18

 
உனக்கு எவ்ளோ தைரியமும் ரௌவுடித்தனமும் இருந்தா வயசுக்கு வந்த என் பொண்ணு ரம்யாவை ஒரு ஹோட்டல் அறையிலே ராப்பூராத் தங்க வெச்சிருப்பே. உன்னை மாதிரி அயோக்கியனை நான் பாத்ததே இல்லே. உன்னை நம்பி என் வீட்டுலே குடித்தனம் வெச்சது என் தப்பு. இந்த விஷயம் வெளிலே தெரிஞ்சா எவ்வளவு அவமானம். இனிமே இவளை வேற யாரு கட்டிக்குவான்.

என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே. ஏதோ உங்க அப்பா அம்மா எல்லாரும் வெளியூர்லே இருக்காங்கன்னு சொன்னதாலே நல்ல குடும்பத்துப் பையன்னு நெனைச்சு உனக்கு வீட்டை வாடகைக்கு விட்டேன் பாரு, என் புத்திய செறுப்பாலே அடிக்கணும்” என்று கத்தினார் விஸ்வநாதன்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ. என்னடா முறைக்கிறே” என்றபடி ஆங்காரமாய் ஒரு அறை அறைந்தார் விஸ்வநாதன். இதற்காகவே காத்திருந்தாற் போல அந்த வீட்டிலிருந்த எல்லோருமே மனோவுக்குத் தர்ம அடி கொடுத்தனர். மனோ அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டு, ரம்யாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
“இன்னும் என்னடா, அவளை முறைக்கறே அதான் குடி கெடுத்துட்டியே அழுதாள் ரம்யாவின் அம்மா காமாக்‌ஷி. ஆளாளுக்கு அவனைச் சொல்லத் தகாத வார்த்தைகளால் குதறி எடுத்தனர். ரம்யா அழுதாள். நான் உன்னை நம்பி மோசம் போய்ட்டேனே படுபாவி. என் வாழ்க்கையைச் சீரழிச்சிட்டியே என்றாள்.

மனோ முதன் முறையாக வாய்திறந்து, “ரம்யா இப்போ சொன்ன அதே வார்த்தையை இன்னொரு தடவை சொல்லு என்றான். எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன் என்றாள் ரம்யா, ஆங்காரத்துடன்.
சொல்லுவே சொல்லுவே. இப்போ என்ன வேணும்னாலும் சொல்லுவே. முதல் தடவை நீயா வந்து என்னைக் காதலிக்கறதா சொன்னியே, அப்போ நான் என்ன சொன்னேன் நினைவிருக்கா

வேணாம் ரம்யா, நீ ஏதோ இன்பேச்சுவேஷன்லே அவசர முடிவு எடுக்கறே. உங்க அப்பாவும் அம்மாவும் உன்னைத் திட்றாங்கன்னா அது உன்னோட நல்லதுக்குதான். அவங்களுக்கு இல்லாத அக்கறை வேற வெளி மனுஷனுக்கு இருக்கவே முடியாது. அதுனாலே இனிமே காதல் கத்திரிக்காய் அது இதுன்னு உளறாமே காலேஜ் படிப்பை முடிக்கற வழியைப் பாருன்னு சொன்னேனே கேட்டியா

சரி அதுக்கு அப்புறமும் நீ இத்தனை நாளா உன்னைப் பெத்து வளத்த உங்க அப்பா, அம்மா மேலே கூட நம்பிக்கை இல்லாமே, என்னோட சுயரூபம் என்னா? நான் யாரு எங்க குடும்பப் பின்னணி என்னான்னு கூடத் தெரியாம, நான் நல்லவனா, கெட்டவனான்னு கூடத் தெரியாம, முன்னே பின்னே யோசிக்காம என்னை நம்பி ஹோட்டலுக்கு வந்து தங்கினியே. அன்னிக்கு தெரியலையா என்னை மாதிரி ஆளுங்களை நம்பக் கூடாதுன்னு

நீ குடுத்த தைரியத்திலே தானே உன்னை ஹோட்டலுக்கு நான் அழைச்சிட்டுப் போனேன். நானா உன்னை வலுக்கட்டாயமா ஹோட்டலுக்குக் கூட்டிண்டு போனேன். உன் மனசுலேயும் சபலம் இருக்கவேதானே நீயும் வந்தே , ஏதோ நான் உன்னைக் கெடுத்துட்டா மாதிரி பேசறையே, இப்போ நான் சொல்றேன். நீதான், உன்னை மாதிரிப் பொண்ணுங்கதான், என்னை மாதிரிப் பசங்களுக்குத் தைரியம் கொடுத்து, எங்களையும் கெடுத்து, நீங்களும் கெட்டுப் போறீங்க.

அப்புறம் எல்லாப் பழியையும் எங்க மேலே போட்ற வேண்டியது. பெரியவங்க சொல்வாங்க ‘ஊசி இடம் கொடுக்காமே நூல் நுழையமுடியாதுன்னு . இப்போ என்னை மட்டும் குத்தம் சொல்றே என்றான்.

காமாக்‌ஷி அம்மா உங்க புருஷன் வெளியூருக்கு ஏதோ ஒரு வேலையாப் போனாரு சரி. அன்னிக்கு உங்க பொண்ணு காலேஜ்லே ஒரு டூர் போகப் போறோம். அதுனாலே இன்னிக்குப் போய்ட்டு நாளைக்கு வந்திருவோம்னு சொன்னாளே. உங்க புருஷன்கிட்ட சொன்னீங்களா சரி காலேஜ்லேயாவது விசாரிச்சீங்களா அது சரி இந்தக் காலத்துப் பசங்க அவங்களை நிறையப் பணத்தைக் கொட்டிப் படிக்க காலேஜுக்கும் அனுப்பிட்டு, அவங்களை வேவு பாக்கறதுக்கும் ஒரு ஆளை ஏற்பாடு செய்ய முடியுமா கஷ்டம்தான்.

ஆனா உங்க புருஷனுக்கு ஒரு போன் செஞ்சு விஷயத்தைச் சொல்லி இருக்கலாமே. அல்லது நேத்தே உங்க அப்பாகிட்ட அனுமதி வாங்கி இருந்தா அனுப்புவேன். அவர் அனுமதி இல்லாமே அனுப்ப மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே என்றான்.
அவனை மேலே பேசவிடாமல், எல்லோரும் அவன் மேல் பாய்ந்தனர் அடிக்க. மனோ என்கிற மனோகர் உரத்த குரலில் யாராவது இனிமே என் கிட்ட நெருங்கினா, எல்லாரையும் நான் அடிப்பேன் என்றான்.

அதிர்ந்து போய் அவரவர் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றனர். உங்க யாருக்காவது வெர்ஜின் டெஸ்ட்டுன்னா என்னன்னு தெரியுமா அப்பிடித் தெரியலைன்னா நான் சொல்றேன். ஒரு பொண்ணோட கன்னித் தன்மையை நிரூபிக்கிற விஞ்ஞான பரிசோதனை. உங்க பொண்ணுக்கு அந்த டெஸ்ட்டைப் பண்ணிப் பாருங்க அப்போ தெரியும். உங்க பொண்ணு மேலே என் சுண்டு விரல் கூடப் படலைன்னு.

கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு அவசர முடிவெடுத்து, முன்னே பின்ன தெரியாம, வெளி வேஷத்தை மட்டும் நம்பிக் கெட்டுப் போற பெண்கள் நாட்டிலே அதிகமாயிட்டாங்க. அவங்களுக்கெல்லாம் இது ஒரு பாடமா இருக்கணுன்னுதான் இப்பிடிச் செஞ்சேன். நான் சொல்றதுக்கெல்லாம் என்ன சாட்சின்னு கேக்கறீங்களா என்று கேட்டுவிட்டு திரும்பி விஸ்வநாதனைப் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

ரம்யா விஸ்வநாதன் அதான் உங்க அப்பா காமாக்‌ஷி அம்மா உங்க புருஷனைத்தான் சொல்றேன். இவரைக் கேளுங்க, இத்தனை நேரமா என்கிட்ட செஞ்சு குடுத்த சத்தியத்துக்காக உங்களோட சேந்துகிட்டு, மனசிலே ரத்தம் வடிஞ்சாலும் வெளிலே அதைக் காட்டிக்காம, உங்கள்ள ஒருத்தரா நின்னு என்னை அடிச்சாரே இந்த நல்ல மனுஷன் விஸ்வநாதன். இவரைக் கேளுங்க உண்மையைச் சொல்வாரு. என்னோட எல்லாத் திட்டத்துக்கும் ஒத்துவந்து என்னோட ஒருத்தரா நின்னு இந்தத் திட்டத்தை வெற்றிகரமா முடிச்சுக் கொடுத்தாரே, அவர்தான் இனிமே பேசணும் என்றான்.

மனோகர், உண்மையிலேயே ஆக்ரோஷமா உன்னை அடிச்சேன். அப்போதான் இவங்க நம்புவாங்கன்னு, வலிக்குதா என்றார் விஸ்வநாதன் பரிவாகத் தடவிக் கொடுத்தபடி.
இல்லே சார். இப்பக் கூட நான் பண்ணது தப்புன்னு உங்க காலைப் பிடிச்சு கதறாமே அப்பிடியே குத்துக் கல்லு மாதிரி நிக்கறாளே உங்க பொண்ணு ரம்யா அதுதான் சார் மனசு வலிக்குது என்றான் மனோகர்.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book