கதை 1
மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, காட்டின் நடுவே ஒரு ஆறு உண்டு. அந்த அழகான ஆற்றின் கரையில் பல பழ மரங்கள் காய்த்துக் குலுங்கின. மரங்கள் என்றாலே ஓரு பெரிய குரங்கு கூட்டம் நம் நினைவுக்கு வரும் இல்லையா?
பல குரங்குகள் குடும்பத்தோடு, மிகுந்த ஆரவாரமும், ஆனந்தமுமாக வாழ்ந்து வந்தன.
அங்கும் இங்கும் தாவி விளையாடுவதும், ஓன்றை ஒன்று சீண்டுவதுமாக சிறிய குரங்குகள் சுறுசுறுப்புடன் காணப்பட்டன. இந்த அருமையான காட்சி கண்டவர் மனதை கொள்ளை கொள்ளும். இந்த கதை நடந்த சமயம், பொல்லாத அதிகாரிகள், பேராசை கொண்ட தலைவர்கள் ஆகியோர் இல்லை. இந்தக் காட்டிலுள்ள மரங்களை வெட்டி, இந்த வான-மனிதர்களின் வாழ்வை நாசம் செய்யும் எவருமே, இந்தக் காட்டுப் பகுதிக்கு அதிகமாக வரவில்லை.
அந்த அழகிய ஆற்றின் கரையில், குரங்குகள் வாழும் ஒரு இடத்திலிருந்து சிறு தூரத்தில், ஒரு முதலைக் கூட்டம் ஒன்று உண்டு. அதில் வாழ்ந்த முதலைகள், ஒன்றோ இரண்டோ, அவ்வப்போது, கரையோரம் காணப்படும். மற்றபடி இந்த இடத்தை, குரங்குகள் ஆட்சி செய்யும் இடம்தான்.
மரம் ஒன்றில், ஓரு தாய்க் குரங்கு தனது குட்டிகளுக்கு அறிவுரைகளை அள்ளித் தந்தவாறு இருந்தது. தன் குட்டிகளுக்கு மாத்திரமா? கணவருக்கும், மற்ற குரங்குகளுக்கும் கூடத்தான். ஏன், உங்களுக்கும் எனக்கும் கூட, இந்த அடிவுறை பயன் தரும்.
(அ) தன்னைவிட சக்திவாய்தவர்களிடம் நட்பு கொள்ளாதே!
(ஆ) தீயவர் என்று ஒருவரைப் பலர் நினைத்தால், அதில் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அப்படிப் பட்டவர்களை எக்காரணம் கொண்டும் நெருங்காதே. கெட்ட பெயர் எடுத்த ஒருவருடன், ஒட்டுறவாடி, பழகி, தானே தொல்லைபட்டு, பிறகு தானே அந்த உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டாம்.
(இ) கடைசியாக, உன்னைப் புகழ் பாடும் மனிதர்களிடமிருந்து வெகு தூரம் விலகி ஓடு!
மனிதன் பெரும்பாலும், தனது வாழ்நாள் முழுவதும் அவதிக்குள்ளாவது, இந்த மூன்று விதிகளைக் கடைபிடிக்காததே ஒரு முக்கியமான காரணம் என்றது பெண்குரங்கு. இந்த அறிவுரைகளை உதாரணங்களோடு விளக்கியது.
பெரிய மரத்தின் அடியில் (சூரிய ஒளி குறைவால்) எந்தச் செடியும் செழித்து வளர்வதில்லை.
பலம் பொருந்திய நாட்டுடன் நட்புகொண்ட எந்த ஓரு நாடும் சுதந்திரமாகவும், செழிப்புடன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.
இன்று உன்னை புகழ்ந்து பேசுபவர்கள், ஓருநாள் உன் உயிர், உடமை, உரிமை ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிப்பது நிச்சயம், என்றது குரங்கின் மனைவி.
நம்முடன் பழகுபவர் எல்லோரும் நண்பர்களாக மாட்டார்கள். அதோடு, முக்கியமாக, நாம் காலம் கடந்து உணர்வது என்னவென்றால், உண்மையான நட்பு, காதல் ஆகிய இரண்டும் மனிதனின் கற்பனையில் மாத்திரம் உருவாகி மடியும் ஒரு மாயை.
உண்மையில் அது சாத்தியமல்ல. இந்த உண்மையைத் தங்கள் இளவயதில் உணர்ந்தவர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் குறைந்த துயரங்களை அடைகிறார்கள்.
பொதுவாக விரோதிகளை விட நண்பரென்பவரால்தான் உங்களுக்குக் கெடுதல்கள் வர அதிக சாத்தியக் கூறுகள் உண்டு.
அறிவுள்ள மனிதரின் ஓருவர் இறைவனை வேண்டினார் – கடவுளே, எனது விரோதிகள் என்னென்ன (தீங்கு) செய்வார்கள் என்று என்னால் ஊகிக்க முடியும். ஆகவே எனக்கு அவர்களால் தீங்கு வராது. என்னைக் காத்துக் கொள்ள முடியும். ஆனால் எனது நண்பர்களோ, எப்பொழுது என்ன செய்வார்களென்று தெரியாது. எனவே, கடவுளே, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் – என்பதாகும்.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கணவன் குரங்கு, தன் மனைவியின் அறிவுரைகள் அனைத்தும் தனக்காகவே என்று அறிந்திருந்தது. ஆனாலும், அதைக் கண்டுகொள்ளவில்லை. போதாத குறைக்கு, மனைவியையும், அவள் தந்த அறிவுரைகளையும் கேலி செய்தவாறு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு முக்கியமான ஒரு பின்னணி உண்டு.
எப்பொழுதாவது கரையோரம் வரும் முதலை ஒன்று மரத்திலிருந்து விழுந்த நாவல் பழம் ஒன்றை தின்று ரசித்தது. அந்த மரத்தில் இருந்த கணவன் குரங்கு, இதைக் கண்டது.
உடனே, ஆற்றின் அரசனே, முதலையாரே இன்னமும் பழம் வேண்டுமா என்று கேட்க, மகிழ்ச்சி கொண்டது முதலை. ஆர்வத்துடன், ஆமாம் என்று பதில் சொல்ல, அன்றிலிருந்து முதலைக்குப் பழம் பறித்துப் போடுவதும், அதை உண்ண தினமும் முதலை வருகை தருவதும் வழக்கமாகியது.
குரங்குக்கு, ஆற்று நீரின் அரசன் என்று அழைக்கப்பட்ட முதலையுடன் நட்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த நட்பை மிகுந்த பெருமையாக கருதியது குரங்கு. மனைவிக் குரங்கிற்கோ, இந்த புதிய நட்பினால் கணவனுக்கு ஆபத்து வரலாமென்று ஓரு பயம்தான் உண்டானது. கணவனோ தன் மனைவியின் பேச்சைக் கேட்பதாக இல்லை.
மனைவிக் குரங்கு, பல முறை நல்ல வார்த்தைகளால் அளித்த புத்திமதி எதுவுமே கணவன் குரங்கின் அறிவிற்குப் போய்ச் சேரவில்லை. மனைவிக் குரங்கு, கடைசி முறையாக, கணவனை எச்சரிக்கை செய்தது.
இவ்வளவு அறிவுரையும் உங்களுக்குப் பயன் தராது என்பது எனக்கு தெரியாததில்லை. ஒரு நல்ல மனைவி, தன் கணவனுக்கு ஒரு மதி மந்திரியைப் போல செயல்பட வேண்டும். கணவனைத் – தலைவனைத் – துயரம் வரும் முன்பாகக் காப்பது – எச்சரிப்பது – ஓரு கடமை, அதை நான் செய்துவிட்டேன். உங்களின் புதிய நட்பு, அதாவது முதலையின் நட்பு, உங்களுக்கு நன்மை தராது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்றது. இதைக் காலம் உறுதி கூறும். கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக என்று முடித்தது.
கணவனான குரங்கு, இந்த அறிவுறைகளை, அலத்சியம் செய்தது. முதலையும், குரங்கும் நல்ல நண்பர்களாக பல நாட்கள் கழித்தனர். குரங்கு, வகை வகையான பழங்களைப் பறித்துப் போடுவதும் அதைத் தின்று, முதலை குரங்கைப் புகழ்வதும் தொடர்ந்தது. இந்த நட்பு மற்ற பிராணிகளைக்கூடப் பொறாமை கொள்ள வைத்தது. தினமும், முதலை தன் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கூட பழங்களைக் கொண்டு சென்றது.
திருப்பம்
எல்லா நண்பர்கள் மத்தியிலும் ஒருநாள், ஒரு திருப்பம் உண்டாகும். இதுபோன்ற ஓரு திருப்பம் குரங்கு-முதலை வாழ்விலும் உருவானது. பல காலம் நல்ல எண்ணத்துடன் பழகிய முதலை, தன் மனைவியின் தூண்டுதலில், மனம் மாறியது.
முதலையின் மனைவிக்கு பல நாள் பழம் தின்று அலுத்து விட்டது. எவ்வளவு நாள் பழங்களை மாத்திரம் தின்பது? நாம் மாமிசத்தை தின்று வாழ்பவர்கள். ஒரு மாறுதலுக்கு பழம் தின்றோம் ருசித்தோம். இந்த இனிய பழங்களை மாத்திரம் தின்று வளர்ந்த குரங்கு எவ்வளவு இனியதாக இருக்கும்! என்று தொடங்கி, முடிவாக, கணவனிடம் தன் வெகு நாள் ஆசையைத் தெரிவித்தது.
ஒரு நாள், நிலாக்காயும் இரவில், குரங்கை வரழைத்து, அதைக் குடும்பத்துடன் அமர்ந்து தின்பதே அதன் ஆசை. அந்த விருப்பத்தைக் கேட்ட முதலில் அதிர்ச்சி அடைந்தது. பின்னர் இந்த அருமையான ஐடியாவைக் கொடுத்த மனைவிக்குப் பாராட்டும் தந்தது.
சிறிது சிந்தனைக்குப் பின்னர், நமது வீட்டிற்கு, நம்மை நம்பி, குரங்கு எப்படி தைரியமாக வரும் என்று மனைவியைக் கேட்டது.
மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் வித்யாசம்தான் என்ன? ஓரு வால் தானே? மனிதர்கள், தாய் தந்தை அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்ற உறவுகளைவிட நண்பர்களைத் தான் முக்கியமாக நினைப்பவர்கள். மனிதர்கள் நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.
நண்பனே என்று நாலுமுறை கூப்பிட்டால் டமால் என்று விழுந்து விடுவார்கள் என்று மனைவி சொல்ல, முதலைக்கு 1000 வாட் ஒளி ஒன்று மண்டையில் தோன்றி, எல்லாமே புரிந்தது.
அதோடு, மனைவியின் எல்லையில்லா அறிவில், திணறியது. தாமதிக்காமல், மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, குரங்குக் கூட்டம் வசித்த பகுதியை நோக்கி வேகமாகச் சென்றது.
குரங்கு நண்பரைக் கூவி அழைத்தது முதலை. அவர்களின் நெடுநாளய நட்பின் அடையாளமாக குரங்கிற்கு ஒரு விருந்து தரவிருப்பதாகவும் கூறியது. தன் சார்பிலும் தன் மனைவியின் சார்பிலும் அழைக்க வந்திருப்பதாகவும் அறிவித்தது. பல நாட்களாக பழம் பறித்துத் தந்த நண்பருக்கு நன்றி தெரிவிக்கவே இந்த சிறிய விருந்து என்று விளக்க, குரங்கு மறுபேச்சு இல்லாமல் மரத்திலிருந்து இறங்கி வந்தது.
தன் மனைவியின் எச்சரிக்கையையும் மீறி, முதலையின் முதுகில் ஏறி, குரங்கு, ஆற்றில் பயணமானது.
தன் வீட்டை அடைய இன்னமும் கொஞ்சம் தூரம் மாத்திரமே உள்ளது. அப்போது, முதலை, தன் மனைவியின் புத்தி கூர்மையை தாங்க முடியாத மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.
அதோடு. இனிமேல், குரங்கு தண்ணீரில் குதித்துத் தப்பிக்க இயலாது என்ற எண்ணமும் தலைதூக்கியது. அப்போது, முதலை அரசன், தான் அன்று இரவு குடும்பத்துடன் குரங்கைத் தின்று தீர்க்கும் தனது மனைவியின் திட்டத்தை. குரங்கிடம் தெரியப்படுத்தியது.
எதிர்பாராத இந்தத் திருப்பத்தால் குரங்கு முதலில் திகில் அடைந்தாலும், உடனே சுதாரித்துக் கொண்டது.
அடப்பாவி முதலையாரே! நாம் ஒரு பெரும் தவறைச் செய்ய இருந்தீர்கள். குரங்குகளின் சுவை அதன் ஈரலில்தான் என்று நீங்கள் அறியாததா? அது மட்டுமல்லாமல். தாவிப்பிழைக்கும் உயிர்கள் எல்லாமே விழித்திருக்கும் நேரம், ஈரல் முதலான பாகங்களைக் கழற்றி மரத்தில் மாட்டுவதும், இரவில் திரும்ப அணிவதும் நீங்கள் அறியாததா?
நீங்கள் முன்னமே சொல்லியிருந்தால் என்னுடைய அந்த ஈரலை அணிந்து வந்திருப்பேனே! ஒரு நண்பனுக்காக இதைக் கூட நான் செய்யக்கூடாதா! என்றது. முதலையோ, (எல்லாம் அறிந்த தன் மனைவி இதைப்பற்றி எதுவுமே சொல்லவே இல்லையே !?) சற்று சிந்திக்கலானது.
ஈரல் இல்லாத என்னைக் கொண்டு வந்தால் ஆற்றின் அரசிக்குக் கோபம் வராதா என்று குரங்கு கேட்டது. குரங்கின் பேச்சிலும் ஓரு உண்மை தெரியவே, குரங்கின் விருப்பத்திற்கு இணங்கி, குரங்கைக் கரைக்குக் கொண்டு செல்ல முதலை முடிவு செய்தது. ஆற்றின் கரையை அடைந்த உடனே, குரங்கு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒடி, மரத்தில் மறைந்தது. காத்திருந்து களைத்த முதலை, விரக்தியுடன் தன் வீடு திரும்பியது. குரங்கை நழுவவிட்ட தன்னை மனைவி என்ன சொல்வாளோ, என்ன செய்வாளோ, என்ற பயத்தோடு.
வாசகர்களே – உங்களுக்கு சில கேள்விகள்.
குரங்கு, குரங்கின் மனைவி, முதலை, முதலையின் மனைவி இந்த நான்கு பேரின் எண்ணங்களையும், அதன் பின் விளைவுகளையும், அலசுங்கள்.