கதை 13
கீழே வரும் கதை, திரு ராமகிருஷ்ன பரமஹம்ஸர் அருளிய கதையின் ஒரு சுருக்கமான வடிவம் .
ஒரு காட்டில் விரிந்து பரந்த ஆலமரத்தடியில் ஒரு சாமியார், தமது சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அஹிம்சை, அதாவது, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழும் வாழ்க்கை முறை தெய்வ குணத்தைப் போன்றது. இறைவனை அடைய அவ்வித வாழ்க்கையைக் கடைபிடித்தாலே போதும். சடங்குகளும், சம்பிரதாயங்களும், யாகங்களும் பிரார்த்தனைகளும், உயர்ந்ததாக கருதப்படும் யோக சாதனைகள் எதுவுமே தேவை இல்லை என்று விளக்கிக் கொண்டிருந்தார்.
சீடர்கள் இந்த போதனைகளை மனதில் கொண்டார்களோ இல்லையோ – அருகிலிருந்த புற்றில் வசித்தது. ஒரு கொடிய நாகம் பலகாலம் சாமியாரின் பாடங்களை கேட்டு வந்தது. சாமியாரின் அறிவுறைப்படி நடக்கத் தீர்மானித்தது, சீடர்கள் அருகில் இல்லாத சமயம் சாமியாரிடம் வந்து வணங்கியது.
தான் நாகத்தின் தீய குணங்களை உதறிவிட்டு, ஞானிகளின் வாழ்க்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதை, சாமியாரிடம் தெரிவித்தது. அவருடைய ஆசிகளைப் பெற்றுச் சென்றது.
சாமியார் மகிழ்ந்தார். மனிதர்கள் மனம் மாறாவிட்டாலும், நாகமொன்று முக்தி பெற நினைத்தது குறித்து ஆனந்தம் அடைந்தார்.
இந்த சாமியார் நகரத்திலிருந்து வந்ததால், நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் சாமியாரைப் போலவே நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தது நாகம். அதனால் நல்ல உயிராக வாழ நகரம்தான் சரியான இடம் என்று நினைத்து , காட்டை விட்டு அருகே உள்ள ஒரு நகரத்திற்குக் குடியேறியது.
முதல் சில நாட்கள், நாகத்தின் நடமாட்டம், இரை தேடச் செல்லும் வழியில் சில மனிதர்களின் கவனத்திற்கு உள்ளானது. கண்டவர் அனைவரும் முதலில் பயந்து ஓடினார்கள்.
சில நாட்களில், இந்த நாகம் நம்மைக் கெடுதல் செய்யாது என்ற நம்பிக்கை இவர்களுக்கு வந்தது. இரை தேட வெளிவரும் சமயத்தை அறிந்து, சிறுவர்கள் சிலர் கூடி வேடிக்கை பார்த்தார்கள்.
பிறகு, கல்லை எடுத்து நாகத்தின்மேல் எறிவதை ஒரு விளையாட்டாகக் கொள்ளலானார்கள். ஞானியின் போதனைகளில் மனம் தெளிந்த நாகம், சிறுவர்களை அப்போதும் தீண்டவில்லை.
இப்போது இந்த சிறுவர்களுக்கு தைரியம் அதிகமாகியது. நாகத்தை அதன் வாலினால் பிடித்துச் சுழற்ற, எலும்புகள் உடைந்து மயக்கமுற்று விழுந்தது. சிறுவர்கள் நாகம் இறந்துவிட்டதாக நினைத்துச் சென்றுவிட்டார்கள். ஒரிரு நாட்களில், நாகம், ஒரு மாதிரியாகச் சுதாரித்துக் கொண்டு திரும்பவும் தனது புற்றில் அடைக்கலம் அடைந்தது. முழுவதுமாக குணமடைய பல நாட்கள் எடுத்தது.
இரவு வேளைகளில், மனிதர்களின் நடமாட்டம் இல்லாத நேரமாகப் பார்த்து, மெதுவாக ஊர்ந்து, காட்டை அடைந்தது. சாமியாரைச் சரண் அடைந்து, தான் அடைந்த அல்லல்களை விவரித்தது.
சாமியார் பதில் அளித்தார். தான் பிறருக்கு தீங்கு செய்வதில்லை என்ற வைராக்கியம், தீர்மானம் மிக உயர்ந்தது. அதை இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் நாகம் கடைபிடித்தது மிக உயர்ந்த செயல்.
ஆனால், கெடுதல் விளைக்கும் மக்களைத் தவிற்க, வெறுமனே சீறலாமே? அதை கண்டு மனிதர்கள் பயந்து இடையூரு விளைவிக்காமல் தன் வழியில் செல்வார்களே என்றார்.
பின் குறிப்பு – பெரும்பாலான நமது மக்கள் விபரீதமான சிந்தனை உள்ளவர்கள். நம்மில் அதிகம் பேருக்கு நல்லவர்கள் என்பது அவர்கள் அகராதியில் கிடையாது.
நன்மை செய்பவர்களைப் பிழைக்கத் தெரியதவர்கள் என்றும், ஏமாளிகள், வலுவற்றவர்கள் என்றும் பல விதங்களில் அழைப்பார்கள்.
மோசக்காரர்களைக் கண்டு அஞ்சி அவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
துயரத்திலுள்ள ஒருவருக்கு அனுதாபத்துடன் ஓருவர் அடைக்கலம் தந்து உதவி செய்தால், உதவியவர் வீட்டில் அகப்பட்டதை சுருட்டி கொண்டு ஒடுவது அடைக்கலம் பெற்றவர்களின் வழக்கம்,
நமது மனிதர் குலத்திற்கு, இது, இன்றல்ல, தொன்று தொட்டு விடாமல் தொடரும் வியாதி.
வாசகர்களின் கவனத்திற்கு – ஒருவர் நல்ல மனம் கொள்வது அவசியம். அதை மற்றவர் அறியாவண்ணம், பொல்லாதவர் போன்ற வெளித் தோற்றத்துடன் வாழ்வது, அதைவிட மிகவும் அவசியம்.
நல்லவராக வாழ்வதால் நன்மையே கிடைக்கும் என்ற எண்ணம் தவறு. அப்படி இருந்தாலும் கூட நாம் நல்லவராகவே வாழவேண்டும்.