"

“நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற இடத்துக்கே நீயும் போயிடணுமா?”

கண்களில் பெருகிய நீரை அடக்கப் பாடுபட்டாள் சாந்தி. கண்ணீரைப் பார்த்தால், `இப்போ என்ன சொல்லிட்டேன், இப்படி மாய்மாலம் பண்ணறே?’ என்று அதற்கும் திட்டுவாள் பாட்டி.

“ராமுவுக்கு பெரிய கிளாசில மைலோ குடுத்துட்டு, நீ சின்னதை எடுத்துக்கன்னு சொல்லல?” வசவு தொடர்ந்தது.

அது ஏன் தான் எது செய்தாலும், பாட்டிக்கு அது தப்பாகவே தெரிகிறது? அந்த குழந்தைக்குப் புரியத்தானில்லை.

பரிதாபகரமாக விழித்தாள். “அண்ணன்தான் சின்னதை எடுத்துக்..,” ஈனஸ்வரத்தில் அவள் முடிப்பதற்குள் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.

கன்னத்தைத் தடவியபடி, ராமுவைத் தேடி வந்தாள் சாந்தி.

பெருமையாக நின்றிருந்தான் பையன். பாட்டியின் தொணதொணப்புக்கு, அவனுடைய ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்த பாட்டியின் `அன்பு’க்கு அவன் மட்டும்தான் பாத்திரமானவன்!

“அம்மா எங்கே போயிட்டாங்கண்ணே?”

அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். “தம்பிப்பாப்பா செத்துப் போச்சில்ல? அன்னிக்கும் அப்பா குடிச்சுட்டு வந்தாரா..!” என்று தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்க ஆரம்பித்தான்.

கைக்குழந்தையைத் தன் மார்புடன் அணைத்து, பாலூட்டியபடி அமர்ந்திருந்த மனைவியின் பரவசத் தோற்றம் ஆத்திரத்தைத் தூண்டிவிட, “இந்தப் பிள்ளைமேல அப்படி என்னாடி ஆசை ஒனக்கு? நானும் பாக்கறேன், வர வர, நீ என்னைக் கவனிக்கிறதுகூட இல்லே!” என்று கத்த ஆரம்பித்தான் ரத்னம்.

இன்று என்ன, அடியா, உதையா, இல்லை பெல்டால் விளாசப்போகிறாரா என்று பயம் எழ, குழந்தையை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள் அவள்.

“அந்தச் சனியனைக் கீழே போடு, சொல்றேன்! புருஷன் இல்லாம, பிள்ளை மட்டும் எப்படி வந்திச்சாம்?” என்று கொச்சையாகத் திட்டியபடி, ஓங்கிய கரத்துடன் அவன் அவளை நெருங்கவும், அவசரமாக எழுந்தவளின் கால் அவிழ்ந்த கைலியில் தடுக்க, அதே தருணம் குறி தப்பாது ரத்னம் விட்ட அறை அவள் கன்னத்தைத் தாக்கியது. நிலைகுலைந்து போனவளாக, குழந்தையைக் கைதவற விட்டாள்.

அந்த மகவின் தலையில்தான் அடிபட்டதோ, இல்லை, பால் குடித்துக்கொண்டிருந்தபோதே தாயின் இறுகிய அணைப்பில் மூச்சு முட்டிப் போயிற்றோ, குழந்தையை மீண்டும் கையிலெடுத்தபோதுதான் உணர்ந்தாள் — இனி அதற்குப் பாலூட்ட வேண்டிய அவசியமே இருக்காதென்று. அலறவோ, அழவோ இயலாதவளாய், பிரமையாக நின்றாள்.

“சரோ..!” தன் செய்கையின் பாதகமான விளைவைப் புரிந்துகொண்டு, அந்த அதிர்ச்சியே அவனை நடைமுறைக்கு மீட்டுவர, குழைவுடன் அழைத்தபடி, மனைவியை நெருங்கினான் ரத்னம்.

“இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சீங்க, இன்னொரு கொலை விழும் இந்த இடத்திலே!” அவளுடைய ஆங்காரமான குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது. பயந்து பின்வாங்கியவன், அவசரமாக வெளியே போனான் — இன்னும் குடித்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள.

`தம்பிப்பாப்பா இனிமே பெரியவனா ஆகவே மாட்டானா! அவனோட விளையாட முடியாது?’ என்ற சிறியதொரு ஏமாற்றம் எழுந்தது, எப்போதும் தாயின் அருகில் அமர்ந்து, அம்மா பாப்பாவுக்குப் பாலுட்டுவதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சாந்திக்கு. ஆனாலும், `முன்போல், அம்மாவின் முழுக்கவனமும் இனி தன்மேல் திரும்பும்” என்ற எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி பிறந்தது.

தானும் மெல்ல எழுந்து, தாயின் கையைப்பற்றி இழுத்தாள். அவளோ, சுற்றுப்புறத்தையே மறந்தவளாக, வெறிப்பார்வையுடன் நின்றாள்.

“ரத்னம்! இவளை வெச்சுக்கிட்டு என்னால இனியும் சமாளிக்க முடியாது. அவ கண்ணைப் பாரு! எந்த நேரம் நம்பளை என்ன செய்துடுவாளோன்னு பயமா இருக்கு எனக்கு! இந்த அழுகையும், அலறலும்! பத்தாத குறைக்கு, பாக்கறவங்ககிட்டே எல்லாம், `நான் கொலைகாரி! என் பிள்ளையை நான் கொன்னுட்டேன்!’னு வேற பேத்தல்!” என்ற பாட்டியின் பேச்சைக் கேட்டுத்தான் அப்பா அம்மாவை எங்கோ கொண்டுபோய் விட்டிருக்க வேண்டும்.

இப்போது அம்மாவின் முகம்கூட சரியாக நினைவில்லை சாந்திக்கு. ஆனால், தன் பருத்த வயிற்றின்மேல் அவளுடைய பிஞ்சுக்கரத்தை வைத்து, `பாப்பா எப்படி குதிக்குது, பாரு!’ என்று சிரித்ததும், `அப்பா கோபமா வர்றாரு போலயிருக்கு கண்ணை மூடிட்டு, தூங்கறமாதிரி படுத்துக்க!’ என்று அவளைப் பாதுகாத்ததும், மறக்கக்கூடிய நினைவுகளா!

பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்த புதியவளைப் பார்த்து, “அம்மாவா?” ரகசியக்குரலில் அண்ணனிடம் கேட்டாள் சாந்தி.

“அவங்க அக்கா. நம்ப பெரியம்மா. அமெரிக்காவில இருக்காங்களாம்!”

அதற்குள் சிறுமியைக் கவனித்தவள், “சாந்திக் குட்டிதானே? அப்படியே சரோ ஜாடை!” என்று, அவளை வாரியெடுத்து, அலாக்காகத் தூக்கிக்கொண்ட பெரியம்மாவுடன் ஒன்றிப்போனாள் அன்புக்கு ஏங்கியிருந்த அப்பெண்.

`என்னையும் கவனிக்கலியே!” என்று ராமுவின் முகம் வாடியதை பாட்டி கவனித்தாள். அசுவாரசியமாகச் சூள் கொட்டினாள். “ஒன் தங்கச்சிமாதிரி பைத்தியமா இல்லாம இருந்தா சரிதான்!”

பெரியம்மா அவசரமாகப் பேசினாள். “ஒங்களுக்குத் தெரியும், எனக்கு ஒரே மகன்தான். அவனும் ஒரு தங்கச்சி வேணும்னு நச்சரிச்சுக்கிட்டே இருக்கான். நாப்பத்தஞ்சு வயசுக்குமேல எனக்கு எதுக்கு இன்னொரு கைப்பிள்ளை? அதான் சாந்தியை தத்து எடுத்துக்கலாம்னு..!”

”ஒனக்கில்லாத உரிமையா! எங்கே இருந்தா என்ன! அவ நல்லா இருந்தா சரி,” என்றாள் பாட்டி, தன் சுமை குறைந்துவிடப்போகும் மகிழ்வில்.

“வராதவ வந்திருக்கே! ரெண்டு நாள் தங்கிட்டுப் போகக்கூடாதா!” என்ற பாட்டியின் வாய்சாலகத்தில் பெரியம்மா மயங்கிவிடப்போகிறாளே என்ற பயம் பிடித்துக்கொண்டது சாந்திக்கு.

ஆனால், பெரியம்மா ஏமாறவில்லை. நாசூக்காக மறுத்துவிட்டு, அன்றே கிளம்பினாள்.

“போயிட்டு வரேண்ணே! அப்புறம் நீயும் வருவேயில்ல?” களங்கமின்றிக் கேட்ட தங்கையை அலட்சியமாகப் பார்த்தான் ராமு.

“பாட்டி என்னை விடமாட்டாங்க. என்மேல ரொம்ப பிரியம்!” என்று உதடுகள் சொன்னாலும், தன்னுடன் நாலு வார்த்தைகூடப் பேசாது, தானும் அதே அம்மாவுக்குப் பிறந்தவள்தான் என்பதையே உணராதவள்போல், சாந்தியை மட்டும் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டிருந்த பெரியம்மாவின்மேல் ஆத்திரப்படத்தான் அவனால் முடிந்தது. தானும் ஏன் அம்மா ஜாடையாக இல்லை, அப்பாவைப்போல் இருக்கிறோம் என்ற வருத்தம் எழுந்தது.

அந்த புறம்போக்கு இடத்துக்குப் பொருத்தமில்லாது, வாசலில் நின்ற பளபளப்பான, பெரிய வாடகைக் காரில் அமர்ந்து, குதிக்காத குறையாகக் கையை ஆட்டிய சாந்தியைப் பார்த்தபடி விறைத்து நின்றான் ராமு.

“ஒன் தங்கச்சிக்கு வந்த வாழ்வைப் பாத்தியா! ஒங்கப்பன் குடிச்சே எல்லாத்தையும் அழிக்கிறான். இல்லாட்டி, நீயும் எப்படி எப்படியோ இருக்கலாம்!” என்ற பாட்டியின் அனுதாபம் அவனுக்கு வேண்டித்தான் இருக்கவில்லை. வளரத் தொடங்கியிருக்கும் மீசையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

வருடங்கள் சில கடந்தன. அவனை இன்னும் சின்னப் பையனாகவே பாவித்து, பாட்டி அவனைத் தானே பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுவிடுவதும், `கூட்டாளிங்க சகவாசமே வேணாம். நீயும் ஒங்கப்பன்மாதிரி கெட்டுப்போயிடுவே!’ என்று அவன் வயதினர் ஓடியாடும் நேரத்தில், வலுக்கட்டாயமாக அவனை வீட்டிலேயே தங்க வைப்பதும் பிறருடன் ஒட்டாத அவனை ஒரு கேலிப்பொருளாக ஆக்கியது. எப்போதாவது தங்கையின் நினைவு எழும். மூர்க்கத்தனமாக அதைத் தள்ளுவான்.

`அண்ணனுக்கு என்னை அடையாளம் தெரியுதோ, என்னவோ! அண்ணனும் என்னைப்போல பெரிசா வளர்ந்திருப்பானில்ல!’ என்றெல்லாம் துள்ளிக்கொண்டு வந்த சாந்தி, அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.

செல்வச் செழிப்பு மின்னிய அவளுடைய உடலைப் பார்த்து ராமு பிரமித்தானோ, இல்லையோ, அவனைக் கண்டதும் சாந்தி அடைந்த ஏமாற்றம், வருத்தம்!

முகமெங்கும் வியாபித்திருந்த சிறு சிறு கட்டிகளைக் கிள்ளியபடி நின்றிருந்த சோனி உருவமா அவள் அன்புக்குரிய அண்ணன்? அவனுடைய பரட்டைத்தலையும், கலங்கிய சிவந்த கண்ணும்! அருகில் வரும்போதே அது என்ன நாற்றம்?

நடனமும், நீச்சலும் கற்று, தான் மட்டும் முன்னுக்கு வந்திருப்பது குறித்து அவளுக்குக் குற்ற உணர்வு உந்த, விமானதளத்துக்குப் போகையில், அவள் பக்கத்தில் உட்கார்ந்து, கரிசனத்துடன் அவளையே பார்த்தபடியிருந்த வளர்ப்புத்தாயின் பக்கம் திரும்பினாள் சாந்தி. “அண்ணனையும் நீங்க எடுத்துக்க பாட்டி விட்டிருக்க மாட்டாங்க. இல்லம்மா?” தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளும் முயற்சியில் எழுந்தது அக்கேள்வி.

“என்னண்ணே இப்படிப் போயிட்டேன்னு கேட்டேன். அண்ணன் சொன்னான்..,” பெரிதாக மூச்சை இழுத்துக்கொண்டாள். “அண்ணன் சொன்னான், `எங்கப்பா குடிகாரரு. அம்மாவோ பைத்தியம்! நான் எங்கேயாவது அதையெல்லாம் மறந்து, வயசான காலத்திலே அவங்களைத் தனியா விட்டுட்டுப் போயிடுவேனோன்னு பயந்து, இதையெல்லாம் நாள் தவறாம சொல்லிக்காட்டற பாட்டி! நான் வேற எப்படி இருக்க முடியும்?’அப்படின்னு என்னையே திருப்பிக் கேட்டாம்மா!” சாந்தியின் குரல் விக்கியது.

அவளுடைய இடுப்பில் கைகொடுத்து அணைத்துக் கொண்டாள் பெரியவள்.

அவர்களுக்கு முன்னால், எவரையோ இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த்து ஒரு கறுப்பு நிற ஊர்தி.

“அந்த `வேனு’க்குள்ளே பாத்தியா, சாந்தி? அழகழகா, எவ்வளவு பூ!” என்று பேச்சை மாற்றப்பார்த்தாள்.

சாந்தியின் மனம் வேறு ஏதோ யோசித்த்து. எங்கோ ஒரு பூக்கடையில் இவை போக மிகுந்திருந்த பூக்கள் இருக்கும். இதோ, இந்த மலர் வளையங்களில் உள்ள மலர்களுடன் ஒரே கிளையில் பூத்தனவாகவும் இருக்கலாம். அவைகளில் சில பூசைக்கோ, அல்லது திருமண விழாக்களுக்கோ உபயோகம் ஆகும்.

இன்னும் சிறிது நேரத்தில், பெட்டியிலிருக்கும் உயிரற்ற உடலுடன் தாமும் மின்சாரத்துக்கு இரையாகி, சாம்பலாகிவிடப்போவதை அறியாது, கண்கவர் வண்ணங்களுடன் மிளிரும் பூக்களைப் பார்த்து, மெல்ல விசும்ப ஆரம்பித்தாள் சாந்தி.

(தமிழ் நேசன், 1984)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நல்ல பிள்ளை Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book