"

என்னம்மா இப்படிச் செய்துட்டே? ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டார் அப்பா. “கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிர். இப்படியா முறிச்சுக்கிட்டு வருவே!

ஒரு கையில் பெட்டியுடனும், மறு கையில் தனது மகளது கரத்தையும் பிடித்தபடி அசையாது நின்றாள் திலகா. வீட்டுக்குள் நுழையும்போதே இப்படி ஒரு வரவேற்பா?

நல்லவேளை, அவள் எதுவும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை அப்பா.

உள்ளே போய் உக்காரு. சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்!

அவளுக்குத் தெரியும், அவர் அவசரமாக வெளியே ஓடுவதன் ரகசியம். தனியாகப் போய், ஒரு குரல் அழுதுவிட்டு வருவார்.

நாலடி நடந்தவர், ஏதோ நினைத்துக்கொண்டவராக, திரும்பினார். “நல்ல வேளை, இதையெல்லாம் பாக்க ஒங்கம்மா இல்ல. இருபத்தி ரெண்டு வருஷமில்ல நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா குடித்தனம் நடத்தினோம்!

அலட்சியத்துடன் உதட்டைச் சுழிக்காமலிருக்க பாடுபட்டாள் திலகா. `நீங்களும், அம்மாவும் குடித்தனம் நடத்திய லட்சணத்தை நீங்கதான் மெச்சிக்கணும்! என்று நினைத்துக்கொண்டாள்.

`அப்பா பாவம்! என்ற பரிதாபமும் எழாமலில்லை.

உயரமாக இருந்ததாலோ, ஒல்லியாக இருந்ததாலோ, அல்லது வாழ்க்கைப் பளு முதுகை அழுத்தியதாலோ, நாற்பது வயதுக்குள்ளேயே கூன் விழுந்து, கிழத் தோற்றம் வந்திருந்தது அப்பாவுக்கு. திலகாவுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவரை அப்படித்தான் பார்த்திருந்தாள்.

ஆனால், அவருடைய சாத்வீகமான குணமும், அதிர்ந்தோ, அல்லது பிறரை ஒரு வார்த்தை கடிந்தோ பேசாத தன்மையும் அவருக்கு நேர்மாறாக இருந்த அம்மாவுக்குத்தான் சாதகமாகப் போயிற்று.

ஏன் மீனு வேலையிலிருந்து வர இவ்வளவு நேரம்? ரொம்ப வேலையா? ஏதோ, தனக்குத் தெரிந்த வகையில் இரவுச் சமையலை முடித்துவிட்டு, மகளையும் படுக்க அனுப்பிவிட்டு, தான் சாப்பிடாமல் மனைவிக்காக காத்துக்கொண்டு இருப்பார் வெங்கடேசன்.

அவருடைய அனுசரணை மனைவிக்குப் புரியாது. “இவ்வளவு சந்தேகம் இருக்கிறவங்க பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பக்கூடாது. அவளை நல்லா வெச்சிருக்க துப்பில்லையாம், ஆனா, பேச்சில ஒண்ணும் குறைச்சல் இல்ல! பட்டப்படிப்பு படித்து, பெரிய வேலைக்கும் போகும் திமிரில் வார்த்தைகள் வந்து விழும்.

முகமும் மனமும் ஒருங்கே சுருங்கிப்போகும் அவருக்கு. இருந்தாலும், இன்னொரு முறையும், “ஏன் மீனு லேட்டு? என்று கேட்காமல் இருக்க முடியாது அவரால்.

தான் அவளுக்காக உருகுவது ஏன் அவளுக்குப் புரியவில்லை? மகள் ஒருத்தி இருக்கிறாளே, அவளுடனாவது வந்து பேசி, சிறிது நேரத்தை உல்லாசமாகக் கழிப்போம் என்றுகூடவா ஒரு தாய்க்குத் தோன்றாது?

கதவிடுக்கு வழியாக அப்பாவும் அம்மாவும் பேசுவதை திலகா அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருப்பாள். அவள் பயந்தபடியே அம்மா கத்துவாள்: “நான் என்ன, பாங்கில வேலை முடிஞ்சதும், எவனோடேயோ கும்மாளம் போட்டுட்டு வரேன்னு நினைச்சீங்களா?

தான் நினைத்தும் பாராதது அவள் வாயிலிருந்து வரவும், வெங்கடேசன் அதிர்ந்துபோனார்.

வழக்கமாக அவள் செய்துவந்ததை மறைக்கவே அவள் அப்படித் தாக்கினாள் என்று காலம் கடந்து புரிந்தபோதுகூட, அவள்மேல் ஆத்திரம் எழவில்லை. தான் அவளுக்கு எந்த விதத்திலும் இணையில்லை என்று தன்னைத்தானே நொந்துகொள்ளத்தான் அவரால் முடிந்தது.

மீனாட்சியோ, தான் கிடைத்தற்கரிய பொக்கிஷம், அதனால்தான் தன்னை மணப்பதில் அவ்வளவு தீவிரம் காட்டியிருக்கிறார் இந்த மனிதர் என்று எண்ணிக்கொண்டாள். தன்னிடம் ஏதோ அலாதி கவர்ச்சி இருக்கிறது, அதைக்கொண்டு ஆண்கள் அனைவரையும் அடிபணிய வைக்கலாம் என்ற ரீதியில் அவள் புத்தி போயிற்று.

அழகிய பெண் ஒருத்தி வலிய வந்து அழைத்தால், `வேண்டாம்!     என்று விலகிப்போகும் விஸ்வாமித்திரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! சில மணி நேரம் அவளுடன் உல்லாசமாகக் கழித்துவிட்டு, பதிலுக்கு அவள் வேலையாக இருந்த வங்கியில் தங்கள் பணத்தைச் சேமிக்க முன்வந்தார்கள் பல செல்வந்தர்கள். அவளால் வியாபாரம் கூடியது. பதவி உயர்வு தானாக வந்தது.

பராபரியாக சமாசாரம் காதில் எட்ட, மனம் பொறாது, ஓர் இரவுப் பொழுதில் மகளையும் உடன் அழைத்துக்கொண்டு, மனைவி வேலைபார்க்கும் இடத்துக்கே போனார் வெங்கடேசன். தன் நடத்தையால் மகளும் ஒரு நாள் கெட்டுவிடக்கூடும் என்றாவது அவள் மனம் பதைக்காதா என்ற நப்பாசை அவருக்கு.

ஆனால், அவளுக்கோ, தனக்கு இவ்வளவு பெரிய மகளும், சந்தேகப்பிராணியான ஒரு கணவனும் இருப்பது பிறருக்குத் தெரிந்துவிட்டதே என்று அவமானமாக இருந்தது.

ஒங்களை யாரு இங்கேயெல்லாம் வரச்சொன்னது? எப்போ திரும்பி வரணும்னு எனக்குத்தெரியும்! என்று அடிக்குரலில் மிரட்டினாள்.

தலை குனிய, “வாம்மா, என்று அப்பா வெளியே நடந்தது இன்றைக்கும் திலகாவுக்கு மறக்கவில்லை.

அன்று வழக்கத்தைவிட நேரங்கழித்து வந்தாள் மீனாட்சி. “இனிமே அந்தப் பக்கம் நீங்க தலையைக் காட்டினா, தெரியும் சேதி! நான் எவ்வளவு பெரிய ஆபீசர்! ஒங்களால இன்னிக்கு எனக்கு ரொம்ப தலைகுனிவாப் போச்சு. என்னை இப்படி அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளாக் காத்துக்கிட்டு இருந்தீங்க? என்று காட்டுக் கத்தலாகக் கத்தினாள். “எங்கூட வாழப் பிடிக்காட்டி, விவாகரத்தாவது பண்ணித் தொலைங்க. நானும் இந்தப் பாழாப்போன வீட்டைவிட்டுப் போயிடறேன்! என்று ஓர் அஸ்திரத்தையும் எடுத்து வீசினாள்.

அப்படி ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை வெங்கடேசனால். அதன்பின், மனைவியுடன் பேசுவதையே தவிர்த்துக்கொண்டு, மகளிடம் பாசத்தைக் கொட்டி வளர்த்தார்.

அப்பாவின் நிலைமை சிறுமிக்கும் புரிந்துதான் இருந்தது. “இந்த அம்மா வேண்டாம்பா. இவங்களுக்குத்தான் நம்பளைப் பிடிக்கலியே! புதுசா வேற அம்மா வாங்கலாம்! என்று ஆலோசனை தெரிவித்தாள்.

அப்பா துணுக்குற்றார். மகளின் தோளில் கைபோட்டு அணைத்தபடி, “இப்படி எல்லாம் பேசக்கூடாது, திலகா. அம்மா நல்லவங்க. ஏதோ, சகவாச தோஷம். நாம்பதான் பொறுமையா இருக்கணும், என்று சமாதானப்படுத்த முயன்றார்.

ஒருவாறாக, அவரது பொறுமைக்குப் பரிசு கிடைத்தது.

படுக்கையோடு படுக்கையாக வீழ்ந்தாள் மீனாட்சி. ஓயாமல் அவரை ஏசிப் பேசிய வாயிலிருந்து இப்போது ஓரிரு அத்தியாவசியமான வார்த்தைகளே வந்தனஅதுவும் குளறலாக.

ஒவ்வொரு அங்கமாக சுவாதீனம் குன்றும், எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத வியாதி என்று அறிந்தபோது, வியாதியின் பெயர் முக்கியமாகப் படவில்லை வெங்கடேசனுக்கு. இவள் இனி தன்னைவிட்டுப் போகவே மாட்டாள் என்று பூரிப்பாக இருந்தது. கைப்பிள்ளையைப்போல் அவளைக் கவனித்துக்கொண்டார்.

ஒரு வழியாக, மீனாட்சி வாழ்விலிருந்து விடுதலை பெற்றபோது, அப்பா எதற்காக அப்படி அழுதார் என்று திலகாவிற்குப் புரியத்தான் இல்லை.

இப்படியும் ஒரு வெறித்தனமான அன்பா?

இல்லை, ஆணான தன்னைவிட்டு ஒரு பெண் விலகிப் போய்விடுவதா என்ற மானப் பிரச்னையா? அதனால்தான் அவள் எவ்வளவு தூரம் அத்துமீறி நடந்தபோதும் பொறுத்துப்போனாரோ?

திலகாவின் மனம் அழுதது. அம்மா தான் செய்த பாவங்களுக்கெல்லாம் துடித்துத் துடித்துச் செத்திருக்க வேண்டும். கடைசிவரை இப்படி ஒரு ராஜபோகத்தை அனுபவிக்க அம்மாவுக்கு என்ன தகுதி இருந்தது?

அப்பாதான் அதற்கும் விளக்கம் சொன்னார்: “வெவ்வேறு சூழ்நிலையிலிருந்து வந்த ரெண்டுபேர் காலம் பூராவும் சேர்ந்து இருக்கணும்னா, கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். விட்டுக் குடுக்கிறதுதான் வாழ்க்கை!

கல்யாணம் என்றாலே மிரண்டு போயிருந்தவள், அப்பாவின் மகிழ்ச்சிக்காக ஒருத்தனுக்குக் கழுத்தை நீட்டினாள்.

ஆனால், அப்பாவின் வாழ்க்கையே தனக்கு அமைந்துவிடும் என்பதை அவள் எதிர்பார்க்கத்தான் இல்லை.

நடந்ததை மறைச்சு, என்னை ஏமாத்திடலாம்னு பாத்தீங்களா? அந்த அம்மாவுக்குப் பிறந்தவதானே நீ! என்று கணவன் வார்த்தைகளாலேயே குதறியபோது, துடிதுடித்தாள்.

`அம்மாவைப்போல் தானும் கட்டினவரைப் பார்த்துக் கண்டபடி கூச்சல் போடக்கூடாது! என்று தன்னை அடக்கிக்கொண்டாள்.

அவளிடமிருந்து எதிர்ப்பே இல்லாத துணிச்சலில், அவன் உடல் ரீதியான வதைகளைச் செய்ய ஆரம்பித்தபோதும், அப்பாவிடம் கற்ற பொறுமையைக் கடைப்பிடித்தாள் திலகா.

உடல், மனம் இரண்டும் மரத்துப்போயின. அப்பாவின் `மான ரோஷமற்ற நடத்தைக்கும் அர்த்தம் புரிந்ததுபோலிருந்தது.

மூன்றே வயதான மகள் ஒரு நாள், “பயம்..! பயம்..! என்று திக்கித் திக்கி அழ ஆரம்பித்து, ஓயவே மாட்டாளோ என்று அச்சப்படும் அளவுக்குக் கதறியபோதுதான் திலகா விழித்துக்கொண்டாள்.

நாம் பட்ட துயரங்கள் நம்மோடு ஓய்ந்துவிடும் என்று நம்பினோமே! இப்போது மகளும் அதே நிலைமையில்தான் இருக்கிறாள்!

முதலில் பயம், பின் கோபம், சுயவெறுப்பு, இறுதியில், `நிலைமையை மாற்றவே முடியாது என்கிற விரக்தி. அதனாலேயே, நடைப்பிணம்போல ஒரு வாழ்க்கை.

இருபத்து ஐந்து வருடங்கள் தான் அனுபவித்த கொடுமையையெல்லாம் இந்தப் பிஞ்சும் அனுபவித்தாக வேண்டுமா?

அப்பா வளர்த்த பெண் அவரைப்போலவே இருந்தாள். கணவரை எதிர்த்துப் போராடுவது எப்படி என்று அப்பா அவளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. `நிரந்தரமாகப் பிரிவதுதான் ஒரே வழி, என்று நிச்சயித்தாள்.

அவளுடைய முடிவு அப்பாவுக்குப் புரியாமல் போகலாம். ஆனால், மகளாவது தன்னைப்போல் இல்லாது, நிம்மதியும், சிரிப்புமாய் வளருவாள் என்ற நம்பிக்கை எழ, திலகாவின் மற்ற குழப்பங்கள் அனைத்தும் மறைந்தே போயின.

(மயில்மலேசியா, 1994)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நல்ல பிள்ளை Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book