அடுத்ததாய் நாம் காண இருப்பது லேனாத்ரி என்னும் ஊரில் உள்ள கிரிஜாத்மஜ விநாயகர் ஆவார். இவரும் புனே நகருக்கு அருகேயே இருக்கிறார். இந்த அஷ்ட விநாயகர் ஆலயங்கள் அனைத்தையும் காணப் புனே சென்று அங்கே தலைமையிடமாய்க் கொண்டு சென்று வரலாம். புனேயில் இருந்து கிட்டத் தட்ட 85 மைல் தொலைவில் நாசிக் செல்லும் வழியில், குக்கா என்னும் நதியின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது லேனாத்ரி என்னும் ஊரும் அங்கே கிரிஜாமத் விநாயகர் ஆலயமும்.

இவர் மலையின் மீது காட்சி தருகிறார். மலையில் கிட்டத் தட்ட 250 படிகள் ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மலை ஏற முடியாதவர்களுக்கு எனக் கீழே டோலியும் இருக்கிறது. படிகள் இரும்பாலான கைப்பிடிக் குழாய்கள் பதிக்கப் பட்டுக் காணப்படும். இந்த லேனாத்ரி மலையில் உள்ள ஒரு குகையிலே அம்பாள் தவம் செய்ததாய்க் கூறுகின்றனர். தனக்கென ஒரு மகன் பிறக்க ஆசைகொண்ட பார்வதி தேவி இந்த மலையில் உள்ள ஒரு குகையில் தவமிருந்ததாயும், அதன் பலனாகவே விநாயகர் தோன்றியதாயும் ஐதீகம்.

பார்வதி தேவியின் உடலின் அழுக்கும், எண்ணெயும் சேர்த்து வைத்துப் பிள்ளையார் போன்ற உருவம் அமைத்து வைக்க, அதற்கு உயிரும் வந்தது. தாயின் விருப்பம் போல் விநாயகராக அவதரித்துள்ளதாய் அந்தக் குழந்தையும் கூறினார். பார்வதி அந்தக் குழந்தைக்குக் கணேஷ் என்ற பெயர் வைக்கிறாள். சத்வம், ரஜம், தாமசம் மூன்று குணங்களையும் உள்ளடக்கியவன் என அதற்கு அர்த்தம் என்கின்றனர். ஈசன் விநாயகரை வணங்குபவருக்கு எந்தக் காரியத்திலும் தடை ஏற்படாது என ஆசியளிக்கிறார். பதினைந்து வருடங்கள் இங்கே கழித்த விநாயகர் பின்னர் அரக்கனான சிந்துவை வெல்ல வேண்டும் என்பதை உணர்கிறார். சிந்துவோ விநாயகரை அழிக்க நினைக்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை. பால கணேஷின் லீலைகள் லேனாத்ரி மலையை மகிழ்விக்கின்றன.

ஆறாம் வயதில் விஸ்வகர்மா அனைத்து ஆயுதங்களிலும் பயிற்சி அளித்து ஆயுதங்களையும் அவருக்கு அளித்தார். அவை பாசக்கயிறு, பரசு என்னும் கோடரி, அங்குசம், தாமரை மலர் போன்றவை ஆகும். ஏழாம் வயதில் கெளதம முனிவரால் உபநயனம் செய்விக்கப் பட்டது. இங்கே அன்னையை கிரிஜா என்ற பெயரில் அழைப்பதால் அன்னையின் இதயத்தில் இடம்பெற்ற விநாயகரும் கிரிஜாத்மஜ விநாயகர் என்ற பெயரைப் பெற்றார். மலை மீது உள்ள பதினெட்டு பெளத்த குகைகளில் எட்டாவது குகையில் கிரிஜாத்மஜ விநாயகர் கோயில் கொண்டு இருக்கிறார். ஒரே கல்லால் ஆன குகைக்கோயில் தெற்கே பார்த்து அமைந்துள்ளது. சந்நிதிக்கு எதிரே அமைந்திருக்கும் சபாமந்திரில் ஒரு தூண் கூட அமைக்காமல் கட்டப் பட்டிருக்கிறதாய்க் கேள்விப் படுகிறோம்.

குகைக்கல்லிலேயே வடிக்கப் பட்ட கிரிஜாத்மஜ விநாயகர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். பக்தர்கள் தாங்களே இவருக்கு வழிபாடுகள் நடத்தலாம். விநாயகரின் சந்நிதியின் முன்னால் ஆறு தூண்களோடு கூடிய சிறிய சபா மண்டபத்தில் அழகான யானைகள், பசுக்கள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. தினமும் காலையில் பஞ்சாமிர்த அபிஷேஹம் நடக்கிறது. தற்சமயம் இந்தக் கோயிலும், மலையும், குகைகளும் தொல் பொருள்த் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Lord Ganesh...