23

 

உடலும் மனமும் பரபரத்துக் கொண்டிருந்தது கணேசுக்கு. மனைவி தாரிணி அவன் மேல் எந்தச் சந்தேகமும் கொள்ளவில்லை. இந்த விஷயத்தை அப்படியே நாசூக்காக முடிக்க வேண்டும். இப்படி எண்ணங்கள் தோன்றிய போதே இன்னொரு மனது இது நியாயமா, உன்னைச் சந்தேகப்படாத உத்தமமான மனைவிக்கு நீ துரோகம் செய்யலாமா என்று கேட்டது. அந்த இன்னொரு மனத்தை அப்படியே காலால் போட்டு மிதித்து அதன் குரல் தன் செவியில் விழாதவாறு மனத்தை மறைத்துக்கொண்ட கணேஷ் , அன்று எப்படியும் மாலை கற்பகத்தைச் சந்திப்பது என்று முடிவெடுத்தான்.

கற்பகத்தை அவன் முதலில் சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது. அன்று அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் சோபாவில் உட்கார்ந்திருந்த கற்பகம் எழுந்தாள். அவள் பக்கத்தில் அவளுடைய ஆறு வயதுக் குழந்தை அருண், விளையாடிக் கொண்டிருந்தான்.

உள்ளே இருந்து வந்த தாரிணி வாங்க முகம் கழுவிட்டு வாங்க. இவள் என்னோட கிளாஸ்மேட். யதேச்சையா ஷாப்பிங் மால்லே பார்த்தேன். நான்தான் வரச்சொன்னேன். இவ பேரு கற்பகம். இது இவளோட குழந்தை’ என்றாள். ‘ஹலோ’ என்று கற்பகத்தை நோக்கி ஒரு புன்முறுவல் பூத்த கணேஷ் உக்காருங்க, இதோ வந்துடறேன் என்றாவாறு உள்ளே போய் முகத்தைக் கழுவிக்கொண்டு துவாலையால் துடைத்துக்கொண்டு வேறு ஆடைகளை அணிந்துகொள்ளும் போது, அங்கே வந்த தாரிணி ‘ஏங்க இவ பாவம், இவளோட புருஷன் வேற யாரோ ஒரு பொண்ணோட தொடர்பு வெச்சிண்டு இருந்திருக்காரு அதைக் கண்டு பிடிச்சிட்ட இவ அதட்டிக் கேட்டிருக்கா. இவளை விட்டுட்டு அவரு அந்தப் பொண்னோடயே போய்ட்டாராம். இவளை விவாகரத்து பண்ணிட்டாராம். பாவம் இவ, இந்தக் குழந்தைய வெச்சிண்டு கஷ்டப்படறா. அவகிட்ட ஆறுதலா பேசுங்க என்றாள்.

சரி என்று கூறிவிட்டு வந்து வரவேற்பறையில் வந்து கற்பகத்துக்கு எதிரே உட்கார்ந்தான் கணேஷ் . தாரிணி கையில் காப்பியுடன் வந்து அவனுக்கும் கற்பகத்துக்கும் கொடுத்துவிட்டு, தனக்கும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். ரமேஷ் அருகே, ‘அருண் என்கிட்ட வா’ என்றபடி அவனை அணைத்துக்கொண்டு நானும் நீயும் விளையாடலாமா என்றபடி அவனை அழைத்துக்கொண்டு அறைக்குப் போனான். தோழிகள் பேச ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு நாளும் கற்பகத்தின் வருகையும் நெருக்கமும் அதிகரித்தது. இப்படியே கற்பகத்தின் கதைகளைக் கேட்டுக் கேட்டு, அவள் கண்ணீரில் கணேஷும் தாரிணியும் கரைந்துகொண்டிருந்தனர். பெண்ணின் கண்ணீரும், ஆணின் தேவையற்ற இரக்கமும் குடும்பத்தை அழிக்கும் ஆயுதம் என்பதை இருவருமே உணர மறந்தனர்.

கற்பகம் மனத்திலும் கணேஷின் மனத்திலும் தீ எரிய ஆரம்பித்தது. தாரிணிக்குத் தெரியாமல் வெளியே இருவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் தாரிணிக்கும் இந்த விஷயம் எட்டியது. தாரிணி நிலைகுலைந்து போனாள். ஆனால் அவர்கள் இருவரையும் ஒரு வார்த்தையும் கேளாமல் மனத்துக்குள்ளேயே குமைந்துகொண்டிருந்தாள்.

ஒரு நாள் கணேஷின் தந்தை ஈஸ்வரமூர்த்தி வந்து, அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறந்தது. கணேஷ், வாங்க வாங்கப்பா ‘ என்றான். அவனை நிமிர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்தி. அங்கே சோபாவில் இயல்பாக உட்கார்ந்திருந்த கற்பகம் திடுக்கிட்டு எழுந்து வணக்கம் சொன்னாள். உள்ளிருந்து தாரிணி வெளியே வந்து ‘வாங்கோ மாமா’ என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்தி. ‘ஏம்மா இந்த வீட்டுக்கு மருமகளா நீ வந்ததிலேருந்து இவ்வளவு நாளா என்னை மாமான்னு கூப்ட்டதே இல்லையே. என்னையும் அப்பான்னுதானே கூப்புடுவ’ என்றார்.
‘அது அது வந்து மாமா, இல்லே இல்லே அப்பா, ஏதோ கொழப்பம்’ என்றாள். சரிம்மா நீ போயி எனக்குக் குடிக்கத் தண்ணி கொண்டுவா என்று கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்துகொண்டு, வாம்மா கற்பகம், இங்கே வந்து உக்காரு என்றார்.

என்னை நீயும் அப்பான்னே கூப்படலாம். நீயும் என் பொண்ணு மாதிரிதாம்மா என்றார். கற்பகம் தயங்கியபடியே வந்து உட்கார்ந்தாள். ‘ஆமா கற்பகம் உங்களோட கல்யாணம் காதல் திருமணமா அல்லது வீட்டுலே பார்த்து ஏற்பாடு செஞ்சதா என்றார் ஈஸ்வரமூர்த்தி. கற்பகம் தயங்கியபடியே ‘காதல் கல்யாணம்தான் சார் அப்பா ‘ என்றாள். ‘ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பித்தானே கல்யாணம் பண்ணிண்டீங்க. அப்போ யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்திருந்தா கூட இப்பிடி ஒரு நிலைமை வந்திருக்காதே.

சரி போனது போகட்டும். உனக்கும் சின்ன வயசு. துணைக்கு யாருமில்லாம வாழறது கஷ்டம். ஆனா ஒண்ணும்மா, உனக்கு வந்த கஷ்டம் உன்னை மாதிரி இன்னொரு பொண்ணுக்கு வரக்கூடாது. வரவே கூடாது. என்ன நான் சொல்றது சரியா?’ என்றார். கற்பகம் திணறினாள். வரக் கூடாதும்மா . இதுக்குப் பதில் சொல்ல ஏன் திணர்றே’ என்றார் ஈஸ்வரமூர்த்தி, அழுத்தமான குரலில். என்ன நான் சொல்றது சரியா கணேஷ் என்றார். இப்போது கணேஷ் அவசர அவசரமாக, ‘ஆமாம்ப்பா பாவம் இவ என்றான். கணேஷையே உற்றுப் பார்த்த ஈஸ்வர மூர்த்தி, ‘அதுக்குதாம்ப்பா சொல்றேன். நீயும் தாரிணியும் ஏன் நானும் கூட முயன்றால் இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் குடுக்க முடியுமா, முடியாதா என்றார்.

கணேஷும் தாரிணியும் தலையை வேகமாக ஆட்டினர். ஒருத்தரோட கஷ்டமான நிலமைக்கு வருத்தப்படறதுனாலயோ, ஆறுதல் சொல்றதுனாலயோ அவங்களோட கஷ்டத்தைத் தீர்க்க முடியாது. கவலைப்படறதை நிறுத்திட்டு அதுக்குத் தீர்வு காண்றதுதான் நல்ல வழி. என்னப்பா சொல்றே என்றார் கணேஷைப் பார்த்து.
கணேஷ் ஆமாம்ப்பா என்றான். ‘சரி இவளும் என் பொண்ணு மாதிரிதான். தாரிணி எனக்கும் மருமகள்னாலும் அப்பான்னு கூப்பி்ட்டா தப்பில்லே. இவ எனக்கு மகமாதிரி. இவளும் என்னை அப்பான்னு கூப்பிட்டா தப்பில்லே. அதாவது உன்னோட தங்கை மாதிரி, உன்னை அண்ணான்னு கூப்பிட்டாலும் தப்பில்லே, சரியா’ என்றார்.

சரி நீ இவளை பாதுகாப்பா ஒரு அண்ணனா கூட்டிக்கிட்டு போயி அவ வீட்டுலே விட்டுட்டு வா. இவ மறுபடியும் வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க, நாம் எல்லாரும் சேர்ந்து ஏற்பாடு செய்வோம்’ என்றார் தீர்மானமான குரலில். கற்பகம் கண்களில் கண்ணீர் தளும்ப,‘அப்பா என்னை ஆசீர்வாதம் செய்யுங்கோ என்றபடி காலில் விழுந்து வணங்கினாள். எழுந்தாள். நான் போய்ட்டு வரேம்ப்பா என்றாள்.
அருண், தாத்தா பை என்றபடி இருவரும் கிளம்பினர். அப்பா, நான் கற்பகத்தைப் பத்திரமா அவங்க வீட்டுலே விட்டுட்டு வரேன் என்றபடி தன் ஸ்கூட்டரை உயிர்ப்பித்தான். ஈஸ்வரமூர்த்தி, காலில் ஏதோ பட்டாற்போல் இருக்கவே குனிந்து பார்த்தார்.

தாரிணி குனிந்து நமஸ்காரம் செய்துவிட்டு, அங்கே படுத்தபடியே நிமிர்ந்து, என்னையும் ஆசீர்வாதம் செய்யுங்கோ அப்பா என்றாள் தழுதழுத்த குரலில். அவளுக்கு ஈஸ்வரமூர்த்தியின் விஸ்வரூபம் தெரிந்தது.
 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book