40

 

ஸ்கூட்டரை நடையில் நிறுத்திவிட்டு நிமிர்ந்தான் சுரேஷ். வியர்வையில் அவன் சட்டை தொப்பலாய் நனைந்திருந்தது. இந்த லட்சணத்திலே டை வேற கட்டிண்டு, தினமும் ஆபீசுக்குப் போகணும். கழுத்தை இறுக்கிற்று டை. அதை முதலில் முடிச்சவிழ்த்துத் தளர்த்தினான்.

வழியெங்கும் மணலும் தூசியும் கண்ணில் விழுந்து கண்களையே சிவப்பாக்கி வைத்திருந்தன. ஸ்கூட்டரின் கண்ணாடியில் அவன் முகமே அவனுக்கு விகாரமாய்த் தெரிந்தது. எப்பிடியாவது ஒரு கார் வாங்கணும். என்று நினைத்துகொண்டு பக்கவாட்டில் இருந்த பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் சுரேஷ்.
வழக்கமாய் அவன் வந்தாலும் கவனிக்காமல் தொலைக்காட்சியில் லயித்திருக்கும் அவன் மனைவி லதா,

அன்று அதிசயமாய் இவன் வந்தவுடன் எழுந்து மரியாதையாக வாங்க என்றாள். நேராக உள்ளே போய் சட்டையைக் கழற்றி, கோட்ஸ்டாண்டில் மாட்டினான். முழுக் கால்சராயைக் கழற்றிக் கட்டிலில் போட்டுவிட்டு ஒரு அரைக் கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான். அவன் மனைவி லதா கையில் காப்பியுடன் வந்து காப்பி சாப்பிடுங்க என்றாள். அதிசயமாய் இருந்தது அவனுக்கு.

ஓ காலையில் சண்டை போட்டுவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பியது நினைவுக்கு வந்தது. காப்பி வேணாம் என்றான்.சரிங்க மோர் சாப்பிடறீங்களா என்றாள் லதா. எதுவும் வேணாம் என்றான் சுரேஷ். மௌனமாக வெளியே போனாள் லதா. எல்லாமே விசித்திரமாக இருந்தது சுரேஷுக்கு. எதையாவது சொல்லி அவனைக் கத்தவைப்பாள். இன்று என்னவோ மௌனம் காக்கிறாளே இவள், நாம காலையிலே சண்டை போட்டுட்டு போனதிலே திருந்திட்டாளா ஒண்ணும் புரியவில்லை அவனுக்கு.

மணி எட்டாகப் போவுது சாப்பிட வரீங்களா என்றாள் லதா. மௌனமாக உணவை முடித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தான். வழக்கமாக அவன் பக்கத்தில் வந்து படுக்கும் லதா கட்டிலின் பக்கத்தில் கீழே ஒரு துணியை விரித்துப் படுத்தாள்.
என்ன கோவமா என்றான் சுரேஷ். அதெல்லாம் இல்லீங்க என்று பதற்றத்தோடு கூறினாள் லதா. அவனுக்கு மனத்துக்குள் சிரிப்பாய் வந்தது. ஒரே நாள். குரலை உயர்த்தியதற்கே இவ்வளவு மாற்றமா

சரி சரி அதெல்லாம் விடு. இங்கே வந்து படு என்றான். வேணாங்க என்றாள் லதா. சரி ஏதோ கோவத்திலே கத்திட்டேன். அதெல்லாம் மனசிலே வெச்சுக்காதே. கீழே படுத்துக்கிட்டா உனக்குக் குளிர் தாங்காது. ஏசீ ரூம் குளிரும் வந்து கட்டில்லே படு என்றான் சுரேஷ் . சரிங்க என்று கட்டிலில் வந்து, கொஞ்சம் இடைவெளி விட்டுப் படுத்துக்கொண்டாள் லதா, சுரேஷ் அவளை திரும்பிப் பார்த்தான்.

அப்போதுதான் அவனுக்கு உரைத்தது. காலையில் கோவத்தில், ‘என்னை மாதிரி மனசிலே ஒண்ணும் வெச்சிக்காம, ஒழுங்கா இருக்கற நல்ல புருஷனை இப்பிடித்தான் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோவமூட்டிக் கத்த விடுவீங்க பொம்பளைங்க. உங்களுக்கெல்லாம் சாராயத்தைக் குடிச்சிட்டு வந்து கலாட்டா செய்யறானே, அவன்கிட்டதான் ஒழுங்கா இருப்பீங்க என்று அவன் கூறிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது.

அடடா! அதானா விஷயம். அவளைத் தன் பக்கமாக வலுக்கட்டாயமாகத் திருப்பி ஏய் நான் ஒண்ணும் காலையிலே சொன்னா மாதிரி சாராயத்தையெல்லாம் குடிச்சுட்டு வரலை பயந்திட்டியா என்று அவள் முகத்தில் ஊதிக் காண்பித்தான் சுரேஷ்.
லதாவின் முகத்தில் ஒரு தெளிவு ஒரு வினாடிக்குப் பிறகு எனக்குத் தெரியாதா உங்களுக்கு எதுவுமே துப்புக் கிடையாது ன்னு என்றாள் லதா.

வாழ்க்கையில் முதன் முறையாகப் பெண்களைப் புரிந்துகொள்ள, பால பாடம் ஆரம்பமாயிற்று சுரேஷுக்கு. சிரித்தபடியே தூங்கிப் போனான் அவன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book