7
தீபாவளி நெருங்கிவிட்டதை அறிவிப்பதுபோல பட்டாசு சத்தம். சுற்றுச்சூழலின் மாசு அதிகரிப்பதாலும், குழந்தைகள் பலர் கண்ணையும், கையையும் இழக்க நேரிடுகிறது என்பதாலும் பட்டாசு வெடிப்பது சட்ட விரோதம் மலேசியாவில். பெயருக்குத்தான்.
போதைப்பொருள், தங்கம், போலி சிகரெட்டு, பாதுகாக்கப்பட்ட யானை, எறும்புதின்னி முதலிய மிருகங்கள்போல பட்டாசும், வாண வெடிகளும் எப்படியோ நாட்டுக்குள் கடத்தப்பட்டுதான் இருந்தன.
புவனாவின் பருத்திருந்த வயிற்றுக்குள்ளும் அவ்வொலி எட்ட, அதைத் தாங்காத கரு அவளை எட்டி உதைத்தும், வேகமாக உருண்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.
“சித்த முந்தி இந்தப் பக்கம் நீட்டிக்கிட்டு இருந்திச்சு, இப்போ அங்கே சப்பையா இருக்கே!” சிறுபிள்ளையைப்போல் அதிசயித்த பாஸ்கரின் கரத்தைப் பற்றி, முன்னால் துருத்திக்கொண்டிருந்த வயிற்றுப் பாகத்தில் வைத்தாள். அவளுடைய புன்சிரிப்பு அவனையும் தொற்றிக்கொண்டது.
தந்தையின் கைபட்ட அதிர்ச்சியில் குழந்தையின் தலை இன்னொரு பக்கத்துக்குத் தாவ, “என் பையன் இப்பவே என்ன ஓட்டம் ஓடறான்!” என்று பெருமிதம் கொண்டான்.
“பிரசவத்தை இங்கேயே வெச்சுக்கலாம், புவனா. நீ இல்லாம, வீடு வீடாவே இருக்காது,” என்றான் கெஞ்சலாக. “ஒங்கம்மாவை இங்க வரச் சொல்லிட்டாப் போச்சு!”
“நல்லா வருவாங்களே எனக்காக!”
பாஸ்கருக்குப் புரியத்தான் இல்லை. தன்மீது அன்பும், மரியாதையுமாக இருப்பவளுக்குப் பெற்ற தாயின்மீது இப்படி ஒரு கசப்பா!
“எந்த வேளையில அந்தக் கடங்காரன் — எல்லாம் என் தம்பியைத்தான் சொல்றேன்,” அவன் முகத்திலெழுந்த குழப்பத்தைப் பார்த்துவிட்டு விளக்கியவள் தொடர்ந்தாள்: “அப்பவே நன் எங்கம்மாவுக்கு வேண்டாதவளா ஆகிட்டேன். அந்த வீட்டில நான் வேலைக்காரியாத்தான் இருந்தேன்!”
புவனாவின் தாய் லட்சுமியின் முகத்தை ஒரு கணம் நினைவில் கொண்டுவந்தான் பாஸ்கர். அவளைக் கொடுமைக்காரியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை.
முதன் முதலாக அமைதியே உருவான அத்தாயையும், அழகான மகளையும் மாரியம்மன் கோயிலில் பிரதட்சணம் செய்யும்போது பார்த்தபோதே, `இவர்களுடன் தான் முன்பே இணைந்திருக்கிறோம்!’ என்கிறமாதிரி ஒரு நெருக்கம் உண்டாகவில்லை?
தீப ஆராதனை, அர்ச்சனை எல்லாம் முடிவதற்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்தவனாக, தனியாகத் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த முதியவளிடம் வந்து, “வணக்கங்க!” என்ற ஆரம்பித்தான்.
“முன்பின் தெரியாத எவனோ வந்து, `ஒங்க மகளை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்வானாம். நீங்களும் சரிம்பீங்களாம்! என்னம்மா இது, அநியாயமா இருக்கு!” என்று படபடத்தாள் புவனா.
அதை எதிர்பார்த்திருந்த தாய் பொறுமையாகப் பேசினாள். “நம்ப குடும்பம் இருக்கிற இருப்பில, ஒனக்கு `கல்யாணம்’ -னு ஒண்ணு நடக்குமான்னு பயந்துக்கிட்டு இருந்தேன், புவனா. கோயில் சந்நிதியில கடவுளே வந்து இவரைக் கைகாட்டி விட்டிருக்காரு!”
புவனா யோசிக்கத் தொடங்கினாள்.
“அனாதை ஆஸ்ரமத்திலே வளர்ந்தவராம். பாசத்துக்கு ஏங்கியிருக்காரு, பாவம்! கண்ணில கபடம் இல்ல. எதிரே இருக்கிறவங்களோட கண்ணை நேருக்கு நேர் பாக்கற உண்மை இருக்கு!”
வேறொரு சந்தேகம் எழுந்தது. “தம்பியைப் பத்தி அவர்கிட்டே சொன்னீங்களா?”
“மறைக்கிற சமாசாரமா அது!” லட்சுமி பெருமூச்செறிந்தாள்.
முப்பத்தைந்து வயதுக்குமேல் பிறந்த ஒரே மகன்! அவன் பிறந்தபோதுதான் அவள் எவ்வளவு ஆனந்தப்பட்டாள்! ஆனால், நான்கு வயதாகியும் அவனால் சரியாகப் பேசவோ, பிடித்துக் கொள்ளாமல் நடக்கவோ முடியாமல் போனபோது கலக்கம் உண்டாயிற்று. `நெருப்பு சுடும்’ என்று எவ்வளவு முறை அடித்துச் சொன்னாலும், அடுப்பின் நீலப்பிழம்பில் கை வைத்துவிட்டு அலறுவான்.
டாக்டர்கள், `இது மூளைக் கோளாறு இல்லை! ஆடிசம் என்ற வியாதி!’ என்றார்கள்.
‘கர்மவினைதான் இது! நீ எப்போதோ செய்த பாவத்தை ஒரே ஜன்மத்தில் தொலைக்கத்தான் இப்படி ஒரு மகன் உனக்குப் பிறந்திருக்கிறான்!’ என்றார்கள் சிலர், எல்லாம் தெரிந்தவர்கள்போல்.
இனி ஆயுள் பரியந்தம் விவரம் தெரியாத குழந்தையாகப் பாவித்து, ஒவ்வொரு கணமும் இவனைக் கட்டிக் காக்க வேண்டும்! இதைக் குணப்படுத்தவே முடியாது என்றறிந்து லட்சுமி துடித்துப்போனாள்.
நெருப்பைக்கொண்டு பொன்னைப் புடம் போடுவதைப்போல, தாங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளால்தான் மனிதர்கள் குணசாலிகள் ஆகிறார்களாம். லட்சுமியின் அதிர்ச்சியும் நாளடைவில் மறைய, அளவிலா அன்பும், அமைதியும் அவ்விடத்தை ஆட்கொண்டன.
மகனையே எந்நேரமும் கவனித்துக்கொண்டிருந்த மனைவியின் போக்கு கணவனுடைய ஆண்மைக்கு சவாலாக அமைந்தது. ஏதோ, அவள் செய்த தவற்றால்தான் மகன் இப்படி அவமானகரமாக இருக்கிறான் என்று போயிற்று அவன் புத்தி. “இத்தனை வருஷம் கழிச்சு ஒரு ஆம்பளைப் புள்ளையைப் பெத்தியே! அதையாவது ஒழுங்கா செய்தியா?” என்று ஓயாமல் அவளைப் பழித்தவன், ஒரு நாள் கண்காணாமல் போனபின், அவளுக்கு ஏற்பட்டது என்னவோ நிம்மதிதான்.
கணவன் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டிய வேலைகளை மகள்மேல் திணித்தாள். வேறு வழியிருக்கவில்லை.
`புவனா! தம்பியோட கால்சட்டை நனைஞ்சிருக்கே! மாத்தக்கூடாது?’
`புவனா! தம்பி என்ன செய்யறான், பாரு! தண்ணித் தொட்டியில விழுந்துடப்போறான்!’
அம்மா என்றாவது இப்படி தன்மீது பாசத்தைக் கொட்டி இருப்பார்களா? மூன்று வயதிலிருந்தே தானாகவே குளித்து, சாப்பிட்டு..!
திருமணமாகி தனிக்குடித்தனம் வந்தும்கூட புவனாவின் ஆற்றாமை குறையவில்லை.
அம்மாவின் பராமுகத்துக்கு நேர் எதிரிடையாக பாஸ்கர் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது.
“குங்குமப்பூ வாங்கிட்டு வந்தேனே, புவனா! எங்கே வெச்சிருக்கே? எடுத்துக் குடு. பாலில கரைச்சுத் தரேன்!”
“படுத்தா, எழுந்திருக்க முடியாம திண்டாடறியே! சாய்வு நாற்காலி வாங்கிட்டு வந்திருக்கேன், பாரு. சாய்ஞ்சாப்பல ஒக்காந்து, அப்படியே தூங்கிடலாம்!”
இலக்கு இல்லாது இத்தனை காலமும் தேக்கி வைத்திருந்த பரிவும், பாசமும் கணவனிடமிருந்து பீறிட, புவனாவுக்குப் பயம் வந்தது. இதெல்லாம் நிலைத்திருக்குமா?
திடீரென அழ ஆரம்பித்தவளைக் கண்டு பதறிப் போனான் பாஸ்கர். “என்ன புவனா? ஏம்மா?”
“என்னை விட்டுட்டுப் போயிட மாட்டீங்களே?”
“சீ, பைத்தியம்!”
அவனது கொஞ்சலைக் காதில் வாங்காது, “பிறக்கப்போற பிள்ளை தாய் மாமன் மாதிரி இருந்தட்டா..?” என்று, அந்த நினைப்பையே தாங்கமுடியாது விம்மினாள்.
“அசடு! இதெல்லாம் நம்ப கையிலேயா இருக்கு? நம்ப சந்தோஷத்துக்கு சாட்சி இது. கையில பிள்ளையை எடுத்தா அதுதான் தோணும். காக்கைக்குத் தன் குஞ்சு.. கேட்டதில்ல நீ?”
பொறியில் அறைபட்டதுபோல் இருந்தது புவனாவிற்கு.
ஓர் ஆண்மகன்! கணப்பொழுதின் உணர்ச்சி வேகத்தில், தன் காதலுக்குப் பாத்திரமானவளுக்குள் தன் வித்தை நட்டுவிட்டான். அதுகூட, அவனே அறியாது, இயற்கையாக நடந்தது. அவனுக்கே இன்னும் பிறவாத குழந்தைமேல் இவ்வளவு பாசம் என்றால், ஒரு தாய் விழித்திருந்தாலும், தூங்கிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வினாடியும் தான் அவளுக்குள் இருப்பதை நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறதே கரு! அது கண், காது, தலைமுடி என்று முழு உருவமாக வெளிவரும்போது, அந்த தாய் அதனை அளவின்றி நேசிப்பதில் என்ன தவறு?
அதோடின்றி, குறையோடு பிறந்துவிட்டதற்கு எப்போதும் தான் தேவைப்படுகிறோம் என்ற உணர்வே அளவற்ற அன்பாக மாறுகிறதோ!
கட்டிய கணவன்கூட அம்மாவுக்குப் பக்கபலமாக இருக்கவில்லை, பாவம்!
புவனாவின் அழுகை பலத்தது. அலறலும் கேவலுமாக வெளிப்பட்டது அவள் குரல்: “எங்கம்மாவை இப்பவே பாக்கணுங்க!”