"

இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்தார் சாம்பசிவம்.

இப்படி ஆரம்பித்தாரானால், உலகின் எந்த மூலையிலோ நடந்திருக்கும் செய்தியைப் பற்றியதாக இருக்கும்.

இதைப் பழக்க தோஷத்தில் அறிந்திருந்த நண்பர் நாதன், “காலம் கெட்டுப் போச்சு!” என்று சொல்லிவைத்தார், பட்டுக்கொள்ளாமல்.

முன்பு ஒருமுறை, ‘எதைச் சொல்றீங்க?’ என்று தெரியாத்தனமாய் கேட்கப்போய், ‘ஏன்யா? நீங்க தினசரி பேப்பரே படிக்கிறதில்லையா? இல்ல, டி.வி.யிலேயாவது பாத்துத் தெரிஞ்சுக்கிறது! இப்படி ஒங்களைமாதிரி, ‘நாட்டை ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன, இல்ல, அந்தக் கொரங்கே ஆண்டால் என்ன’ன்னு கெணத்துத் தவளையா அவனவனும் இருக்கிறதாலேதான் ஒலகம் இப்படி சுயநலம் பிடிச்சு, ஒரேயடியாக் கெட்டுக் கிடக்கு!’ என்று சாம்பசிவத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த ஜன்மத்துக்கும் மறக்குமா!

தான் தினசரி படிக்காததிற்கும், உலகம் கெட்டுப்போவதற்கும் என்ன சம்பந்தம் என்று நாதனுக்குப் புரியத்தான் இல்லை. அதை வாய்திறந்து எப்படிக் கேட்பது? என்ன இருந்தாலும், தான் சாதாரண ஆசிரியராக இருந்தபோது, அதே தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பதவி வகித்தவர் ஆயிற்றே! இப்போது இருவருமே ஓய்வு பெற்று, அரசாங்கம் அளித்துவந்த சொற்ப ஓய்வூதியத்தில் வறுமையின் எல்லைக்கோடு கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்துவந்தபோதும், சாம்பசிவம் மட்டும் அந்தப் பழைய மிடுக்கைக் குறைத்துக்கொள்ளவே இல்லை.

ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்புவரை இருந்த அப்பள்ளியில் படித்த சிறுவர், சிறுமியர் அனைவரும் ‘பெரிய வாத்தியார்’ என்று பயபக்தியுடன் ஒதுங்கி வழி விட்டது, வாரம் தவறாது, திங்கள் காலை அவர்கள் எல்லாரையும் பள்ளி வளாகத்தில் இரட்டை மாடிக் கட்டிடத்தின்முன் நிற்கவைத்து, ஒழுக்கம், கடவுள், கலை என்று தனக்குத் தோன்றியதைப்பற்றி எல்லாம் மைக்கே அதிர்ந்துவிடும்படி அலறியது, மற்றும் தான் சொன்னது, செய்தது எதிலாவது குறையோ, மாற்றமோ தெரிவித்த ‘மரியாதை கெட்ட’ ஆசிரியர்களை அவர்களது வேலைப்பளுவை அதிகரிக்கச் செய்து, மரியாதை உள்ளவர்களாக மாற்றியது — இப்படிப் பலவும் சாம்பசிவம் தனக்குத்தானே போட்டுக்கொண்டிருந்த மதிப்பெண்களைக் கூட்டிக்கொள்ள வைத்திருந்தன. மேலும், அவருடைய பெரிய ஆகிருதியும், ரகசியம் பேசினால்கூட எட்டு வீடுகளுக்குக் கேட்கும் சிம்மக்குரலும் அவரது பலம்.

சாம்பசிவம் ஓய்வு பெற்றதும், அந்தச் சிற்றூரைவிட்டு, டவுனில் இருக்கும் மகனுடனேயே போய் தங்கிவிடவேண்டும் என்று அவருடைய மனைவிக்கு ஆசை. ஆனால் தான் யாரென்றே தெரியாத பலரும் இருக்கும் ஓரிடத்தில் போய், தனது மதிப்பைக் குறைத்துக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

இது பழகிப்போன இடம். ஓரிரண்டு தறுதலைகள் இவரைப் பார்த்தும் பாராதமாதிரி ஒதுங்கிப்போனாலும், ‘பெரிய வாத்தியார்’ என்று மார்க்கெட்டில் முருங்கைக்காய் விற்பவரிலிருந்து தபால்காரர்வரை இவரைத் தெரியாதவர்கள் எவருமில்லை. ‘ஆசிரியர்’ என்றால் எல்லாமே அறிந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவர்கள் எண்ணத்திற்கேற்ப இவரும் நடந்துகொண்டார். தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ, எல்லா விஷயங்களுக்கும் நியாய அநியாயம் கற்பிப்பார். பெரும்பாலும், இவரது தர்க்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் காதில் இவரது சொற்கள் விழாதது இவருக்குச் சௌகரியமாகப் போயிற்று.

இவ்வளவு பராக்கிரமம் வாய்ந்த சாம்பசிவம் ஒரே ஒரு தவறுமட்டும் செய்துவிட்டார். கல்யாணமான முதல் இருபது வருடங்கள் மனைவியை ஒரேயடியாக அடக்கி ஆண்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறார், காலங்கடந்து. வீட்டில் அவள் ராஜ்ஜியந்தான்.

‘போன ஜன்மத்தில கோயில் தேரா இருந்திருப்பீங்களோ! மழையோ, வெயிலோ, நாள் தவறாம தெருத்தெருவா அசைஞ்சுக்கிட்டுப் போகணும் ஒங்களுக்கு!’ அவர் எது செய்தாலும், அதைப் பழிக்காவிட்டால் அவளுக்கு உணவு செரிக்காது.

அவள் வாய்க்குப் பயந்தே அவர் கூடுமானவரை வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறார் என்பது அவளுக்குப் புரியவில்லை.

அவள் சொல்வதற்கு ஏற்றார்போல், கடைத்தெரு, கோயில் பிரகாரத்துக்கு வெளியே, ‘விளையாட்டு மைதானம்’ என்ற பெயர் தாங்கிய முட்செடிகள் அடர்ந்த புல்வெளி — இப்படி, கால் போன போக்கில் செல்வார் சாம்பசிவம். அந்தச் சிற்றூரைத் தவிர வேறு வெளியுலகமே அறிந்திராத அப்பாவிகள் யாராவது சாம்பசிவத்திடம் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கும்தான் பொழுது போகவேண்டாமா!

அப்படித்தான் அன்று நாதனும் — நவராத்திரி வெள்ளிக்கிழமையாக இருக்கிறதே என்று கோயிலுக்கு வந்தவர் –தனது மாஜி தலைமை ஆசிரியரிடம் வசமாகச் சிக்கிக்கொண்டார்.

“இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” என்று ஆரம்பித்த சாம்பசிவம், “எல்லாம் சட்ட விரோதமா நம்ப நாட்டுக்குள்ள நுழைஞ்சவங்களைத்தான் சொல்றேன்!” என்று பீடிகை போட்டார்.

“யாரு, இந்தோன்களைச் சொல்றீங்களா?” மரியாதையை உத்தேசித்து, அக்கறை காட்டினார் நாதன்.

“அது பழைய சமாசாரமில்ல? நான் அதைச் சொல்ல வரல,” என்று மறுத்தாலும், வகுப்பில் பழைய பாடங்களை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவுபடுத்துவதுபோல, அந்தப் பழைய சமாசாரத்தைப்பற்றியே பேசிக்கொண்டுபோனார். “மலையில வளர்ந்திருக்கற மரத்தையெல்லாம் நெருப்பு வெச்சுக் கொளுத்திட்டு, அங்க கத்தரிக்கா, வெண்டைக்கா செடியெல்லாம் போட்டு, அதில காய்க்கறதை ஒண்ணுக்கு நாலு விலை வெச்சு நம்ப தலையில கட்டறானுங்க. இன்னும், ராவில வீடு பூந்து திருடிட்டு, ‘என்னைப் பிடிங்கடா, பாக்கலாம்!’ அப்படின்னு சவால் விடறமாதிரி, கறுப்புக் கறுப்பா கைரேகையை வீட்டுச் சுவத்தில பதிச்சுட்டுப் போறானுங்களாம். அதான் தெரிஞ்ச கதையாச்சே!”

“ஓ! அப்போ ‘பங்களா’வைச் சொல்றீங்களா?” என்று கேட்கும்போதே நாதனுக்குப் பெருமை ஓங்கியது, சரியான விடை அளித்துவிட்ட மாணவனைப்போல.

“அதேதான்!” என்று சாம்பசிவம் ஆமோதிக்கவும், நாதனுக்கு உச்சிகுளிர்ந்து போயிற்று. அந்தச் செய்தியும் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், அது தன் வாயிலிருந்து வருவதைப் பெரிய வாத்தியார் விரும்பமாட்டார் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்ததால், அவருக்கும்தான் அலட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுப்போமே என்ற பெருந்தன்மையுடன், வாயை மூடிக்கொண்டு, பழைய பணிவு மாறாது நின்றார்.

“ஏழு வயசுப் பொண்ணு, பாவம்! இப்பத்தான் பல் விழுந்து முளைச்சிருக்கும். அதைப்போய்…! சே! இவனுங்களை எல்லாம் அவன் ஏறி வந்த படகிலேயே திரும்பவும் ஏத்திவிட்டு, நடுக்கடலிலே மூழ்க வைக்கணும்!”

சாம்பசிவத்துக்குத் திடீர் திடீரென்று யார்மேலாவது கோபம் கிளம்பும்.

‘இவன்களை எல்லாம் வரிசையா நிக்கவெச்சு, சுட்டுத்தள்ளணும்!” என்று ஆக்ஞை பிறப்பிப்பார். இல்லாவிடில், ‘நகக்கணுவிலே ஊசியேத்தணும்,’ ‘கொதிக்கற எண்ணையில தூக்கிப் போடணும்’ என்று, நரகத்தில் நடத்தப்படுவதாகப் பெரியவர்கள் கூறித் தான் கேட்டிருந்ததை எல்லாம் சொல்லிச் சபிப்பார்.

‘பிரெஞ்சுக்காரன் கடலிலே அணுசக்தி ஆராய்ச்சி செய்யறானே! அதில செத்துப்போற மீனை எல்லாம் அவனையே சமைச்சுச் சாப்பிடச் சொல்லணும்!’ என்று ஏசுவார். எல்லாம், ‘அவன் காதில் விழவா போகிறது!’ என்ற தைரியந்தான்.

சொல்கிறபோது சிறிது வீரமாக உணர்வார். வீட்டில் நுழையும்வரை அது நிலைக்கும்.

“காலம் கெட்டுப் போச்சு!” என்று ஒத்துப்பாடினார் நாதன். மனமோ, ‘ஓ! இதுதானா காரணம்!’ என்று எக்காளமிட்டது.

சாம்பசிவத்தின் கடைசி மகள் கடந்த வருடம் பெட்ரோல் ஸ்டேஷனில் வேலைபார்த்த ஒரு அயல் நாட்டானின் அழகிலோ, வேறு எதிலோ மயங்கி, வீட்டைவிட்டு ஓட இருந்தாள். தக்க சமயத்தில் மூக்கில் வியர்த்து, அதைத் தடுத்து, பெண்ணை உடனடியாக டவுனுக்கு, அண்ணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சாம்பசிவம். அடுத்த வீட்டுக்காரன் யாரென்றே தெரியாது அங்கு ஒவ்வொருவரும் வாழ்ந்தது அவருக்குச் சாதகமாகப் போயிற்று.

அப்பெண்ணை நிறைமாதக் கர்ப்பிணியாக அங்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததாக அவர்கள் பள்ளித் தோட்டக்காரன் முருகன் நாதனுடைய காதைக் கடிக்காத குறையாகச் சொன்னதோடு, ‘பெரிய வாத்தியார்கிட்ட இதைப்பத்தி நான் சொன்னதா எதுவும் கேட்டுடாதீங்கைய்யா!’ என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

அதன்பின், அப்பெண் தந்தைவீடு வந்து சேர்ந்தாள். அவளைப்பற்றிய ரகசியம் தனக்குத் தெரிந்திருப்பதாலேயே தான் அவரைவிட ஒருபடி மேல் என்று நாதன் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த எண்ணத்தில் பிறந்த கருணையுடன், “நாடுவிட்டு நாடு எதுக்காக வந்து, இங்க இருக்கறவங்க பிழைப்பிலே மண்ணைப் போடணும்கிறேன்!” என்றார் அழுத்தமாக.

தமது மூதாதையர்களும் அதேமாதிரிதான் தாய்நாட்டைவிட்டு இந்த மலேசிய மண்ணில் கால்பதித்தார்கள் என்பதை இருவருமே அப்போது நினைத்துப்பார்க்க விரும்பவில்லை.

நாதன் சொன்னது தன் காதிலேயே விழாததுபோல் நடந்துகொண்டார் சாம்பசிவம். ஒருநாள்போல் தினமும் இரவில் வீட்டுக்குப் போனால், மனைவியிடம் ‘பாட்டுக் கேட்கவேண்டி வருமே’ என்ற பயமெழ, சாம்பசிவம் அவசரமாகப் பேச்சை முடித்துக்கொள்ளப் பார்த்தார்: “அட, நாம்பளும் இளவட்டங்களா இருந்தவங்கதான். இப்படி ஆயிரக்கணக்கான மைல் தொலைவு — மலைமேலேயும், காட்டுக்குள்ளேயும் நடந்துவந்து, — பிழைப்புத் தேடறது லேசில்ல. ‘பணம்தான் கிடைக்குதில்ல, சன்னியாசிமாதிரி இரு’ன்னு சொல்லிட முடியுமா? அவங்க மனைவிங்களைக் கூட்டிவரத்தான் அனுமதி இல்லியே!”

பெரிய வாத்தியார் திடீரென்று கட்சி மாறிவிட்டது எதனால் என்று திகைத்தார் நாதன். ஆண்-பெண் விவகாரத்தைப்பற்றிப் பேச்சு திரும்பியதும், சாம்பசிவத்துக்கு மனைவி ஞாபகம் வந்ததை அவர் எப்படி அறிவார்!

“கோயிலுக்கு வந்தோமா, சாமி கும்பிட்டோமான்னு இல்லாம, கண்டதுங்களைப்பத்தி எல்லாம் என்னா பேச்சுங்கறேன்!” என்னவோ, அடுத்தவர் மூச்சு விடாமல் பேசினாற்போலவும், தான் அதைக் கேட்க நேர்ந்துவிட்டாற்போலவும் நொந்துகொண்டவர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னப்பனே, முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தியைக் குடுடா!” என்று கடவுளை இறைஞ்சியபடி, எதிரில் நின்றிருந்தவரிடம் விடைபெற்றுக் கொள்ளாமலேயே நடையைக் கட்டினார்.

(இதயம், 1996)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

நல்ல பிள்ளை Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book