5

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் ஒவ்வொன்றிலும் ஒன்பதாவது பாடல், திருமால் அயன் இருவரும் பணிந்து வணங்கும் வகையில் சோதிப் பிழம்பாய் சிவபெருமான் தோற்றம் அளித்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அந்தப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். பிரமனும் மாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் முரண்பட்டனர். இந்த இருவர் அல்லாத மூன்றாமவர் தானே இதற்குத் தீர்ப்பு அளிக்க முடியும்! எனவே சிவனிடம் சென்றனர். சிவன் அவர்களுக்கு ஒரு எளிய சோதனை வைத்தார். என்னுடைய அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவரே பெரியவர் என்பது தான் அது.

‘இது ஒரு பெரிய வேலையா?’ என்ற தருக்குடன் இருவரும் புறப்பட்டனர். சிவன் ஒரு பெரிய தீப்பிழம்பாக உருவெடுத்து நின்றார். அவ்வெரியின் அடி மண்ணுக்குள் புதைந்து இருந்தது. முடி விண்ணுக்கு மேல் இருந்தது. மால் பன்றி உருவெடுத்து மண்ணைக் கிண்டிக் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அயன் அன்ன வடிவெடுத்து மேல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். நீண்ட காலம் ஆகியும் அவர்கள் இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு சிவனிடம் இறைஞ்சிப் பணிந்தனர். தங்கள் இருவரையும் விடச் சிவனே பெரியவர் என்பதை உணர்ந்தனர்.

சொல்வளம்

ஞான சம்பந்தர் பதிகங்கள் மொத்தம் 386இல் 17 நீங்கலாக மற்றவற்றில் 380 முறை பேரழலாய் நின்ற பெம்மான் கதை பேசப்பட்டுள்ளது. ஒரே விஷயத்தை 380 முறை சொன்னாலும் கூறியது கூறாமல் ஒவ்வொரு முறையும் புதிய சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது சொல்வளத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சிவன் மால் மற்றும் அயன் இவர்களது பல வகையான அடைமொழிகள் இந்த வாய்ப்பை அளிக்கின்றன.

“வலியவனாகிச் சுடர் வீசிக் கொண்டு நிற்கும் அக்கினி தேவனைப் பற்றிய மந்திரங்களிலே கவிதை மிகவும் செழிப்புற்று இருக்கின்றது. சூட்சுமப் பொருள் ஆழ்ந்து நிற்கிறது. தெய்வ வெறி தெளிந்து நிலவுகிறது. பாட்டுக் கொள்ளுகிற அக்கினி தேவனுடைய தழலும் அவன் உறுமுதலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறி்விலே தாவி விட்டன போலும்” என்ற அரவிந்த கோஷின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பாரதி மேலும் கூறுகிறார், “ஆம், உயர்ந்த கவிதையின் நெறியே அது. இஷ்ட தேவதையின் காந்தி கவியின் உள்ளத்திலே வீசும், அந்த ஒளி பாட்டிலே தெரியும்”.

எரியுருவாகி நின்ற ஈசனைப் பற்றிய ஞானசம்பந்தரின் பாடல்களும் அதே போன்று தெய்வ வெறியும் கவிதை ஒளியும் பொருந்தியனவாகத் திகழ்கின்றன. விரிவஞ்சி, ஒவ்வொன்றிலும் சில எடுத்துக்காட்டுகள் மட்டும் பார்ப்போம். சிவசோதியைப் பற்றிய அடைமொழிகளில் சில இவை.

1 அளவிடல் ஒழியவொர் பயமுறு வகை தழல்

2 மேலது நான்முகனெய்தியதில்லை கீழது சேவடி தன்னை

நீலது வண்ணனு மெய்தியதில்லை

3 சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி

4 விண்ணுற ஓங்கிய விமலன்

5 எரியுருவாகிய ஈசன்

6 பேரழலாகிய பெம்மான்

7 நிறவுரு ஒன்று தோன்றி எரியொன்றி நின்றதொரு நீர்மை

8 எரியாய் உயர்ந்த பெரியான்

9 அண்டமுற அங்கி உருவாகி மிக நீண்ட அரனார்

10 வளர் தீயுருவமான வரதன்

11 ஆதியினொடந்தமறியாத அழல் மேனியவன்

12 ஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்

தோற்றமிக நாளும் அரியான்

13 குரை கழலடி தொழக் கூரெரியென நிறங் கொண்ட பிரான்

14 இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான்

15 கூடிய கூரெரியாய் நிமிர்ந்த குழகர்

மாலுக்கு சம்பந்தர் வழங்கும் பெயர்கள் – அரி, மால், நாரணன், கண்ணன், மாயன், மதுசூதனன் ஆகியவை ஆகும். மாலின் உடல் நிறத்தைக் குறிக்கும் வகையில் கரியன், கடல் வண்ணன், நீல வண்ணன், பச்சையான், மணிவண்ணன், மைதிகழ் உருவினான், புயலொப்பவன், குளிர்கொண்டல் நிறத்தவன், கார்வணன் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மால் அழகிய தோற்றம் உடையவர் என்பதை எழில் மால், கோலம் முடி நெடுமால், சீர்நெடுமால், பொற்பமர் வாமனன் என்ற அடைமொழிகள் காட்டுகின்றன. திருமாலின் கண்ணழகைக் கண்ணிகழ் புண்டரிகத்தினன், செங்கண் மால், செய்ய தண் தாமரைக் கண்ணன் என்று வர்ணிக்கிறார்.

மாலின் தனிச் சிறப்புகளான கருடக் கொடி, துழாய் மாலை, சக்கரம், சங்கு, திரு அமர்ந்த மார்பு இவற்றால் அவர் அடையாளப் படுத்தப்படுகிறார். அவர் பாற்கடலில் பாம்புப் படுக்கையில் அறிதுயில் கொள்வது அகலிடம் நீரேற்றான், அரப்பள்ளியான், அரவணைத் துயின்றான், கடல் கிடந்தான், கிடந்தவன், கோண் நாக அணையான், திகழ் பாற்கடற் கருநிற வண்ணன், நாகத்தணையான் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. வடங்கெட நுடங்குபவன் என்ற சொல் அவர் ஆலிலையில் துயில் கொள்வதைக் கூறுகிறது. அவர் ஆற்றல் மிக்கவர் என்பது அடல்மலி படை அரி, ஆற்றலுடைய அரி என்ற சொற்களாலும், தேவர்களில் பெரியவர் என்பது பெம்மான் என்ற சொல்லாலும், பழமையான தெய்வம் என்பது ஆதிமால் என்ற சொல்லாலும் சுட்டப்படுகிறது.

அவர் இலக்குமி தேவியின் இனிய கணவனாக இருப்பது திருமால், எழிலமர் மலர் மகள் மகிழ் கணன், விரிபோதின் மல்குந் திருமகள் தனை மேவினான் என்ற பெயர்களால் கூறப்பட்டுள்ளது.

திருமால் பல பிறப்புகளை எடுத்து, மக்களுக்கு நலம் செய்தார் என்பது தோற்றலார் மால், நன்மையான் நாரணன் என்று பகரப்பட்டுள்ளது. ராம அவதாரத்தை, வில்லிமையினால் விறலரக்கனுயிர் செற்றவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். மற்றும் கிருஷ்ண, வாமன, வராக அவதாரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மற்ற அவதாரங்கள், குறிப்பாக, நரசிம்ம அவதாரம் கூறப்படாதது கவனிக்கத் தக்கது. சம்பந்தர் காலத்தில் இது வழக்கிற்கு வரவில்லை போலும்.

எல்லாவற்றிலும் மிக அதிகமாகக் கூறப்படுவது அவரது வாமன – திரிவிக்கிரம அவதாரம் தான். அவர் குறுகிய வடிவோடு வாமனனாகச் சென்றதையும் பின்னர் பெரிய உருவெடுத்து விண்ணையும் மண்ணையும் தாவி அளந்ததையும் சம்பந்தர், உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து எண் பெரிய பண்படை கொண் மால், ஓங்கிய நாரணன், குறிய மாணுருவாகிக் குவலயம் அளந்தவன், சேணியலும் நெடுமால், பேரால் நெடியவன், தரணியளந்த வாமனன், தாவினான், நெடியவன், விண் முடியாப் படி மூவடியால் உலக முழுதுந் தாவிய நெடியான் என்ற அடைமொழிகள் மூலம் சிறப்பிக்கிறார்.

கண்ணனாக அவதரித்த காலை இளமைப் பருவத்தில் அவர் செய்த விளையாட்டுகளான மண்ணை உண்ட வாயில் உலகத்தைக் காட்டுதல், வெண்ணை திருடியதால் உரலோடு கட்டப்பட்டு அதனுடன் தவழ்ந்து வந்து மருத மரத்திடையே புகுந்தது ஆகிய காட்சிகள் இடந்து மண்ணையுண்ட மால், ஞாலமுண்ட மால், மருதிடை நடவிய மணிவணர், வானகம் வரையகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப் போனகம் மருவினான் (ஏழுவகையாக அமைந்த வானகம், மலை, கடல், நிலன் இவற்றை உணவாக உண்டவன்) என்ற சொற்களில் ஓவியமாகின்றன. புள்வாய் பிளந்தான் (பகாசுர வதம்), வேழ வெண்கொம்பு ஒசித்தான் (குவலயாபீடம் என்னும் யானை வடிவில் வந்த அசுரனைக் கொன்றது), கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறி (ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனி வடிவில் இருந்த கபித்தாசுரனை அழித்தது), கற்குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல் வண்ணன், அருவரை பொறுத்த ஆற்றலினான் (கோவர்த்தன மலையைத் தூக்கிப் பிடித்தது) என்று அவருக்கு ஏற்பட்ட சிறப்புப் பெயர்களும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய அருஞ்செயல்களைச் செய்ததால் அவர் அற்புதன் என்று வியந்து பாராட்டப்படுகிறார்.

இத்தகைய பெருமைகள் படைத்த மால் சிவனாரது அடியைக் காண்பேன் எனத் தருக்குற்று தன் இயல்புக்கு மாறுபட்ட பன்றி உருவம் எடுத்து மண்ணைத் தோண்டி நெடுந்தூரம் சென்றும் வெற்றி பெற முடியாமையால் அவருக்குக் கிடைத்த பெயர்கள் அன்றியல் உருவு கொள்வான், ஏனவ உருவாகி மண் இடந்த இமையோன், காய மிக்கதொரு பன்றி, கீண்டு புக்கார் (அகழ்ந்து சென்றவன்), மருளார் தரு மாயன் (தருக்குற்றவன்), பன்றியர் ஆகியவை.

மாலுக்காவது அவதாரங்கள், இளமைப் பருவ விளையாட்டுகள், பகைவர்களை அழித்த சிறப்புகள் உள்ளன. இவை எதுவும் இல்லாத பிரமனையும் ஒரு முறை பயன்பட்ட சொல் மறுமுறை வராத வகையில் வர்ணித்துச் சம்பந்தர் தன் தமிழ் வளத்தை நிரூபிக்கிறார்.

பிரமனின் தனித்தன்மைகள் வேதம் ஓதுதலும் உலகத்தைப் படைத்தலும், தாமரையில் வீற்றிருப்பதும் தாம். இம்மூன்றையும் சம்பந்தர் பல வகையாக வர்ணிக்கிறார்.

தாமரை மலர் கவிஞர்களுக்குப் பிரியமான மலர் அல்லவா? அதை வர்ணிக்கப் புகுந்தாலே சம்பந்தருக்குக் கற்பனை பெருக்கெடுத்து ஓடுகிறது.

அணிகிளர் தாமரை, அல்லிகொள் தாமரை, ஏடவிழ் நறுமலர், ஏலும் தண் தாமரை, கடி படு கமலம், களங்குளிர்ந்து இலங்கு போது, கள்ளவிழ் மலர், கொங்கு ஆர்ந்த பைங்கமலம், கொய்யணி நறுமலர், சீர் கொள் மாமலர், சுண்ணமலி வண்ணமலர், செய்ய தாமரை, செறி முளரி, சேற்றினார் பொய்கைத் தாமரை, சோதி மலர், தண்டமர் தாமரை, தழல் (தீயின் நிறம் கொண்ட) தாமரை, தாதலர் தாமரை, திருவினார் போது, தேன் அகம் மருவிய செறிதரு முளரி, நகுவாய் மலர், நளிர் மாமலர், நற்றாமரை மலர், நறையார் மலர், நீருடைப் போது, புண்டரிகம், பைந்தாமரை, மாமலர், முள்ளார் கமலம், மென் மலர், வண்டமர் பங்கயம், வரியாய மலர், வளம் பட்டலர் மலர், வளர் போது, வளங்கொள் மலர், வாசமலர், வெள்ளத் தாமரை, வெறிகமழ் தாமரை, வென்றி மாமலர், வேதக் கிளர் தாமரை என்று அது பலபடியாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புடைய மலரில் வீற்றிருக்கும் பிரமனை – இருந்தவன், தாமரையான், துன்று பூமகன் (இதழ் நெருங்கிய தாமரையில் இருப்பவன்), நாட வல்ல மலரான், பூவில் தோன்றும் புத்தேள் (தேவன்), பூவின் உள்வாயல்லி மேலுறைவான், வெண்டாமரை மேல் அயன், செங்கமலப் போதான், மண்ணு கோலம் உடைய மலரான் எனச் சம்பந்தர் போற்றுகிறார்.

பிரமனைச் சுட்ட மிகுதியாகப் பயன்படும் சொல் அயன் என்பதே. அதற்கு அடுத்தபடியாக நான்முகன், அதே பொருள் கொண்ட வடசொற்கள் சதுர்முகன், திசைமுகன் என்பவையும் ஆம். இச்சொற்கள் பல இடங்களிலும் அடைமொழியுடன் சேர்ந்தே வருகின்றன. விளங்கிய நான்முகன், நிறை நான்முகன், நீதி உற்றிடும் நான்முகன், சீரணங்குற (தெய்வத்தன்மை பொருந்த) நின்றவன் என்பன அவற்றில் சில .

அயனுடைய வேதத் தொடர்பைக் குறிக்கும் அடைமொழிகள் இவை – புரை கடிந்தோங்கிய நான்முகத்தான், மெய்த்தவத்தோன், வேத முதலோன், நெறியண்ணல், பொய்யா மறையான், பொய்யா வேத நாவினான், நுணங்கு நூல் அயன் (நுட்பமான நூல்களை அறிந்துணர்ந்தவன்), வேதம் ஓதும் அயன், அந்தணன், அழல் ஓம்புபவன், அறவுரு, ஏடியல், சாம(வேதம் பாடுபவன்), ஆறும் செற்றிருந்தான் (காமம், கோபம் முதலான ஆறு தீக்குணங்களை வென்றவன்), சென்றொருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்தவன் (தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்றவன்), தீயோம்பு மறைவாணர்க்கு ஆதி, நன்று ஆம் நால்மறையான்.

அவர் பூணூல் அணிந்திருப்பதை, ‘மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேதமுதல்வன்’ என்ற இன்னிசைத் தொடர் காட்டுகிறது.

அவரது உடல் பொன் நிறம் என்பதை பொன்னொப்பான், பொன்னிற நான்முகன் என்பதனால் அறிகிறோம். பிரமனே உலகிற்கு முதல்வர், அவரே உலகம் முழுவதையும் படைத்தவர் என்பதனால் அவர் ஆதி, உலகமெல்லாம் பயந்தவன், ஊனக மருவிய புலனுகர்வு உணர்வுடை ஒருவன், (மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைப்பவன்), பண்டு ஏழுலகு கண்டான், பயனாகிய பிரமன், (மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடையவன்), மீத்திகழ் அண்டம் தந்த அயன் என்று போற்றப்படுகிறார். தாமரையாள் மகன், கருவருந்தியின் நான்முகன் (சிருட்டி எல்லாம் தன்னிடத்தினின்று உண்டாக்கத் தக்கவன், உந்தியில் தோன்றியவன்), இடையல்லிக் கிடந்தவன் (கொப்பூழ் இடையில் தோன்றியவன்) என்று அவரது பிறப்பு வரலாறு கூறப்படுகிறது. அவரது பெருமைகளைக் காட்டும் பிற அடைமொழிகளாவன- அண்ணல், ஒண்டிறல், கேடில் புகழோன், கோலத்தயன், பெருமகன், மாறிலான்.

இத்தகு பெருமைகளைக் கொண்ட அயன் சிவனுடைய முடி காண்பேன் எனச் செருவுற்று அன்னப் பறவை வடிவெடுத்துப் பல நாள் பறந்தும் காண முடியாமல் தோற்றுச் சரண் அடைந்ததால் அவருக்கு ஏற்பட்ட பிற பெயர்கள் – விண் பயில மண்பகிரி வண்பிரமன், பிரமப் பறவை, பருத்துருவதாகி விண் அடைந்தவன், பறந்தார், பறவையர், அன்ன வாகனன், அன்னமாக உருவெடுத்தவன், நாணமுடை வேதியன் (தோற்றதற்காக வெட்கப்படுபவன்).

மால் அயன் ஆகியோரது பெயர்களையோ அடைமொழிகளையோ பயன்படுத்தாமல் வெறுமனே இருவர் என்ற சொல்லால் குறிப்பிட்ட இடங்கள் 32 உண்டு அவரது பதிகங்களில். அந்த இடங்களில் கூட சம்பந்தர் கூறியது கூறவில்லை. உதாரணத்துக்குச் சில மட்டும் காண்போம். இருவரறியாத ஒருவன் 1.93.9, இருவரேத்த நின்று உருவம் ஓங்குமே 1.94.9, இருவரை அசைவு செய்தீரே 3.97.9, இருவரை இடர்கள் செய்தீரே 3.96.9, இருவரை வெருவுற ஆரழல் ஆயினார்    3.88.9, அன்றிருவர் தேர்ந்துணரா வானூரான்1.61.9, இருவர் தெரியாததோர் தீத் திரள் ஆயவன் 2.18.9

பொருள் சிறப்பு

ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ராவணன் செருக்கு அடங்கியதைக் கூறும் 8வது பாடலும், மால் அயன் செருக்கு அடங்கியதைக் கூறும் 9வது பாடலும் சமணர் உரையைச் செவி மடுக்காதீர் என்று கூறும் 10வது பாடலும் இந்த மூன்று கருத்துகளையும் மக்கள் மனதில் பதியவைப்பது தான் சம்பந்தரின் முக்கிய நோக்கம் என்பதை உணர்த்துகின்றன.

11 பாடல் கொண்ட பதிகத்தில் நிறைவுப் பாடல் பதிகப் பலன் கூறுவது. பத்தாவது பாடல் சமண சாக்கியத்தைக் கண்டிப்பது. மற்ற ஒன்பது பாடல்களும் சிவபிரான் பெருமையைப் பேசுபவை.

முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர், செஞ்சடை, பிறை நிலா, கங்கை, கொன்றை, வன்னி, பாம்புகள், புலித் தோல், யானைத் தோல், கோவணம், எலும்பு மாலை, கையில் பிரம்ம கபாலம், பிச்சைக்குச் செல்வது, இரவு நேரங்களில் சுடுகாட்டில் பேய்க் கணங்கள் சூழ நின்று நடனம் ஆடுவது, அவரது உடலில் இடக்கூறாக அமைந்துள்ள உமை, நீலகண்டம், நெற்றிக்கண் ஆகிய சிவனுக்கே உரிய தோற்றச் சிறப்புகளை வர்ணிக்கிறார். காமனை, காலனை, தக்கனை, சலந்தரனை அழித்தல், முப்புரம் எரித்தல், ராவணனை நசுக்குதல் ஆகிய அவரது அருஞ்செயல்களும் அவற்றில் இடம் பெறுகின்றன.

முதலில் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா?

சிவனாரது தோற்றச் சிறப்புகளுக்கும், அருஞ்செயல்களுக்கும் சிகரம் வைத்தாற்போல இருப்பதை, அதாவது மாலையும் அயனையும் விட மேலானவராக எரி உருவமாக விளங்குவதை இந்த நிறைவுப் பாடலில் அவர் வைத்துள்ளார். முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத்தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதே போல அவர் 9வது பாடலில் சிவனது எரியாகி நீண்ட கோலத்தை முன் வைக்கிறார்.

வரலாற்றுப் பின்னணி

வேதமும் புறச்சமயங்களும்

வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்ரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.

அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் சமுதாய நலனுக்காக மட்டுமே. “மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள். புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது. ‘எனக்குக் கொடு’ என்று கேட்கும் சமகம் போன்ற மந்திரங்கள் சில வேதத்தில் இருந்தாலும் அவையும் சமுதாய நலனுக்குரிய வேள்வி செய்யத் தேவையானவற்றைத் தான் எனக்குக் கொடு என்றுகேட்கின்றன.

சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். பிறவி என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், பிறவியே இல்லாத ஒரு நிலையில் துன்பங்களே இரா என்று கற்பனை செய்தனர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றும், அறநெறி வாழ்வின் மூலம் ஆசையை ஒழித்து விட்டால் பிறவியே அழிந்து போகும் என்றும் கூறினர்.

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் அவர்கள் வெற்றி பெறாததை மறைப்பதற்காக தனிப்பட்ட மனிதன் முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர் அவர்கள். இதனால் அவரவரது உயர்வுக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும், வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகம் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார்.

அம்மையாரின் வழி நின்ற சம்பந்தர், அக்கினியும் சிவனும் வேறல்ல, சிவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை 9வது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப்படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிவிக்கின்றன இந்த ஒன்பதாவது பாடல்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் Copyright © 2015 by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book