50

 

காத்தாலேருந்து பல்லுலே பச்சைத் தண்ணி கூட படாம, ஆசாரமா அப்பா வைத்தீஸ்வரனுக்கு திவசம் பண்ணியாச்சு, புரோகிதர் சொன்ன மந்திரங்களையெல்லாம் ஒண்ணு விடாம சொல்லி, பக்தி ஸ்ரத்தையா தெவசத்தைப் பண்ணி  முடிச்சாச்சு. காக்காய்க்குப் பிண்டம் வெச்சுட்டு,  காக்காய் வந்து சாப்பிடறதானு பாத்துட்டு வாங்கோ. வந்து  நீங்கள்லாம் சாப்பிடலாம்ன்னு புரோகிதர் சொன்னவுடனே பிண்டத்தைக் கொண்டு போய் மொட்டை மாடீலே வெச்சுட்டு, தகப்பனார் காக்காய் வடிவுலே வந்து பிரசாதத்தை எடுத்துச் சாப்பிடறதைப் பாக்க நின்னுண்டு இருக்கார் ராமேசம்.

ஒரு காக்காய் வந்து பார்த்துவிட்டுப் பறந்து போனது. மீண்டும் மீண்டும் வருவதும் போவதுமாகப் பறந்துகொண்டே இருந்தது. நான்காவது முறையாக வந்து சுவர் விளிம்பில் உட்கார்ந்து கா கா. கர்ர்ர்ர்ர் என்றது.

ராமேசத்துக்கு  இந்தக் காக்காய் தன்னோட அப்பாவாவாயிருந்தா, இப்போ அவர் காக்காய் வடிவிலே வந்து  நாம குடுக்கற பிண்டத்தை  ஏத்துக்கறார் என்றால், இப்போ இவர் கா கான்னு  கத்தினாரே, அதுக்கு என்ன அர்த்தம்? அவர் காக்காய் பாஷையில் சொல்வதைப் புரிந்துகொள்ளப் பறவைகளின் மொழி தமக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணினார். ராமேசம், காலையிலிருந்து பட்டினி. கண் இருட்டிக்கொண்டு வந்தது. ‘சீக்கிரம் இவர் சாப்பிட்டுட்டு போனார்ன்னா, நாம் போயி சாப்பிடலாம். பசி பிராணன் போறது. இந்த அப்பாவுக்கு எப்பவுமே அடுத்தவா அவசரம் புரியாது’ என்று நினைத்துக்கொண்டார்.

காக்காய் விஸ்வரூபம் எடுத்தது. அங்கே ராமேஷத்தின் தந்தை வைத்தீஸ்வரன், காக்கை வடிவில் நின்றுகொண்டு பேசினார். ராமேஷத்துக்கு காக்காயின் பாஷை புரிய ஆரம்பித்தது.

“ஏன்டா ராமேசா அவசரக் குடுக்கை, நான் சாதாரணமா பேசினாலே உனக்குப் புரியாது. இப்போ காக்காய் வடிவத்திலே வேற பேசறேன். நீ என்னத்தைப் புரிஞ்சுக்கப் போறே. சரி நான் ஊதற சங்கை ஊதறேன். புரோகிதர் சொன்னாரே நாம இந்த உலகத்துக்கு வரக் காரணமாயிருந்த  முன்னோர்களுக்குத் தெவசம் பண்ணனும். அப்போதான் அவா ஆத்மா சாந்தியா இருக்கும். பிதுர் லோகத்திலே அவா நமக்காக வேண்டிப்பா. இல்லேன்னா அவ மனசு புண்படும். அவா மனசு புண்பட்டா நமக்கு அது சாபமா அமையும், நம்மோட வாரிசுகள் நன்னா இருக்கணும்னா, நாம பித்ருக்களுக்குப் பிண்டம் போடணும். அப்பிடீன்னு. அதுக்கு பயந்துதானேடா தெவசம் பண்றே, இல்லேன்னா பண்ணுவியா?

ஏன்டா நீ மாடிக்கு வந்து கா கான்னு கூப்பிட்டவொடனே நான் ரெடியா காத்திண்டு இருந்து, நீ பிண்டத்தை வெச்சவுடனே சாப்பிட்டுட்டு போயிடணும், அதானே உன் நெனைப்பு? அது சரி, நான் இப்போ காக்காய் வடிவத்திலே வந்திருக்கேன். நீ வெச்சிருக்கியே இதெல்லாம் சாப்பிடறேன், ஆனா ஒண்ணு. இவ்ளோ வயசாகியும் உனக்கு  இன்னும் புத்தி வளரவே இல்லேடா. கொஞ்சம் கூட மாறாம அப்பிடியே  அசமஞ்சமா இருக்கியே. எல்லாத்தையும் கொண்டு வந்து இப்பிடி வெச்சுட்டு, நீயும் பக்கத்திலேயே நின்னுண்டு இருந்தா நான் எப்பிடிடா வந்து தைரியமா சாப்புடுவேன்.

நான் உயிரோட இருக்கும் போதே உன் பக்கத்திலே வர பயப்படுவேன், கிட்ட வந்தாலே சள்ளுன்னு எரிஞ்சு விழுவே. நான் காக்காய் வடிவத்திலே இருக்கேன் எப்பிடி தைரியமா கிட்ட வரமுடியும். நானும் அப்பிடீ இப்பிடீ பறந்து போய்ட்டு அப்போவாவது நீ புரிஞ்சிப்பியான்னு திருப்பியும் வந்து பாத்தா, அப்பிடியே குத்துக் கல்லாட்டும் இங்கேயே  நிக்கிற, கொஞ்சம்  தள்ளிப் போக வேண்டியதுதானே? எத்தனை தடவை நானும் உனக்குப் போக்கு காட்டி, பறந்து பறந்து போயிட்டு வறது. இப்போவாவது கொஞ்சம் தள்ளிப் போயேண்டா. எனக்குப் பசிக்கறது” என்றார் வைத்தீஸ்வரன்.

திடுக்கிட்டுக் கண் விழித்தார் ராமேஷம்.

காக்காய் தன் சிறிய உருவத்துடன் அவரையே பயத்துடன் பார்த்துக்கொண்டு, பறந்து பறந்து போய்விட்டு வந்து உட்கார்ந்து, மீண்டும் பறந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு வந்து உட்கார்ந்தது.

சுபம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book