"

1

அவளின் விழி பேசும் மொழி – இங்கு மொழிபெயர்ப்புடன் …

 

 

கருத்துப்பிழை இல்லா எழுத்துப்பிழை

 

முன்னுரை கொண்ட ஓவியம் நீ,

முடிவில்லா சிறுகதை நீ,

சுமையில்லா எடையும் நீ,

எதிரில் வரும் எதுகையும் நீ,

என் விரல் தீண்டா வீணையும் நீ,

எந்தன் முழு பாதியும் நீ.

 

 

முதல் பதிப்பு

 

முதல் பதிப்பில் முற்றுப்பெற்ற காவியம் நீ,

என்னுள் ஏற்படும் உன் ஒவ்வொரு பாதிப்பிலும் மறுபதிப்பு பெற்று உன்னை தொடர்ந்து வரும் தொடர்கதை நான்.

 

 

என் விழி வரைந்த ஓவியம் நீ

 

இமையை தூரிகையாக்கி,

இதயத்தை காகிகதமாக்கி,

எண்ண கற்பனையை வண்ண கலவையாக்கி,

என் கண்கள் வரைந்த எண்ண ஓவியத்தின் பிரதிபலிப்பு நீ.

 

 

தள்ளிப்போகாதே

 

என்னை பிரிந்து சென்று இந்த உலகம் பெரிதென்று காட்டாதே,

கடிகார முள்ளை பட்டை தீட்டி என்னிடம் நீட்டாதே,

நீ இன்றி செல்லும் நொடிகள் என்னை கொல்லுதடி,

உன் நினைவுகளே என்னை வெல்லுதடி.

 
ஆக்கிரமிப்பு

 

நெருங்கி வருகையில் நொருங்கி போனதே,

சுருக்கி/ சுருங்கி விரியும் இதயமும் சுற்றளவை பெருக்கி விரியுதே,

உன் விழி ஈர்ப்பு விசையால் என் பூமத்திய ரேகைக்கு புது மத்தியம் கொடு தாயே.

 

 

கானல் கனவுகள்

 

என் காதல் கனவுகள் எப்பொழுதும் கானல் கனவுகள் – என்னால் மட்டுமே உணர முடிவதால்.

 

 

ஒரு தலை ராகம்

 

நீ தொலைத்து செல்லும் நினைவுகளையும் சேர்த்து சுமக்கிறேன் நான்,

அதனால் தான் என்னவோ வழி எங்கும் எனக்கு மட்டுமே வலிகள்.

 
நாட்குறிப்பில் அடையாளம்

 

நாட்குறிப்பின் நடுவில் இருக்கும் மயிலிறகைப்போல உன் நினைவுகள்,

அழகான அடையாளமாக இருக்கிறது என் குறிப்பில்.

 

வளைகுடா காதல் பயணம்

 

வளைகுடா கடல் பயணம் கள்வர்களால் ஆபத்தானது தான் ஆனால் உன் கடை விழியை கடக்கும் ஆபத்தில் ஒப்பிட்டால் அது பத்தில் ஒரு பகுதியே இல்லை.

 

இரட்டை ஆயுள் தண்டனை

 

மின் கடத்தியான என்னை மின்னல் வேகத்தில் கடத்தியதால் உனக்கு இரட்டை ஆயுள் தண்டனை என் ஆயுளையும் சேர்த்து.

 

சாய்ந்த கோபுரம்

 

உன்னை தலை சாய்த்து பார்க்கும் போது தலை சுற்றிப்போனது சாய்ந்த கோபுரம்.

 

புள்ளி இல்லா கோலம்

 

அலங்கோலமான என் கை எழுத்தும் அழகான கோலமானது உன் பெயரை எழுதும் போது.

 

அடை மழையும் அவள் நினைவும்

 

அடை மழையும் அவள் நினைவும் ஒன்று தான்,

வரும் பொழுதெல்லாம் என்னையும் கண்ணையும் சிறிது நனைத்து விட்டுத்தான் செல்கிறது.

 

வா(சூ)டிய பூக்கள்

 

நீ சூடும் பூக்களும் வாடிப் போகிறது உன் முகத்தை காண முடியாததால்.

 

கண்கள்

 

கண்கள் – காதலும் காதல் சார்ந்த இடமும்.

நாம் சேர்ந்து இருக்கும் போது சோர்ந்து போவது இமைகள் மட்டுமே.

இமை கூட சுமை தான்,இவளுடன் இருக்கும் போது.

 

எனக்கு பிடித்த வரிகள்

 

நான் எழுதிய வரிகள்,

திரும்ப திரும்ப படிக்கிறேன் உனக்கது பிடித்துப்போனதால்.

 

விழி

 

உன்னை பார்க்கும் போது,

என் கருவிழியும் கலர் விழியாய் மாறுதடி.

 

“நீ” யாக

 

வள்ளுவர் அதிகம் பயன்படுத்திய எழுத்து “னி”,

இதுவே நான் திருக்குறள் எழுதி இருந்திருந்தால் அதிகம் பயன்படுத்திய எழுத்து “நீ” யாக இருந்திருப்பாய்.

 

தனி ஒருவன்

 

எங்கு பார்த்தாலும் இருவர்களாய் இருக்க,

ஒற்றையாகவும் இருக்கலாம் என்பதற்க்கு அடையாளமாக நான்.

 

புதுமைப்பெண்

 

பாரதியார் மட்டும் உன்னை பார்த்திருந்தால்,

பார் “ரதி” யார் என்று வினவி இருப்பார்.

 

அடைமழை

 

யார் மேல் கொண்ட கோபத்தினாலோ சினுங்குகிறது வானம்

– அடைமழை.