தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை! – தரணிதரன்!

சனிக்கிழமைக்குத் தான் விநாயகர் விஸர்ஜனம். அதுவரைக்கும் வருவார். இன்னிக்கு நாம பார்க்கப் போற கதை ஜனகமஹாரிஷியுடையது. ஜனகர் ஒரு பெரிய இல்லறத் துறவிங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். யாக்ஞவல்கியரின் சீடர். மனதிலே எதுவுமே பாதிக்காவண்ணம் பிரம்மஞானம் பெற்றவர். அப்படிப் பட்டவரா அவர் எப்படி ஆனார்? அதுக்கான முன்னுரையே இது. இப்போ நாம் பார்க்கப் போற விஷயம்.

மிதிலையை ஆண்டு வந்த ஜனகராஜாவின் அரண்மனை தர்பார். அனைத்து மந்திரி பிரதானிகள் புடைசூழ மன்னன் கொலுவீற்றிருந்தான். அப்போது அந்த அவைக்குள்ளே நாரதர் நுழைந்தார். எந்த இடத்துக்கும், எந்த நேரத்திலும் பிரவேசிக்கக் கூடிய உரிமையைப் பெற்ற அவர் காரணம் ஏதும் இல்லாமலா வந்திருப்பார்? இல்லை, காரணம் இருந்தது. ஆனாலும் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. உள்ளே நுழைந்த நாரதரை அனைவரும் வணங்க, மன்னன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து நாரதரை வரவேற்கவில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே அவரை வரவேற்றான். எனினும் மன்னனை மனமார ஆசீர்வதித்தார் ஜனகர். “மன்னா, நீ விரும்பிய அனைத்துச் செல்வங்களும் , மற்ற வளங்களும் உனக்குக் கிடைக்க இறைவன் அருள் புரிவான்.” என்றார். ஜனகருக்குக் கொஞ்சம் அலக்ஷியம். ஏளனமாய்ச் சிரித்தார். “நாரதரே, இதை வேறே யாரானும் சொல்லி இருந்தால் இன்னும் சிரித்திருப்பேன். அனைத்தும் அறிந்த நீர் சொல்லலாமா? நான் என்ன கல்லாதவனா? அனைத்தும் அறியாதவனா? கொடுப்பவன் யார்? எடுப்பவன் யார்? கொடுப்பவனும் நானே! எடுப்பவனும் நானே! எல்லாம் வல்லவ அந்த இறைவனும் நானே! ஜனகன் என்ற மன்னனும் நானே! அவற்றை வேண்டாமெனில் நானே வெறுத்து ஒதுக்கவும் செய்வேன்! அனைத்தும் நான்! நானே பிரம்மம்! பிரம்மமே நான்!” என்றான் மன்னன்.

நாரதருக்கு தீர்க்கதரிசனம் தெரியும் என்றாலும் மன்னனின் இந்த அகம்பாவமான பேச்சு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. வாய் திறவாமல் வெளியே வந்தார். நேரே கெளண்டிய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார். கெளண்டின்ய ரிஷி தான் அருகம்புல்லின் மகிமையை உலகுக்குத் தன் மனைவி மூலம் காட்டியவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் ஆசிரமத்தில் இருந்த விநாயகர் கோயிலில், ரிஷி வழிபட்ட விநாயகர் முன்னே நின்று, “விநாயகா, இது என்ன? ஜனகனுக்கு புத்தி பேதலித்துவிட்டதா? உண்மையான பிரம்மம் என்னும் தத்துவம் அறியாமல் பேசுகின்றானே! கர்வம் வந்துவிட்டதே! நாடாளும் மன்னனுக்கு இறை உணர்வில் இத்தனை கர்வம் வந்தால் குடி மக்கள் எப்படி நல்வாழ்வு வாழமுடியும்? மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் அன்றோ? இந்த ஜனகனுக்கு நல்லறிவு புகட்டவேண்டிய காலமும் வந்துவிட்டது. நீயே அருள் புரிவாய், வேழமுகத்தோனே!” என்று வேண்டிக் கொண்டார்.

ஜனகரின் அரண்மனை வாயில். அந்தணர் ஒருவர் தள்ளாத வயது, உடலெல்லாம் குஷ்ட நோயால் பீடிக்கப் பட்டு, நடக்கக் கூட முடியாத நிலை. அரண்மனை வாயிலில் வந்து நின்றுகொண்டு “பசி, பசி” என புலம்பிக் கொண்டு இருந்தார். காவலர்கள் செய்வதறியாமல் மன்னனுக்குத் தகவல் தர, மன்னன் அவரைத் தன்னிடம் அழைத்துவரச் செய்தான். அந்தணர் உள்ளே வந்ததும், “என்ன வேண்டும்?” என மன்னன் கேட்க, “பசிக்கு உணவு!” என்றார் அந்தணர். மன்னனுக்கு ஒரு வழியில் நிம்மதி! அப்பாடா, நம்மால் முடிந்ததைக் கேட்டாரே!” பூ, இவ்வளவு தானா? யாரங்கே, இந்த அந்தணனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போடுங்கள்!”

“உத்தரவு மன்னா!” அந்தணர் சாப்பாட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். உணவும் பரிமாறப் பட்டது. அந்தணரும் இலையில் கை வைத்தாரோ இல்லையோ உணவு மொத்தமும் காணோம், காணவே காணோம்! சுற்றி இருந்தவர்கள் ஏதும் புரியாமல் மீண்டும் பரிமாற, மீண்டும் அந்தணர் கைவைக்க, மீண்டும் அதே கதை! சமைத்த அனைத்து உணவுகளும் வர, மிச்சம், மீதி வைக்காமல் அனைத்தும் பரிமாறப் பட அனைத்தும் இப்படியே காணாமல் போயின. ஆனால் அந்தணரின் பசி மட்டும் தீரவில்லை. பரிமாறியவர்கள் களைத்துச் சோர்ந்து போய், “ திரும்பச் சமைத்துத் தான் போடவேண்டும். பொறுங்கள்.” என்று கூற, அந்தணருக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “பசி என வந்தவனுக்கு முதலில் பசியைத் தீருங்கள். அப்புறம் சமைக்கலாம்.” என்று சொல்ல, பணியாளர்கள் செய்வது அறியாமல் தானியங்களைப் பச்சையாக அப்படியே எடுத்துக் கொடுக்க அதுவும் போதவில்லை என அந்தணர் சொல்ல, நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், பால், பழங்கள், காய்கறிகள் என அனைத்தும் சேமிப்பில் இருந்தவை எல்லாம் கொடுத்தும் அந்தணருக்குப் போதவில்லை.

இனி தானியம் விளைந்து வந்து சேமித்தால்தான் அரண்மனைக் களஞ்சியத்தில் தானியம். அரசனுக்குத் தகவல் போனது. தலைநகரில் இருந்த குடிமக்கள் அனைவரிடம் இருந்தும், உணவுப் பொருட்கள், உணவு வகைகள், தானிய வகைகள், பழ வகைகள், காய்கள் வரவழைக்கப் பட்டன. எங்கிருந்து எத்தனை வந்ததலும் அந்தணர் கை வக்கும்போதே மாயமாய் மறைந்து கொண்டிருந்தது. அனனவரும் நடுங்கினார்கள். மன்னனுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டது! யாரிவன்? ஏதோ பூதமாய் இருப்பானோ? பிசாசோ? பிரம்ம ராக்ஷசோ? இவனை எப்படியாவது நல்லவார்த்தை சொல்லி வெளியே அனுப்பவேண்டும் என நினைத்த வண்ணம் அரசன் முதலில் அந்த அந்தணனை நாட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் எனக் கட்டளை இட்டான். அந்தணன் அரசனைப் பார்த்து, “பசி என வந்தவனுக்கு உணவு கொடுக்காமல் நாட்டை விட்டுத் துரத்துகின்றாயே? நீ ஒரு பெரிய மஹாராஜா! அதுவும் அன்றொருநாள் நாரதர் வந்தபோது சபையில் “நானொரு பிரம்மம். என்னால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கொடுப்பதும், நான், எடுப்பதும் நான்! என்னால் முடியாதது எதுவும் இல்லை.” என்றெல்லாம் பேசினாயே? இந்த ஏழைப் பிராமணனின் பசியைப் போக்க முடியாத நீயும் ஓர் அரசனா? “ என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. தன் அகங்காரத்தை நினைத்து மனம் நொந்தான். தவறை உணர்ந்து அதற்குப் பிராயச் சித்தமும் செய்ய விரும்பினான்.

https://commons.wikimedia.org/wiki/File:Tibetan-bronze-statue-Ganesha.jpg