஷாஹ் வலியுல்லாஹ், ஏர்வாடி இப்ராஹீம் ஷாஹ் வலியுல்லாஹ், பாண்டிய மன்னரிடம் தளபதியாகப் பணிபுரிந்த வஸீர் அப்பாஸ் போன்றோரும் கவிஞர் சலீமுக்கு பாட்டனார் முறையில் இருப்பவர்கள். நேரடிப்பாட்டனாராக அல்ல. வம்சா வழியாக. அவர்கள்தான் முன்னோர்கள். தமிழில் முதன் முதலாக நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணியான சித்தி ஜுனைதா பேகம் இவருடைய மூத்த சகோதரி. மகான் சலீம் சிஷ்தியின் நினைவாகத்தான் இவருக்கு த’அலீஃப் சலீம் பெய்க் என்று பெயர் வைக்கப்பட்டது. ”பதிவுகளிலெல்லாம்கூட இப்படித்தான் உள்ளது” என்றும் அவர் என்னிடம் கூறினார்.

கவிஞர்கள் பிறப்பதில்லை. உருவாகிறார்கள் என்ற வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒருவர் பிறப்பிலேயே கவிஞராக இருக்கிறார் என்று சொன்னால் கவிதை மீதான காதலும், கவிதை இயற்றுவதற்காக திறமையும் அவருடைய டி.என்.ஏ.-விலேயே இருக்கிறது என்று பொருள். ஏன் எல்லா மனிதர்களும் கவிஞர்களாக உருவாவதில்லை என்ற கேள்விக்கான பதிலைச் சிந்தித்தால் இந்த உண்மை நமக்குப் புரியும். யாருடைய டி.என்.ஏ.-யில் (அதாவது விதிவசப்பட்டோலை எனப்படும்  லஹ்ஹுல் மஹ்ஃபூலில்) கவிதை இருக்கிறதோ அவர்தான் ஒரு சிறந்த கவிஞராக தன்னை உருவாக்கிக்கொள்ளவோ, அப்படி உருவாக்கிக் கொண்ட பிறகு, பிறப்பால் கவிஞர்கள் யாருமில்லை என்று வாதிடவோ முடியும்! அந்த வகையில் பார்த்தால்

சலீம் ஒரு பிறவிக் கவிஞர்

அவருடைய பாட்டனார் வண்ணக் களஞ்சியப் புலவர் நான்கு காப்பியங்களை இயற்றியவர். சகோதரர் முனவ்வர் பெய்க் அவர்கள் பன்மொழி வித்தகர். சகோதர் முஜீன் பெய்க் பால்யன் என்ற பத்திரிக்கையை காரைக்காலில் பல ஆண்டுகள் நடத்தியவர். சகோதரி சித்தி ஜுனைதா பேகம் முதன் முதலில் தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண். இன்னொரு சகோதரர் (தம்பி முறை) தூயவன் சிறுகதைகள் எழுதியவர், பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தவர். பல திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். சகோதரர் முராது பெய்க் ஒரு சிறந்த பேச்சாளர். எனவே கவிஞர் சலீமுக்குக் கவிதை பரம்பரைச் சொத்தாக அமைந்துவிட்டது.

பள்ளிப் படிப்பு கவிஞருக்கு அவ்வளவாக இல்லை. பள்ளிப் படிப்புக்கும், பட்டப் படிப்புக்கும் ஒருவர் கவிஞராக வளர்ச்சி அடைவதற்கும் தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இலக்கியம் படித்தால் நிச்சயமாக அது இலக்கியத் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும்தான். ஆனால் நம்முடையை மகா கவிகள் கம்பனோ, திருவள்ளுவரோ, அல்லது பாரதியோகூட பெரிய படிப்பு படித்தவர்களல்ல. ஆனால் இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. உதாரணமாக முதன் முதலாக ஆங்கிலத்தில் காப்பியம் இயற்றிய ஜான் மில்டன் எம்.ஏ. ஆங்கிலம் படித்தவர். எனவே கவிஞர் சலீமுக்கு பள்ளிப்படிப்பு பெரிதாக ஒன்றுமில்லை என்பது அவருக்கு சிறப்பு சேர்க்கும் இன்னொரு தகவலாக மட்டும் இருக்கிறது. ’ஒன்னாவது’ வகுப்பு படிக்கும்போதே, ஐந்து ஆறு வயதிலேயே, அவர் கவிதை எழுத ஆரம்பித்திருந்தார்.

வண்டி நல்ல வண்டி
இது ஒத்த மாட்டு வண்டி
மண்டி போட்டு நிண்டு கிட்டு
மானம் போக்கும் மாட்டு வண்டி

அஞ்சு மனாரா தோனுதே
அலங்கார வாசல் காணுதே

என்று பள்ளிப் பருவத்திலேயே எழுதியிருக்கிறார். இந்த வரிகளைக் கேட்ட அவருடைய சகோதரர் பன்மொழி அறிஞர் முனவ்வர் பெய்க் அவர்கள், ”அடடே, வண்ணக்களஞ்சியப் புலவரோட பேரனல்லவா” என்று உற்சாகப்படுத்தும் விதத்தில் ஏதோ சொன்னாராம். ”கவிதை என் மண்டைக்குள் ஏறி இருந்ததனால் படிப்பு ஏறவில்லை. எட்டாவது வரை போனேன் என்று நினைக்கிறேன். அந்தோனியார் பள்ளியில். ஆனால் பல பள்ளிகள் நான் மாறியிருந்தேன். பாட்டு, நாடகம் என்று அலைந்தேன்” என்று கூறினார்.

”வண்ணக்களஞ்சியப் புலவரின் ஞாபகமாகத்தான் நான் ஆரம்பத்தில் வண்ணதாசன் என்று புனை பெயர் வைத்துக் கொண்டேன். மறைதாசன், பயணப் பிரியா, லீசம் (சலீம் என்பதன் உல்டா) என்ற பல பெயர்களில் எழுதினேன். வண்ணக் களஞ்சியப் புலவர் இங்கு வந்து பொறையாரில் திருமணம் செய்த விபரங்களெல்லாம் லண்டனில் உள்ள ஷரீஃபா மச்சி வீட்டில் இருந்தது. அந்த நூலை என்னிடம் கொடுத்துவிட்டதாக மச்சி சொல்லிவிட்டது. ஷாஹ் வலியுல்லாஹ் நமக்கு எப்படி சொந்தம் என்ற விபரமெல்லாம் ஆச்சிமா (சித்தி ஜுனைதா பேகம்) வீட்டில் இருந்தது. ஆனால் முஜீன்மாமா அதைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்” என்று தன் பாரம்பரியம் தொடர்பான ஆவணத் தகவல்கள் தன் கைவிட்டுப் போனது பற்றி என்னிடம் கூறினார்.

குழந்தைகள் இன்றி, விதவையாக இருந்த கதீஜா நாச்சியாரை, முதல் மனைவியை இழந்திருந்த ஷரீஃப் பெய்க் மணந்து கொண்டார். இருவருக்கும் பிறந்தவர்தான் சலீம். அந்தக் காலத்தில் மனிதர்கள் மனித நேயம் மட்டுமே மிக்கவர்களாக வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு சலீம் அவர்களின் குடுபத்திலும் நல்ல உதாரணம் உண்டு. சலீம் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தது நான்கு பெண்கள். ”மீனாட்சி, குப்பம்மாள், நம்பிக்கை என்ற ஆதிதிராவிடப் பெண், இதல்லாமல் ஜுனைதா ஆச்சியும் (சித்தி ஜுனைதா பேகம்) எனக்குப் பால் கொடுத்துள்ளது. அந்த வகையில் என் சகோதரி எனக்குத் தாய் மாதிரி” என்று அவர் என்னிடம் கூறினார். (எனக்குப் பால் கொடுத்ததுகூட லட்சுமி என்ற ஒரு மீனவத்தாய்தான். அதனால்தான் மீன் எனக்கு உவப்பான உணவாக உள்ளதோ?!).

அந்தக் காலத்தில் தாய்மார்கள் பெற்ற குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று சமூக ரீதியான காரணம், இன்னொன்று உடல் ரீதியான காரணம். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் பெற்ற பிள்ளைக்குத் தாயே பால் கொடுக்கும் பழக்கமோ வழக்கமோ இல்லை. அதற்காக நியமிக்கப்படும் பெண்கள்தான் கொடுத்தார்கள். இறுதித்தூதருக்கு அந்த வகையில் பால் கொடுத்த தாயார் ஹலீமா அவர்கள். நமது நாட்டில் பெற்ற குழந்தைக்குத் தாய்தான் பால் கொடுத்து வந்தாள். அப்படிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில், உடல் ரீதியான காரணங்களுக்காக அந்த வேலைக்கு மற்ற பெண்கள் நியமிக்கப்பட்டனர். அப்படித்தான் கவிஞர் சலீமுக்கு நான்கு பெண்களும், எனக்கு ஒருவரும் அமைந்தனர். இந்தக் காலத்தில் இருப்பதுபோல, தாய்ப்பால் கொடுத்தால் உடல் அழகு கெட்டு விடும் என்ற கற்பனையின் அடிப்படையில்  கொடுக்காமல் இருப்பதைப் போல அந்தக் காலத்தில் செய்யவில்லை.

சலீம் அவர்களின் கவிதா வாழ்வு நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்தி வளர்த்திக் கொண்டிருக்கிறது. சினிமாவோ டிவியோ இல்லாத அந்தக் காலத்தில் நாடகங்களே மனிதனுக்கு எளிதான, எல்லா ஊர்களிலும் கிடைத்த எண்டர்டைன்மெண்ட். அப்படி நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பல ஊர்களிலும் நடந்த பல நாடகங்களுக்கு சலீம் அவர்கள் பாடலும் வசனமும்கூட எழுதியுள்ளார். சலீம் அவர்களின் பாடல்களில் மரபின் நறுமணம் நன்றாகவே கமழ்கிறது. சில்லடி என்று அழைக்கப்படும், நாகூர் மகான் ஷாஹுல் ஹமீது அவர்கள் தவம் செய்த கடற்கரைப் பகுதி பற்றி சலீம் அவர்களின் பாடல் வரிகள் (அவர் நினைவிலிருந்து சொன்னவை):

நாற்பது நாள் தூர் சினாய் மலையின் மீது
நபி மூஸா தவமிருக்க
மலையின் கற்கள்
ஏற்புடைய சுர்மாவாம் கண் மையாகி
எழில் கண்கள் ஒளிபெறவே
இறைவன் செய்தான்

காற்றொலிக்கும் கடற்கரையின்
மண் மேட்டினில்
காதிரொலி நாற்பது நாள்
தவம் செய்ததால்
ஏற்கும் இம் மண் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
எந் நோய்க்கும் மருந்துண்டு
ஏன் கவலை?

தன்னுடைய ஆரம்பகால கவிதா வாழ்வு பற்றி அவர் சொன்னவை:

”இதுவரை 6500-க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளேன். நிறைய நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளேன், கதை, வசனம், பாடல்கள் எழுதி நானே இயக்கியும் உள்ளேன்.  நாகை பேபி தியேட்டரில் ‘விதவைக் கண்ணீர்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதற்கு எல்லாம் நான்தான். அதில் ’ரோஜா மலரே ராஜகுமாரி’ பாடல் புகழ் ஆதித்தனும் ஸ்ரீலதா என்று ஒரு நடிகையும் நடித்தனர். மேக்-அப் மென் எல்லாம் ஜெமினி ஸ்டூடியோவிலிருந்து வந்தார்கள்.  ’ஹவுஸ்ஃபுல்’ ஆகி ஒரு ரூபாய் டிக்கட் பத்து ரூபாய்க்கு விற்றது. ஃபரீது மாமாதான் தயாரிப்பாளர்.

”நாகூரில் ’சந்தர்ப்பம்’ என்று ஒரு நாடகம் போட்டோம். அதில் “திருக்குரானே ஓடிப்போய் முஹம்மது நபியின் நெஞ்சில் ஒளிந்து கொள்” என்று ஒரு வசனம் வரும். அதனால் பெரிய கலாட்டா ஆனது. ’சோக்காளி’, ’மிஸ்டர் 1960’ என்றெல்லாம் பல நாடகங்களை நாகை, நாகூர், திருவாரூர், திருமருகல் போன்ற ஊர்களில் போட்டுள்ளோம்.

”சென்னையில், நடிகர் கே கண்ணன் தயாரித்த ’ஆனந்த பைரவி’ என்ற நாடகத்துக்கு நானும் ஆபிதீன் காக்காவும் பாடல்கள் எழுதினோம். கதை, வசனம்  ’மஹாதேவி’ புகழ் ரவீந்தர்”. அதில் சில வரிகள்:

எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்
என் சொந்தக் கதையை எழுதிப் பூர்த்தியாகு  முன்னே
எந்தக் கதையைச் சொல்லிப் பாடுவேன்.

’என் தங்கை’ நடராசனின் நாடகத்துக்காக எழுதிய பாடலின் சில வரிகள்:

நினைவினிலே கலந்து
கனவினிலே தோன்றி
நிலைபெறும் காதலின்
ராணி எங்கே?
அணையா ஒளி வீசும்
நிலவே நீ கூறு
அடையாளம்  சொல்கிறேன்
நானும் இங்கே

மங்கையின் மணி மொழிகள் தேனாகும்
அவள் மலர் விழிகள்  அசையும் மீனாகும்
தங்க உடல் மாலை வானாகும்
அவள் துணை வரும் தனிச் சொந்தம் நானாகும்

வண்ணமோ புள்ளியில்லா மானாகும்
ஒளி வழியும் தொடை பளிங்குத் தூணாகும்
சின்ன இடை உடுக்கை தானாகும் — அது
தென்றல் பட்டால் ஒடிந்து வீணாகும்

’சன்னிதானம்’ என்ற நாடகம் நாகூரில் அரங்கேறியது. அதில் என் பாட்டை மேஜர் சுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார். கெட்டவனாகிப் போன ஒருவனை விரும்பும் ஒருத்தியும் அவனும் பாடும் பாடல்:

பட்டுவிட்ட மரக்கிளையில்
பச்சைக்கொடி படருவதோ
பாவி என்னை நிழல்போதே
பாவை நீ தொடருவதோ
உள்ளத்தில் நானிருந்தால் தள்ளிவிடு
இந்த உண்மையை உனக்கு நீயே சொல்லிவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறாய்
ஆகாது எனத் தெரிந்தும்
ஆசையினைத் தேடுகிறாய்
பழி பட்டுப் போனது என் பாதை — என்னை
வழிபடத் துடிக்கிறாய் பேதை

முன்னாளில் தவறு செய்து
பின்னாளில் திருந்தியவன்
என்றாலும் உலகத்தின் முன்
ஏளனத்தைப் பொருந்தியவன்

அவள்:

பட்ட மரம் சில சமயம்
பச்சை விட்டு வளர்வதுண்டு
பாவி என்று போனவனும்
பண்பு கொண்டு வருவதுண்டு
உள்ளத்தில் என் நினைவை
விதைத்துவிடு
இந்த உண்மையை உனக்கு நீயே
உணர்த்திவிடு

கூடாது போனவனின் கூடார நாடுகிறேன்
ஆகாது எனத் தெரிந்தும்
ஆசையினைத் தேடுகிறேன்
ஏனென்று புரிகிறது எனக்கு — நான்
என்னுயிரை இழந்துவிட்டேன் உனக்கு

==

வானம் கருத்ததடி
எழில் நிலவே நீ இன்றி நலிந்த என்
இதய வானம் கருத்ததடி

காணும் இடம் யாவும்
கார்மேகக் கூட்டம்
கண்கள் பெய்த மழை
கடலுக்கு வளமூட்டும்
மானே உன் நினைவால்
மூண்டது போராட்டம்

முடிந்தது என் வாழ்வு
மடிந்தது உயிரோட்டம்

வீணையைப் பறிகொடுத்த
பாடகி நிலையானாய்
கைப்பொருள் இழந்தவனும்
மெய்ப்பொருள் கலையானாய்

நானறியேன் கண்ணே
துயருக்கு விலையானாய்
மணந்துவிட்டேன் உன்னை
மனதில் ஏன்  நிலையானாய்

===

”ஏ கே வேலன் கம்பனின் இரண்டு வரிகளை வைத்து பொங்கல் வாழ்த்துப் பாட்டு எழுதச் சொன்னார். காவேரியில் குளிக்கும் ஒரு பெண் கூறுவதுபோல”. அந்த வரிகள்:

வெண் முத்து மாலைகள்
வெள்ளி நுரையினில்
சூடி வருகின்றாள்

இங்கே வேண்டிய பேருக்கு
வாரிக் கொடுத்திட
ஓடி வருகின்றாள்

இன்னொருத்தி:

கண்ணியர் கண்ணென
மாவடுப் பிஞ்சுகள்
நீரில் மிதக்குதடி

அது கண்ணல்ல பிஞ்சல்ல
கெண்டைகள் அம்மாடி
கும்மியடிங்கடி

==

”ஏகே வேலன் கொடுத்த பாடலுக்கான சூழல் ஒரு ரிக்ஷாக்காரன் மனைவி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிடுகிறாள். ஒரு குழந்தை எங்கோ போய் விடுகிறது. இன்னொரு குழந்தையை ரிக்ஷாவிலேயே ஊஞ்சல் கட்டி தகப்பன் சவாரி ஏற்றி வந்து கொண்டிருக்கிறான். அழும் குழந்தைக்குத் தாலாட்டு இது”:

நடக்குற உலகத்தைப் பார்த்துக்கோ
எது நடந்தாலும் அதை ஏத்துக்கோ

சுமக்கிறதெல்லாம் சுமந்துக்கோ — மனம்
சோர்ந்து விடாமல் நிமிர்ந்துக்கோ

அப்பாடி கொஞ்சம் தூங்கப்பா
இந்த அப்பா சொல்றதைக் கேளப்பா

மாணிக்க ஊஞ்சல் இல்லை
என்ற மனக்குறை போலும் உனக்கு

சாலையின் ஓரத்திலேதான்
நம்ம சமுதாயம் இன்னும் கிடக்கு

ஏழைகள் கொதிப்பது தீமை
நாம் ஏக்கத்தில் வாழும் ஊமை

அன்னை சுமந்தாள் உன்னை — இன்று
அவளோ இங்கே இல்லை

நம்மைச் சுமக்குது பூமி
இது ஏனோ விளங்கிடவில்லை

அவனுக்குத் தெரியும் அருத்தம்
எனக்கு அதுதான் கொஞ்சம் வருத்தம்

விட்டு விட்டு இழுக்குற மூச்சு
அது வெளி வந்து போனாலும் போச்சு

தட்டு கெட்டுப் பேசுற பேச்சு
பல தவறுக்குக் காரணமாச்சு

எலும்பால் அமைந்த தேகம் — இதற்கு
ஏன் தான் இத்தனை சோகம்

===

திருமறையின் அருள் மொழியில் என்று நாகூர் ஹனீஃபா அவர்கள் பாடிய சலீம் அவர்கள் எழுதிய பாடலின் மெட்டில் அவர் எழுதிய இன்னொரு பாடல்:

மாங்கனியில் வீடுகட்டி / வாழ்ந்திருப்பது என்ன? வண்டு

நம் மனதினிலே காலமெல்லாம் / குடியிருப்பது என்ன? அன்பு

கொம்பில் வளையாமல் / பழுத்த பழமென்ன? கன்னம்

அதைக் கொத்திக் கொண்டு செல்ல / சுற்றி வருவதென்ன? எண்ணம்

எண்ணம் பரிமாற / என்ன இங்கு வேண்டும்? தனிமை

நாம் தனிமையிலே கலந்தால் / என்ன அங்கு தோன்றும்? இனிமை

இனிமை காணும் போது / ஏற்பதுவது என்ன? புதுமை

அந்த புதுமை காணும் வழியைக் / காட்டி வைத்தால் என்ன? பொறுமை

ஆறு  புரண்டோடி / ஏறுவது எங்கே? கடலில்

எழும் ஆசை புரண்டோடி / மோதுவது எங்கே ? உடலில்

மோதியதும் உடம்பில் / மூளுவது என்ன? நெருப்பு

அந்த நெருப்பணைந்து தேகம் / தணியும் மார்க்கமென்ன?

இணைப்பு, வாழ்க்கை இணைப்பு.

===

எம்ஜியார் பற்றி முதன் முதலில் பாட்டு எழுதியவர் நாகூர் சலீம்தான். அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்:

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி..
எங்கள் வீட்டுப்  பிள்ளை / ஏழைகளின் தோழன்…
மின்னுகின்ற பொன்னைப் போன்ற / நிறத்தைப் பெற்றவர்
மூடி வைக்கத் தெரியாத / கரத்தைப் பெற்றவர்
எண்ணுகின்ற எண்ணத்திலும் / அறத்தைப் பெற்றவர்
எல்லோரும் போற்றுகின்ற / தரத்தைப் பெற்றவர்
தன்னலம் கருதாத / மனத்தைப் பெற்றவர்
திராவிடம் என்னும் ஒரு இனத்தைப் பெற்றவர்
உண்மையில் வழுவாத / நடத்தை பெற்றவர்
ஒவ்வொருவர் உள்ளத்திலும் / இடத்தைப் பெற்றவர்

அதற்காக எம்ஜியார் பாராட்டி கவிஞருக்கு 10,000 ரூபாய் கொடுத்ததாகவும் அது தன்னிடம் வந்து சேரவில்லை என்றும் அது பாடலைப் பாடியவருக்கே (நாகூர் ஹனிஃபா) சென்றது என்றும் கூறினார்.

அறிஞர் அண்ணா இறந்த பிறகு அவரைப் பற்றிய பலர் பாடல் இயற்றி, அவற்றைப் பிரபலமான பல பாடகர்கள் பாடினர். அவற்றில் கவிஞர்  சலீம் இயற்றி நாகூர் ஹனிஃபா பாடிய பாடல்கள் மிகச் சிறந்தவை என்று நான் சொல்வேன். அவற்றிலிருந்து சில வரிகள்:

பாடல் 1: பட்டு மணல் தொட்டிலிலே.. / பூ மணக்கும் தென்றலிலே
கொட்டும் பனி குளிரினிலே / கடல் வெளிக் கரையினிலே

==

பாடல் 2: சிரித்துச் செழித்த உன் முகம் எங்கே / சிந்திய செந்தமிழ் மொழி எங்கே

சிரித்தது போதுமென்று நிறுத்திக் கொண்டாயோ / சிந்திக்கும் இடம் தேடித் தனித்துச் சென்றாயோ

ஆசை விளக்குகளை அணைத்தாயோ / எங்கள் அண்ணா உன் தம்பிகளைப் பிரிந்தாயோ

நேசக்கரம் விரித்து நெஞ்சில் எமை அணைத்த / நாட்களை  ஏன் தான் மறந்தாயோ

ஆளும்  திறமை அன்புக்  கலைஞருக்கு / இருப்பதை நீ  அறிந்ததனால்

ஓய்வு எடுத்தாயோ

==

அண்ணா, எம்ஜியார் ஆகியோரைப் புகழ்ந்தும், காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்தும் — ”ச்சீ ச்சீ கீழே இறங்கு / மக்கள் குரலுக்கு இணங்கு / ஆண்டது போதும் / மக்கள் மாண்டது போதும்/ நாட்டைக் கெடுத்தது போதும் / கொள்ளை அடித்தது போதும்” — கவிஞர் சலீம் பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் அதனால் அவர் திமுக ஆதரவாளர் என்றோ, காமராஜரை வெறுத்தவர் என்றோ முடிவுக்கு வந்துவிட முடியாது. எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தன்னால் பாடல்கள் எழுத முடியும் என்பதை தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ளும் வாய்ப்பாகத்தான் அவற்றை அவர் கருதியிருக்கிறார். அப்பாடல்களிலிருந்து அவருடைய அரசியல் சார்பு பற்றி என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அது பற்றி நான் அவரிடம் கேட்கவும் இல்லை.

ஆனால் நாடகம், அரசியல் ஆகிய துறைகளில் அவர் எழுதிய கவிதைகள் அவருக்குப் புகழையும் பெயரையும் கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆன்மிகப் பாடல்கள்தான் அவரை நாடறிய வைத்தன. வலியுல்லாஹ்க்களைப் பற்றி அவர் எழுதிய பாடல்களும், அவர் எழுதிய மற்ற இஸ்லாமியப் பக்திப் பாடல்களும்தான் அவருக்கு ஒரு ஸ்திரமான இடத்தைப் பெற்றுத் தந்தன என்று சொன்னால் அது மிகையில்லை. குறைந்தது நூறு இஸ்லாமியப் பாடகர்களையாவது அவர் தனது பாடல்களால் உருவாக்கி இருக்கிறார். இதில் முதலில் குறிப்பிட வேண்டியவர் நாகூர் ஈ எம் ஹனிபா அவர்கள். நாகூர் ஹனிபா அவர்கள் தீவிரமான திமுக ஆதரவாளர். நாடறிந்த பாடகர். ஆனால் அவருடைய ஆரம்ப காலப் பாடல்களில் மிக மிகச் சிறப்பான பாடல்களை எழுதியது நாகூர் சலீம் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. நாகூர் ஹனிபாவுக்கு சலீம் எழுதிய பாடல்களின் முதல் வரிகளில் சில:

1. வாழ வாழ நல்ல வழிகளுண்டு
2. தீனோரே நியாயமா மாறலாமா
3. திருமறையின் அருள் மொழியில் விளைந்திருப்பது என்ன
4. ஓ வெண்ணிலா, அன்பான நபிகள் நாதர் எங்கே
5. அன்பு மார்க்கம் தந்த எங்கள் அஹ்மதே யா முஸ்தஃபா
6. இன்று வந்து நாளை போகும் நிலையிலே
7. அருள் மணக்குது, அறம் மணக்குது அரபு நாட்டிலே
8. உம் வாசல் தேடி வந்தோம் ஷாஹே மீரானே
9. அந்த நாளிலே மக்கா நகரம் இருந்ததைக் கேளுங்கள்
10. உயிரிருக்கும்வரை உமை மறவேனே
11. இணையில்லாத அருளின் உருவே, ஹிந்து முஸ்லிம் போற்றும் குருவே

இதில் 3, 7, 9 ஆகிய எண்களில் உள்ள பாடல்கள் இஸ்லாமிய வரலாற்றை மரபுக் கவிதையில் வடித்துக் கொடுப்பவையாகும். (கூடிய விரைவில் இந்த பாடல்களை mp3 கோப்புகளாக மாற்றி இணையத்தில் ஏற்றி வைக்க எண்ணம், இன்ஷா அல்லாஹ்).

சலீம் அவர்கள் திரைப்படத் துறையில் பாடல்கள் எழுத எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதுவரை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சத்யராஜ் நடித்த மகா நடிகன் என்ற படத்தில் ”கோடம் பாக்கம் ஒன்னு கோட்டைக்குத்தான் போகுதடி” என்ற பாடல் எழுதினார். இறையன்பன் குத்தூஸ் என்பவர் பாடியது. ஆனால் நிறைய  ஒலி நாடாக்களும், குறுந்தகடுகளும், ஆல்பங்களும் வெளிவந்துள்ளன. புகழ் பெற்ற மொகலே ஆஸம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்-கிற்கு அப்படத்தின் நான்கு புகழ்பெற்ற பாடல்களுக்கு, அதே மெட்டில் தமிழில்  பாடல்கள் எழுதியுள்ளார். அதனை இங்கே காணலாம். இது தவிர, நாகூரார் மகிமை என்ற திரைப்படத்துக்கான கதை,வசனம், பாடல்களையும் எழுதினார். ஆனால் படத்தயாரிப்பு சில காரணங்களால் நின்று போனது. அதற்காக அவர் எழுதிய பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் போன்றோர் பாடினர். விரைவில் அப்பாடல்களையும் வலையேற்றுகிறேன்.

சலீம் அவர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு

தந்தை : ஷரீப் பெய்க்

தாயார் : கதீஜா நாச்சியார்

பிறப்பு — 21.02.36 நெல்லுக்கடைத் தெரு, நாகூர்

2000 — கலைமாமணி விருது

பின் குறிப்பு: கவிஞர் சலீம் அவர்கள் எனக்கும் தாய் மாமா ஆவார்.