13

மெய் என்ற சொல்லுக்கு உடம்பு, உண்மை என்ற இரு பொருள்கள் உண்டு.

உடம்பு உண்மையா?

இதில் என்ன ஐயம்? உடம்பு மூச்சு விடுகிறது, உணவு உண்கிறது, ஐம்புலன்களாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது. இவை கனவோ, மாயத் தோற்றமோ அல்ல. எனவே மெய் (உடம்பு) மெய் (உண்மை) தான்.

மேலே, உண்மை என்ற சொல்லை எதிர்மறையாக விளக்கி, கனவோ, மாயத் தோற்றமோ அல்லாதது உண்மை என்று பார்த்தோம். இதற்கு உடன்பாடான விளக்கம் என்ன?

எது உள்ளதோ அது உண்மை.

இருக்கிறது, உள்ளது என்ற இரு சொற்களுக்கும் ஒரே பொருள் என்றாலும், இருக்கிறது என்ற சொல்லுக்கு இருந்தது, இருக்கும் என்ற இறந்தகால, எதிர்கால வடிவங்கள் உண்டு. உள்ளது என்ற சொல்லுக்கு இறந்த கால, எதிர்கால வடிவங்கள் இல்லை. அது முக்காலத்தையும் குறிக்கும் சொல்.

எது கால மாறுபாட்டால் பாதிக்கப்படாமல் முக்காலத்திலும் நிலையாக இருக்குமோ அதுவே உள்ளது என்றும் உண்மை என்றும் சொல்லப்படும்.

இனி, முதலில் தொடங்கிய பிரச்சினையை மீண்டும் பார்ப்போம். இந்த உடம்பு உண்மையா? அதாவது, முக்காலத்திலும் இருப்பதா? இது ஒரு காலத்தில் இல்லாமல் இருந்தது. இனி ஒரு காலத்தில் இல்லாமல் போகும். எனவே இந்த உடம்பு உண்மையல்ல. பொய்.

எது உண்மை? பரம்பொருள் ஒன்றே உண்மை. அதை இயற்கை நியதி என்றோ, சக்தி என்றோ அல்லது உங்களுக்கு விருப்பமான எந்தப் பெயரிலோ அழையுங்கள். காலத்தால் மாறுபடாதது அது ஒன்றே.

புல், மரம் போன்ற தாவரங்களும், புழு, மிருகங்கள் முதலான எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, சாகின்றன. ஆனால் அவை இது பற்றிச் சிந்திப்பதில்லை. மனிதரில் பலரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தேடிச் சோறு நிதம் தின்று கொடுங் கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதராக இருக்கிறோம். மெய்யல்லாத உடம்பை மெய்யெனக் கருதுகிறோம். இதைப் பேணுவதே வாழ்வின் ஒரே இலக்கு என நினைக்கிறோம். உடம்பினுக்குள்ளே உறுபொருள் ஒன்று உண்டு என்பதை மறந்து விடுகிறோம்.

அரிதாக ஒரு சிலர் இது பற்றிச் சிந்திக்கிறார்கள். அத்தகையோரில் ஒருவர் மாணிக்க வாசகர். அவருடைய வாழ்வின் மூன்று கட்டங்களை அவரது பாடல்கள் காட்டுகின்றன.

முதல் கட்டம்

அவரும் ஒரு காலத்தில் புல், பூண்டு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல் போன்று மெய் பொய் பற்றிய அறிவின்றி இருந்தார். வினையின் விளைவாக மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டிருந்தார்.

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
பொருந்தும் இப் பிறப்பு இறப்பு இவை நினையாது
பொய்களே புகன்று போய்க்
கருங் குழல்லினார் கண்களால் ஏறுண்டு
கலங்கியேகிடப்பேன்
பொய்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையன்
பொய் கலந்து அல்லது இல்லை பொய்ம்மையேன்,
பொருத்தமின்மையேன் பொய்ம்மை உண்மையேன்
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேன்
பொத்தை ஊன் சுவர்புழுப் பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க் கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்று இடர்க் கடற் சுழித் தலைப் படுவேன்

 

என்று தன்னை பற்றி இகழ்ந்து கூறிக் கொள்கிறார்.

மாணிக்கவாசகர் குற்றமற்றவர், மற்ற மக்கள் குற்றங்களை எல்லாம் தம் மீது ஏற்றிக் கொண்டு பாடுகிறார் என்று பெரியோர் கூறுவர்.

இரண்டாம் கட்டம்

இப்படி வினையிலே கிடந்து உழன்ற மணிவாசகரை ஒரு நாள் இறைவன் திருவடிக் காட்சி தந்து ஆட்கொள்கிறான். மறைந்து போகிறான்.

அவன் ஆட்கொண்டதால் இவருக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி விட்டது. இறைவன் பேரில் அன்பு கொள்ளத் தொடங்கினார். அப்பொழுது ஏற்பட்ட அறிவு விடியலில் தான் இத்தனை நாள் மெய்யல்லாததை மெய்யென மயங்கி காலத்தை வீணாக்கியதை உணர்கிறார்.

தோன்றி மறைந்த அந்தத் திருவடியை மீண்டும் கண்டு அதில் கலந்து விட ஏங்குகிறார். உண்மையான அடியார்கள் இறையடி சேர்ந்து நிலைத்த இன்பத்தை அடைந்ததைக் கண்டு, தனக்கு அந்த நல்லூழ் கிட்டாதது பற்றி வருந்துகிறார்.

செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர் பெறும்பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன், பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப் பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்..

இவருக்கு மட்டும் இறைவனின் திருவடி நிழல் கிட்டுவது எளிதாக இல்லை. தான் மட்டும் இவ்வுலகிலேயே கிடந்து உழலுமாறு விடப்பட்டதற்கு என்ன காரணம்?

இறைவனிடம் சண்டைக்குப் போகிறார். எனக்கு உன் திருவடியைக் காட்டினாய், உன்னைப் பிரியேன் என்று சத்தியம் செய்தாய். நீயே பொய்யனாகி விட்டாயே என்கிறார்.

சங்கரா, கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டு கொள்
என்று உன் பெய்கழல் அடி காட்டிப்
பிரியேன் என்றென்று அருளிய அருளும்
பொய்யோ? எங்கள்பெருமானே.

நான் தவறு செய்திருக்கலாம். பொறுப்பது தானே பெரியோர் கடன். முன் வினை காரணமாக நான் செய்த தீச் செயல்களுக்கு தண்டனை தந்தாவது நீ ஆண்டு கொள்ள வேண்டாமா என்கிறார்.

மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண் டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டு கொள் உத்தர கோசமங்கைக்கரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினையே.

 

இல்லை. இறைவன் பொய்யன் அல்லன். என் அன்பு தான் பொய். பொய்யனாகத் தானே இத்தனை நாள் இருந்தேன். திடீரென்று இறைவன் மேல் அன்பு வந்து விடுமா? அன்பு இருப்பதாக நான் நடிக்கிறேன்.

நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து நான் எனது எனும் மாய (பாம்பு) கடித்த வாயிலே நின்று முன் வினை மிகக் கழறியே திரிகிறேன் .

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்.

யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்.

மற்ற அடியார்களை அழைத்துக் கொண்டு இவரை இறைவன் விட்டு வைத்த காரணம் என்னவாக இருக்கும் என்று மேலும் யோசித்த போது அவருக்கு வேறு ஒன்று புலப்படுகிறது. எல்லாம் படைத்த இறைவன் தான் இந்தப் பொய்யையும் படைத்தான். என்னை அழைத்துக் கொண்டுவிட்டால் பூமியில் பொய்யரே இல்லாமல் போய்விடுவர். ஒரு மரத்தின் கனிகளை உண்பதற்காக நாம் அறுவடை செய்யும்போது ஒரு சில கனிகளை விதைக்கென்று விட்டு வைக்கிறோம் இல்லையா, அது போல பூமியில் பொய்க்கு விதை இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக என்னை விட்டு வைத்திருக்கிறான் போலும்.

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கானார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்.
இப்படிப்பட்ட போலி அன்பை வைத்துக் கொண்டு நான் எப்படி இறைவனை அடைவது? அவருக்கு ஒரு வழி தெரிகிறது.
வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே !

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, இறைவனின் விரையார் கழற்கு கை தலைவைத்து, கண்ணீர் ததும்பி, உள்ளம் வெதும்பி, பொய் தவிர்ந்து, ஈசனைப் போற்றி, கைதான் நெகிழ விடேன், உடையாய் என்னைக் கண்டு கொள்ளே என்று நீண்ட காலம் அழுதால் அன்றி வேறு வழி இல்லை என உணர்கிறார்.

மூன்றாவது கட்டம்

அழுத பிள்ளை பால் குடித்தது. உயிருடன் இருந்தபோதே இறைவன் அவரைத் தன் திருவடியில் மற்ற அடியாரோடு சேர்த்துக் கொண்டு விட்டான். திருவடி எப்படிப்பட்டது? ஒரே சோதி மயம். அந்தச் சோதி முன் பொய்ம்மை என்னும் அஞ்ஞான இருள் எப்படி நிற்க முடியும்?

முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து எழு தரு சுடர்ச் சோதி
ஆக்கி ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
புழுவினாற் பொதிந்திடு குரம்பையிற்
பொய் தனை ஒழிவித்திடும்
எழில் கொள் சோதி
பொய்யிருள் கடிந்த மெய்ச் சுடரே

என்று அந்தச் சோதியைப் போற்றுகிறார். மெய்யே, உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று மகிழ்கிறார்.

அப்பொழுது மணிவாசகருக்கு தான் பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும் என்று தோன்றுகிறது.

மக்களே, இதுவரை பொய்யராய்க் காலம் கழித்துவிட்டோமே என்று கழிவிரக்கம் வேண்டா. இன்று பொய்யை விட்டால் இறைவன் உங்கள் கடந்த காலம் பற்றி முனியாமல் ஆட்கொள்வான். அவன் என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்.

புயங்கன்அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வம் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன் கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே

என்று உபதேசிக்கிறார்.

புல் முதலாகத் தேவர் வரையிலான எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த மாணிக்கவாசகர் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆன வரலாறு நமக்கும் பொய் விட்டு உடையான் கழல் புக வழி காட்டுகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் Copyright © 2015 by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book